Published:Updated:

“ப்ளீஸ்.. இதையாவது நிறைவேற்றுவீர்களா விராட் கோலி?” - ஒரு ரசிகனின் கோரிக்கை! #ViratKohli

ஸ்ரீராம் சத்தியமூர்த்தி
“ப்ளீஸ்.. இதையாவது நிறைவேற்றுவீர்களா விராட் கோலி?” - ஒரு ரசிகனின் கோரிக்கை! #ViratKohli
“ப்ளீஸ்.. இதையாவது நிறைவேற்றுவீர்களா விராட் கோலி?” - ஒரு ரசிகனின் கோரிக்கை! #ViratKohli

‘விராட் கோலிக்கு ட்ராவுக்காக ஆடுவது பிடிக்காது. களத்தில் கர்ஜிக்கும் சிங்கம், இவரது பேட் பந்துவீச்சாளர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கும்’ என சமூக வலைத்தளங்களில் மற்ற வீரர்களின் ரசிகர்களை ஓடவிட்ட காலம் இப்போது இல்லை விராட். 

ஆம், தோனி என்ற ஒரு மிகப்பெரிய வீரர் அணியை வழிநடத்திய போது அதில் ஓர் இளம் வீரராக நீங்கள் தனியாகத் தெரிந்தீர்கள் அதனால்தான் உங்களது தீவிர ரசிகர் ஆனோம். ஐ.பி.எல் போட்டிகளின் ஆரம்பக்காலத்தில் சி.எஸ்.கே ரசிகர்கள் நாங்கள். இந்திய அணியில் உங்களால் அதிகம் ஈர்க்கப்பட்டு, தண்ணீரே தராத பெங்களூருவை ஆதரித்தோம். காரணம் உங்களை ஒரு வீரனாக அதிகம் பிடித்துப்போனதுதான். இந்திய கிரிக்கெட்டின் பாகுபலி என்று உங்களை நினைத்தோம். தோனிக்குப் பிறகு இந்திய அணியை, அனைத்து வடிவிலான கிரிக்கெட்டிலும் முதலிடம் பிடிக்க வைக்கும் நபராகவே உங்களை நம்பினோம். நம்புவோம்.

சென்ற ஐ.பி.எல் தொடரில் நீங்கள் ஒற்றை ஆளாக ஆர்.சி.பியை ஃபைனலுக்கு அழைத்து சென்றதால் எங்களுக்கு ஒரு தன்னம்பிக்கை இருந்தது. என்றாவது ஒருநாள் கோலியின் கைகளால் ஐ.பி.எல் கோப்பையும் சாத்தியமாகும் என்று. இந்த முறை எல்லாமே தலைகீழாக நடந்து வருகிறது. களத்தில் ஆக்ரோஷமாக செயல்படும் கோலியிடம் கோபம் இருக்கும். அது அணிக்கு வெற்றியைத் தேடித்தரும் என்று கூறி, சிலாகித்து வந்தோம். இன்று கோலியிடம் வெறும் கோபம் மட்டும்தான் உள்ளது. 

‘தோல்வி என்ற வார்த்தையே பிடிக்காது. அதை வெறுக்கிறேன்’ என்று நீங்கள் கூறிய போது, உங்கள் ரசிகர்களாக உங்களை ஒருபடி அதிகமாகவே ரசித்தோம்.  இந்தியாவின் வெற்றிகரமான கேப்டனையே விமர்சித்தோம். இவையெல்லாவற்றையும் விட ‘கேப்டன்ஷிப், பேட்டிங் இரண்டையும் ஒரே நேரத்தில் சிறப்பாக கையாள முடியாது’ என்றவர்களிடம் ‘விராட் கோலியிடம் கற்றுக்கொள்ளுங்கள்’ என்று கர்ஜித்தோம்.

ஆனால் இன்று அந்த விராட் இல்லை. தொடர்ந்து 9 ஆட்டங்களில்  தோற்று ஐ.பி.எல் இறுதிச் சுற்றுக்கு எந்த மிராக்கிள் நடந்தாலும் தகுதி பெற முடியாத  நிலையில் இருக்கிறது ஆர்.சி.பி. சேஸிங் சிங்கம் என்று உங்களை பல நாட்கள் பாராட்டியதுண்டு. இன்று எதிரணி 130 ரன்கள் என்ற மினிமம் ஸ்கோரை அடித்தால் கூட ஆர்.சி.பி தடுமாறுகிறது. முதலில் பேட்டிங் செய்து இமாலய இலக்குகளை குவித்தாலும் பந்துவீச்சில் பெட்டிப்பாம்பாய் அடங்கிவிடுகிறது.

உலகின் அதிரடி நாயகர்கள் கிறிஸ் கெயில், டிவில்லியர்ஸ் உங்கள் அணியில் இருந்தும் இந்த ஐ.பி.எல் தொடரில் சோகம் தொடருகிறது. சச்சின்...சச்சின் என ஒலித்த ஆடுகளங்களில் கோலி...கோலி...என முழங்கினோம்.... இந்திய கிரிக்கெட்டில் அடுத்த தாதா நீங்கள்தான் என ஆர்பரித்தோம். ஆனால் ஒரு தலைவனாக நீங்கள் எங்களை திருப்திபடுத்தவில்லையோ என்ற குறை எங்களுக்குள் இருந்து கொண்டே இருக்கிறது.

சிலர் எங்களிடம், ‘கோலி பேட்ஸ்மேனாக ஓகே...ஆனால் கேப்டனுக்கெல்லாம் லாயக்கில்லை’ எனும்போது ஆக்ரோஷமாக உங்கள் சாதனைகளை புள்ளிவிவரங்களாகக் கொட்டினோம். ஆனால் இன்று எங்களுக்கே ஒரு சந்தேகம்.. உங்கள் மீது நம்பிக்கை இழந்துவிட்டோமோ எனத் தோன்றுகிறது விராட். 

எதையெல்லாம் கொண்டாடினோமோ அவையெல்லாம் இன்று உங்களிடம் இல்லை விராட்... அடிக்கடி எமோஷனலாகி சோர்ந்துவிடுகிறீர்கள். ஒப்பிடுவது தவறு தான். தோனி என்றும் 100 பந்தில் 1 ரன் எதிரணி அடிக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டாலும் சோகத்தையும், தோல்வியையும் முகத்தில் காட்டியதில்லை. ஸ்கோர் கார்டைப் பார்த்து முறைக்கிறீர்கள், வீரர்களை களத்தில் திட்டுகிறீர்கள். அணியை வழிநடத்தும் கேப்டன் இப்படி இருந்தால் அந்தத் தோல்வி அணியையும் தொற்றிக்கொள்ளும் விராட். அதைவிட இந்த தோல்வியிலிருந்து வெளியேற வேண்டும் என்று கடைசி 9 ஆட்டங்களின் முடிவில் நீங்கள் பேசிய வீடியோவை எடுத்து பாருங்கள். உங்கள் நம்பிக்கை குறைந்துவிட்டது.

சரி எல்லாம் போகட்டும். இந்த சீசனில் RCBக்கு கோப்பை என்பது கனவாகிவிட்டது. இவற்றையெல்லாம் விடுங்கள். ஒரு கோரிக்கை வைக்கிறோம்  விராட்.

ஐ.பி.எல் தாண்டி இந்திய அணியை மூன்று வடிவிலும் வழிநடத்தும் மிகப்பெரிய பொறுப்பு இருக்கிறது விராட். இந்திய அணியையும் ஆர்.சி.பி போல அணுகாதீர்கள். சாம்பியன் கோப்பையில் உங்களை வீழ்த்துவோம் என எதிரணிகள் கொக்கரிக்கத் துவங்கிவிட்டன. கவனம் விராட்! கபாலியாய் மிரட்ட வேண்டும். ரசிகனாய் உங்களிடம் எதிர்பார்ப்பது வெறும் கோபத்தை மட்டுமல்ல சில கோப்பைகளும் தான்...உங்கள் வார்த்தைதான்...

‘தோல்வி பிடிக்கவில்லை...வெற்றியை கொண்டாட வையுங்கள் கோலி’  

சாம்பியன் கோப்பைக்கு முன்கூட்டிய வாழ்த்துகள்!