Published:Updated:

சாம்பியன்ஸ் டிராபிக்கு யுவராஜ், தோனி நிச்சயம். மற்றவர்கள்யார் ? #VikatanExclusive

சாம்பியன்ஸ் டிராபிக்கு யுவராஜ், தோனி நிச்சயம். மற்றவர்கள்யார் ? #VikatanExclusive
சாம்பியன்ஸ் டிராபிக்கு யுவராஜ், தோனி நிச்சயம். மற்றவர்கள்யார் ? #VikatanExclusive

சாம்பியன்ஸ் டிராபிக்கு யுவராஜ், தோனி நிச்சயம். மற்றவர்கள்யார் ? #VikatanExclusive

சாம்பியன்ஸ் டிராஃபியில் பங்கேற்கவுள்ள  இந்திய வீரர்களை நாளை அறிவிக்கவுள்ளார்கள். மினி உலகக்கோப்பை என கொண்டாடப்படும் சாம்பியன்ஸ் டிராஃபியை  ஜெயிக்க இந்த முறை வலுவான போட்டி நிலவுகிறது. இங்கிலாந்தில் மேட்ச் நடக்கும் என்பதால் அங்கேயுள்ள சூழலுக்கு ஏற்ப விளையாடும் வீரர்களை தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது பிசிசிஐ. 2013 சாம்பியன்ஸ் டிராஃபி இங்கிலாந்தில் தான் நடந்தது. அங்கே சொந்த மண்ணில் கெத்தாக ஆடிய இங்கிலாந்தை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது தோனியின் தலைமையிலான இந்திய அணி. அதன் பின்னர் 2014ல் இங்கிலாந்தில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளிலும் பங்கேற்றது. டெஸ்ட் தொடரை படுமோசமாக ஆடி இழந்தாலும், ஒருநாள் தொடரை 3-1 என்ற கணக்கில் வென்று கம்பீரமாக நாடு திரும்பியது  இந்திய அணி. 

அதன் பின்னர் இப்போது தான் இங்கிலாந்து செல்கிறது இந்திய அணி. சாம்பியன்ஸ் டிராஃபி ஓவல், எட்ஜபாஸ்டன், கார்டிஃப் என மூன்று மைதானங்களில் நடைபெறுகிறன. இந்த மூன்று மைதானங்களுக்குமே பேட்டிங் ஆடுவதற்கு ஏற்றவையே. பகலிரவு போட்டிகள் என்பதால், பந்துகள் ஸ்விங் மற்றும் சுழற்பந்துக்கு சாதகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா லீக் போட்டிகளில் தென் ஆப்ரிக்கா, பாகிஸ்தான், இலங்கை ஆகிய அணிகளுடன் ஆடுவதால் அதற்கேற்றவாறு அணியை தேர்வு செய்வதும் அவசியம். 

ஓபனிங்  :-

இங்கிலாந்து மண்ணில் தொடக்க வீரர்களாக களமிறங்குவபவர்கள் எப்போதுமே பெரிய சவாலை சந்திக்க நேரிடும். ஏனெனில் புது பந்து ஸ்விங் ஆகும் என்பதால், எளிதில் விக்கெட்டை விடும் வாய்ப்பு உண்டு. எனவே தரமான தொடக்க வீரர்கள் அணிக்கு அவசியம்.

ரோஹித், தவான் இருவரும் காயத்தில் இருந்து திரும்பியிருப்பதால் இருவரும் அணியில் இடம்பிடிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களே ஒப்பனராக களமிறங்கவும் அதிக வாய்ப்பு இருக்கிறது. எனினும், அஜிங்கிய ரகானே இங்கிலாந்து மண்ணில் நன்றாக ஆடக் கூடியவர் என்பதால் மாற்று தொடக்க வீரராக அவரையும் பிசிசிஐ சேர்க்கக்கூடும். ரோஹித் - தவான் அல்லது ரஹானே - தவான் இணை இன்னிங்ஸை தொடங்கும் என எதிர்பார்க்கலாம். 

நடுவரிசை :-

அணித் தலைவர் கோலி மூன்றாவது இடத்தில் களமிறங்குவார். அதில் எந்த சந்தேகமும் இல்லை. கோலி இங்கிலாந்தில் குறைவான சராசரியை வைத்திருக்கிறார். எனவே அவரை முழுவதுமாக நம்புவது கடினம். எனினும் 2015க்கு பிறகு வேற லெவல் பேட்ஸ்மேனாக உருவெடுத்திருக்கிறார். அவரது ஷாட் தேர்வுகளில் துல்லியம் கூடியுள்ளது. எனவே இந்த முறை கோலி நன்றாகவே ஆட வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். 

நான்காவது இடத்தில் யுவராஜ்சிங்  களமிறங்கக்கூடும். இந்த ஆண்டு துவக்கத்தில் இங்கிலாந்துடன் நடந்த ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் வெளுத்துக் கட்டினார் யுவி. அந்த அனுபவம் மீண்டும் கை கொடுக்கும் என நம்பலாம். இங்கிலாந்து மண்ணில் மிதவேகப்பந்து நன்றாக எடுக்கும். அதே சமயம் யுவராஜ் மிதவேகப்பந்து பவுலர்களை பிரித்து மேய்வார் என்பதால் யுவராஜுக்கு நிச்சயம் வாய்ப்பு கொடுப்பார் கோலி. ஒருவேளை அவர் தொடர்ச்சியாக சொதப்பினால், யுவியின் இடத்தில் ரஹானே ஆட வாய்ப்பிருக்கிறது. 

ஐந்தாவது இடத்தில் தோனி  களமிறங்குவார். பினிஷர் ரோலை முன்னைப் போல பல போட்டிகளில் தொடர்ச்சியாக சிறப்பாக செய்ய முடியவில்லை என்பதாலும், மைதானத்திற்கு வந்தவுடன் பெரிய ஷாட் ஆடும் டச் இல்லை என்பதாலும் தோனியே ஐந்தாவது இடத்தில் இறங்குவார்  "நான் நிறைய பந்துகளை சந்திக்க விரும்புகிறேன். களத்தில் நீண்ட நேரம் நிற்க விரும்புகிறேன். செட்டிலாகி ஆட விரும்புகிறேன் " - இது தோனியின் ஸ்டேட்மென்ட். 

ஆகவே நான்காவது இடத்தில் தோனி களமிறங்கினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

கீழ் வரிசை மற்றும் பினிஷர் ரோல் : -

கேதர் ஜாதவ் அசத்தல் பார்மில் இருக்கிறார் எனவே அவரை நிச்சயம் பிசிசிஐ மிஸ் செய்யாது. சுழற்பந்திலும்  சில நேரங்களில் கை கொடுப்பார் என்பதால் இந்த தொடரில் இந்திய அணியின் துருப்புச்சீட்டே கேதர் ஜாதவ் தான். ஆறாவது இடத்தில் அவர் தான் களமிறங்குவார். போட்டியின் சூழ்நிலை கருதி சில வேளைகளில் தோனிக்கு முன்பு களமிறங்கவும் வாய்ப்பு இருக்கிறது. தோனிக்கு மாற்று விக்கெட் கீப்பர் தேவை என்றாலும், அந்த இடத்தை கேதர் நிரப்புவார் என்பதால் அவரது இடம் உறுதியாகிவிடுகிறது. 

ஹர்திக் பாண்டியா, ஏழாவது நிலையில் இறங்குவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது. அவர் அணியில் இருந்தால் ஆழமான பேட்டிங் வரிசை கிடைக்கும் என கோலி நம்பக்கூடும். ஹர்திக் பாண்டியா அதிரடியாக ஆடக்கூடியவர் என்பதால் பினிஷர் ரோலும் அவருக்குத் தரப்படலாம். எனினும், ஐந்து தரமான பவுலர்கள் அணியில் இருக்க வேண்டும் என்பது கோலியின் பாலிசி. 7 +4 க்கு பதிலாக 6 +5 பிளானை தேர்ந்தெடுத்தால் ஹர்திக் பாண்டியா நீக்கப்படவும் வாய்ப்பு இருக்கிறது. ஆயினும், 15 பேர் கொண்ட அணியில் இவருக்கு நிச்சயம் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சுழற்பந்து :- 

எந்த பேச்சுக்கும் இடம் கிடையாது. ஜடேஜா மற்றும் அஸ்வின் இருவரும் சுழற்பந்து டிப்பார்ட்மென்டை கவனித்துக் கொள்வார்கள். அஸ்வின் இங்கிலாந்தில்  ஒருநாள் போட்டிகளில் இதுவரை நன்றாகவே வீசியுள்ளார். இடது கை பேட்ஸ்மேன்களுக்கு அவர் சிம்மசொப்பனம் என்பதால் அவர் களமிறங்குவது உறுதி.

ரவீந்திர ஜடேஜா அதிரடியாக பேட்டிங்கும் செய்யக்கூடியவர், மளமளவென விக்கெட்டுகளையும் அள்ளக்கூடியவர். ஆழமான பேட்டிங் வரிசைக்கும், எதிரணியின் வலது கை பேட்ஸ்மேன்களுக்கு குடைச்சல் கொடுப்பதற்கும் ஜடேஜா உதவுவார். 

வேகப்பந்து : -

புவனேஷ்வர் குமார் இங்கிலாந்து மண்ணில் தவிர்க்கவே முடியாக ஸ்விங்கர். முகமது ஷமி இறுதி ஓவர்களில் விக்கெட் வேட்டை நடத்துபவர். உமேஷ் யாதவ் பெரிய பேட்ஸ்மேன்கள் விக்கெட்டை வீழ்த்தும் திறன் படைத்தவர் எனவே இவர்கள் மூவரும் அணியில் இடம்பிடிக்கக்கூடும். பாண்டியா அணிக்குள் வந்தால், ஷமி அல்லது உமேஷ் வழிவிட வேண்டியதிருக்கும். 

இஷாந்த் ஷர்மா கடந்த  சாம்பியன்ஸ் டிராஃபியின் நாயகர்களில் ஒருவர். ஆடுகளங்களில் புற்கள் நிறைய இருந்து, பவுன்ஸ் வீச சாதகமாக இருந்தால், இஷாந்த் அணியில் இடம்பெறலாம். கடந்த சில ஒருநாள் போட்டிகளில் அணியில் இடம்பெறவில்லை என்றாலும் கூட இங்கிலாந்து ஆடுகளங்கள் என்பதை கருத்தில் கொண்டு 15 பேர் கொண்ட அணியில் தேர்வு செய்யப்பட வாய்ப்பு இருக்கிறது. 

ஜஸ்பிட் பும்ரா இறுதி ஓவர்களில் நன்றாக வீசக்கூடியவர். யார்க்கர்களில் அசத்துவார் என்பதால் நிச்சயம் 15 பேர் கொண்ட அணியில் இடம்பிடிப்பார். ஷமிக்கு பதிலாக பிளேயிங் லெவனில் இவர் இடம் பிடிக்கவும் வாய்ப்பு  இருக்கிறது .

மனிஷ் பாண்டே நடுவரிசையில் நன்றாக ஆடுபவர். யுவராஜுக்கு மாற்றாக இவரை தேர்ந்தெடுக்க பிசிசிஐ  நினைத்தால் இஷாந்த் ஷர்மா 15 பேர் கொண்ட அணியில் இடம்பெற முடியாமல் போக வாய்ப்பிருக்கிறது.  

கணிப்பு :- 

உத்தேச பதினைந்து பேர் கொண்ட அணியில் இடம்பிடிப்பவர்கள் :-

ரோஹித் ஷர்மா, ஷிகர் தவான், விராட் கோலி (கேப்டன்), அஜிங்கியா ரஹானே, யுவராஜ் சிங், மகேந்திர சிங் தோனி, ஹர்திக் பாண்டியா, கேதர்ஜாதவ், ரவிச்சந்திர அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, உமேஷ் யாதவ், ஜஸ்பிட் பும்ரா, (மனிஷ் பாண்டே/இஷாந்த் ஷர்மா). 

பிளெயிங் லெவனில் யார்? 

ரோஹித்ஷர்மா, ஷிகர் தவான், விராட்கோலி (கேப்டன்), யுவராஜ் சிங், மகேந்திர சிங் தோனி (கீப்பர்),கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்டியா, ரவிச்சந்திர அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, புவனேஷ்வர் குமார், (முகமது ஷமி/ஜஸ்பிட் பும்ரா) . 

யார் யாருக்கு இடம் கிடைப்பது சந்தேகம்? 

சுரேஷ் ரெய்னா, ரிஷப் பன்ட், அமித் மிஸ்ரா, அம்பட்டி ராயுடு, கவுதம் கம்பீர், உத்தப்பா, அக்சர் படேல் 

அடுத்த கட்டுரைக்கு