Published:Updated:

கிரிக்கெட்டில் அசத்தும் ஒன்றரை வயது சென்னைக் குழந்தை.. ஜூனியர் MSD! #Video

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
கிரிக்கெட்டில் அசத்தும் ஒன்றரை வயது சென்னைக் குழந்தை.. ஜூனியர் MSD! #Video
கிரிக்கெட்டில் அசத்தும் ஒன்றரை வயது சென்னைக் குழந்தை.. ஜூனியர் MSD! #Video

கிரிக்கெட்டில் அசத்தும் ஒன்றரை வயது சென்னைக் குழந்தை.. ஜூனியர் MSD! #Video

சென்னை அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த 'சனுஷ் சூர்யா தேவ்' என்கிற ஒன்றரை வயதுக் குழந்தை, கிரிக்கெட் விளையாடி அனைவரையும் ஆச்சர்யப்படவைக்கிறது. பால்மணம் மறா அந்தக் குழந்தையின் கிரிக்கெட் முயற்சியை கின்னஸ் சாதனைக்கு முயற்சித்து வருகின்றனர் பெற்றோர் முருகன் ராஜ் - சுபத்ரா. இதுகுறித்து அவர்களிடம் பேசியபோது...

"நான் இயல்பாகவே கிரிக்கெட்டர். இந்திய அணியில் விளையாட வேண்டும் என்ற என் ஆசை பல காரணங்களால் நிறைவேறலை.  அதனால்தான் இன்னிக்கு கிரிக்கெட் பயிற்சியாளரா இருக்கிறேன். என் மனைவி சுபத்ரா, ஒரு டாக்டர். என் மகன் சனுஷ், மகேந்திர சிங் தோனி பிறந்த தேதியிலதான் பிறந்தான். அதுக்காகவே  'சனுஷ் சூர்யா தேவ்' னு பெயர் வெச்சோம். என் பெயர் முருகன் ராஜ். M. Sanush Suriya Dev இதை ஆங்கிலத்தில் சுருக்கமா 'MSD'னு சொல்லி சந்தோஷப்பட்டுக்குவோம். கிரவுண்டில் பலரும் `ஜூனியர் MSD'னுதான் அவனைக் கூப்பிடுறாங்க.

சனுஷ் பிறந்த அஞ்சாவது மாசத்துலேயே பந்துதான் அவன் விளையாட்டு. ஆறாவது மாதத்துல அவனுக்கு என்னோட முதல் கிஃப்டா கிரிக்கெட் பேட்டைக் கொடுத்தேன். அடுத்தடுத்துக் கிடைச்ச கிஃப்டைவிட கிரிக்கெட் பேட்தான் அவனுக்கு ரொம்பப் பிடிக்கும். நாங்க வேற எந்த கிஃப்ட் கொடுத்தாலும் அது ஒண்ணு பேட்டா மாறும், இல்லைன்னா பந்தா மாறும். அவனோட ஆக்‌ஷன் எங்களுக்கு  தோனியையும் சச்சினையும்தான் நினைவுப்படுத்துச்சு.  அப்பதான், அவனுக்கு கிரிக்கெட் விளையாட்டுமேல ஆர்வம் இருப்பதை நாங்க தெரிஞ்சுக்கிட்டோம். அவனுக்குப் பயிற்சி கொடுத்தா நல்லா விளையாடுவான்னு நாங்க உணர ஆரம்பிச்சோம். உடனே பயிற்சி கொடுக்கத் தொடங்கிட்டோம்.

முதலில், வாக்கரிலிருந்து பால் போட்டு, பேட் எடுத்து விளையாட ஆரம்பிச்சான். முதல் வருடப் பிறந்த நாளுக்குப் பிறகு அவனாவே பேட் எடுத்து விளையாடத் தொடங்கினான். எடுத்ததும் விளையாடச் சொல்லித் தராமல், கிரிக்கெட் தொடர்பான வீடியோக்களைத் தொடர்ந்து போட்டுக் காட்டி, அவன் மனசுல பதியவெச்சோம். அதுக்கு அப்புறம்  சின்னச் சின்ன வாம்அப் சொல்லித் தந்து, அதன் பிறகே விளையாடச் சொல்லித் தந்தேன். அந்தப் பழக்கம் இப்ப வரைக்கும் ஃபாலோ பண்றான்.

ஆரம்பத்தில் பிளாஸ்டிக் பால், ரப்பர் பால்னு விளையாடத் தொடங்கி, இப்ப கிரிக்கெட் விளையாடும் கார்க் பாலில் விளையாடுறான். இப்பெல்லாம் காலையில 5 மணிக்கு, என்னுடன் கிரவுண்டுக்கு வந்து பயிற்சி செய்றான். கிரவுண்டில் அவனது அசாத்திய திறமையைப் பார்க்கும் எல்லோருமே ஆச்சர்யப்படுறாங்க; உடனே சனுஷின் ரசிகராகவும் ஆகிடுறாங்க. அவன் பேட்டிங்கில் மட்டும் அசத்தவில்லை; பெளலிங்கிலும் அசத்துகிறான். 'இந்தச் சின்ன வயதில் இதுவரைக்கும் யாருமே இந்த அளவுக்கு விளையாடியது இல்லை' என்று பலரும் சொல்றாங்க. அதனால், சனுஷ் கிரிக்கெட் விளையாடுவதை கின்னஸ் மற்றும் லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற முயற்சித்து வருகிறேன். இது சாதனையாக அங்கீகரிக்கப்பட்டால் இன்னும் சந்தோஷப்படுவேன். முக்கியமாக, இந்தியாவுக்காக விளையாடி, பல புதிய சாதனைகளைப் படைக்க வேண்டும் என்பதுதான் எங்கள் கனவு, ஆசை எல்லாம்" என்று உற்சாகம் பொங்கப் பேசுகிறார் முருகன் ராஜ்.

"ஆறு மாதக் குழந்தையாக இருக்கும்போதே, அவனது திறமையை நாங்கள் கண்டறிந்து அதன்படி அவனை வழி நடத்திச் செல்கிறோம். அவனுக்கு கிரிக்கெட்டில் ஆர்வம் இருப்பதை அறிந்ததும் முதலில் ஒரு பெரிய பேட் வாங்கி, அவன் சைஸுக்குத் தகுந்தார்போல், அதைச் செதுக்கிக் கொடுத்தோம். டிரெஸ்கூட அப்படித்தான். துணியாக வாங்கி, அதை கடையில் கொடுத்து அவன் சைஸுக்கு அளவெடுத்து தைச்சோம். சனுஷின் திறமையைப் பார்த்து வியந்துபோன அந்த டெய்லர், பணமே வாங்கவில்லை. 'இது என்னுடைய கிஃப்ட்' என்று சொல்லிவிட்டார். அவன் ஆரோக்கியமான சூழலில் வளர வேண்டும் என்பதற்காக, நான் மாதவரத்தில் நடத்தி வந்த என்னுடைய க்ளினிக்கைக்கூட மூடிவிட்டேன். இப்போது அவன் கூடவே இருந்து அவனுக்கு என்ன தேவையோ, அதைப் பார்த்துப் பார்த்துச் செய்கிறேன். 

சமகால பெற்றோர்களைப்போல் மணலில் விளையாடவிடாமல், வீட்டிக்குள்ளேயே அடைத்துவைக்க மனம் வரவில்லை. அவன் எங்கு விளையாடினாலும் அவனுடன் சேர்ந்து நாங்களும் விளையாடுவோம். அதே நேரத்தில், இப்போதே `A B C D', `1 2 3 4', உயிர் எழுத்துகள் எனக் கொஞ்சம் கொஞ்சமாகச் சொல்லிக்கொடுக்கிறோம்" என்று  தொலைநோக்குப் பார்வையுடன் பேசுகிறார் சுபத்ரா.

வீடியோவிற்கு:-

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு