Published:Updated:

அன்றும் இன்றும் என்றும்... சச்சின் ஏன் ஹீரோ..?

அன்றும் இன்றும் என்றும்... சச்சின் ஏன் ஹீரோ..?
News
அன்றும் இன்றும் என்றும்... சச்சின் ஏன் ஹீரோ..?

அன்றும் இன்றும் என்றும்... சச்சின் ஏன் ஹீரோ..?

1996-ல் எங்கள் ஊரில், களை எடுப்பதற்கு கூலி 30 ரூபாய். மூத்தவனை காட்டுக்கு அழைத்துச் செல்ல படாதபாடுபடுவார்கள் வீட்டில். வேலைக்குச் செல்லாமல் டிமிக்கி கொடுப்பதில் பிஹெச்டி முடித்தவன் அவன். சரியாக கிரிக்கெட் மேட்ச் இருக்கும் நாள்களில் எல்லாம் அவனுக்கு ஏதாவது ஒரு நோக்காடு வந்துவிடும். வரவழைத்துக் கொள்வான். அல்லது எங்கேயாவது போய் ஒளிந்து கொள்வான். ஊர் முழுக்க தேடிப் பார்த்துவிட்டு, ஓய்ந்து, காட்டுக்குச் சென்றுவிடுவார்கள். வீட்டில் எல்லோரும் வேலைக்குச் சென்றதும், பஞ்சாயத்து போர்டு டிவி முன் துண்டை விரித்துக் கொள்வான். நாள் முழுக்க கிரிக்கெட். மதியச் சாப்பாட்டுக்குக்கூட வரமாட்டான். கிரிக்கெட் பார்த்து மாட்டிக் கொண்ட நாள்களில் போட்டு மொத்துவார்கள். வாங்கிக் கொள்வான். ஆனாலும் கடைசிவரை அவன் பகலில் ஒன்டே மேட்ச் நடந்த நாள்களில் வேலைக்குச் சென்றதே இல்லை. நிற்க.

அப்படியொரு நற்காலைப் பொழுதில்தான் ‛இன்னிக்கு நீ என் கூட வா…’ என அந்த நல்ல காரியத்தைச் செய்தான். நானும் அவனோடு பஞ்சாயத்து போர்டு டிவி முன் கடை விரித்தேன். உலகக் கோப்பை. இந்தியா – இலங்கை மோதல். நான் பார்த்த முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டி. பக்கத்தில் இருந்து ஒவ்வொரு பந்துக்கும் விளக்கம் கொடுத்துக்கொண்டிருந்தான். சச்சின் சதம். இந்தியா தோல்வி. அன்று ஹெல்மெட்டுக்குள் பற்கள் தெரிய சச்சின் சிரித்த சிரிப்பும், முத்தையா முரளிதரன் பந்தில் டீப் மிட் விக்கெட்டில் அடித்த சிக்ஸரும், தோல்வி விரக்தியில் ஃபெரோஷா கோட்லா மைதானத்தில் தீவைத்துக் கொளுத்தப்பட்ட அட்டைப் படங்களும், முட்டை உடையாமல் இருக்க கோழி ஃபெவிகால் தின்று கொண்டிருப்பதாகக் காட்டப்பட்ட விளம்பரங்களும் இன்னமும் ஞாபகம் இருக்கிறது.

முதல் பார்வையில் நம்மைப் பார்த்து சிரித்து விட்ட பெண்ணை மறுநாள் ஃபாலோ பண்ணாமல் இருப்பது மகா பாவம் இல்லையா? அதுவும் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் அதிகளவில் பார்க்கப்பட்ட, பாராட்டப்பட்ட,  ரசிக்கப்பட்ட, மெச்சப்பட்ட, தூற்றப்பட்ட, போற்றப்பட்ட, நேசிக்கப்பட்ட, ஆராதிக்கப்பட்ட, ஆசிர்வதிக்கப்பட்ட, விமர்சிக்கப்பட்ட, விவாதிக்கப்பட்ட, புகழப்பட்ட, பின்பற்றப்பட்ட, ஈர்க்கப்பட்ட, மதிக்கப்பட்ட, யூகிக்கப்பட்ட, எதிர்பார்க்கப்பட்ட, கொண்டாடப்பட்ட, வழிபடப்பட்ட வீரர் ஒருவரை ஃபாலோ பண்ணாமல் இருக்க முடியுமா என்ன? அன்று முதல் நானும் அவனைப் போல வேலைக்கு மட்டம் போட ஆரம்பித்தேன். சச்சினைப் பின்தொடர்ந்தேன். கிரிக்கெட் பிடித்தது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

சக்திமான், ஜெய் ஹனுமன் சீரியல்கள் கோலோச்சிய தூர்தர்ஷன் காலத்தில் எங்களுக்கு இருந்த ஒரே என்டர்டெய்ன்மென்ட் கிரிக்கெட், கிரிக்கெட், கிரிக்கெட். அன்று எங்கள் ஊரில் இருந்த ஒரே கலர் டிவி பஞ்சாயத்து போர்டு டிவி மட்டுமே. பகலிரவு ஒன்டே மேட்ச்சை ஊரே திரண்டு பார்க்கும். வசந்தகாலம் அது. காரணகர்த்தா சச்சின். மிகைப்படுத்தல் எல்லாம் இல்லை. தோனி போலவே நாங்களும் சச்சின் அவுட்டானதும் டிவியை ஆஃப் செய்துவிட்டு கிளம்பி இருக்கிறோம். எச்சில் விழுங்கி சச்சின் சதம் அடிக்கும் தருணத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இளையவனை ‛நீ பார்த்தா அவன் சதம் அடிக்க மாட்டான்…’ என விரட்டி இருக்கிறோம். சென்டிமென்ட் காரணமாக இடம் மாறாமல் உட்கார்ந்திருக்கிறோம். ஆங்கிலம், ஹிந்தி தெரியாது என்றாலும் கரன்ட் கட் ஆன நேரத்தில் ரேடியோவைத் திருகி ஸ்கோர் கேட்டிருக்கிறோம். சச்சின் அவுட் எனத் தெரிந்தால் இனி தேறாது என தூங்கப் போயிருக்கிறோம்.

1998. உள்ளூரை விட்டு பக்கத்து ஊர் டவுனில் படிக்கச் செல்லும் நேரம். சைக்கிள் பழகினோம். நீச்சல் தெரியும். ஆஃப் சைட், லெக் சைட், ஸ்ட்ரெய்ட் திசைகளைத் தாண்டி ஓரளவு ரூல்ஸ் தெரியும். ஆஃப் ஸ்பின்னுக்கும், லெக் ஸ்பின்னுக்கும் வித்தியாசம் புரியும். மார்க் வாக் யார் என்று தெரியும். ஷேன் வார்ன் எப்பேற்பட்ட ஆள் எனப் பேசிக்கொள்வோம். ஃபிளெமிங், காஸ்பரோவிச்சின் வேகம் பிடிபட்டது. அந்த சமயத்தில்தான் அந்த அதிசயமும் நிகழ்ந்தது. ஷார்ஜா என்றதும் கோக கோலா கோப்பை, மணல் புயல். டோனி கிரேக் கமென்ட்ரி. ஷேன் வார்ன் பந்தில் பறந்த சிக்ஸ்ர்கள், பிறந்தநாள் சதம், இந்தியா ஃபைனலுக்கு முன்னேறியது. ஃபைனலில் ஜெயித்தது இவை எல்லாம் கோர்வையாக நினைவுக்கு வந்தால் நீயும் சச்சின் ரசிகனே. இதுவரை சச்சின் ரசிகனாக இருந்தவர்கள் இந்த இன்னிங்ஸுக்குப் பின் வெறியர்கள் ஆனார்கள். நானும்...

1999 உலகக் கோப்பை. கேபிள் டிவி கோலோச்சி விட்டது. பல வீடுகளில் கலர் டிவி வந்து விட்டது. தூர்தர்ஷனின் பிரைம் டைம் முடிவுக்கு வரும் நேரம். இந்தியா உலகக் கோப்பையின் முதலிரண்டு போட்டிகளில் தோல்வி. தந்தையின் மரணத்துக்குப் பின் மீண்டும் இங்கிலாந்து சென்று, கென்யாவுக்கு எதிராக ஒரு அட்டகாச சதம் விளாசினார் சச்சின். உலக கோப்பையில் இந்தியா நீடிக்க உதவிய சதம் அது. சதம் அடித்துவிட்டு வானத்தை நோக்கிப் பார்த்தார். தன் தந்தையிடம் ஆசிர்வாதம் பெற்றார். அன்றுமுதல் ஒவ்வொருமுறையும் சதம் அடித்து வானம் நோக்கிப் பார்ப்பதை வாடிக்கையாகக் கொண்டார். சச்சின் இன்னும் மனதுக்கு நெருக்கமான தருணம் அது. 

2003. பிளஸ் 2 பரிட்சையும் உலகக் கோப்பையும் ஒன்றுபோல தொடங்குகிறது. சச்சின் ருத்ரதாண்டவம் ஆடிய உலகக் கோப்பை அது. ஒரு போட்டியைக் கூட, ஒரு பந்தைக் கூட மிஸ் செய்யவில்லை. பாகிஸ்தானுக்கு எதிராக நொண்டிக்கொண்டே சோயிப் அக்தர், வாசிம் அக்ரம் பந்தைக் கிழித்ததெல்லாம்  இன்னும் கண்ணுக்குள். ஆனால் ஃபைனலில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி. அந்தத் தொடரில் இந்தியா இரண்டு முறை தோற்றது. இரண்டும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக… ஆனால் அந்த உலகக் கோப்பையின் நாயகன் சச்சின். இருந்தாலும் உலகக் கோப்பை கிடைக்காத சோகத்தில் இருந்தோம். எங்களை எங்களாலேயே தேற்ற முடியவில்லை.

அதன்பின் கல்லூரி, வேலை என எவ்வளவோ மாறி விட்டது.  இந்திய அணியிலும் ஏகப்பட்ட மாற்றங்கள். ஆனால் ஒன்று மட்டும் மாறவே இல்லை. ஹைதராபாத்தில் நடந்த போட்டியில் ஆஸ்திரேலியா நிர்ணயித்த இலக்கு 351. இரண்டாவது இன்னிங்சில் சச்சின் பொறுப்புடன் ஆடி 175 ரன்கள் அடித்தபோதும், இந்தியா தோல்வி. சச்சின் அவுட்டானால் மற்ற பேட்ஸ்மேன்கள் வரிசையாக பெவிலியன் திரும்பி விடுவர் என்ற தியரி 2009 வரை தொடர்ந்தது. ரிக்கி பாண்டிங் சொன்னதுபோல, சச்சின் இருக்கும்வரை எதிரணிக்கு அவர் மட்டுமே சிம்மசொப்பனம்.

2010. நல்ல இடத்தில் வேலை. தூர்தர்ஷனில் கிரிக்கெட் பார்த்த காலத்தில் இருந்து நல்ல முன்னேற்றம். லைவ் ஸ்ட்ரிம்களில் மேட்ச் பார்க்கலாம். இன்னமும் சச்சின் ஆடுகிறார். எதற்காக? அவர் படைக்க வேண்டிய சாதனை ஒன்று மிச்சமிருக்கிறது. இடம்: குவாலியர். எதிரணி: தென் ஆப்ரிக்கா. 190 ரன்களுக்கு மேல் சச்சின் விளையாடிக் கொண்டிருக்கிறார். அவர் 90 ரன்களில் இருந்தாலே மனம் பதை பதைக்கும். இப்போது 190 ரன்களில் இருக்கிறார். டபுள் செஞ்சுரி சாத்தியமா? ஒருநாள் போட்டியில் முதல் இரட்டைச்சதம் அடித்தவர் என்ற சாதனை சாத்தியமா? கிரிக்இன்ஃபோ இணையத்தை மேய்கின்றனர் ரசிகர்கள். இணையம் முடங்குகிறது. என்ன ஆச்சர்யம், சச்சின் ஆடத் தொடங்கிய காலத்தில் இப்படி இணையதளங்கள் எல்லாம் இல்லவே இல்லை. நினைத்ததும் ஸ்கோர் பார்க்கும் வசதி இல்லை… சச்சின் இன்னமும் ஆடுகிறார். அதுவும் இளைஞர்கள் படைக்காத சாதனையை நோக்கி நகர்கிறார். சச்சின் அந்த சாதனையைப் படைத்து விடுவாரா? தோனி அதற்கு வழி விடுவாரா… அப்பாடா… ஒரு வழியாக இரட்டைச்சதம் அடித்து விட்டார். ட்விட்டரில் வாழ்த்துமழை பொழிகிறது. பஞ்சாயத்து போர்டு டிவியில் பார்த்து பக்கத்துவீட்டு பையனிடம் சச்சின் பெருமை பேசிய நான், ட்விட்டரில் ட்வீட் போட்டு சந்தோஷப்பட்டேன்.  டெக்னாலஜி வளர்ந்து கொண்டே இருக்கிறது. சச்சின் இன்னமும் ஆடுகிறார். முன்னைவிட படு நேர்த்தியாக.

2011 உலகக் கோப்பை. பெண் பார்க்கும் படலம் தொடங்கி விட்டது. 5 டிஜிட்டில் சம்பளம்.  ஐ.பி.எல். கோலோச்சி விட்டது. தோனி விஸ்வரூபம் எடுத்து விட்டார். விராட் கோலி வளர்ந்து வருகிறார். சச்சினுடன் விளையாடிய கேரி கிறிஸ்டன் இந்திய அணியின் பயிற்சியாளராகி விட்டார். சச்சினுக்கு முதல் பந்து வீசிய வக்கார் யூனுஸ் ரிட்டய்ட் ஆகி ஏழு வருடங்கள் கடந்துவிட்டன. சச்சின் இன்னமும் விளையாடுகிறார். இன்னமும் அவர்தான் எதிரிணியின் இலக்கு. ஃபைனலில் அவர் சொற்ப ரன்களில் அவுட். விரக்தியில் இருந்த நேரத்தில் ஊரில் இருந்து அழைத்தான் மூத்தவன். அவனிடம் புலம்ப, ‛பொறு. இந்தியா இந்தவாட்டி வேர்ல்ட் கப் ஜெயிக்குது’ என்றான். அவன் சொன்னது பலித்தது. இந்தியா இரண்டாவது முறையாக உலக சாம்பியன். சச்சினை தோளில் தூக்கி வலம் வந்தனர் இந்திய அணியினர். நிறைவாக இருந்தது.

டெஸ்ட் கிரிக்கெட்டில் கவாஸ்கர் சாதனையை முறியடித்ததில் இருந்து சதத்தில் சதம் அடித்தது வரை சச்சினின் சாதனைகளுக்கென்றெ தனி புத்தகம் எழுதலாம். இந்தக் கட்டுரையில் டெஸ்ட் கிரிக்கெட்டைத் தொடவில்லை. அது இன்னும் நீளம். ஒரு தனி மனிதனின் வாழ்க்கையில் இந்தளவு கூடவே டிராவல் செய்த கிரிக்கெட்டர் வேறு யாரும் இருக்க முடியாது. கிரிக்கெட்டில் 24 ஆண்டுகள் என்பது அசாதாரணம். அந்த அசாதாரணன் ஓய்வை அறிவித்த பின், கிரிக்கெட்டுக்கு  குட்பை சொன்னவர்கள் ஏராளம். ஹர்ஷா போக்லே ஒருமுறை சொன்னார். “சச்சின் நல்ல ரன்கள் எடுக்கும் நாட்களில், இந்தியாவே நிம்மதியாக உறங்கும்” என்று. ஆனால், வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் முடிந்து, மும்பை வான்கடே மைதானத்தைத் தொட்டுக் கும்பிட்டு, ஃபேர்வெல் ஸ்பீச்சில் ‛ரசிகர்கள் சச்சின் சச்சின்னு சொல்றது கேட்டுட்டே இருக்கும்’ என சச்சின் பேசியபோது சச்சினை விமர்சித்தவர்களும் கலங்கினர்.

இந்தியாவில் கிரிக்கெட்டை மதம் பிடித்துப் பார்க்க வைத்த பெருமை சச்சினையே சாரும். டெண்டுல்கரையே சாரும். சச்சின் டெண்டுல்கரையே சாரும். சச்சின் ரமேஷ் டெண்டுல்கரை மட்டுமே சாரும்.