Published:Updated:

சச்சினின் அந்த 7 வெற்றி ரகசியங்கள்! #MondayMotivation #HBDSachin

சச்சினின் அந்த 7 வெற்றி ரகசியங்கள்! #MondayMotivation #HBDSachin
சச்சினின் அந்த 7 வெற்றி ரகசியங்கள்! #MondayMotivation #HBDSachin

முதலில்..  பிறந்தநாள் வாழ்த்துகள் மாஸ்டர் ப்ளாஸ்டர்! ‘Sachin’ என்ற பெயர் இன்றைக்கு எத்தனை பேருக்கு உத்வேகமளிக்ககூடியதாய் இருக்கிறதென்பதை சொல்ல வேண்டியதில்லை. அவர் ஒவ்வொரு பேட்டிகளில் சொன்ன சிலவற்றில் இருந்து இன்றைய Monday Motivationஐப் பார்ப்போம்!


1.  உங்களை செம்மைப்படுத்தும் புதிய முயற்சிகளை எடுங்கள்!  

11 வயதாக இருக்கும்போது அத்தை வீட்டில் தங்கியிருந்தார். கோல்ஃப் பந்துகளை தேய்த்து ஒரு ஷேப்புக்கு கொண்டு வந்து, அத்தையை எறியச் சொல்லி பயிற்சி எடுப்பார். ஒருநாளைக்கு எக்கச்சக்கமான முறை அந்தப் பயிற்சி தொடரும்.

சச்சின்:  “அதுதான் எனக்கு பேக் ஃபுட் டிஃபன்ஸ் ஆட பின்னாளில் உதவிகரமாக இருந்தது. கோல்ஃப் பந்தை வைத்து அந்த ப்ராக்டீஸை செய்ததால், பந்து தரையில் பட்டவுடன் எங்கு திரும்பும் என்று கணிக்க முடியாது. அதைக் கணித்து விளையாடுவது சவாலாக இருந்தது. அந்தப் பயிற்சி பின்னாளில் நிறைய போட்டிகளில் கைகொடுத்தது”     

2. அமைதியாய் இருங்கள். அடுத்ததைப் பற்றி சிந்தியுங்கள்

ஒரு போட்டியில் அதிக ரன்கள் எடுத்தாலும் சரி, ரன்கள் குறைவாக எடுத்தாலும் சரி. அந்தப் போட்டியைப் பற்றி யோசிக்காமல், அடுத்த போட்டியைப் பற்றி சிந்திப்பதை வழக்கமாக வைத்திருந்தார். 

சச்சின்:  “விளையாடியபிறகு அதைப் பற்றி அடுத்தவர்தான் பேசவேண்டும். நாம் அல்ல என்று என் கோச் எனக்குக் கற்றுக்கொடுத்தார். ஆகவே, எந்த ஒரு போட்டி முடிந்தபின்னும் அதைவிட பிரகாசிக்க வேண்டும் என்பதிலேயே முனைப்புக் காட்டினேன்”


3. ஏமாற்றாதீர்கள். கடினமாக உழையுங்கள்

நெட் பயிற்சிகளின்போது, அதைவிடுத்து ஃபுட்பால், ஹாக்கி, டென்னிஸ் பால் கிரிக்கெட் என்று பலர் விளையாடப் போவார்கள். ஆனால் இவர் ஒருபோதும் அப்படிச் சென்றதில்லை. Padஉடன் நெட்டில் இறங்கி ப்ராக்டீஸ் செய்வதே இவருக்கு எப்போதும் பிடித்திருந்தது.

சச்சின்: “ஆம். என் அண்ணன்  அஜித்தும், கோச்சும் ஆரம்பத்திலிருந்து அதற்கு விட்டதே இல்லை. ‘போய் Pad கட்டிட்டு வந்து ப்ராக்டீஸை ஆரம்பி’ என்பார்கள். பிறகு எனக்கு பயிற்சி எடுப்பதுதான் பெரிய விருப்பமாக இருந்தது. பயிற்சி செஷனை ஏமாற்றி ஆகப்போவது ஒன்றுமில்லை. நஷ்டம் நமக்குத்தான் என்று கடுமையாக உழைக்க ஆரம்பித்தேன்”

4. பெரிய பிரச்னைகளை முதலில் தீருங்கள்

ஒரு அணியுடன் விளையாடுவதென்றால் அந்த அணியில் ஃபார்மில் இருக்கும் பவுலர் யார் என்று கணித்துக் கொள்வார் சச்சின். அவரை சமாளித்தாலே பாதிவேலை முடிந்த மாதிரி. ஒன்று அவரை எதிர்கொண்டு இறங்கி அடித்து, அந்த பவுலரின் நம்பிக்கையைத் தகர்ப்பார். அல்லது அவரது ஓவரில் தாக்குப் பிடித்து மற்ற பவுலர்கள் பந்தில் படம் காட்டுவார். 

நம் முன் பல பிரச்னைகள் இருந்தாலும், பெரிய பிரச்னைகளை அடையாளம் கண்டு அழித்தாலே.. பாதி பிரச்னை முடிந்தமாதிரிதான்!

5. உங்களில் நம்பிக்கை வைத்து ஆபத்தை எதிர்கொள்ளுங்கள்! 

நவம்பர் 1989. சச்சினின் முதல் இண்டர்நேஷனல் மேட்ச். டெஸ்ட். 4 போட்டிகள் கொண்ட தொடரின் நான்காவது போட்டி. பாகிஸ்தானின் சியால்கோட்டில் நடக்கிறது. நான்காவது இன்னிங்க்ஸ். முதல் 3 போட்டிகளும் டிரா. இந்தப் போட்டி பாகிஸ்தான் வென்றால் தொடர் அவர்களுக்கு. 38 ரன்களுக்கு 4 விக்கெட் காலி. களத்தில் இறங்குகிறார் சச்சின்.

தொடரின் முதல் போட்டியில் - அதாவது சச்சினின் இண்டர்நேஷனல் முதல் மேட்ச்சில் -  சச்சினை 15 ரன்களில் போல்டாக்கிய அதே வக்கார் யூனுஸ் பவுலிங். ஒரு ரன் எடுத்திருக்கும்போது சச்சினின் மூக்கைப் பதம் பார்க்கிறது பந்து. ரத்தம் கொட்ட, அவ்வளவுதான் என்று நினைக்கிறார்கள் பலரும்.

சச்சின்: “அதுவும் ஜாவேத் மியாண்டட்.. ‘இதுக்கு மேல ஆட முடியாது. ஆஸ்பத்திரிக்கு போ’ என்றார். நான் கிரவுண்டுக்கு வந்த டாக்டரிடம் ஐஸ்கட்டி வைத்து முதலுதவி மட்டும் செய்துகொண்டேன். தொடர்ந்து விளையாடினேன். ஏனென்றால்.. இன்னும் ஒன்றரை நாட்கள் இருந்தது. 4 விக்கெட் விழுந்த நிலையில், நானும் களத்தைவிட்டு விலகினால் அது எதிரணிக்கு பலமாக அமையும் என்று நினைத்தேன்”

அந்தப் போட்டியில் நின்று விளையாடிய சச்சின் எடுத்தது 57 ரன்கள். அதன்பிறகு  ரிஸ்கான சூழல்களை எதிர்கொள்வது சச்சினுக்குப் பிடித்தமானதாகவே ஆகிவிட்டதாம்!


   
6.  சின்ன வெற்றியைக் கொண்டாடுங்கள்! 

பெரிய பெரிய வெற்றிகளைக் கொண்டாட நிறைய பேர் இருப்பார்கள். அல்லது மனமே தானாக கொண்டாட்ட மனநிலைக்குத் தள்ளும். சின்ன வெற்றிகளை கொண்டாடுங்கள். ஆர்ப்பாட்டமாக அல்ல. அமைதியாகவேனும். 

சச்சின் பெரிய வெற்றிகளின்போது அமைதியாக இருந்ததைப் பார்த்திருப்பீர்கள். தமிழகத்துடனான ஒரு ரஞ்சி போட்டியின்போது, மும்பை சார்பாக விளையாடிக் கொண்டிருந்தார் இவர். 40 ரன்கள் தேவை எனும்போது 8 விக்கெட்களை இழந்திருந்தது மும்பை. இவர் நின்று விளையாடி வெற்றிக்கு வித்திட்டார்.

”அன்றைக்கு ஸ்டேடியத்தில் அப்படி ஒன்றும் ஆட்களில்லை. டெலிவிஷன் ஒளிபரப்பும் இல்லை. ஆனால் அன்று சச்சின் கொண்டாட்டமாய் வந்ததை அப்படி ரசித்தேன். அந்த சச்சின்தான் என் ஃபேவரைட்” என்கிறார் இந்தியா டுடேவின் ஸ்போர்ட்ஸ்  எடிட்டர் ஷார்தா உக்ரா.

7. பெரிய வெற்றிகளைத் தொட, சின்ன விஷயங்களை தியாகம் செய்யத் துணியுங்கள்!  

வெற்றிக்கான ரகசியமாக சச்சின் பல இடங்களில் சொல்வது இது. ‘சில விஷயங்களை தியாகம் செய்தே ஆகவேண்டும். இல்லையென்றால் வெற்றியைப் பற்றிச் சிந்திக்காதீர்கள்’ என்பார்.

சச்சின்: “எனக்கு லேட் நைட் பார்ட்டிகள், நண்பர்களோடு சுற்றுதல் என்பதற்கான வாய்ப்புகள் நிறையவே இருந்தன. ஆனால் அறைக்கு வந்து சாப்பிட்டுவிட்டு அடுத்தநாளுக்கான நிகழ்வுகளை அசைபோட்டுக் கொண்டே தூங்கிவிடுவேன்” 

அப்படி நிறைய விஷயங்களை தியாகம் செய்யத் தயாராக இருந்து, தியாகமும் செய்ததால்தான் பெரிய விஷயங்களை சச்சினால் அடைய முடிந்தது.

கற்றுக் கொண்டோம் சச்சின். இன்னும் கற்றுக்கொள்ளவும் தயாராக இருக்கிறோம்!

மீண்டுமொருமுறை சொல்லிக் கொள்கிறேன் : Happy Birthday My Dear Sachin!  
 

அடுத்த கட்டுரைக்கு