Published:Updated:

தர்மசாலாவில் இந்தியாவின் வெற்றிக்கு விதை போட்ட குல்தீப்! யார் இந்த சைனாமேன்?

தர்மசாலாவில் இந்தியாவின் வெற்றிக்கு விதை போட்ட குல்தீப்! யார் இந்த சைனாமேன்?

தர்மசாலாவில் இந்தியாவின் வெற்றிக்கு விதை போட்ட குல்தீப்! யார் இந்த சைனாமேன்?

தர்மசாலாவில் இந்தியாவின் வெற்றிக்கு விதை போட்ட குல்தீப்! யார் இந்த சைனாமேன்?

தர்மசாலாவில் இந்தியாவின் வெற்றிக்கு விதை போட்ட குல்தீப்! யார் இந்த சைனாமேன்?

Published:Updated:
தர்மசாலாவில் இந்தியாவின் வெற்றிக்கு விதை போட்ட குல்தீப்! யார் இந்த சைனாமேன்?

இந்தியா அபார வெற்றி பெற்றிருக்கிறது. எட்டு விக்கெட் வித்தியாசத்தில் தரம்சாலா டெஸ்ட் போட்டியை வென்றதன் மூலம் தொடரையும் 2-1 என்ற கணக்கில் ஜெயித்து கெத்து காண்பித்திருக்கிறது. இந்த தொடரில் இந்தியா கண்டெடுத்த முத்து குல்தீப் யாதவ். பேட்டிங்குக்கு சாதகமான முதல் நாள் பிட்சில், அநாயாசமாக நான்கு விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார் சைனாமேன் குல்தீப். 

யார் இந்த குல்தீப்? 

 2014ல் U19 உலக கோப்பை தொடருக்கு மண்டல அளவிலான போட்டியில் நன்றாக விளையாடிய போது தான் இவர் மீது தேர்வாளர்கள் பார்வை விழுந்தது. குல்தீப்பின் வருகை ஸ்வாரஸ்யமானது. காரணம், இவர் தான் இந்திய கிரிக்கெட் அணியின் முதல் சைனாமேன் பௌலர். இதற்கு முன், இந்திய மகளிர் அணியில் ப்ரித்தி திம்ரி சைனாமேன் பௌலராக இருந்தார். 

சைனாமேன் என்றால் என்ன?

1933ம் ஆண்டு நடைபெற்ற இங்கிலாந்து, மேற்கு இந்திய தீவு அணிகளுக்கு இடையேயான போட்டியில் முதல் இன்னிங்ஸில் 375 ரன்கள் எடுத்திருந்தது வெஸ்ட் இண்டீஸ். இங்கிலாந்தின் டக்ளஸ் ஜார்டினும் வால்டர் ராபின்ஸும் 7 வது விக்கெட்டுக்கு 140 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து தங்கள்  திறமையை  நிரூபித்தனர். சதத்தை நெருங்கும் வேளையில், வெஸ்ட் இண்டீஸின் இடக்கை சுழல் பந்து வீச்சாளர் எல்லீஸ் அச்லாங்கின் சாதுரியமான பந்து வீச்சினால் போல்டானார் இங்கிலாந்து வீரர்  ராபின்ஸ். அச்லாங்கின் பூர்வீகம் சீனா. பெவிலியன் திரும்பிய ராபின்ஸ் ``அந்த சைனாகாரர் பந்தை நம்பவே முடியவில்லை; அப்படியொரு பந்தை இதுவரை நான் எதிர்கொண்டதும் இல்லை; சாதுர்ய பந்து வீச்சினால் என்னை அவுட் செய்துவிட்டார்’’ என்றாராம். ஆக, அன்றிலிருந்து அச்லாங் போன்று வீசும் இடக்கை சுழற்பந்து வீச்சாளர்களை ``சைனாமேன்`` என்று அழைக்கத் தொடங்கியது கிரிக்கெட் உலகம். 

சைனாமேன் பௌலிங் என்பது ஒரு கலை. இடக்கை பௌலர் தன் மணிக்கட்டை திருப்பி வலது கையால் லெக் ஸ்பின் போல பந்து வீசுவது தான் இந்த பௌலிங்கின் சிறப்பு. விரல்களுக்கு பதிலாக மணிக்கட்டை பயன்படுத்தி ஸ்பின் பௌலிங் செய்வது Unorthodox bowl எனப்படும். வலதுகை சுழற்பந்து வீச்சாளர்கள் நிறைய பேர் இம்முறையில் தேர்ந்தவர்கள். ஆனால். இடக்கையில்  Unorthodox பௌலிங் செய்வது கடினமான ஒன்று. இவ்வாறு வீசும் போது, வலது கை ஸ்பின் பௌலர் வீசுவது போல பந்தானது இடப்பக்கத்தில் இருந்து வலப்பக்கம் திரும்பும். இதற்கு பெயர் தான் சைனாமேன் ஸ்டைல்.

இந்த சைனாமேன் ஸ்டைலை பயன்படுத்துவோர்களில் நம் கண்களுக்கு முன் வந்து நிற்பவர் ஆஸ்திரேலியாவின் ப்ராட் ஹாக். 40 வயதுக்கு மேலாகியும் இன்னும் உள்ளூர் போட்டிகளில் விளையாடி வருகிறார். தென் ஆப்ரிக்காவின் பால் ஆடம்ஸ், வெஸ்ட் இண்டீஸின் கேரி சோபர்ஸ், ஆஸ்திரேலாவின் மைக்கேல் பெவன், இங்கிலாந்தின் ஜானி வார்டில் மற்றும் டெனிஸ் காம்ப்டன்,  சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட்டுக்கு அறிமுகமான இலங்கை வீரர் லக்ஷன் சடங்கன் ஆகியோர் சைனாமேன் பெளலர்களே. பொதுவாக, பேட்ஸ்மேன்கள் இந்த வகையான பந்துவீச்சினை எதிர்கொள்ள சிரமப்படுவார்கள். இந்த வகையான ஸ்டைலினை கொண்ட பந்து வீச்சாளர் 80  ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணிக்கு இப்போது தான் கிடைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

``கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு விளையாடும் போது, ப்ராட் ஹாக் உடன் தான் அதிக நேரம் செலவிடுவேன். அவர்  நிறைய ஆலோசனைகளை அளிப்பார். வலை பயிற்சியில் ஈடுபடும்போது ஏற்படும் தவறுகளை உன்னிப்பாக கவனித்து என்னிடம் சொல்வார். உண்மையில், ஒரு இடக்கை வேகப்பந்து வீச்சாளராக தான் என் கிரிக்கெட் பயணம் ஆரம்பித்தது.  சைனாமேன் என்றால் என்ன என்றே தெரியாது. ஒரு நாள், என்னுடைய பயிற்சியாளர் தான் என்னை ஸ்பின் பௌலிங்கிற்கு மாற அறிவுறுத்தினார். இந்த ஸ்டைலில் நான் வீசிய முதல் பந்தை பார்த்தே இந்த ஸ்டைலிலேயே பந்து வீச ஆலோசனைகள் அளித்து வந்தார். நான் இதனை எளிதாக செய்ய முடியவில்லை. இதில் உள்ள சிரமங்கள் ஏராளம். ஆனால், போகப்போக பழகிவிட்டது.`` என சைனாமேன் ரகசியத்தை விவரிக்கிறார்  குல்தீப்.

 2014 வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான தொடரிலியே குல்தீப்  இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டார். ஆனால், ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைக்கவில்லை. இப்போது தான் வாய்ப்பு கைகூடியிருக்கிறது.  பவுலிங் மட்டுமல்ல பேட்டிங்கிலும் குல்தீப் கில்லி. ரஞ்சிக் கோப்பை தொடரில் உத்திர பிரதேசத்திற்காக அதிக விக்கெட்டை கைப்பற்றியது (35) மட்டுமல்லாமல், 13 இன்னிங்ஸில் 466 ரன்கள் குவித்து ஜொலித்தார். "பேட்டிங்கில் நன்றாகவே ஆட முடியும் என்றாலும், பந்து வீச்சுக்குத்தான் முன்னுரிமை கொடுப்பதாகவும் ஒவ்வொரு விக்கெட்டும் தனக்கு முக்கியம் என்றும் குல்தீப் சிலாகிக்கிறார்.

இவருக்கு இன்ஸ்பிரேஷன்   பேட்டிங்கில் சச்சின், பௌலிங்கில் வார்னே.

``இவர் ஒரு வித்தியாசமான பந்து வீச்சாளர். நிச்சயமாக பின் வரும் போட்டிகளில் வெற்றி பெற வழி செய்வார். ஆக, நம் கண்கள் அவர் மேல் இருக்கட்டும் `` என்று கவாஸ்கர் தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

``இந்த போட்டியில் இவரின் பந்து வீச்சின் வித்தியாசத்தை கண்டு வியந்தேன்`` என்று சச்சின் ட்வீட்டியுள்ளார். 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தர்மசாலா டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்க்ஸில் வார்னர், மேக்ஸ்வெல், ஹான்ட்ஸ்கோம்ப், கம்மின்ஸ் ஆகிய நான்கு முக்கிய விக்கெட்டுகளையும் கைப்பற்றி, ஆஸ்திரேலியாவை 300 ரன்களுக்குள் சுருட்டியதில் பெரும் பங்கு `சைனாமேன் நாயகன்` குல்தீப்பிற்கு உண்டு. பெரும் எதிர்ப்பார்ப்பிற்கு இடையே விளையாடும் குல்தீப், இரண்டாவது இன்னிங்ஸில் சொல்லும்படி சோபிக்கவில்லை. இருந்தும், இனி வரும் போட்டிகளில் அணியில் இடம்பெற்று பேட்டிங்கிலும், பந்து வீச்சிலும் ஜொலிக்கவேண்டும் என்பதே ரசிகர்களின் ஆசை. குல்தீப்புக்கு நல்ல அடித்தளமாக வரப்போகும் ஐபிஎல் தொடர் அமையும். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இருந்தாலும், இதுவரை போதிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இந்த முறை கம்பீர் அவருக்கு நிறைய வாய்ப்புகளை வழங்குவார் என நம்பலாம்.

ஏற்கெனவே, அஸ்வின், ஜடேஜா என சுழற்பந்து வீச்சில் இந்தியா வலுவாக இருக்கும் தருணத்தில், ஜெயந்த் யாதவ், யுவேந்திர சாஹல் என இளம் வீரர்களும் நன்றாக பந்து வீசி வருகிறார்கள். இப்போது  மேலும், ஒருவரின் பெயர் ஸ்பின்னர்கள் பட்டியலில் சேர்ந்துள்ளது. சுழற்பந்து ஜாம்பவானும் இந்திய அணியின் பயிற்சியாளருமான கும்ப்ளே இவரையும் மோல்டு செய்து அடுத்த கட்டத்துக்கு அனுப்புவார் என  எதிர்பார்க்கலாம்.

 - உ.சுதர்சன் காந்தி

(மாணவப் பத்திரிகையாளர்)