Published:Updated:

மெக்ராத், வார்னேவைக் கதற வைத்த லட்சுமண் - டிராவிட் இணை! க்ளாஸிக் மேட்ச் நினைவுகள் #OnThisDay

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
மெக்ராத், வார்னேவைக் கதற வைத்த லட்சுமண் -  டிராவிட் இணை! க்ளாஸிக் மேட்ச் நினைவுகள் #OnThisDay
மெக்ராத், வார்னேவைக் கதற வைத்த லட்சுமண் - டிராவிட் இணை! க்ளாஸிக் மேட்ச் நினைவுகள் #OnThisDay

மெக்ராத், வார்னேவைக் கதற வைத்த லட்சுமண் - டிராவிட் இணை! க்ளாஸிக் மேட்ச் நினைவுகள் #OnThisDay

அந்த கிரிக்கெட் போட்டியை டிவியில் பார்த்தவர்களால், வாழ்நாளில் அவ்வளவு எளிதில் அந்த மேட்ச்சை மறந்துவிட முடியாது.  ஒரே ஒரு டெஸ்ட் போட்டிதான் அது. அந்த ஒரே ஒரு மேட்ச்சை ஜெயித்ததற்குத்தான் இந்தியாவே கோலாகலம் பூண்டது. டீக் கடைகளில், சலூன் கடைகளில், ஆஃபீஸ்களில், மேன்ஷன்களில், ஹால்களில், பெரிய பெரிய ஷோரூம் வாசல்களில், மாணவர்களின் விடுதி அறைகளில் ... என அத்தனை இடங்களிலும் மேட்ச் முடிந்தவுடன் வெறித்தனமாக சந்தோஷக் குரல் எழுப்பினார்கள். சக நண்பர்களை ஆரத் தழுவினார்கள். முதன்முறையாக ஒரு டெஸ்ட் போட்டியை ஜெயித்ததற்கு நாடு முழுவதும் பட்டாசு வெடித்துக் கொண்டாடினார்கள். லட்சுமண் ஆட்டத்தால் ரசிகர்களுக்குப் பெருமை தாங்கவில்லை. பாசிட்டிவ் எனர்ஜி பொங்கியது. அப்படி என்ன சிறப்பு, அந்த வெற்றியில்? 

1983-ல் இந்தியா உலககோப்பையை வென்றதற்கும், 2011-ல் தோனி தலைமையில் இந்தியா கோப்பையை ஜெயித்ததற்கும் இணையான ஒரு நிகழ்வு அது. ஏன்?  

1999 இறுதியில் இருந்து 2001 பிப்ரவரி  வரை ஆஸ்திரேலியா ஆடிய டெஸ்ட் போட்டிகளின் எண்ணிக்கை பதினைந்து. இதில் ஒரு போட்டி கூட தோற்கவில்லை ஆஸி!  மிக முக்கியமான அம்சம் என்னவென்றால், இதில் ஒரு போட்டிகூட டிரா ஆகவும் இல்லை. பதினைந்து டெஸ்ட் போட்டியையும் ஜெயித்து கெத்து காண்பித்தது ஆஸ்திரேலியா. இந்தப் பதினைந்து வெற்றிகளுக்குள் இந்தியாவை 3-0  என ஒயிட்வாஷ் செய்ததும் அடங்கும். 1999-ம் ஆண்டு சச்சின் டெண்டுல்கர் தலைமையில் இந்திய அணி ஆஸ்திரேலியா சென்றிருந்தது. மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், 285 ரன்கள் வித்தியாசத்தில், 180 ரன்கள் வித்தியாசத்தில், இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் என வரிசையாக மிகமோசமான தோல்விகளைச் சந்தித்தது, 

அந்தக் காலகட்டத்தில் ஆஸ்திரேலியா வெற்றிகளை வாரிக்குவித்து, கிரிக்கெட் அரங்கில் அசைக்க முடியாத டானாக உருவெடுத்துக் கொண்டிருந்தது. இந்தப் பக்கம் இந்தியாவோ மேட்ச் பிக்சிங், படுதோல்விகள் எனத் தள்ளாடியது. சச்சின் தலைமையில் ஆஸ்திரேலிய மண்ணில் ஒயிட்வாஷ்  ஆன  கையோடு, சொந்த மண்ணில் தென் ஆப்ரிக்காவிடமும் 0-2 என ஒயிட் வாஷ் ஆகியிருந்தது. இதற்கு விலையாக சச்சினின் கேப்டன் பதவி பிடுங்கப்பட்டு, கங்குலியிடம் கேப்டன்சியை கொடுத்திருந்தார்கள். கங்குலி கேப்டன் பொறுப்பை ஏற்ற முதல் டெஸ்ட் தொடர் ஜிம்பாப்வேவுக்கு எதிராகத்தான். அதில் சச்சின், டிராவிட் ஆகியோரின் சதங்கள் மற்றும் இரட்டைச் சதங்களால் இந்தியா 1-0 என வென்றது. 

2001 பிப்ரவரி இறுதியில் தொடர்ச்சியாக வெற்றிக் கொடியை நாட்டிய தெம்புடன் இந்தியா வந்து இறங்கியது ஆஸ்திரேலியா. தொடர் தோல்விகளைச் சந்தித்துக் கொண்டிருந்த இந்திய அணியோ, மீண்டும் ஜாம்பவான் ஆஸ்திரேலியாவுடன் மோத வேண்டுமா என அயர்ச்சியாகி இருந்தது. இந்தத் தொடரில் ஆஸ்திரேலியா 0-3 என இந்தியாவை வாஷ் அவுட் செய்யும் என அப்போதைய  கிரிக்கெட் விமர்சகர்கள் கட்டுரைகள் எழுதிக் குவித்தார்கள். "கங்குலியின் கேப்டன்சிக்கும் இது மிகப்பெரிய சவால். அவரால் இந்த பிரஷரை தாங்க முடியாது. அவர் கேப்டனாக பணியாற்றும் கடைசித் தொடராகக் கூட இது இருக்கக்கூடும்" என ஆஸ்திரேலிய பத்திரிகைகள் கேலி செய்தன. "1970-க்குப் பின்னர் முப்பது ஆண்டுகளாக இந்திய மண்ணில் ஆஸ்திரேலியா தொடரை ஜெயிக்கவில்லை. இந்தத் தொடரை ஜெயித்துக் காட்டி சாதனை படைப்போம். எங்களது தொடர் வெற்றியை இந்திய அணியால் தடுக்க முடியாது" என சூளுரைத்தார் ஆஸி கேப்டன் ஸ்டீவ் வாக் 

பிப்ரவரி 27-ம் தேதி மும்பையில் முதல் டெஸ்ட் போட்டி ஆரம்பித்தது. சொன்னதுபோலவே அந்தப் போட்டியில் பத்து விக்கெட் வித்தியாசத்தில் ஜெயித்தது ஆஸ்திரேலியா. 'இவங்க தேற மாட்டாங்க'  என முடிவு கட்டி அடித்தன பத்திரிகைகள். "EDEN எங்களின் DEN. கொல்கத்தா எனது சொந்த மண், இங்கே நிச்சயம் ஜெயிப்போம்" என வங்காள பத்திரிகைகளில் எழுதியிருந்தார் கங்குலி. இரண்டாவது டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் மார்ச் 11, 2001 அன்று தொடங்கியது. ஸ்டீவ் வாக் டாஸ் ஜெயித்தார். பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தார். இந்திய மண்ணில் சேஸிங் செய்து ஜெயிப்பது சாதாரண விஷயமில்லை என்பதால் தலையில் கை வைத்தனர் ரசிகர்கள். 

அந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியில் இருந்த வீரர்கள் யார் யார் தெரியுமா? 

மைக்கேல் ஸ்லாட்டர், மாத்யூ ஹைடன், ஜஸ்டின் லாங்கர், மார்க் வாக், ஸ்டீவ் வாக், ரிக்கி பாண்டிங், ஆடம் கில்கிறிஸ்ட், ஷேன் வார்னே, காஸ்புரோவிச், கில்லெஸ்பி, மெக்ராத். அப்போதைய இந்திய அணியில்  டிராவிட், சச்சின், கங்குலி தவிர வேறு யாரும் நட்சத்திர வீரர்களே கிடையாது. தாஸ், சடகோபன் ரமேஷ், லட்சுமணன், மோங்கியா, ஹர்பஜன், ஜாகீர்கான், வெங்கடபதி ராஜு, வெங்கடேஷ் பிரசாத் என இளம் வீரர்கள் நிறைந்திருந்தனர். 

டாஸ் வென்று பேட்டிங்கைத் தொடங்கிய ஆஸ்திரேலியா, பந்துகள் நன்றாகத் திரும்புவதை உணர்ந்து பொறுமையாக பேட்டிங் செய்ய ஆரம்பித்தது. ஹைடன் மட்டுமே பவுண்டரிகள் விளாசிக்கொண்டிருந்தார். அவர் 97 ரன்களில் அவுட் ஆனார். மதியம் தேநீர் இடைவேளை வரை மூன்று விக்கெட்டுகளை மட்டுமே இழந்திருந்தது ஆஸ்திரேலியா. அதன் பின்னர் 66-வது ஓவரில் மார்க் வாக் அவுட் ஆனார். 71-வது ஓவர் முடிவில் ஆஸ்திரேலியா 4 விக்கெட் இழப்புக்கு 251  ரன் எடுத்திருந்தது. அப்போது தான் அந்த மேஜிக் ஓவரை வீசினார் ஹர்பஜன் சிங். பாண்டிங், கில்கிறிஸ்ட், வார்னே ஆகிய மூவரின் விக்கெட்டுகளை அடுத்தடுத்த பந்துகளில் வீழ்த்தினார். முதன்முறையாக சர்வதேச போட்டிகளில் ஹாட்ரிக் சாதனை படைத்த மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்து மைதானம் முழுவதும் ஓடினார். 

"ஆறு மாதத்துக்கு முன்னாடி அப்பா இறந்துட்டாரு. அவர் முன்னாடி என் திறமைய காமிக்கணும்னு ஆசையா இருந்தேன். இதோ இப்போ சாதிச்சிருக்கேன், ஆனா இதை பாக்குறதுக்கு அவர் இல்லையே" என விழியோரத்தில் கண்ணீர் கசிய பேட்டியில் சொன்னார் பாஜ்ஜி. ஹர்பஜன் வீசிய அந்த 72-வது ஓவருக்கு முன்பு வரை ஆஸ்திரேலியா கையில் இருந்த மேட்ச், மூன்றே பந்துகளில் இந்தியா பக்கம் சாய்ந்தது. முதல் நாள் முடிவில் ஆஸியின் ஸ்கோர் 291/8. " நாளை  காலை முதல் பத்து ஓவருக்குள் மேட்ச் முடித்து விடுவோம். 300 -310 ரன்களுக்குள் அவர்களை சுருட்டுவோம்" எனச் சொன்னார் வெங்கடேஷ் பிரசாத். அப்போது ஸ்டீவ் வாக் என்ற அபாயகரமான பேட்ஸ்மேன் களத்தில் இருப்பதை அசட்டையாக எடுத்துக்கொண்டது இந்திய அணி. 

மேட்ச் முடிந்த, அன்றைய தினம் இரவு சுமார்  இரண்டரை மணி நேரம் கில்லெஸ்பிக்கும், மெக்ராத்துக்கும் ஹர்பஜன் பந்துகளை சமாளிப்பது எப்படி என வகுப்பெடுத்தார் ஸ்டீவ் வாக். மறுநாள் கில்லெஸ்பியுடன் களமிறங்கினார் ஸ்டீவ் வாக். ஹர்பஜனின் பந்துகளுக்கு மட்டுமல்ல, எளிதில் அணியைச் சுருட்டிவிடலாம் என நினைத்த கங்குலியின் கனவுக்கும் சேர்த்து இரண்டு பேரும் முட்டுக்கட்டை போட ஆரம்பித்தார்கள். "ரன்கள் எடுப்பது முக்கியமல்ல எவ்வளவு நேரம் பேட்டிங் ஆடுகிறோமோ அவ்வளவு நல்லது" என கில்லெஸ்பியிடம் சொல்லியிருந்தார் ஸ்டீவ் வாக். இதனால் ஓரளவு நல்ல பந்துகளைக் கூட அடிக்காமல் டொக் வைத்தனர் இருவரும். விரக்தியின் உச்சத்துக்கே சென்று இந்திய பவுலர்கள் தவறான பந்துகளை வீசினால், அதை மட்டும் கச்சிதமாகப் பிடித்துக்கொண்டு ரன்களை குவித்தனர். இதனால் ஒவ்வொரு ரன்னாக குவிய ஆரம்பித்தது. 

291-ல் இருந்து 300 ...325 ...350 ...400 என விக்கெட்டே விழாமல் ஸ்கோர் அதிகரிக்க டென்ஷன் ஆனார் கங்குலி. சுமார் 45 ஓவர்களுக்கும் மேல் இணைந்து பேட்டிங் பிடித்த இந்த இணை 133 ரன்களை குவித்தது. அதன் பின்னர் வந்த மெக்ராத்தும் இந்திய பவுலர்களை வெறுப்பேற்றினார். அவர் 28 பந்துகளில் 21 ரன் குவித்தார். மெக்ராத்தின் பொறுப்பான இன்னிங்ஸால் மறுபக்கம் தனது 25-வது சதத்தை பூர்த்தி செய்தார் ஸ்டீவ் வாக். கடைசி விக்கெட்டாக ஹர்பஜன் பந்தில்  எல்பிடபுள்யு முறையில் அவுட் ஆனார் ஸ்டீவ் வாக். அப்போது அவர் 203 பந்துகளில் 110 ரன்கள் எடுத்திருந்தார். ஆஸ்திரேலியா 445 ரன்களுக்கு இன்னிங்ஸை இழந்தது. 

இதையடுத்து இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி,  மெக்ராத்தின் பந்துவீச்சில் பொலபொலவென சரிந்தது. 97/7 என தத்தளித்த இந்திய அணியில் ஆறுதலாக விளையாடிய ஒரே வீரர் லட்சுமண் மட்டும் தான். 128/8 என்ற ஸ்கோரோடு இந்தியாவின் இரண்டாவது நாள் ஆட்டம் முடிந்தது. நாளை ஃபாலோ ஆன் கொடுத்து மேட்ச்சை ஆஸ்திரேலியா ஜெயித்து விடும். மூன்று நாளிலேயே மேட்ச் முடிந்தது. ஆஸ்திரேலியா வரலாறு படைத்தது என கட்டுரைகள் சுடச்சுட இரண்டாவது நாள் இரவே ரெடியாகிக் கொண்டிருந்தன. "தோல்வி என்பது நிச்சயம். கொஞ்சம் போராடிப் பார்த்து கவுரமான தோல்வியாக இருந்தால் நலம்" என்பதே இந்திய ரசிகர்களின் கருத்தாக ஒலித்தது. மறுநாள் காலையில், எடுத்த எடுப்பிலேயே ஒன்பதாவது விக்கெட் விழுந்தது. 129/9 என்றானது ஸ்கோர். அப்போது தான் வெங்கடேஷ் ப்ரஸாத்துடன் ஜோடி சேர்ந்தார் லட்சுமண். வழக்கத்துக்கு மாறாக பவுண்டரிகளாக விளாசித் தள்ள ஆரம்பித்தார் வி.வி.எஸ். வெங்கடேஷ் ப்ரஸாத் அவுட்டாகி விடக் கூடாது எனக் கவனமாக விளையாடினார். 83 பந்துகளில் 12 பவுண்டரிகள் விளாசி 59 ரன் எடுத்து வார்னே பந்தில் வீழ்ந்தார் லட்சுமண். அப்போது இந்தியாவின் ஸ்கோர் 171.  

274 ரன்கள் பின்தங்கிய நிலையில் இருந்த இந்தியாவுக்கு ஃபாலோ ஆன் தந்தது ஆஸ்திரேலியா. தாஸ், ரமேஷ்  இருவரும் முறையே 30,38 ரன்கள் எடுத்தார்கள். சடகோபன் ரமேஷ் அவுட் ஆனவுடன் லட்சுமணை அனுப்பினார் கங்குலி. வழக்கமாக ஆறாவது இடத்தில் களமிறங்கும் லட்சுமண் ஒன் டவுனாக இறங்கியதால், ஆஸ்திரேலிய பவுலர்கள் ஜெர்க் ஆயினர். ஏனெனில் 2000-ம் நடந்த சிட்னி டெஸ்டில் நான்காவது இன்னிங்ஸில் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக இறங்கி 167 ரன்கள் குவித்து ஆஸ்திரேலிய பவுலர்களை அலற விட்டிருந்தார் லட்சுமண். அந்த இன்னிங்ஸ் மீண்டும் கண் முன்பு வந்து போக, உஷாரானது ஆஸ்திரேலியா.  லட்சுமணுக்கு எதிர் முனையில், எந்த பேட்ஸ்மேனையும் நிற்க விடக்கூடாது என முடிவு செய்தனர்.

தாஸ் அவுட் ஆனவுடன், சச்சின் உள்ளே வந்தார். கில்லஸ்பியை வைத்து பத்தே ரன்களில் சச்சினை முடித்து அனுப்பினார் ஸ்டீவ் வாக். கங்குலியை 48 ரன்னில் அவுட் ஆக்கினார் மெக்ராத். அப்போது தான் லட்சுமணுடன் ஜோடி சேர்ந்தார் டிராவிட். இனிமேல் அணியில் தரமான பேட்ஸ்மேன்கள் இல்லை என்பதால்  கவனமுடன் ஆடியது இந்த இணை. இதற்கிடையில் தனது இரண்டாவது சதத்தை 166 பந்துகளில் பூர்த்தி செய்தார் லட்சுமண். மூன்றாவது நாள் முடிவில் இந்திய அணியின் ஸ்கோர் 254/4. (லட்சுமண் -109, டிராவிட் -7) . அன்று இரவு டின்னரில், வர்ணனையாளர் டோனி கிரேக்,  "நாளை தேநீர் இடைவேளை வரை கூட மேட்ச் செல்லாது, ஆஸ்திரேலியா எளிதில் வெற்றி பெற்றுவிடும். நாம் மாலையே கோல்ப் விளையாடச் செல்லலாம்" என இயான் போத்தமிடம் சொல்லியிருந்தார். கிரேக் மட்டுமல்ல, இந்திய ரசிகர்கள் மட்டுமல்ல, இந்திய வீரர்களே கூட மறுநாள் ஒரு மாபெரும் வரலாற்றுச்  சிறப்புமிக்க நாளாக அமையப்போகிறது என எண்ணியிருக்க வாய்ப்பில்லை. 

நான்காவது நாள்  ஆட்டம் தொடர்ந்தது. ஸ்டீவ் தனது கிரிக்கெட் வாழ்கையிலேயே மிக மோசமான தினம் இது தான் என மார்ச் 14ஐத்தான் பின்னாளில் குறிப்பிட்டார். நான்காவது தினத்தன்று ஆஸ்திரேலிய பவுலர்கள் எவ்வளவு முயற்சித்தும் டிராவிட் - லட்சுமண் இணையின் உடும்புப்பிடி ஆட்டத்தை ஒன்றுமே செய்யய முடியவில்லை. மெக்ராத்தும், வார்னேவும் வெறுத்துப் போனார்கள். சுழற்பந்துக்கு சாதகமான பிட்சில், இந்த இருவரையும் எந்த டெக்னிக் பயன்படுத்தியும் வீழ்த்த முடியாததால் கடுப்பானார். இவர்களை வீழ்த்த பாண்டிங் முதல் லாங்கர் வரை அத்தனை பேரையும் பந்துவீச வைத்தார் ஸ்டீவ் வாக்.  மெக்ராத், கில்லெஸ்பி, மார்க் வாக், வார்னே, ஸ்டீவ் வாக், ரிக்கி பாண்டிங், ஸ்லாட்டர், ஹைடன், லாங்கர், காஸ்பிராவிச்  என விக்கெட் கீப்பர்  கில்கிறிஸ்டைத் தவிர பத்து பேரும் பந்துவீசினார்கள். ரிக்கி பாண்டிங் 12 ஓவர்களை வீசினார். ஆனால் இவர்கள் யாருக்கும் டிராவிட், லட்சுமண் பேட் சரணடைய வில்லை. 

அந்த ஒரே ஒருநாளில் 255/4 என்றிருந்த ஸ்கோர் 589/4 என்றானது. 334 ரன்களை அன்று மட்டும் குவித்தார்கள் இருவரும். லட்சுமண் இரட்டைச் சதம் கடந்து 275 ரன்களுடன் நாட் அவுட்டாக நின்றார். ஏறக்குறைய இரண்டு நாட்கள்... சுமார் 165 ஓவர்கள் களத்தில் நின்ற கால்களில் அன்று இரவு உறங்கச்செல்லும்போது அவ்வளவு வலி! நான்காவது நாளில் ஆட்டமே வேற லெவலுக்கு சென்றுவிட்டதால், ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகின் பார்வையும் குவிந்தது. விளங்காது என நினைத்துக் கொண்டிருந்த ரசிகர்கள், டிராவிட்- லட்சுமண் இணையின்  உடல் பொருள் ஆவி அனைத்தையும் தந்து ஆடிய இன்னிங்ஸை பார்த்த பிறகு, ஐந்தாவது நாள் மைதானத்தில் திரண்டார்கள். 80,000 பேர் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்துக்கு வந்தனர்.

ஒரே நாளில், மேட்ச் தலைகீழாக மாறியதால், எப்படியாவது டிரா செய்து விட வேண்டும் என்ற எண்ணத்துடன் வந்தது ஆஸி. லட்சுமண் முச்சதம் எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன், அந்த நிகழ்வை காண பலத்த கரகோஷம் கொடுத்து அவரை வரவேற்றனர் ரசிகர்கள். ஆனால் மேலும் ஆறு ரன்கள் சேர்த்த நிலையில் லட்சுமண் 281 ரன்களுக்கு அவுட் ஆக, அடுத்தடுத்து இந்திய வீரர்கள் அதிரடி ஆட்டம் ஆடினார், முடிவாக 178 ஓவர்கள் முடிவில் ஏழு விக்கெட் இழப்புக்கு 657 ரன் எடுத்து இன்னிங்ஸை முடித்தது இந்தியா. ஃபாலோ ஆன் ஆன பிறகு ஒரு அணி இவ்வளவு ஸ்கோர் குவிப்பது இது இரண்டாவது முறை. 

75 ஓவர்களில் 384 ரன்கள் எடுத்தால் வெற்றி என ஆஸ்திரேலியாவுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஹைடன், ஸ்லாட்டர் இருவரும் அமைதியாக ஆடினார்கள். மதியம் தேநீர் இடைவேளைக்கு செல்லும்போது ஆஸ்திரேலியாவின் ஸ்கோர் 161/3. மேட்ச் டிரா தான் என்ற முடிவுக்கு எல்லோரும் வந்திருந்தார்கள். அப்போது தான் மீண்டும் ஹர்பஜன் இரண்டாவது இன்னிங்ஸிலும் தனது மேஜிக்  ஓவரை வீசினார். ஸ்டீவ் வாகையும், பாண்டிங்கையும் ஒரே ஓவரில் காலி செய்தார். பாண்டிங் டக் அவுட். உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவரான பாண்டிங் தன் வாழ்நாளில் மறக்க விரும்பும் ஆட்டம் இதுதான் என பின்னாளில் கூறினார். 

ஹர்பஜன் அந்த ஓவரை வீசிய பின்னர்,  தனது ரகசிய ஆயுதமான டெண்டுல்கரை  அழைத்தார் கங்குலி. இந்த தொடரில் கும்ளே ஆபரேஷன் காரணமாக ஆட முடியாமல் ஓய்வில் இருந்ததால், சரியான லெக் ஸ்பின்னர் இல்லாமல் தவித்தது இந்திய அணி. ஆனால் டெண்டுல்கரின் வேகமாக பந்து வீசும் லெக்ஸ்பின் டெக்னிக் குறித்து நல்ல புரிதலோடு இருந்தார் கங்குலி. சச்சினை பந்து வீச அழைத்ததற்கு உடனடியாக பலன் கிடைத்தது. கில்கிறிஸ்ட் டக் அவுட் ஆனார். அதன் பின்னர் அடுத்த ஓவரிலேயே வார்னேவை போல்டாக்கி அமர்களப்படுத்தினார் சச்சின். 59.4 ஓவர்களில் 191/9 என இருந்தது ஆஸ்திரேலியாவின் ஸ்கோர். அப்போது இந்த மேட்சில் இன்னொரு டிவிஸ்ட்டாக காஸ்பிரோவிச்சும், மெக்ராத்தும் இணைந்து விக்கெட் விழுந்து விடாமல் அபாரமாக ஆடினார்கள். 15 ஓவர் வரை களத்தில் நின்றால் மேட்ச்சை டிரா செய்து விடலாம் என்பதால் நம்பிக்கையுடன் விளையாடினார்கள். 

அடுத்த பத்து ஓவர்களில் இந்த அணி 21 ரன்கள் குவித்தது. விக்கெட் விழாததால் பதட்டமானார் கங்குலி. சூழல் வலை அமைத்து ஹர்பஜனை பந்து வீசச்சொன்னார். ஹர்பஜன் பந்தில் 69-வது ஓவரில் மெக்ராத் அவுட் ஆக, 171 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது இந்திய அணி.  ஃபாலோ ஆன் பெற்ற பின்னர் ஒரு அணி மீண்டு வந்து இப்படியொரு மாபெரும் வெற்றியை பெற்றது அசாத்திய நிகழ்வு. உலகின் தலை சிறந்த டெஸ்ட் போட்டிகளில் ஒன்றாக இன்னமும் இந்த  டெஸ்ட் கருதப்படுகிறது. கடைசி நாளில் ஹர்பஜன் எடுத்த ஆறு விக்கெட்டுகளும், டெண்டுல்கரின் மூன்று விக்கெட்டுகளை வெற்றியை எளிதாக்கின. 

ஹர்பஜன் ஹாட்ரிக்; ஸ்டீவ் வாக் சதம், கில்லெஸ்பி - வாக் இணையின் 133 ரன்கள்; இந்தியாவின் முதல் இன்னிங்ஸ் சொதப்பல்; லட்சுமணின் விஸ்வரூபம்; டிராவிட் - லட்சுமண் இணையின் மாரத்தான் இன்னிங்ஸ்; டெண்டுல்கரின் மேஜிக் ; ஹர்பஜனின் 13 விக்கெட்டுகள் என பரபரப்புக்கு பஞ்சம் வைக்காத இந்த டெஸ்ட் போட்டி என்றும் நம் நினைவில் இருக்கும். 

இந்த டெஸ்ட் போட்டியில் அதிகம் கவனிக்கப்படாத ஒரு மகத்தான வீரர் டிராவிட். லட்சுமணுடன் அவர் ஆடிய ஆட்டம் கிளாஸிக். அந்த 180 ரன்களை நாம் கொண்டாடியே ஆக வேண்டும். நினைவு கூர்வோம்; கொண்டாடுவோம். 

- பு.விவேக் ஆனந்த் 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு