Published:Updated:

இந்தியாவின் மேஜிக் வெற்றிக்கு இந்த 5 திருப்புமுனைகள் தான் காரணமா? #5TurningPoint

VIVEK ANAND P
இந்தியாவின் மேஜிக் வெற்றிக்கு இந்த 5 திருப்புமுனைகள் தான் காரணமா? #5TurningPoint
இந்தியாவின் மேஜிக் வெற்றிக்கு இந்த 5 திருப்புமுனைகள் தான் காரணமா? #5TurningPoint

'இந்த மேட்சை ஜெயித்து, டெஸ்ட் தொடரை வெல்ல முனைப்பு காட்ட வேண்டுமா? 188 ரன்களை சேஸ் செய்யுங்கள்' - இதுதான் இந்தியா, ஆஸ்திரேலியாவுக்கு விடுத்த சவால். ''என்னது வெறும் 188 ரன்களா?'' ,  ''அந்த அணியில் ஸ்டார்க் வரை எட்டு பேட்ஸ்மேன்கள் இருக்காங்களே'' ,  ''இது சாத்தியமா?'' , ''இதெல்லாம் வேலைக்காவாது பாஸ்'' , "சரி போனது போவட்டும்... அடுத்த மேட்ச்ச பாப்போம்" இப்படியான கமென்ட்கள்தான் நேற்று இந்திய ரசிகர்களிடம் இருந்து வந்த வண்ணம் இருந்தது. 

 இன்னொரு பக்கம் கிரிக்கெட் புள்ளிவிவர புலிகள், ஆஸ்திரேலியாவின் இன்னிங்ஸ்  ஆரம்பிப்பதற்கு முன்பாக புள்ளிவிவரங்களை அடுக்க ஆரம்பித்தார்கள்.

1. இந்திய மண்ணில் இதுவரை  மூன்று முறை மட்டுமே இந்திய அணி,  188 ரன்களுக்கு குறைவான இலக்கு இருப்பினும் எதிரணியை சுருட்டி வெற்றியைச் சுவைத்திருக்கிறது. 

2. ஆஸ்திரேலிய அணி ஏற்கெனவே இரண்டு  முறை ஆசிய மண்ணில் (194 vs இந்தியா, 307 vs வங்கதேசம்) 188 ரன்களுக்கு மேற்பட்ட இலக்கை நான்காவது இன்னிங்ஸில் சேஸிங் செய்து ஜெயித்திருக்கிறது. 

3.சின்னசாமி ஸ்டேடியத்தை பொறுத்தமட்டில் மூன்று முறை இதுவரை 188 ரன்களுக்கு மேற்பட்ட இலக்கு வெற்றிகரமாக சேஸிங் செய்யப்பட்டுள்ளது,  

4.இந்திய மண்ணில் ஆஸ்திரேலியா சேஸிங்கில் ஜெயித்த அதிகபட்ச இலக்கு 194 ரன்கள். இது நடந்தது 1998 ஆம் ஆண்டு இதே சின்னசாமி ஸ்டேடியத்தில் தான். 

இந்த நிலையில் தான் ஆஸ்திரேலியா இலக்கை துரத்த களமிறங்கியது. முதல் பந்தில் இருந்தே வெற்றி வாய்ப்பு இங்கும் அங்குமாக ஊசலாடிக்கொண்டிருக்கவே ஒருநாள் போட்டிகள், டி20 போட்டிகள் போன்றவற்றை விட பரபரப்பாக நடந்து முடிந்தது மேட்ச். செம திரில் டெஸ்ட்டில் மேஜிக் வெற்றியைச் சுவைத்திருக்கிறது இந்திய அணி. இந்த வெற்றிக்கு ஐந்து திருப்புமுனையை முக்கியமாகச் சொல்லலாம். அவற்றை விரிவாக பார்ப்போம். 

1. ராகுல் - தி பாகுபலி : -

இந்த டெஸ்ட் தொடரில் இதுவரை  அதிக  ரன்கள் எடுத்திருப்பது ராகுல் தான். முதல் டெஸ்ட் போட்டியிலும் சரி, இந்த டெஸ்ட் போட்டியிலும் சரி ராகுலின் ஆட்டம் மெச்சத்தக்கது.  புனே டெஸ்ட்டிலும் சரி, பெங்களூரு டெஸ்டிலும் சரி... புது பந்தில் பேட்டிங் செய்வது என்பது சற்றே சிரமமான காரியமாகவே இருந்தது. ஆஸ்திரேலிய பவுலர்கள் கொஞ்சம் கூட கருணையே காட்டாமல், முழு திறமையையும் வெளிப்படுத்தி  சரியான லைனில் தொடர்ந்து பந்துகளை வீசிய போதும், அசராமல் ரன்களை குவித்து தள்ளினார் கே.எல். ராகுல். குறிப்பாக முதல் இன்னிங்ஸில், பத்து இந்திய பேட்ஸ்மேன்களை அசால்ட்டாக கட்டுப்படுத்திய ஆஸ்திரேலியாவால் ராகுலை எளிதில் வீழ்த்திவிட முடியவில்லை.  இந்திய அணியின் ஸ்கோர் 189. இதில் ராகுல் எடுத்த ரன்கள் 90. உதிரியாக வந்த 16 ரன்களை கணக்கில் எடுத்துக் கொள்ளாவிடில், இந்திய அணி குவித்த ரன்களில் 52% ரன்களை தனி ஒருவனாக ராகுல் எடுத்திருந்தது கவனிக்கத்தக்கது. 100 -120 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆகியிருக்க வேண்டிய அணியை தோளில் சுமந்து 189 ரன்கள் கூட்டி வந்த ராகுல் ஆட்டநாயகன் விருதுக்கு பொருத்தமான தேர்வு. 

2.  ஆறு விக்கெட் ஜடேஜா: -

முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா  நன்றாகவே பேட்டிங் செய்தது. அஷ்வினின் பந்துகளை கவனமாக எதிர்கொண்ட ஆஸ்திரேலிய வீரர்கள், விக்கெட் விழுந்து விட கூடாது என மிகுந்த கவனமுடன் பிளாக்கத்தான் இன்னிங்ஸ்  ஆட ஆரம்பித்தார்கள். இதனால் ஒவ்வொரு ரன்னாக கண்ணுக்குத் தெரியாமல் குவிய ஆரம்பித்தது. இரண்டாவது நாளில்  ஜடேஜாவை கோலி  பெரிய அளவில் பயன்படுத்திக் கொள்ளவில்லை. ஆஸ்திரேலிய வீரர்கள் அஷ்வினின் பந்துகளை எதிர்கொள்ள  சரியான கால் நகர்த்தல்களை செய்வதை புரிந்து கொண்ட கோலி, ஜடேஜாவுக்கு மூன்றாவது நாளில் முக்கியத்துவம் கொடுத்தார். பந்துகளை அதிகம் சுழலச் செய்யாமல், நல்ல லெங்த்தில் மட்டும் தொடர்ந்து வீச ஆரம்பித்தார் ஜடேஜா. இதற்கு பலனாக ஆறு விக்கெட்டுகளை அறுவடை செய்தார். 300 -350 ரன்கள் வரை ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் குவித்திருந்தால், இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு மங்கிப் போயிருக்கும். மூன்றாவது நாளில் ஜடேஜாவின் ட்ரிக்ஸ் எடுபட்டதாலேயே இந்திய அணிக்கு சுமை  குறைய ஆரம்பித்தது  என்றால் மிகையாகாது.  

3. உடும்புப்பிடி  போட்ட புஜாரா - ரஹானே :-

இந்த தொடரில் இதுவரை அமைந்த ஒரே நூறு ரன் பார்ட்னர்ஷிப் புஜாரா- ரஹானே இணையின் 118 ரன்கள் தான். 87 ரன்கள் பின்தங்கிய நிலையில் இந்தியா இரண்டாவது இன்னிங்ஸ் ஆட ஆரம்பித்தபோது 120/4 என நிலைமை மோசமானது. அப்போது இந்தியா வெறும் 33 ரன்கள் மட்டுமே முன்னிலையில் இருந்தது. மூன்றாவது நாளில் இருந்து பந்துகள் குறைவாகவே எழும்பின, அதே சமயம் நன்றாக திரும்பின. இதனால் பவுண்டரிகள் விளாசுவது சிரமமான காரியமாகிப் போனது. ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித் அருமையாக ஃபீல்டிங் செட் செய்தார். இருநூறு ரன்களை எடுத்தாலே அது இந்திய அணிக்கு பெரிய விஷயமாக இருக்கும் என்றே வர்ணனையாளர்கள் கருதினார்கள். ஆனால்  புஜாராவும், ரஹானேவும் வேறு திட்டங்களை வைத்திருந்தார்கள். மூன்றாவது நாளை விட நான்காவது நாள் பேட்டிங் செய்வது இன்னமும் சிரமமாக இருக்கும் என  புரிந்து கொண்டார்கள். ரன்கள் அடிக்காவிட்டாலும் பரவாயில்லை, இப்போதைக்கு ஆல் அவுட் ஆகி அவர்களிடம் பேட்டிங்கை கொடுத்து விடக் கூடாது என உணர்ந்து அதற்கேற்ப ஆட ஆரம்பித்தார்கள். 

இந்த  இணையின் திட்டத்தை தெரிந்து கொண்ட ஸ்மித், இவர்களை ஷாட் ஆட வைப்பதற்காக, ஆசையைத் தூண்டும் விதமாக சில பந்துகளை வீச பணித்தார். ஆனால் மனம்மாறாமல் துடிப்புடன் தடுப்பாட்டம் ஆடியது புஜாரா - ரஹானே இணை. கிட்டத்தட்ட 50 ஓவர்கள் வரை பேட்டிங் பிடித்தார்கள். இந்த தொடரில் ஒரு இணை இவ்வளவு ஓவர்கள் பேட்டிங் செய்ததும் இது தான் முதல் முறை. ஒரு வழியாக 118 ரன்களை இணைந்து குவித்த பிறகு அவுட் ஆனார்கள் ரஹானேவும், புஜாராவும். 2001 கொல்கத்தா டெஸ்டில் டிராவிடும் லட்சுமணனும் இணைந்து ஆடிய இன்னிங்ஸின் மினி வெர்ஷன் தான் புஜாரா- ரஹானேவின் இந்த அற்புதமான இன்னிங்ஸ். 

4. ஆக்ரோஷ உமேஷ் : -

ஆஸ்திரேலியாவின் நான்காவது இன்னிங்ஸில் அபாயகரமான இரண்டு பேட்ஸ்மேன்களை பெவிலியனுக்கு அனுப்பினார் உமேஷ் யாதவ். அது தான் இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெறுவதற்கு முக்கியமான திருப்பு முனையாக அமைந்தது. ஷான் மார்ஷ் , ஸ்டீவ் ஸ்மித் இருவரையும் அடுத்தடுத்து அவுட் ஆக்கி இந்தியாவின் வெற்றி வாய்ப்பை பிரகாசப்படுத்தினார். 

ஒரு பக்கம் விக்கெட்டுகள் விழுந்தாலும், மறுமுனையில் அபாரமாக ஆடிக்கொண்டிருந்தார் ஸ்மித். அவர் களத்தில் இருக்கும் வரை ஆஸ்திரேலியாவே வெற்றி பெறும் என்ற சூழ்நிலை இருந்தது. அவரை எல்.பி முறையில் அவுட் ஆக்கினார் உமேஷ். 48 பந்துகளில் மூன்று பவுண்டரி உதவியுடன் 28 ரன்கள் எடுத்திருந்த ஸ்மித் பெவிலியனுக்கு திரும்பிய பிறகு தான், முழு முனைப்புடன் வெற்றியை நோக்கி நகர்ந்தது இந்திய அணி.

5. அஷ்வின் ராஜ்ஜியம் :-

சென்னையில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியிலிருந்து அஷ்வினின் விக்கெட் வேட்டை மங்கியது, சுமார் ஏழு இன்னிங்ஸ்களாக அஷ்வின்  'ஒரு இன்னிங்ஸில் ஐந்து விக்கெட்' எடுக்கவில்லை. 2012 சீஸனுக்கு பிறகு  உள்ளூர் போட்டிகளில் தொடர்ந்து ஏழு இன்னிங்ஸில் 'ஐந்து விக்கெட்' தவற விடுவது இதுவே முதல் முறை. இந்த நிலையில் இந்த டெஸ்டில் இரண்டாவது இன்னிங்ஸில் மீண்டும் கொத்து கொத்தாக வீரர்களை பெவிலியனுக்கு அனுப்பும் பணியை தொடங்கினார் அஷ்வின். வழக்கம் போல வார்னரை எளிதில் அவுட் ஆக்கிவிட்டாலும், ஸ்மித்தை எதுவுமே செய்ய முடியாமல் பரிதவித்தார். ஆனால் உமேஷ் யாதவ், ஸ்மித்தை அனுப்பியதும், விறுவிறுவென மற்ற விக்கெட்டுக்களை பறித்தார். ஹாண்ட்ஸ்காம்ப், மார்ஷ் லேசாக பயமுறுத்தினாலும் அஷ்வினின் திரும்பும் பந்துகளில் அடுத்தடுத்து கேட்ச் கொடுத்து அவுட் ஆக, இந்தியாவின் வெற்றி உறுதியானது. 100/4 என்றிருந்த ஆஸ்திரேலியாவை 112 ரன்னுக்குள் ஆல் அவுட் ஆக்கியது இந்திய அணி. இந்த ஆறு விக்கெட்டுகளில் ஐந்து விக்கெட் எடுத்தது அஷ்வின் தான். 

- பு.விவேக் ஆனந்த்