Published:Updated:

சொந்த மண்ணில் முதல் டக் அவுட், முதல் தோல்வி… விழித்துக்கொள் விராட்!

சொந்த மண்ணில் முதல் டக் அவுட், முதல் தோல்வி… விழித்துக்கொள் விராட்!
சொந்த மண்ணில் முதல் டக் அவுட், முதல் தோல்வி… விழித்துக்கொள் விராட்!

சொந்த மண்ணில் முதல் டக் அவுட், முதல் தோல்வி… விழித்துக்கொள் விராட்!

இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக வலம் வரும் விராட் கோலி, மற்ற அணிகளுக்கு சிம்ம சொப்பனம். ஆக்ரோஷமான ஆட்டமும், கிரிக்கெட் மீதான தீராக் காதலும் அவரை இந்திய அணியின் கேப்டனாக உயர்த்தி இருக்கிறது. ஒரு நாள், டெஸ்ட், டி-20 என மூன்று ஃபார்மெட்டிலும் இந்திய அணிக்காக மிரட்டி வருகிறார். அடுத்தடுத்த டெஸ்ட் தொடர்களில் தொடர்ந்து 4 முறை இரட்டைச்சதம் அடித்து வேற லெவல் பேட்ஸ்மேனாக உருவெடுத்து வருகிறார்.

விராட் களமிறங்கினால் அரைசதம் நிச்சயம் என்பது ரசிகர்கள் நம்பிக்கை. இளம்பெண்கள் மத்தியில் விராட் ஒரு ஹீரோ.. `ஐ லவ் விராட்` என மைதானத்தில் மட்டுமின்றி தன் ஃபேஸ்புக் பக்கங்களிலும் பதிவு செய்து வருகின்றனர். அதற்கேற்ப சமீபகாலமாக கோலியின் தலைமையிலான இந்திய அணி தொடர் வெற்றிகளைக் குவித்து வந்தது.

இந்த சூழலில், இந்தியாவுடன் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலியா அணி இந்தியா வந்துள்ளது. டெஸ்ட் அரங்கில் வலுவான இரு அணிகள் மோதும் தொடர் என்பதால், கிரிக்கெட் உலகமே இந்த தொடரை எதிர்பார்த்திருந்தது. இந்த டெஸ்ட் தொடர் ஆரம்பிக்கும் முன் பல வீரர்கள் தங்கள் கருத்துகளை முன் வைத்தனர். இந்தியாவை ஆஸ்திரேலியா எப்படி சமாளிக்க போகிறது என்றெல்லாம் கருத்துத் தெரிவித்தனர்.

முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் கூறுகையில், ’’இந்தியா 4-0 என்ற கணக்கில் தொடரை வெல்லும்’’ என்றார். ஆஸ்திரேலியா முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாக், ‘’கோலியை சீண்ட வேண்டும் அப்போது கவனம் திசைமாறும், சரியான சமயத்தில் ஷாட்களை ஆட முடியாது’’ என்றார். அதே சமயத்தில், `மிஸ்டர் கிரிக்கெட்` மைக் ஹஸி, `கோலியை சீண்டினால் அவர் மேலும் வீறு கொண்ட ஆட நேரிடும். ஆக, கோலியை சீண்டாமல் இருப்பது நல்லது’ என்று தன் கருத்தை பதிவு செய்தார். ’கோலி ஆக்ரோஷமானவர். அவரை சீண்டக் கூடாது. மாறாக, அவர் ட்ரைவ் ஆடும் இடங்களில் ஃபீல்டிங் செட் செய்து அவருக்குநெருக்கடி கொடுக்க வேண்டும்’ என ரிக்கி பாண்டிங் அட்வைஸ் செய்தார். இப்படி எல்லோரும், இந்திய அணியின் மற்ற வீரர்களைத் தவிர்த்து, கோலியின் மீது கண் வைத்திருந்தனர். ஆம், யார் கண் பட்டதோ, புனே டெஸ்டில் கோலி டக் அவுட். இது சொந்த மண்ணில் அவரது முதல் டக்.

2011ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுக வீரராகக் களமிறங்கினார் கோலி. அன்று முதல் இன்று வரை டெஸ்ட் போட்டியில் பல சாதனைகள் படைத்த விராட் 5 முறை மட்டுமே `டக் அவுட்` ஆகியுள்ளார்.  புனே டெஸ்டில் முதல் இன்னிங்சில், மிச்செல் ஸ்டார்க் பந்தில் ஹேண்ட்ஸ்கோம் கையில் கேட்ச் கொடுத்து விராட் கோலி, ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தது, கிரிக்கெட் உலகின் பேசுபொருள். கோலியின் விக்கெட்டை கைப்பற்றியவுடன் ஆஸ்திரேலியர்களின் கண்ணில் அப்படி ஒரு ஆனந்தம்.

இதுவரையிலான கோலியின்  டக் அவுட் விவரம்:

2011 – பிரிட்ஜ்டவுனில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் ரவி ராம்பால் பந்தில் சமியிடம் கேட்ச் கொடுத்து தான் சந்தித்த இரண்டாவது பந்தில் ஆட்டமிழந்தார்.

2011 – மெல்போர்னில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ‛பாக்சிங் டே டெஸ்ட்’ போட்டியில் தான் சந்தித்த முதல் பந்திலேயே எல்.பி.டபிள்யு முறையில் பென் ஹில்பெனாஸ் வசம் வீழ்ந்தார் விராட்.

2014 – லார்ட்ஸில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான இந்தப் போட்டியில் மூன்றாவது முறையாக ப்ளங்கெட் ஓவரில் போல்ட் முறையில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.

2014 – மான்செஸ்டரில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான இந்த போட்டியில் ‛அவுட் ஆஃப் பார்ம்’-ல் இருந்த விராட், ஆண்டர்சன் ஓவரில் குக் வசம் தஞ்சம் புகுந்து டக் அவுட் ஆனார். ஒரே தொடரில் இரண்டாவது முறை ரன் ஏதும் குவிக்காமல் ஆட்டமிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

2017 – அதன்பின், 915 நாள்கள் கழித்து  புனே டெஸ்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக முதல் இன்னிங்சில் பலத்த கரகோஷம், எதிர்ப்பார்ப்புக்கு இடையே களமிறங்கிய கோலி, மிட்செல் ஸ்டார்க் ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே பந்தை வீச, ஷாட் ஆட நினைத்து `ஃபர்ஸ்ட் ஸ்லிப்` பொசிஷனில் பந்தை எதிர்ப்பார்த்து நின்றிருந்த ஹாண்ட்ஸ்கோம்பிடம் கேட்ச் கொடுத்து,  தலையைக் குனிந்தபடியே பெவிலியன் சென்றார். மைதானத்தில் நிசப்தம். ஆஸ்திரேலியா அணியோ முக்கிய விக்கெட்டை வீழ்த்திய உற்சாகத்தில் ஆர்ப்பரித்தது. அதற்கு காரணம் இருக்கிறது. இதுவே, இந்திய மண்ணில் விராட் கோலியின் முதல் `டக் அவுட்`.

இரண்டாவது இன்னிங்சிலும் விராட் ஜொலிக்கவில்லை. எவ்வளவு இலக்கு நிர்ணயித்தாலும் விராட் தனி ஆளாக வெளுத்து வாங்குவார். அதிலும் முதல் இன்னிங்சில் டக் அவுட் ஆனதால் இரண்டாவது இன்னிங்சில் வெச்சு செய்வார் என எதிர்பார்த்தனர் ரசிகர்கள். ஆனால், ஆஸ்திரேலியா நிர்ணயித்த 441 என்ற இமாலய டார்கெட்டை சேஸ் செய்ய வேண்டிய நெருக்கடியில் களமிறங்கிய விராட் அடித்தது 13 ரன்கள். இம்முறை ஓ கீஃப், கோலி விக்கெட்டைக் கைப்பற்றினார். பாண்டிங் சொன்னதுபோல, விராட் விக்கெட் வீழ்ந்ததும், ஒட்டுமொத்த இந்திய அணியும் வரிசையாக பெவிலியன் திரும்பியது. விளைவு, 333 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா படுதோல்வி. கூடவே, 2012-க்குப் பின் முதன்முறையாக சொந்த மண்ணில் இந்தியா தோல்வியடைந்துள்ளது என்ற விமர்சனங்களும்…

ஜெயித்துக் கொண்டே இருக்கும் வரை, இந்த உலகம் பாராட்டிக் கொண்டிருக்கும். கொஞ்சம் சொதப்பினால் விமர்சனங்கள் வரிசைகட்டும். இதோ... அடுத்து விராட் என்ன செய்ய வேண்டும் என கிரிக்கெட் நிபுணர்கள் விவாதிக்க ஆரம்பித்து விட்டனர். முதலிடம் முக்கியமல்ல. அதைத் தக்க வைப்பதே கடினம். சொந்த மண்ணில் முதல் டக் அவுட், முதல் தோல்வி. விராட் விழித்துக் கொள்ள வேண்டிய நேரம் இது.

– உ.சுதர்சன் காந்தி
(மாணவப் பத்திரிகையாளர்)

அடுத்த கட்டுரைக்கு