Published:Updated:

கோகோ, கில்லியெல்லாம் விளையாடியிருந்தா... நீங்க ஏன் கெத்து தெரியுமா?

கோகோ, கில்லியெல்லாம் விளையாடியிருந்தா... நீங்க ஏன் கெத்து தெரியுமா?
கோகோ, கில்லியெல்லாம் விளையாடியிருந்தா... நீங்க ஏன் கெத்து தெரியுமா?

கில்லி, கோ - கோ, கபடி என நம் முன்னோர்கள் பொழுது சாய்வதற்குள் எத்தனை விளையாட்டுகளை விளையாடியிருப்பார்கள். அதெல்லாம் இப்பொழுது நடக்கிறதா? எது காலை எது மாலை என்றே தெரியாமல் வளர்கிறார்கள் இன்றைய குழந்தைகள். விளையாட்டு என்பது கூட இப்போதைய குழந்தைகளுக்கு மொபைல் கேம்ஸ் மட்டும் தான் என்ற நிலை வந்துவிட்டது. மனிதர்களுடன் விளையாடினால் மகிழ்ச்சி, ஒற்றுமை, விட்டுக்கொடுத்தல், விடாமுயற்சி எனப் பல பண்புகள் வளரும். ஆனால் இயந்திரத்தோடு விளையாடினால்? 

நம் பாரம்பரிய விளையாட்டுகளை நம் குழந்தைகளுக்குச் சொல்லிக்கொடுக்க  வேண்டிய தருணமிது. இந்த விளையாட்டு எல்லாம் உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா என சோதியுங்கள் 

• ஏழு கல் விளையாட்டு : 
Seven stones என்று சொன்னால் புரியுமே! ஒவ்வொரு கல்லையும் கீழிருந்து மேல்நோக்கி அடுக்கி வைக்க வேண்டும். ஒவ்வொரு கல்லும் அளவு குறைந்த வண்ணம் அமைய வேண்டும். பின்னர் ஒரு குறிப்பிட்ட தூரத்திலிருந்து துணியாலான பந்தை அந்தக் கற்கள் மீது எறிய வேண்டும். என்னங்க புரியலையா? சம்திங் சம்திங் படத்தில் விளையாடுவாங்களே அதுதாங்க. இப்ப புரிஞ்சிருக்குமே!

• கட்டே(Gutte): 
பெயரே வித்தியாசமாக இருக்கிறதா? ரொம்ப யோசிக்காதீங்க. நமக்குத் தெரிந்த விளையாட்டுதான். நம்ம பாஷையில் அஞ்சாங் கல் என்று சொல்வோம். ஐந்து கற்களை வைத்துக்கொண்டு ஒன்றைத் தூக்கி மேலே போட வேண்டும். அதனுடனே இன்னொரு கல்லைக் கீழிருந்து எடுத்து மேலே போட்டதையும் தக்க சமயத்தில் பிடிக்க வேண்டும். இதனால் நம்முடைய கவனமானது ஒருநிலை அடைகிறதாம்.

• காஞ்சா: 
இது பசங்க அதிகமாக விளையாடுவது. அதாவது சலவைக்கல் வைத்து விளையாடப்படும். அந்தக் கல்லை வைத்து குறிப்பிட்ட காஞ்சாவை Target செய்ய வேண்டும். யார் சரியாக அதனை அடிக்கிறார்களோ அவர்கள் தான் எல்லா காஞ்சாவுக்கும் சொந்தக்காரர்கள்.

• கோ கோ: 
இந்தியாவின் மிகப் பிரபலமான விளையாட்டு என்றால் அது கோ - கோதான். இரண்டு குழுவினைக் கொண்டு விளையாடுவர். ஒரு அணி மண்டியிட்டு எதிரெதிராக அமர்ந்திருக்கும். நிர்ணயிக்கப்பட்ட நேரத்துக்குள் எந்த அணி அதிக புள்ளிகளைப் பெறுகிறதோ, அந்த அணி வெற்றியணி. ஒருகாலத்தில் எல்லாத் தெருக்களிலும் விளையாடப்பட்ட இந்த ஆட்டம், தற்போது ஒரு சில பள்ளிகளில் மட்டுமே விளையாடப்படுகிறது. 

• தண்டா கில்லி: 
இதற்கு இரண்டு குச்சிகள் தேவை. ஒன்று பெரியதாகவும் மற்றொன்று சிறியதாகவும் இருக்க வேண்டும். பெரிய குச்சி தண்டா என்கிற பெயரோடும் சிறிய குச்சி கில்லி என்ற பெயரோடும் அழைக்கப்படும். தண்டாவை கில்லியின் நுனியில் வைத்து அடிக்க, கில்லி முழுவதுமாக மேலெழ வேண்டும்.ஒருவேளை கில்லி தடுமாற்றம் அடைந்தால் எதிரணி கில்லியைத் தொடுவதற்கு முன்னமே வட்டத்தின் வெளியேயுள்ள பொதுப் புள்ளியைத் தொட வேண்டும். 

• போஷம்பா: 
எதிரெதிராக நின்று இருவரும் தங்களது கைகளை மேலே தூக்கிக் கைகளை இணைத்துக் கொள்வர். அதோடு, அவர்கள் பாடல் பாட, மற்றவர்கள் அந்த இருவருக்கும் இடையில் புகுந்து வர வேண்டும். பாடலின் முடிவில் அவர்கள் கையை இறக்கும் பொழுது உள்ளே பிடிபடுபவர்கள் அவுட். அட.. வேறொன்னும் இல்லைங்க. ஒரு குடம் தண்ணி ஊத்தி ஒரு பூப் பூத்துச்சாம்... என்று பாடி விளையாடுவோமே? அதே அதே!

• பகடை: 

உடனே மகாபாரதம் ஞாபகத்திற்கு வருகிறதா?  பகடையைத் தன் கட்டுக்குள் வைத்திருப்பாரே சகுனி. அந்த சகுனி விளையாட்டுதான் இது. ஒருவர் 4 வித்தியாசப் பொருட்களை உடைமையாக வைத்திருக்க வேண்டும். அவற்றை கடிகாரம் சுற்றும் திசைக்கு எதிர்த்திசையில், (counter clockwise) உங்கள் எதிரில் இருப்பவர்களுக்கு முன், சுற்றி முடிக்கவேண்டும். அம்புட்டுதேன்! 

• நொண்டி: 

ஒரு வெற்றிடத்தைத் தேர்ந்தெடுத்து அங்கு செவ்வக வடிவ கட்டங்களை வரைய வேண்டும். ஒரு குறிப்பிட்ட பொருளை அந்த கட்டங்களின் முனைகளில் போட வேண்டும். பின்னர் அதன் இடையில் ஒற்றைக் காலால் நொண்டி நொண்டிச் செல்ல வேண்டும். சிம்பிள்.

• தோப் கெல்(Dhop khel) 
 அசாம் மாநிலத்தின் பிரபலரான விளையாட்டு. கிட்டத்தட்ட கபடியைப் போன்றது. தோப் என்பது ரப்பர் பால். இரண்டு குழுக்களும் பந்தை மையப்பகுதியில் வீசியிருக்க வேண்டும். பின்னர் ஒரு குழுவினர் எதிர் குழுவிற்கு சென்று, தான் வீசிய பந்தை எடுக்க வேண்டும். அப்படி எடுக்கும்பொழுது எதிரணி உங்களைத் தொட்டாலே நீங்கள் அவுட்.

• பல்லாங்குழி: 
பெண்களுக்கு மிகப்பிடித்த விளையாட்டு பல்லாங்குழி . 14 வட்டங்களைக் கொண்ட பலகை விளையாட்டு. ஒவ்வொரு வட்டத்திலும் ஆறு முத்துக்கள் நிரப்பப்பட்டு, அதை வரிசையாக ஒவ்வொன்றிலும் ஒவ்வொன்றாக எடுத்து வைக்க வேண்டும். அடுத்தடுத்த இரண்டு வட்டங்களில் முத்துக்கள் இல்லையானால் அவர்கள் அவுட். 

வீடியோ கேம்ஸ் வாங்கித் தருகிற பெற்றோர்களே கொஞ்சம் பாரம்பரியத்தையும் உங்க பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுங்களேன்!!!

-பா.பிரியதர்ஷினி

(மாணவப் பத்திரிகையாளர்)