Published:Updated:

நெய்மர் - பார்சிலோனாவின் வருங்காலம், பிரேசிலின் எதிர்காலம் #HBDNeymar

நெய்மர் - பார்சிலோனாவின் வருங்காலம், பிரேசிலின் எதிர்காலம் #HBDNeymar
நெய்மர் - பார்சிலோனாவின் வருங்காலம், பிரேசிலின் எதிர்காலம் #HBDNeymar

2014 ஜூன், கால்பந்தின் பிறப்பிடமாய்க் கருதப்படும் பிரேசில் மண்ணில் அரங்கேறியது உலகக்கோப்பைக் கால்பந்துத் திருவிழா. ஒவ்வொரு அணியும் பல்வேறு இலக்குகளோடு களம் காண, சொந்த மண்ணில் கோப்பை வெல்ல வேண்டும் என்ற தீராத் தாகம் பிரேசில் மக்களிடம். அந்தத் தாகத்தைத் தீர்க்கப்போகும் ஆபத்பாந்தவனாய் தெரிந்த ஒரே உருவம் – நெய்மர். நூற்றுக்கணக்கான போட்டிகளில் விளையாடிய, 30 வயதைத் தாண்டிய மாபெரும் அனுபவசாலியல்ல. வெறும் 22 வயது வாலிபன். ஆனால் ஒட்டுமொத்த தேசத்தின் கனவையும் சுமந்திருந்தான் அந்த இளைஞன். அந்தக் கனவுகள் அவன் மீது திணிக்கப்படவில்லை. தனது அசாத்திய திறமையால், கால்பந்து மைதானத்தில் காட்டிய மாயாஜாலத்தால் அனைத்து பிரேசில் மக்களையும் கனவு காண வைத்தான் அந்த இளைஞன்.

தன் மீதான அழுத்தமும் எதிர்பார்ப்பும் அளவு கடந்தது என்பதை அவன் அறிந்திருந்தான். தன் மக்கள் அவனிடம் இன்னும் எதிர்பார்க்க வேண்டும் என்று முதல் போட்டியிலேயே அறைகூவல் விட்டான் நெய்மர். 1-0 என குரோஷியா அணியிடம் பின்தங்கியிருந்த பிரேசில் அணியை 2 கோல்கள் அடித்து வெற்றி பெற வைத்த நெய்மர், உலகக்கோப்பைக் கனவை தன் மக்கள் மனதில் மேலும் ஆழமாய்ப் பதித்தான். கொலம்பியாவுடனான காலிறுதியில் காயப்பட்டு நெய்மர் விழுந்த நொடி, ஒரு தேசத்தின் கனவே சுக்குநூறாகியது. கண்ணீரோடு நெய்மர் வெளியேறியபோது மொத்த பிரேசிலும் கண்ணீர் வடித்தது. அந்தப் போட்டியை வென்று அரையிறுதிக்குள் நுழைந்தாலும் எந்த பிரேசிலியனாலும் அந்த வெற்றியைக் கொண்டாட முடியவில்லை. இனி நெய்மர் அரையிறுதியில் ஆடப்போவதில்லை. கோப்பை? அந்தக் கேள்விக்குறி ஜெர்மனி அணியிடம் பெற்ற 7-1 தோல்வியால் நிதர்சனமானது.

அந்த மாபெரும் தோல்வி எத்தனையோ விஷயங்களை உணர்த்தியிருக்கலாம். ஆனால் அது உணர்த்திய அசைக்க முடியாத உண்மை – நெய்மர் தான் பிரேசில் கால்பந்தின் எதிர்காலம் என்பது. அடுத்த ஆண்டே இந்து உண்மை மீண்டும் புலப்பட்டது. தென்  அமெரிக்கப் போட்டியான கோபா அமெரிக்கா தொடரில் சிவப்பு அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டான் நெய்மர்;  வெளியேறியது பிரேசில். 2016 கோபா அமெரிக்கா – ஒலிம்பிக்கில் விளையாடும் பொருட்டு அணியில் நெய்மர் இல்லை – லீக் சுற்றோடு மீண்டும் நடையைக் கட்டியது பிரேசில். நெய்மர் அணியின் இதயமாகிவிட்டான்.

5 உலகக் கோப்பை வென்று அசாத்திய சாதனை படைத்த பிரேசில் அணியால், ஒரு ஒலிம்பிக் தங்கம் வெல்ல முடியவில்லை என்ற மாபெரும் ஏக்கம் இருந்தது. மீண்டும் பிரேசில் மண்ணிலேயே தொடர். மக்களின் மனதில் அதே ஏக்கம். அந்த ஏக்கத்திற்கான பதில் அதே நெய்மர். இம்முறை இறுதிப்போட்டி வரை தாக்குப்பிடித்துவிட்டான் கேப்டன் நெய்மர். தங்கம் தேடி வந்துவிட்டது. மொத்த தேசத்தின் கனவையும் தனி ஒருவனாய் நிறைவேற்றி கால்பந்து மெஸ்ஸி மற்றும் ரொனால்டோவை மட்டும் கொண்டதல்ல என்று உலகிற்குப் பாடம் புகட்டினான். அதுவும் நிச்சயம் உண்மை தான்.

உலகின் மாபெரும் கிளப்பான பார்சிலோனா அணி, மெஸ்ஸி என்னும் ஜாம்பவானால் வெற்றிகள் கூடுகிறது. இது கால்பந்து ஞானம் அதிகம் இல்லாத சராசரி ரசிகன் ஒவ்வொருவரின் மனதிலும் இருக்கும் கருத்து. ஆனால் ஜாவி, இனியஸ்டா போன்றவர்களே பின்னிருந்து மெஸ்ஸியை இயக்கினார்கள். பார்சிலோனாவின் வெற்றிகளில் மெஸ்ஸிக்கு நிகரான பங்கு அவர்களுக்கும் உண்டு. தற்போது அரேபியாவில் விளையாடி வருகிறார் ஜாவி. இனியஸ்டாவும் நீண்ட நாள்கள் நிலைக்கப்போவதில்லை. ஆனால் MSN என்னும் புதிய மூவர் படையை அடையாளம் கண்டுவிட்டது பார்சிலோனா. மெஸ்ஸி, சுவாரஸ், நெய்மர் ஆகிய இந்த மூவேந்தவர்கள் தான் பார்காவின் நாடி. ஜாவியும் இனியஸ்டாவும் செய்ததை இன்று நெய்மரும் சுவாரசும் செய்கிறார்கள்.

ஆனால் நெய்மர் ஜாவியைப் போலவோ அல்லது இனியஸ்டாவைப் போலவோ வெறும் உந்து சக்தியாக மட்டும் இருக்கப்போவதில்லை. அவன் ஆளப்பிறந்தவன். அடுத்த மெஸ்ஸி, நெய்மர் தான் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. பார்சிலோனா அணி வருங்காலத்தில் நெய்மர் என்னும் வீரனை மையமாய் வைத்தே உருவாகும். அணியால் வாங்கப்படும் ஒரு புது வீரன் கூட, நெய்மருக்கு எந்த வகையில் உதவ முடியும் என்பதைப் பொருத்தே வாங்கப்படுவான். நெய்மர் நிச்சயம் பார்சிலோனாவின் வருங்காலம்.

இந்தக் கூற்றை வெறுமனே சொல்லிவிடவில்லை. சில வீரர்களைப் போல் வெறும் ஒரு பொசிஷனில் மட்டுமே ஆடக்கூடிய வீரன் அல்ல நெய்மர். ஸ்டிரைக்கராக, இடது விங்கராக, வலது விங்கராக ஏன் நடுகள வீரராகக் கூட நெய்மரால் விளையாட முடியும். அது எந்த ஒரு அணிக்கும் மிகப்பெரிய சொத்து. அப்படிப்பட்ட ஒரு வீரன் கால்பந்து அரங்கை அலங்கரிக்கவே பிறந்தவன்.

நெய்மரிடம் உள்ள ஒரே பிரச்னை, அவர் குணம். அவரின் செயல்பாடு. தன் நடவடிக்கைகளால் அடிக்கடி சஸ்பெண்ட் செய்யப்படுகிறார் நெய்மர். இதைப் பல்வேறு முன்னணி வீரர்களும் சாடுகின்றனர். இளம் வயதில் இப்படியான குணம் நல்லதல்ல என்பது அவர்களின் கருத்து. இருக்கலாம். வெறும் 22 வயதில் ஒரு தேசத்தின் கனவை சுமந்தவன் எத்தனை அழுத்தம் சந்திக்க வேண்டி வரும். களத்தில் எத்தனை சவால்களை முறியடிக்க வேண்டும். இப்படியான வீரர்கள் ஆக்ரோஷத்துடன்  செயல்படுவது வழக்கம் தான். உதாரணம் நம் விராத் கோஹ்லி!

ஆனால் அடிப்படையில் நெய்மர் மிகவும் இளகிய மனம் கொண்டவர். 19 வயதில் ஒரு மகனுக்குத் தந்தையானவர். இந்த வயதிலும் குழந்தைகள் மீதான நெய்மரின் பார்வை நம்மை பிரமிக்க வைக்கும். தென்னாப்பிரிக்க அணியுடனான ஒரு போட்டிக்குப் பிறகு மைதானத்திற்குள் ஒரு சிறுவன் ஓடி வந்துவிட்டான். பாதுகாவலர்கள் அவனைப் பிடிக்க வருகையில், அந்தச் சிறுவனை அள்ளிச்சென்று தன் சக வீரர்களோடு வைத்து அவனை உற்சாகப்படுத்தினார் நெய்மர். மைதானமே மெய்சிலிர்த்துப் போனது.

நெய்மரின் திறமை சந்தேகத்திற்கிடமில்லாதது. பிரேசில் அணி, பார்சிலோனா கிளப் இரண்டுக்கும், நெய்மர் மிகப்பெரிய சொத்து. அதையும் தாண்டி நெய்மர் கால்பந்தின் எதிர்காலமும் கூட. அடுத்த தலைமுறை கால்பந்து ரசிகர்களுக்கு நெய்மர் தான் எல்லாமே. இனி வரும் இளம் கால்பந்து வீரர்களுக்கு நெய்மர் தான் ரோல் மாடல். நெய்மர் – கால்பந்தின் குழந்தை.

கால்பந்தின் ஜாம்பவான்களுக்கெல்லாம் ஜாம்பவானான பீலே இந்த வாரம், “கிறிஸ்டியானோ ரொனால்டோவைவிட நெய்மரே சிறந்த வீர்ர்” என்று கூறினார். சக நாட்டவர் என்பதால் கூறினாரா? இல்லை இது உண்மையா?, யார் சிறந்தவர் என்ற வாதமே வேண்டாம். ரொனால்டோ நிகழ்காலத்தின் வெளிச்சம். நெய்மர் நாளைய நம்பிக்கை. இன்று அவ்விருவருக்குமே பிறந்த நாள். எதிர்காலத்தில் பீலேவின் கூற்றைப்போல் ரொனால்டோவின் சாதனைகளை நெய்மர் மிஞ்சுவார் என்று இப்பிறந்த நாளில் அவரை வாழ்த்துவோம்.

ஹேப்பி பர்த் டே நெய்மர்! 

- மு.பிரதீப் கிருஷ்ணா