Published:Updated:

எனது உடல்நலம் பற்றி கேட்பதை நிறுத்துங்க: யுவராஜ் சிங்

எனது உடல்நலம் பற்றி கேட்பதை நிறுத்துங்க: யுவராஜ் சிங்

சண்டீகர்: எனது உடல்நிலையைப் பற்றி கேட்பதை நிறுத்திக் கொள்ளுங்கள் என்று இந்திய அணியின் அதிரடி பேட்ஸ்மேன் யுவராஜ் சிங் ஊடகங்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட யுவராஜ் சிங், அமெரிக்காவில் சிகிச்சையை முடித்துவிட்டு கடந்த மாதம் நாடு திரும்பினார். குர்காவ்னில் தங்கியிருந்த அவர், சண்டீகருக்கு செவ்வாய்க்கிழமை திரும்பினார். சண்டீகர் விமான நிலையத்தில் இருந்து நேரடியாக வீட்டுக்குச் சென்ற அவர், அங்கு செய்தியாளர்களிடம் கலந்துரையாடினார். அப்போது அவர் மேலும் கூறியது:

என்னுடைய உடல்நலத்தைப் பற்றி எதுவும் கேட்காதீர்கள். நீங்கள் அவ்வாறு கேட்கும்போதெல்லாம் நான் இப்போதும் உடல் நலக்குறைவோடு இருப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது. எனக்கு புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டபோது அதை ஜீரணிப்பதற்கே கடுமையாக இருந்தது.

புற்றுநோயோடு கடுமையாகப் போராடிவிட்டேன். நான் பாதிக்கப்பட்டதால் எனது குடும்பத்தினரும் பாதிக்கப்பட்டனர். புற்றுநோயால் பாதிக்கப்பட்டபோது எனக்கு ஆதரவாக இருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நான் வளர்ந்த இடத்திற்கு மீண்டும் வந்ததில் மிகுந்த மகிழ்ச்சி என்றார்.

 புற்றுநோய் சிகிச்சையில் இருந்தபோது சைக்கிள் பந்தய வீரர் ஆம்ஸ்ட்ராங் தனக்கு மிகுந்த ஊக்கமளித்ததாக தெரிவித்தார். மேலும் புற்றுநோயால் பாதிக்கப்படுவர்கள் தன்னைப் பார்த்து ஊக்கம்பெறுவார்கள் என தான் நம்புவதாகவும் யுவராஜ் சிங் தெரிவித்தார்.

இறுதியாக தனது உடல் நிலையை பற்றி ஊடகங்கள் மீண்டும் கேட்க வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.

எப்போது கிரிக்கெட்டுக்கு திரும்புவீர்கள் என்று கேட்டபோது, "பயிற்சிக்காக காத்திருக்கிறேன். இப்போதைய சூழ்நிலையில் நண்பர்கள், உறவினர்கள் என நிறையபேரை சந்திக்க வேண்டியுள்ளது. சில இடங்களுக்கு சுற்றுலா செல்லவுள்ளேன். ஆனால் எந்த இடத்திற்கு செல்ல திட்டமிட்டுள்ளேன் என்பதை தெரிவிக்க முடியாது. அவ்வாறு கூறினால் ஊடகங்கள் அங்கும் என்னை சூழ்ந்துவிடுவார்கள்' என வருத்தம் தெரிவித்தார்.

சச்சினுக்கு எம்.பி. பதவி அளிக்கப்பட்டுள்ளது குறித்துப் பேசிய யுவராஜ், ""குட் மார்னிங் சார்' என்று கூறி நாடாளுமன்றத்தில் சச்சின் உரையாற்றவுள்ளார்' என்றார்.