Published:Updated:

ஸ்டம்ப்பை தொடணும்னா என்னை தாண்டிதான் போகணும் - ஹேப்பி பர்த்டே ராகுல் டிராவிட் !

ஸ்டம்ப்பை தொடணும்னா என்னை தாண்டிதான் போகணும் - ஹேப்பி  பர்த்டே ராகுல் டிராவிட் !
ஸ்டம்ப்பை தொடணும்னா என்னை தாண்டிதான் போகணும் - ஹேப்பி பர்த்டே ராகுல் டிராவிட் !

லகின் தலைசிறந்த கிளாஸிக் கிரிக்கெட்டர்களில் மிகமிக முக்கியமானவர் ராகுல் டிராவிட். கிரிக்கெட்டில் டிராவிட்டை விட அணிக்கு மிகச்சிறந்த தற்காப்பு வீரர் யார் என சல்லடை போட்டுத் தேடினாலும், இன்னமும் யாரும் அகப்படவில்லை. அயல்நாடுகளில் இந்திய அணிக்கு அடிவாங்குவதுதான் பழக்கமாகவும், அதுவே வழக்கமாகவும் இருந்தது. அப்போது எதிர்த்து திருப்பியடித்து இந்தியாவை தலைநிமிரச் செய்தவர் டெண்டுல்கர். இன்னொரு பக்கம் எதிரணியின் அடிகளை வாங்கி, அவர்களை சோர்வடையச் செய்து,  அந்நிய மண்ணில் இந்திய அணி தலைகுனிவைச் சந்திக்காமல் காப்பாற்றிய பெருமை டிராவிட்டுக்கே உண்டு. ஏனோ எதிர்த்து அடித்தவருக்கு கிடைத்த மரியாதை, பல போட்டிகளில் இந்தியாவின் மானத்தைக் காப்பாற்றிய மகத்தான வீரனுக்கு உரியநேரத்தில் கிடைக்கவில்லை.

டிராவிட் எனச் சொன்னவுடன் நினைவுக்கு வருவது, எவ்வளவு அடிவாங்கினாலும் எதிர்த்து நில், தலைகுனியாதே என்பதுதான். அதிவேகப் பந்துவீச்சோ, மிதவேகப் பந்துவீச்சோ,  ஆஃப் ஸ்பின்னோ, லெக் ஸ்பின்னோ, பவுன்சரோ, அபாரமான ஸ்விங்கோ எதுவும் இந்தச் சுவரை தகர்க்கவே முடியாது, 'என்னைத் தாண்டி தொடுறா பாக்கலாம்' என உறுதியாக நின்றவர் டிராவிட். இங்கிலாந்து மண்ணில் சிறப்பாக விளையாட வேண்டும் என்பது உலகின் அத்தனை கிரிக்கெட்டர்களுக்கம் இருக்கும் மிகப்பெரிய கனவில் ஒன்று. இங்கிலாந்து மண்ணில் பந்து தாறுமாறாக ஸ்விங் ஆகும். பேட்டிங்கிற்கு அத்தனை சிறப்பானதாக இல்லாத களத்தில் தாக்குப்பிடிப்பதற்கும், ரன் சேர்ப்பதற்கும் மிகப்பெரிய மனவலிமை அவசியம். அப்படிப்பட்ட மண்ணில்தான் ட்ராவிட்டின் டெஸ்ட் அத்தியாயம் தொடங்கியது.

ஐந்து வருடங்களாக கர்நாடக அணி சார்பில் ரஞ்சி போட்டிகளில் ஆடிய அனுபவமிருந்தும், சர்வதேசப் போட்டிகளில் ட்ராவிட்டால் சரியான தொடக்கத்தைத் தர முடியவில்லை. 1996-ம் ஆண்டு நடைபெற்ற பாகிஸ்தான், இலங்கை மற்றும் இந்திய அணிகள் சிங்கப்பூரில் மோதிய முத்தரப்பு ஒருநாள் போட்டிகளில், வினோத் காம்ப்ளிக்குப் பதிலாக ட்ராவிட் களமிறங்கினார். இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு எதிராக மோதிய இரண்டு போட்டிகளிலும் ஒற்றை இலக்கத்தில் பெவிலியன் திரும்பி ஏமாற்றம் அளித்தார் ட்ராவிட். கிரிக்கெட்டின் மெக்கா என்றழைக்கப்படும் லார்ட்ஸ் மைதானத்தில், இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற போட்டியில்தான் ட்ராவிட் தனது முதல் டெஸ்ட் போட்டியை விளையாடினார்.

சீனியர் வீரர்களுக்குக் கல்தா கொடுப்பதும், புதிய வீரருக்கு வாய்ப்பு தரப்படுவதும் குதிரைக்கொம்பாக இருந்த காலகட்டம் அது. அதே போட்டியில் இந்திய அணி சார்பாக இரு இளம் வீரர்கள் அறிமுகம் ஆகினர். ஒருவர் செளரவ் கங்குலி, மற்றொருவர் ராகுல் ட்ராவிட்.  சஞ்சய் மஞ்ச்ரேக்கருக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக களமிறங்கிய ட்ராவிட் 95 ரன்களில் களத்தில் நின்றார். தனது அறிமுகப் போட்டியிலேயே டெஸ்ட் சதமடித்த வீரர் என்ற பெருமையைப் பெற ட்ராவிட்டிற்கு, இன்னும் ஐந்து ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. கிறிஸ் லூயிஸ் வீசிய பந்து, இங்கிலாந்து விக்கெட் கீப்பர் ரஸ்செல் கைக்குச் சென்றது. அம்பயர் அவுட் தராதபோதும், களத்தைவிட்டு வெளியேறத் தொடங்கினார் ஜென்டில்மேன் ட்ராவிட்.

இந்தியாவில் கிரிக்கெட் என்பது ஒரு மதம். இதற்கு ரசிகர்களை விட வெறியர்களே அதிகம். இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதினாலோ, அரை இறுதியில் இந்திய அணி ஆடுகிறது என்றாலோ மவுன்ட் ரோடு வெறிச்சோடும். டார்கெட்டை முடிக்க வேண்டிய அலுவலகத்தில் கிரிக்கெட் மேட்ச் ஓடும். மொபைல்களில் ஸ்கோர் காட்டும் தளங்களை விரல்கள் மேயும். நூறு கோடிக்கும் மேலான மக்கள் தொகை கொண்ட தேசத்தில் இருந்து, 11 பேர் மட்டுமே தேசத்தின் பிரதிநிதிகளாக விளையாட வேண்டிய நிர்பந்தம். கொஞ்சம் சொதப்பினாலும், ஒட்டுமொத்த அணியின் வெற்றியைப் பாதிக்கும் என்பதால் தனது முழுத்திறமையையும் வெளிப்படுத்தி வீரர்கள் விளையாட வேண்டும். அணியில் நிலைத்திருக்க இன்னும் கடுமையாக உழைக்க வேண்டும். ட்ராவிட் டெஸ்ட் போட்டியில் அறிமுகமான பின், ஒரு போட்டியைக்கூடத் தவறவிடாமல் மொத்தம் 94 போட்டிகள் தொடர்ந்து அணியில் விளையாடினார் என்றால், அவரது அயராத உழைப்புதான் அதற்குக் காரணம்.

கடைசிவரை களத்தில் விடாப்பிடியோடு நிற்கும் ட்ராவிட்டின் ஆட்டத்துக்கு ஒரேயொரு போட்டியை உதாரணமாகச் சொல்லலாம். 2011-ம் ஆண்டு இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது இந்திய அணி. நான்கு டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட இந்தத் தொடரில் இந்தியா சார்பில் சதமடித்த ஒரே வீரர் ட்ராவிட் மட்டுமே. மொத்தம் 3 சதங்களை அவர் அடித்திருந்தார். லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில், மூன்றாவது பேட்ஸ்மேனாகக் களமிறங்கி சதமடித்ததோடு இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றார். இத்தொடரின் நான்காவது போட்டி பேட்டிங்கிற்குச் சாதகமான ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. முதல் இன்னிங்ஸில் ஆறு விக்கெட்களை மட்டுமே இழந்து 591 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது இங்கிலாந்து அணி. ஷேவாக் உடன் துவக்க ஆட்டக்காரராக களமிறங்கினார் ட்ராவிட். அனைத்து வீரர்களும் குறைவான ரன்களுக்கு பெவிலியன் திரும்பிக்கொண்டிருக்க, ட்ராவிட் இன்னொரு பக்கம் நங்கூரமிட்டு நின்றார்.
 

300 ரன்களுக்கு இந்திய அணி ஆட்டமிழந்து ஃபாலோ-ஆன் ஆட வேண்டிய நிலைமை ஏற்பட்டது. இதில் ட்ராவிட் சேர்த்த 146 ரன்களும் அடக்கம். இந்திய அணி முதல் இன்னிங்ஸை முடித்துத் திரும்புகையில், ஜென்டில்மேன் ரசிகர்கள் என்ற பெருமையைப் பெற்ற இங்கிலாந்து ரசிகர்கள் எழுந்து நின்று ட்ராவிட்டிற்கு மரியாதை அளித்தனர். துவக்க ஆட்டக்காரராகக் களமிறங்கி இறுதிவரை களத்தில் நின்றதோடு, பிரேக் முடிந்து அடுத்த இன்னிங்ஸ் ஆட்டத்தைத் துவங்கி பார்ப்போர் அனைவரையும் வியக்கவைத்தார் ட்ராவிட். டெஸ்ட் போட்டியில் அதிகப் பந்துகளைச் சந்தித்த வீரர் என்ற பெருமையும் ட்ராவிட்டையே சேரும். ஒவ்வொரு பந்தையும் மிகுந்த கவனத்தோடு எதிர்கொள்ள வேண்டும் என்ற நிலையில், அவர் தனது டெஸ்ட் வாழ்வில் மொத்தம் 31,258 பந்துகளை எதிர்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலிய அணியின் ஆடம் கில்கிறிஸ்ட், இலங்கையின் குமார் சங்கக்கரா போன்ற வீரர்களின் வரவிற்குப் பின் விக்கெட் கீப்பர், பேட்ஸ்மேனாகவும் இருப்பதன் அவசியத்தை மற்ற அணிகள் உணரத் தொடங்கியிருந்தன. நயன் மோங்கியாவிற்கு ஏற்பட்ட காயம் காரணமாக, அவருக்குப் பதிலாக தற்காலிக விக்கெட் கீப்பராகக் களம் இறங்கி இரண்டு விக்கெட்கள் விழக் காரணமாக அமைந்தார். பள்ளியில் விளையாடும் போதிலிருந்தே விக்கெட் கீப்பராக விளையாடிய அனுபவம் அவருக்கு இருந்ததால், இப்பணியை அவரால் சிறப்பாகச் செய்ய முடிந்தது. பேட்டிங் மட்டுமின்றி விக்கெட் கீப்பர் என்ற கூடுதல் பொறுப்பும் ட்ராவிட்டிற்கு வந்து சேர்ந்தது. தனக்குத் தரப்பட்ட எந்தப் பொறுப்பையும் ட்ராவிட் உதறித்தள்ளிவிடவில்லை. மோதிப் பார்த்துவிடுவது என்பதை மட்டுமே குறிக்கோளாகக்கொண்டு தன்னை அதில் முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார்.

இந்திய அணியின் பயிற்சியாளர் ஆகும் வாய்ப்பிருந்தும், அதைத் தவிர்த்துவிட்டு இந்திய 'ஏ' அணியின் பயிற்சியாளராக ட்ராவிட் பொறுப்பேற்றுக் கொண்டார். இளம் வீரர்களின் திறமைகளைக் கண்டறிந்து ஊக்குவிப்பதில் வல்லவர் என்பதால் ட்ராவிட்டிற்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டது. சமீபத்தில் நடந்த 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக்கோப்பைப் போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணம் பயிற்சியாளராக இருந்த ட்ராவிட். இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் முச்சதம் கண்ட கருண் நாயர், ரஹானே, சாம்சன் ஆகியோர் ட்ராவிட் கண்டெடுத்த இளம் வீரர்கள். இவர்கள் மட்டுமின்றி இந்திய அணிக்கு எதிர்காலத்தில் சிறந்த வீரர்களைக் கண்டறிந்து அவர்களைத் தகுதிப்படுத்தும் பொறுப்பும் தற்போது ட்ராவிட் வசம்தான் உள்ளது. சுருக்கமாகச் சொன்னால் இந்திய கிரிக்கெட்டைச் செதுக்கும் சிற்பியின் பொறுப்பு டிராவிட் வசம் உள்ளது.

தனது முழுமையான அர்ப்பணிப்பைத் தந்து, கடைசிவரை போராடிப் பார்க்கும் குணம்கொண்ட இந்திய அணியின் சுவர் ராகுல் ட்ராவிட்டிற்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்.

- கருப்பு

அடுத்த கட்டுரைக்கு