Published:Updated:

வாரே வாவ்... ஊழல்வாதிகள் இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் நிரந்தரத் தலைவர்கள்!

வாரே வாவ்... ஊழல்வாதிகள் இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் நிரந்தரத் தலைவர்கள்!
வாரே வாவ்... ஊழல்வாதிகள் இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் நிரந்தரத் தலைவர்கள்!

ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கும் சுரேஷ் கால்மாடி , அபே சவுதாலா இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் நிரந்தரத் தலைவர்களாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 

கடந்த 2010-ம் ஆண்டு இந்தியாவில் காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டியின் ஒருங்கிணைப்புக்குழுத் தலைவராக சுரேஷ் கல்மாடி (வயது 72) இருந்தார். மைதானங்கள் கட்டுதல், விளையாட்டு உபகரணங்கள் கொள்முதல் செய்தல், காமன்வெல்த் ஜோதி பயணம் போன்றவற்றில் கோடிக்கணக்கில் ஊழல் நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கடந்த 2011-ம் ஆண்டு சுரேஷ் கல்மாடியை சி.பி.ஐ கைது செய்தது. கடந்த 1996-ம் ஆண்டு முதல் 2006-ம் ஆண்டு வரை இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராக இருந்த சுரேஷ் கல்மாடி 10 மாதங்கள் திஹார் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். 

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சுரேஷ் கல்மாடி ஆசியாவை பொறுத்தவரை, பவர்ஃபுல்லான  விளையாட்டு அமைப்பின் தலைவராக வலம் வந்தவர். கடந்த 2000-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டு வரை ஆசிய தடகளச் சங்கத்தின் தலைவராகவும் பதவி வகித்துள்ளார். கடந்த ஆண்டு ஆசிய தடகளச் சங்கத்தின் ஆயுட்காலத் தலைவராகவும் நியமிக்கப்பட்டார். தற்போது சர்வதேச தடகள கவுன்சிலின் உறுப்பினராகவும் சுரேஷ் கல்மாடி இருக்கிறார். 

இந்திய குத்துச்சண்டை சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் அபே சவுதாலாவும் இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் நிரந்தத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் கடந்த 2012-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை இந்திய குத்துச்சண்டை சம்மேளனத்தின் தலைவராக தேர்வு செயல்பட்டவர். இவர் மீதும் ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன. ஹரியானா முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலாவின் மகன் அபே சவுதாலா. 

இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் நிரந்தரத் தலைவர்களாக இந்த இருவரையும் தேர்வு செய்ததற்கு இந்திய விளையாட்டுத்துறை அமைச்சர் விஜே கோயல் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், '' ஊழல் குற்றச்சாட்டுக்குள்ளான இருவர் இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை ஏற்றுக் கொள்ள முடியாது. தலைவர்கள் நியமனம் மறுஆய்வு செய்யப்பட வேண்டும். தேவைப்பட்டால் நடவடிக்கை எடுக்கவும் தயங்க மாட்டோம். அறிக்கை அளிக்குமாறு இந்திய ஒலிம்பிக் சங்கத்திடம் கேட்டிருக்கிறோம் '' எனத் தெரிவித்துள்ளார். 

இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் ராஜ்பால் சிங் கூறுகையில், ''ஒரு விளையாட்டு வீரர், விளையாட்டு அமைப்புத் தலைவர் பதவிக்கு போட்டியிட்டால், அவருக்கு எந்த ஆதரவும் கிடைப்பதில்லை. ‘நல்லவர்கள் ஒதுங்கியிருந்தால் நல்லதல்ல. நல்லவர்கள் களம் இறங்கி கயவர்களை அகற்ற வேண்டும். அப்படியில்லையென்றால் தீயவர்கள் நல்லவர்கள் மீது ஆதிக்கம் செலுத்துவார்கள்’ என்று சாணக்கியர் கூட தனது அர்த்தசாஸ்திரத்தில் கூறியிருக்கிறார். விளையாட்டு வீரர்கள் அமைப்பு நடவடிக்கைகளில் இருந்து ஒதுங்கியிருக்கக் கூடாது '' என கருத்து வெளியிட்டுள்ளார். 

இதற்கு முன், இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் முன்னாள் தலைவர் விஜே மல்ஹோத்ரா மட்டுமே இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் நிரந்தரத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த 2011-ம் ஆண்டு முதல் 2012-ம் ஆண்டு வரை இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராக செயல்பட்டார். சென்னையில் நேற்று நடந்த இந்திய ஒலிம்பிக் சங்க செயற்குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் சுரேஷ் கல்மாடியும் அபே சவுதாலாவும் நிரந்தரத் தலைவர்களாக தேர்வு செய்யப்பட்டனர். 

- எம்.குமரேசன்