Published:Updated:

டிராவிட், ஹாட்ஜ் அதிரடி: ராஜஸ்தானுக்கு 'ருசிகர' வெற்றி!

Vikatan Correspondent
டிராவிட், ஹாட்ஜ் அதிரடி: ராஜஸ்தானுக்கு 'ருசிகர' வெற்றி!
டிராவிட், ஹாட்ஜ் அதிரடி: ராஜஸ்தானுக்கு 'ருசிகர' வெற்றி!
டிராவிட், ஹாட்ஜ் அதிரடி: ராஜஸ்தானுக்கு 'ருசிகர' வெற்றி!

ஜெய்ப்பூர்: டிராவிட், ரஹானே, ஹாட்ஜ் ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால், டெக்கான் சார்ஜர்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றது.

ஐபிஎல் சீசன் 5-ன் 20வது ஆட்டத்தில், 197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், களமிறங்கிய ராஜஸ்தான் அணி, 19.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து, இலக்கை எட்டியது.

கடைசி ஓவரில் 11 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில், அதிரடியாக பேட் செய்து வந்த ஹாட்ஜ், முதல் பந்தில் 2 ரன்களையும், இரண்டாவது பந்தில் ஒரு ரன்னையும் எடுத்தார்.

மூன்றாவது பந்தை யாக்னிக் எதிர்கொண்டதால், அவருக்கு அருகே ஃபீல்டர்கள் சுற்றிலும் முற்றுகையிட்டனர். ஆனால், அவரோ பந்தை பவுண்டரிக்கு விளாசி, அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். நான்காவது பந்தையும் யாக்னிக் பவுண்டரிக்கு அனுப்பி, ராஜஸ்தான் அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

இன்னிங்ஸை அதிரடியாக துவக்கிய ராஜஸ்தான் கேப்டன் ராகுல் டிராவிட், 24 பந்துகளில் 42 ரன்கள் விளாசினார். மறுமுனையில் வழக்கம்போல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரஹானே 31 பந்துகளில் 44 ரன்கள் சேர்த்தார். இருவரும் நல்ல அடித்தளம் அமைத்து தந்தனர்.

மெனாரியா 22 ரன்களிலும், ஷா 12 ரன்களிலும் ஆட்டமிழக்க, ஹாட்ஜ் அதிரடியாக பேட் செய்து, 21 பந்துகளில் 48 ரன்கள் குவித்து, அணியின் வெற்றிக்கு உறுதுணைபுரிந்தார். போத்தா 14 ரன்கள் சேர்த்தார். யாக்னிக் ஆட்டமிழக்காமல் 9 ரன்கள் எடுத்தார்.

ஆட்டத்தின் 18-வது ஓவரின்போது, டெக்கானுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்க, ஹாட்ஜ் மற்றும் யாக்னிக்கின் சரவெடியால் ராஜஸ்தானுக்கு ருசிகர வெற்றி கிட்டியது.

டெக்கான் சார்ஜர்ஸ் தரப்பில் மிகச் சிறப்பாக பந்துவீசிய மிஸ்ரா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

முன்னதாக, சங்ககாரா தலைமையிலான டெக்கான் சார்ஜஸ் அணி, 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் குவித்தது.

அந்த அணியின் சங்ககாரா 44 ரன்களையும், தவான் 52 ரன்களையும் எடுத்தனர்; கிறிஸ்டியன் 29 ரன்களையும், துமினி 58 ரன்களையும் ஆட்டமிழக்காமல் சேர்த்தனர்.

இந்தப் போட்டியில் வென்றதன் மூலம், 6 ஆட்டங்களில் 4 வெற்றிகளுடன் ராஜஸ்தான் ராயல்ஸ் முதலிடத்தில் உள்ளது. மூன்றில் ஒரு வெற்றியைக் கூட ருசிக்காத டெக்கான் கடைசி இடத்தில் உள்ளது.