Published:Updated:

இவர் கால்பந்தின் சச்சின் அல்ல; திராவிட் - லிவர்பூல் நாயகன் ஜெரார்டு!

இவர் கால்பந்தின் சச்சின் அல்ல; திராவிட் -  லிவர்பூல் நாயகன் ஜெரார்டு!
இவர் கால்பந்தின் சச்சின் அல்ல; திராவிட் - லிவர்பூல் நாயகன் ஜெரார்டு!

இஸ்தான்புல் – மாவீரன் கான்ஸ்டன்டைன் ஆண்ட இம்மாநகரத்தை வரலாற்று ஆசிரியர்கள் கூட மறந்துவிடக்கூடும். ஆனால் கால்பந்து வெறியன் எவனும் அந்த ஊரை மறக்கவே மாட்டான். அதிலும் குறிப்பாக லிவர்பூல் நகரத்து ரசிகர்கள் ஜென்ம ஜென்மத்துக்கும் மறக்க மாட்டார்கள். கால்பந்து வரலாற்றின் ஆகச்சிறந்த ஒரு போட்டி அரங்கேறிய ஊரை யாரால்தான் மறக்க முடியும்? 2005ம் ஆண்டு மே 25ம் தேதி நடந்த அப்போட்டி, முதல் பாதி முடியும் வரை மற்றுமொரு சாதாரண போட்டியாகத்தான் தெரிந்தது. சாம்பியன்ஸ் லீக் ஃபைனல் என்பதைத் தாண்டி வேறு எந்த சிறப்பம்சமும் இல்லாத அப்போட்டியில் இத்தாலியின் மிலன் அணி 3-0 என முதல் பாதியில் லிவர்பூல் அணியை பின்னுக்குத் தள்ளியிருந்தது. கிட்டத்தட்ட போட்டியே முடிந்துவிட்டதாக அனைவரும் கருதிய நிலையில் தான் நடந்தது அந்த மிராக்கிள் – ‘மிராக்கிள் ஆஃப் இஸ்தான்புல்’. ஆறு நிமிட இடைவெளியில் 3 கோல்களை அடித்து ஆட்டத்தை சமனாக்கி, பெனால்டியில் மிலன் அணியை வீழ்த்தி சாம்பியனும் ஆகி ஆச்சரியப்படுத்தியது லிவர்பூல் அணி. எவரும் எதிர்பார்க்காத அந்த அசாத்திய ‘கம்-பேக்’கின் பின்னணியில் இருந்த ஒரு மாபெரும் சக்தியின் பெயர் ஸ்டீவன் ஜெரார்டு.


கால்பந்தை மூச்சாய் சுவாசிக்கும் இங்கிலாந்து மண்ணில் தனது ஏழாம் வயதிலேயே கால்பந்துடனான தனது நேசத்தைத் துவங்கினார் ஜெரார்டு. 18 வயதிலேயே புகழ்பெற்ற லிவர்பூல் அணியில் இடம், 20 வயதில் இங்கிலாந்து அணியில் அறிமுகம், 23 வயதிலேயே லிவர்பூல் அணியின் கேப்டன், 12 ஆண்டுகள் கேப்டனாகப் பயணம், மொத்தம் 872 போட்டிகள் என ஒரு கால்பந்து சகாப்தமாகவே வலம் வந்த ஜெரார்டின் 19 ஆண்டு கால கால்பந்துப் பயணம் இதோ முடிவுக்கு வந்துவிட்டது.

ஜெரார்டு – நடுகளத்தில் மாயாஜாலங்கள் செய்யக்கூடிய வித்தகர். பந்தை எதிரணி வீரரிடமிருந்து பறிப்பதாகட்டும், எங்கோ நிற்கும் தன் சக வீரனின் கால்களுக்குப் பந்தை ஊட்டுவதாகட்டும், ஃப்ரீ-கிக் ஷாட்களின் மூலம் எதிரணியை அலறவிடுவதாகட்டும், ஜெரார்டு ஒரு ஈடு இணையற்ற  ஜீனியஸ்.

சச்சின் அளவிற்கு இவர் பேசப்படவில்லை. ஆனால் டிராவிடைப் போன்ற மாபெரும் திறமைசாலி. ஆட்டத்தின் போக்கை தனி ஒருவனாக மாற்ற வல்லவர். அதானால் தான் இஸ்தான்புல் மைதானத்தில் மாபெரும் சரித்திரத்தை இவரால் படைக்க முடிந்தது. முதல் பாதியில் 3 கோல்கள் வாங்கிய தனது அணியை எல்லா வகையிலும் பின்னின்று தூக்கிவிட்டார் ஜெரார்டு. தானே முன்மாதிரியாய் இருந்து, முதல் கோலை அடித்து போட்டியில் மீண்டு வருவதற்காக பிள்ளையார் சுழியையும் போட்டார். தனது அணியின் ஒவ்வொரு வீரனுக்கும், தன் ஆட்டத்தால் உத்வேகம் அளித்தார் ஜெரார்டு. அதனால்தான் அப்போட்டியின் ஆட்ட நாயகன் விருது அவரை அலங்கரித்தது. 
இது வெறும் சாம்பிள் தான். ஜெரார்டின் மேஜிகல் தருணங்கள் எண்ணற்றவை இருக்கின்றன. அவை ஜெரார்டு எப்படிப்பட்ட ஜீனியஸ் என்பதை நிரூபிக்கும். ஆதரவாளர்களை மட்டுமல்ல, தனக்கு எதிராக விளையாடும் வீரர்களைக் கூடத் தனது ரசிகராக்கி விடுவார் ஜெரார்டு. 


“இவர் உலகின் சிறந்த வீரரா? மெஸ்ஸி, ரொனால்டோவைப் போன்று இவர் பிரபலமாகாமல் இருந்திருக்கலாம். ஆனால் இவரும் உலகின் மிகச்சிறந்த வீரர்தான். இவரால் பந்தைப் பறிக்க முடியும், கோல் அடிக்க முடியும், அவற்றையெல்லாம் தாண்டி தன்னைச் சுற்றியிருக்கும் வீரர்களுக்கு நம்பிக்கையைப் பாய்ச்ச முடியும். இதுபோன்ற விஷயங்களைக் கற்றுக்கொள்ள முடியாது. இப்படியான ஆளுமைகள் இயற்கையாகவே பிறக்கிறார்கள்” என்று ஜெரார்டைப் புகழ்ந்து தள்ளியிருந்தார் பிரான்ஸ் ஜாம்பவான் ஜினாடின் ஜிடான்.

இங்கிலாந்தின் முதல் டிவிஷனில் 18 கோப்பைகள் வென்று கோலோச்சிய லிவர்பூல் அணி, பாதாளம் நோக்கி சென்று கொண்டிருக்கையில், அணியைத் தனி ஆளாய் தாங்கி நின்றவர் ஜெரார்ட். 23 வயதில் கேப்டனாகப் பொறுப்பேற்ற போது மூத்த வீரர்களை ஒருங்கிணைத்ததிலும் சரி, 34 வயதில் இளம் வீரர்களுக்கு ஊக்கம் தந்து லிவர்பூல் அணியின் தரத்தை உயர்த்தியதிலும் சரி, ஜெரார்டு ஒரு மிகச்சிறந்த கேப்டனாகத் திகழ்ந்தார். ஜிடான் கூறியது போல் ஓர் அற்புதமான ஆளுமை அவர்.

17 ஆண்டுகாலம் லிவர்பூல அணிக்காக ஆடிய ஜெரார்டு, 2015ம் ஆண்டு லிவர்பூல் அணியிலிருந்து வெளியேறி, அமெரிக்காவின் லா கேலக்சி அணியில் விளையாடினார். அமெரிக்காவில் கால்பந்தைப் பிரபலப்படுத்துவதற்காக, வயதில் மூத்த பிரபலமான வீரர்களை அமெரிக்கக் கால்பந்து அணிகள் ஒப்பந்தம் செய்வது வழக்கம். அப்படி 2 ஆண்டுகள் லா கேலக்சி அணிக்காக விளையாடிய ஜெரார்டு, அடுத்த ஆண்டு அவ்வணிக்காக ஆடப்போவதில்லை என்று சில தினங்களுக்கு முன் அறிவித்தார். அந்த அறிவிப்பு வெளியானதோ இல்லையோ, ஒட்டு மொத்த கால்பந்து உலகமும் ‘ஜெரார்டு மீண்டும் லிவர்பூல் அணிக்குத் திரும்ப வேண்டும்’ என்று முழக்கமிட்டனர். 


இந்நிலையில் நேற்றோடு ஜெரார்டு தனது 19 ஆண்டு கால கால்பந்து வாழ்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். அடுத்து அவர் பயிற்சியாளராக அடியெடுத்து வைப்பாரா, இல்லை வேறு துறைகளில் கவனம் செலுத்துவாரா என்று தெரியவில்லை. ஆனால் முன்னணி வீரர்களிலிருந்து, ரசிகர்கள் வரை அனைவரும் வேண்டும் ஒரு விஷயம், ஜெரார்டு லிவர்பூல் அணியின் பயிற்சியாளர் குழுவில் இணைய வேண்டும் என்பதே. அவ்வணியின் பயிற்சியாளர் கிளாப்பும், ஜெரார்டுக்கான இடம் காத்திருக்கிறது என்றே கூறியுள்ளார். இதனால் அனைவரின் எதிர்பார்ப்பும் எகிறியுள்ளது.

ஜெரார்டின் ஓய்வு அறிவிப்பு வெளியானதும் ட்விட்டர் முழுமையும் ஜெரார்டு என்ற ஹேஷ்டேகால் மூழ்கியுள்ளது. வீர்ர்களும், ரசிகர்களும் தங்களுக்குப் பிடித்த ‘ஜெரார்டு மொமன்டை’ ஷேர் செய்த வண்ணம் உள்ளனர். உண்மையில் கால்பந்து உலகம் ஒரு ஜாம்பவானை மிஸ் செய்யப் போகிறது. ஜெரார்டு லிவர்பூல் அணிக்கு மட்டுமல்ல, இங்கிலாந்து கால்பந்திற்கே ஒரு அடையாளம்!


- மு.பிரதீப் கிருஷ்ணா
 

அடுத்த கட்டுரைக்கு