Published:Updated:

‛ரசிகர்கள் சச்சின், சச்சின்னு சொல்றது எனக்கு கேட்டுட்டே இருக்கும்’ - சச்சின் ஓய்வு பெற்ற தினம் இன்று!

‛ரசிகர்கள் சச்சின், சச்சின்னு சொல்றது எனக்கு கேட்டுட்டே இருக்கும்’ - சச்சின் ஓய்வு பெற்ற தினம் இன்று!
News
‛ரசிகர்கள் சச்சின், சச்சின்னு சொல்றது எனக்கு கேட்டுட்டே இருக்கும்’ - சச்சின் ஓய்வு பெற்ற தினம் இன்று!

‛ரசிகர்கள் சச்சின், சச்சின்னு சொல்றது எனக்கு கேட்டுட்டே இருக்கும்’ - சச்சின் ஓய்வு பெற்ற தினம் இன்று!


மொத்தமே எங்கள் ஊரில் அப்போது மூன்று இடத்தில்தான் கலர் டிவி இருந்தது. அதில் ஒன்று பஞ்சாயத்து போர்டு டிவி. எப்படிப் பார்த்தாலும் அந்த டிவி இருக்கும் அறையில் அம்பது பேருக்கு மேல் அமர முடியாது. மின்விசிறி நஹி. ஒருவர் மடியில் ஒருவர் என எழுபது பேருக்கும் மேல் அடைந்திருப்போம். டே மேட்ச் என்றால் பகல் முழுக்க அங்கேயே தேவுடு காப்போம். மாலை வெளியே வரும்போது வியர்வையில் குளித்திருப்போம். டே நைட் மேட்ச் நடக்கும் சமயத்தில் பகல் முழுக்க டிவி பஞ்சாயத்து போர்டு ரூமுக்குள் இருக்கும். விளக்கு வைத்ததும் டிவியை அறைக்கு வெளியே இருக்கும் திண்ணையில் தூக்கி வைப்போம். நிலா வெளிச்சத்தில் இந்தியாவின் செகண்ட் பேட்டிங்கை ஒரு திருவிழா போல் ஊரே பார்த்து ரசிக்கும். வீட்டில் டிவி வைத்திருக்கும் கருப்பசாமி வாத்தியாரும் அதில் அடக்கம். காரணம் அவர் வீட்டில் இருந்தது பிளாக் அண்ட் ஒயிட் டிவி.

ஷேன் வார்னின் லெக் ஸ்பின்னை சச்சின் டெண்டுல்கர் டீப் மிட் விக்கெட்டில் பவுண்டரி அடித்துக் கொண்டிருக்கும் சமயத்தில்தான் கரன்ட் போகும். விட மாட்டோம். ரேடியாவை திருகுவோம். கமென்ட்ரி புரியாது. எண்ட் ஆஃப் தி ஓவரில் என்ன சொல்கிறார்கள் என்பதை வைத்தே ஸ்கோர் அப்டேட் செய்வார்கள் அண்ணன்கள். ’டெண்டுல்கர் இருக்கானாடா?’ என்பதே பெரும்பாலானாவர்களின் கேள்வியாக இருக்கும். ”இருக்கான்’ என அண்ணன் சொல்லும் பதிலில் பெருமூச்சு விட்டுக் கொண்டிருப்போம். கரன்ட் வந்து பார்த்தால், சில நிமிடத்தில் சச்சின் அவுட்டாகி இருப்பார். துண்டை உதறிக் கொண்டு பாதி டிக்கெட் காலியாகி விடும். அதில் இளைய அண்ணனும் ஒருவன். சச்சின் பிரியன். அல்ல அல்ல வெறியன். ‛சச்சின் சதம் அடிக்க வேண்டும். இந்தியா தோற்றாலும் பரவாயில்லை‛ என்பதே அவன் தியரி. அதற்காக அவன் எந்த எல்லைக்கும் செல்வான்.

‛டெண்டுல்கர் 90 அடிச்சிட்டான்டா. நீ கிளம்பு’ என மூத்த அண்ணன் அவனை விடாப்பிடியாக வெளியேற்றுவார். அவன் பார்த்தால் சச்சின் சதம் அடிக்க மாட்டார் என்பது அவரின் சென்ட்டிமென்ட். அவன் எச்சில் விழுங்கிக் கொண்டே வெளியேறுவான். சதம் அடித்ததை சொல்லி அனுப்பினால், சிரித்தபடி ரீ என்ட்ரி கொடுப்பான். ஸ்ட்ரெய்ட் டிரைவ், கவர் ட்ரைவ், ஸ்வீப் என சச்சினின் ஒவ்வொரு ஷாட்டையும் நகலெடுப்பான். ஓபனிங் தவிர வேறு இடத்தில் இறங்க மாட்டான். ஓவர் கொடுத்தால் ஒரு ஆஃப் ஸ்பின், ஒரு லெக் ஸ்பின், ஒரு ஃபுல் டாஸ், ஒரு வைடு என சச்சின் போலவே வெரைட்டி காட்டுவான். பந்து போடும் முன் கையில் இருக்கும் காப்பை ஒருமுறை சரிசெய்து சச்சின் பவுலிங் போடுவதைப் பார்த்து, மறுநாளே அவனும் காப்பு வாங்கினான்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

மூன்று ஆண்டுகளுக்கு முன் இதேநாளில் சச்சின் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றிருந்தார். பணி முடிந்து நள்ளிரவு அறைக்குள் நுழைந்ததும், எதேச்சையாக அவனை கவனித்தேன், சச்சினின் பிரியாவிடைப் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த அவன் கண்களில் ஏனோ ஈரம். அவனை இக்கோலத்தில் காண்பது இதுவே முதன்முறை. திரை கட்டி நின்ற நீரை எனக்குத் தெரியாமல் துடைத்து விட்டு சொன்னான் ‛‛இதை விட வேற என்னடா பெருமை வேணும். இந்தியாவுல வேற எந்த ஸ்போர்ட்ஸ்மேனுக்கும் இப்படி ஒரு மரியாதை கிடைச்சிருக்காது’’ என பூரித்தான். டிவியில் சச்சினுக்கு பாரத ரத்னா என நியூஸ் ஓடிக் கொண்டிருந்தது. செய்தி சேனல் பக்கமே திரும்பாதவன், அன்று எல்லா சேனல்களையும் வெறிக்க வெறிக்க பார்த்துக் கொண்டே இருந்தான். 

உயிர் நிகர் காதலி திடீரென ‛நாளைல இருந்து நம்ம பேச வேண்டாம்’ என முத்தமிட்டு பிரிந்தால் எப்படி இருக்கும்? அந்த வெறுமையை அன்று உணர்ந்தனர் சச்சின் ரசிகர்கள். அவர் வசதிப்படி, தென் ஆப்ரிக்கா சுற்றுப் பயணத்தை தள்ளி வைத்து, வெஸ்ட் இண்டீஸை டூருக்கு அழைத்து, அவர்  விருப்பப்படியே  சொந்த மண்ணான மும்பை வான்கடேவில் கடைசிப் போட்டியை நடத்தி, நன்றிக் கடன் செய்திருந்தது பி.சி.சி.ஐ. முதலும் கடைசியுமாக மகன் ஆட்டத்தைப் பார்க்க வந்திருந்த தாயின் முன்னிலையில், தாய் மண்ணில், அமீர் கானில் இருந்து ராகுல் காந்தி வரை  எழுந்து நின்று கைதட்டி ஆர்ப்பரிக்க, வருங்கால இந்திய கிரிக்கெட்டின் தூண்களான விராட் கோஹ்லி, தோனியின் தோள்களில் ஜம்மென அமர்ந்து, கம்பீரமாகத்தான் விடைபெற்றார் சச்சின். ஆனால், ரசிகர்கன்தான் கலங்கி நின்றான். காரணம்... 

‛‛முதலில் சச்சின் மும்பைக்குச் சொந்தம், இரண்டாவது நாட்டுக்குச் சொந்தம், மூன்றாவதாகத்தான் எனக்குச் சொந்தம். இது திருமணத்துக்கு முன்பே எனக்குத் தெரியும். சச்சின் இல்லாத கிரிக்கெட்டை என்னால் நினைத்துப் பார்க்க முடியும். ஆனால், கிரிக்கெட் இல்லாத சச்சினை நினைத்துப் பார்க்க முடியாது’’.

இது, சச்சின் ஓய்வு பெற்ற தினத்தில் அவர் மனைவி அஞ்சலி சொன்னது.  கிரிக்கெட் இல்லாத சச்சினும், சச்சின் இல்லாத கிரிக்கெட்டும் இன்று நமக்கு பழகி விட்டது. ஓய்வுக்குப் பின், வெயில் படாது, உடம்பை வளைக்காது,, பவுடர் போட்ட முகத்துடன்  புசுபுசுவென அவரும் பள்ளி விழாக்களில் கலந்து கொள்கிறார். நாமும் விராட் கோஹ்லியின் கவர் ட்ரைவ் நோக்கி நகர்ந்து விட்டோம். ஆனால், அவர் ஓய்வு பெற்ற நாளில் ஒரு வெறுமை துரத்திக் கொண்டே இருந்தது.  

ட்விட்டரில் பஞ்சுமிட்டாய் என்ற பெயரில் இயங்கும் அரவிந்த் சச்சின் வெறியன். சச்சின் சின்ன வயதில் அடர்த்தியான தலைமுடியுடன் இருக்கும் புகைப்படம்தான், அரவிந்தின் அடையாளம். சச்சின் ஓய்வு பெற்ற நாளில் அவர் எப்படி இருந்தார் என கேட்டோம். ‛‛சச்சின் பேசிட்டு இருக்கும்போதே எனக்கு அழுகை வந்துருச்சு. எங்க அம்மா என்னைப் பாத்து சிரிச்சாங்க. இதுக்கெல்லாமா அழுவாங்கன்னு கிண்டல் பண்ணாங்க. ஆனா எனக்கு அழுகைதான் வந்துச்சு. எப்ப அழுதேன்னு கூட என்னால கரெக்டா சொல்ல முடியும். ஸ்பீச் முடிச்சப்ப, ‛ரசிகர்கள் சச்சின், சச்சின்...னு சொல்றது என் காதுகளில் கேட்டுட்டே இருக்கும்’னு சச்சின் முடிச்சப்ப, என்னால கன்ட்ரோல் பண்ண முடியலை ஒரு 20 நிமிஷம் அழுதேன். அந்த ஃபீல் எப்படி இருந்துச்சு தெரியுமா? நமக்கு நெருக்கமானவங்க யாராச்சும் செத்துப் போயிட்டா எப்படி இருக்கும். அன்னிக்கி அந்த மாதிரி ஃபீல் பண்ணேன். இனி கிரிக்கெட்டே அவ்ளோதான்னு நினைச்சேன். இனிமே யாருக்கு சப்போர்ட் பண்ண? யாருக்குமே சப்போர்ட் பண்ணக் கூடாதுன்னு முடிவு பண்ணிட்டேன். அதனால நாலு மாசம் மேட்ச் பாக்குறதையே விட்டுட்டேன்’’ என இன்னமும் ஃபீல் பண்ணுகிறார் அரவிந்த். 

அவர் மட்டுமல்ல, இதுதொடர்பாக பேசிய அனைவருமே இதே பதிலைத்தான் சொன்னார்கள். நேற்று ஐ.எஸ்.எல். போட்டியின் இடைவேளையின்போது சக நிருபரிடம் இந்த விஷயம் குறித்து பேசியபோது அவரும் அதைத்தான் சொன்னார். ‛‛சத்தியமா அழுதுட்டேன். 22 யார்டு தூரத்திலான என் 24 ஆண்டு பயணம் முடிந்ததுன்னு சொன்னப்பவே லைட்டா கண்ணைக் கட்டுச்சு. எல்லாரும் போன பிறகு பிட்ச்சை தொட்டு கும்பிட்டப்போ, கண்ணு கலங்கிருச்சு. இதுக்கு முன்னாடி ஹைதராபாத்ல ஆஸ்திரேலியாகிட்ட சச்சின் 175 அடிச்சும்  இந்தியா தோத்துருமே அப்ப அழுதேன். இது செகன்ட் டைம்’’ என நினைவலைகளில் மூழ்கினார். 

கடைசி இன்னிங்சில் சச்சின் அவுட்டானபோது யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. சதம் அடித்திருக்கலாம் என கவாஸ்கர் மட்டுமே வர்ணனையில் ஏங்கினார். ஆனால், போட்டி முடிந்து, பிரியாவிடை கொடுக்கும்போது, பேப்பரைப் பார்த்து ஒவ்வொருவருக்கும் நன்றி சொல்லிய போதும், தனியாக சென்று பிட்ச்சை தொட்டுக் கும்பிட்டபோதும் சச்சின் ரசிகர்கள் கலங்கி விட்டனர். 

''அன்னிக்கி நான்  எங்க பெரியம்மா வீட்டுல இருந்தேன். மேட்ச் பாக்கும் போதெல்லாம் ஒண்ணும் தோணல. ஃபேர்வெல் ஸ்பீச் பாத்துட்டு இருந்தப்ப, கண்ல தண்ணி வராததுதான் குறை. என்னைப் பார்த்து அம்மா கிண்டல் பண்ண ஆரம்பிச்சிட்டாங்க. எங்க அண்ணன் பாதியிலயே எந்திரிச்சு போயிட்டான். ஆக்சுவலா, நாங்க சச்சின் கடைசி டெஸ்ட்டை மும்பையில பாக்குறது மாதிரி பிளான் பண்ணி இருந்தோம். கடைசில டிவியில்தான் பாக்க முடிஞ்சது. இதையே என்னால தாங்க முடியலை’’ என்றார் ஹரிஹரன். அவர் மட்டுமல்ல சச்சினை சரமாரியாக விமர்சிப்பவர்கள் கூட அன்று லேசாக கலங்கினர். அவ்வளவு ஏன்… "சச்சின் ஓய்வை அறிவித்ததில் இருந்து நான் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருக்கிறேன்''  என்றார் ஆரம்ப காலத்தில் சச்சினை ஜெராக்ஸ் எடுத்த சேவாக். 

அப்போது, ஒரு நாளிதழில் ஸ்போர்ட்ஸ் பக்கத்தை கவனித்துக் கொண்டிருந்ததால், சச்சின் ஓய்வை சிறப்பாக கவர் செய்ய வேண்டும் என முன்கூட்டியே அலுவலகம் சென்றேன். எடிட்டோரியலில் மட்டுமே டிவி இருக்கும். பிரஸ்ஸில் வேலை செய்யும் கடைநிலை ஊழியரில் இருந்து செய்தி ஆசிரியர் வரை எல்லாருமே, சச்சின் பேச்சை உன்னிப்பாக கேட்டுக் கொண்டிருந்தோம். பேச்சு முடிந்ததும் லே அவுட் ஆர்ட்டிஸ்ட்டில் இருந்த நண்பன் சொன்னான் ‛‛சரி சரி, கண்ணைத் துடைச்சுக்கோ. சீக்கிரம் போய் மேட்டர் ரெடி பண்ணு. பக்கம் முடிக்கனும்’’ 

ஏனெனில் நானும்....!


 - தா.ரமேஷ்