Published:Updated:

தோனிக்காக இந்தியாவை ஆதரிக்கும் ஆஸ்திரேலிய ரசிகை!

தோனிக்காக இந்தியாவை ஆதரிக்கும் ஆஸ்திரேலிய ரசிகை!
தோனிக்காக இந்தியாவை ஆதரிக்கும் ஆஸ்திரேலிய ரசிகை!


டில்லி ஃபெரோஷா கோட்லா மைதானத்தில் இந்திய கிரிக்கெட் அணி பயிற்சி செய்து கொண்டிருந்தது. அதில் உள்ள தன் ஆதர்ச நாயகனை பார்ப்பதற்காக காத்திருந்தாள் அவள். பயிற்சி முடிவதாக இல்லை. அவளும் கிளம்புவதாக இல்லை. ஒரு மணி நேரத்துக்கும் மேலானது. ஒரு வழியாக பேக் அப் சொல்லி கிளம்பினர் இந்திய வீரர்கள். அவர்கள் வரும் வழியை நோக்கி வேகமாக நகர்ந்தாள் அவள். யாரைப் பார்க்க நினைத்தாளோ அவரைப் பார்த்தும் விட்டாள். அந்தப் பெண்ணைப் பார்த்ததும் அவர், கேட்ட முதல் வார்த்தை, ‛ஹலோ... இங்க என்ன பண்ற நீ?...

இருவரும் இதற்கு முன் பல முறை சந்தித்திருக்கிறார்கள்.  ஆஸ்திரேலியாவில் உள்ள அடெிலெய்ட் நகரில் மேலாண்மை நிறுவனத்தில் பணிபுரியும் அந்தப் பெண்ணின் பெயர் லியானி மர்ரே. வயது 24.  முதல் பார்வையிலேயே அவரை வசீகரித்துவிட்ட அந்த வீரர் மகேந்திர சிங் தோனி.  அன்று முதல் இன்று வரை இந்திய அணி செல்லும் இடமெல்லாம் தோனியை துரத்தி வருகிறார். 

கிரிக்கெட் பிரியராக இருந்து ஒரு வீரருக்கு ரசிகனாவது ஒரு வகை. ஒரு வீரரைப் பிடித்துப் போனதற்காக கிரிக்கெட்டை நேசிப்பது இன்னொரு வகை. லியானி மர்ரே இரண்டாவது ரகம். லியானிக்கு கிரிக்கெட் பற்றி எல்லாம் எதுவும் தெரியாது.  முதல் சந்திப்பிலேயே தோனியைப் பிடித்து விட்டது. தோனியைப் பார்த்த பின் கிரிக்கெட்டும் பிடித்து விட்டது.  (இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்குன்னு உங்க மைண்ட் வாய்ஸ் கேட்டாலும் நம்பித்தான் ஆக வேண்டும்)  

இந்திய அணி 2008-ல் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் சென்றிருந்தது. அடிலெய்ட் டெஸ்ட் தொடங்கும் முன், ஓவல் மைதானத்தில் பிராக்டிஸ் செய்து கொண்டிருந்தது இந்திய அணி.  தன் நண்பருடன் முதல் முறையாக கிரிக்கெட் மைதானத்துக்கு வந்திருந்த லியானி மர்ரே, தோனியைப் பார்த்ததும் நேராக அவரிடம் ‛வாட் இஸ் யுவர் நேம்’ எனக் கேட்டு விட்டார்.  ‛ஐயம் மகேந்திர சிங் தோனி’ என புன்னகையுடன் நகர்ந்தார் நம் கூல் கேப்டன்.  தோனியின் இந்த வசீகரம்  அடுத்த மூன்று நாட்களும் லியானியை ஸ்டேடியம் வரவைத்தது.   அன்று முதல் எப்போது இந்திய அணி ஆஸ்திரேலியா சென்றாலும், தோனியைப் பார்க்க வந்து விடுவார் லியானி மர்ரே. 

அதற்கெல்லாம் ஒரு படி மேலாக, தோனி மீதான பிரியம் இன்று அவரை டெல்லி வரவைத்துள்ளது. நியூஸிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டிக்காக  புதன்கிழமை இந்திய அணி பயிற்சி செய்து கொண்டிருந்தபோதுதான், தோனியை சந்தித்திருக்கிறார் லியானி. ‛‛இந்தியாவில் என்னைப் பார்த்ததும் தோனி ஆச்சர்யமடைந்து விட்டார். ஆஸ்திரேலியாவில் பல முறை அவரை சந்தித்திருக்கிறேன் என்றாலும்,  இந்தியாவில் அவர் நட்சத்திர வீரர் என்பதால்,  இந்தியாவில் அவரை சந்திக்க வேண்டும் என நினைத்தேன்.  100க்கும் மேற்பட்ட முறை அவரை பார்த்திருக்கிறேன். இன்று அவருடன் கை குலுக்கியது உணர்ச்சிபூர்வமானது’’ என சிலாகிக்கிறார் லியானி.

‛‛ஆஸ்திரேலியாவில் கிரிக்கெட் தேசிய விளையாட்டு. ஆனால், தோனியைப் பார்ப்பதற்கு முன்பு வரை எனக்கு கிரிக்கெட் பற்றி எதுவும் தெரியாது. தோனியை சந்தித்த பின், இந்திய அணியை உன்னிப்பாக கவனித்து வருகிறேன். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடினாலும் நான் இந்திய அணிக்குத்தான் சப்போர்ட் செய்வேன். காரணம் தோனி. அவர் இருக்கும் அந்தஸ்துக்கு சாதாரண ரசிகையான என்னை நினைவில் வைத்து, பெயர் சொல்லி அழைத்ததை இன்னும் நம்பமுடியவில்லை’’ என மெய்சிலிர்க்கிறார். 

இன்னொரு தகவலைச் சொன்னார் லியானி. 2014-15-ம் ஆண்டு இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சென்றிருந்தது. அப்போது உள்ளூர் தொடரில் சான் அபோட் வீசிய பவுன்சர் பந்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பிலிப் ஹியூஸ் மரணமடைந்தார். இதனால், அடிலெய்டில் நடக்க இருந்த டெஸ்ட் போட்டியின் தேதி மாற்றி அமைக்கப்பட்டது. ஆனால், அந்த போட்டிக்கான டிக்கெட்டுகளை ஏற்கெனவே வாங்கி இருந்தார் லியானி. 

‛‛இந்த தகவலை நான் தோனியிடம் சொன்னதும் அவர், ஐந்து நாட்களுக்குரிய டிக்கெட்டுகளை கொடுத்து விட்டு, மெசேஜ் செய்துவிட்டு போனார்.  என்னைப் பொருத்தவரையில் இது பெரிய விஷயம். தோனி அபாரமான ஹியூமர் சென்ஸ் உடையவர். ஐ லைக் தோனி’’ என முடித்தார்  லியானி. 

- தா.ரமேஷ்

அடுத்த கட்டுரைக்கு