Published:Updated:

12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வந்த கோல்ட்பர்க்..! - மகிழ்ச்சியில் ரெஸ்லிங் ரசிகர்கள்

12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வந்த கோல்ட்பர்க்..! - மகிழ்ச்சியில் ரெஸ்லிங் ரசிகர்கள்
12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வந்த கோல்ட்பர்க்..! - மகிழ்ச்சியில் ரெஸ்லிங் ரசிகர்கள்

வில்லியம் ஸ்காட் 'பில்' கோல்ட்பர்க், தொழில் முறை மல்யுத்தத்தின் சூப்பர் ஸ்டார். இப்போதுதான் இந்த ஜான் செனா, ரோமன் ரெய்ன்ஸ். அப்போ எல்லாமே கோல்ட்பர்க் தான். ஸ்பியர், ஜாக் ஹேமர்னு இரண்டே இரண்டு ஃபினிஷிங் மூவை வெச்சுகிட்டு எவனா இருந்தாலும் அடிச்சுத் தூக்கிட்டுப் போயிட்டே இருப்பாப்ல. அண்டர்டேக்கருக்கு ஏழு உசுரு என நம்பிய அந்தக் கால அப்பாவி ரெஸ்லிங் ரசிகர்களுக்கு கோல்ட்பர்க் தான் சூப்பர் ஹீரோ.

கோல்ட்பர்க் அரங்கத்தினுள் நுழையும்போது ஒலிக்கப்படும் அந்த முரசு ஓசையைக் கேட்டாலே எதிரிகள் கதிகலங்குவார்கள். 1997-98 ஆண்டுகளில் தான் சண்டையிட்ட 160 போட்டிகளிலும் வெற்றி பெற்றவர். கிட்டதட்ட 173 போட்டிகள் தொடர்ச்சியாக வென்றிருக்கிறார். ஆனால், இந்தத் தலைமுறை ரெஸ்லிங் ரசிகர்களுக்கு கோல்ட்பர்க்கைத் தெரிந்திருப்பது கொஞ்சம் கடினம்தான். காரணம், கடைசியாக கோல்ட்பர்க் சண்டையிட்டு 12 வருடங்கள் ஆகின்றன. இருந்தாலும், ப்ளே ஸ்டேஷன் விளையாடும் இந்தக் கால தலைமுறையினருக்கு கோல்ட்பர்க் அடிச்சா அடி விழாது, இடி விழும் என ஓரளவு தெரிந்திருக்கக்கூடும். 'யாருய்யா அந்த கோல்ட்பர்க்? எனக்கே அவரைப் பார்க்கணும் போல இருக்கு' என நிச்சயம் ஏங்கியிருப்பார்கள். அவர்களது ஏக்கத்தைத் துடைத்தெறியவே 12 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் வந்திருக்கிறார் கோல்ட்பர்க். தனது ஆதர்ச நாயகனைப் பல ஆண்டுகள் கழித்துப் பார்த்த அந்தக் கால ரெஸ்லிங் ரசிகர்கள், சிலிர்த்துபோய் டி.வி. பெட்டியின் முன் மண்டியிட்டு 'கபாலியண்ணே...' என்பது போல கண் கலங்கினார்கள். 12 ஆண்டுகளுக்குப் பின்னர் நரைத்த தாடியுடன் அதே பழைய எனர்ஜியுடன் கோல்ட்பர்க் நடந்துவர, அந்த முரசு ஓசையோடு சக வீரர்களின் கைதட்டல் ஓசையும் இணைந்து ஒலிக்க, அது உலகத்திலுள்ள ஒவ்வொரு ரெஸ்லிங் ரசிகனின் மனதையும் என்னமோ பண்ணியது. ஃபேஸ்புக், ட்விட்டர் என சமூக வலைதளங்களில் கோல்ட்பர்க், கோல்ட்பர்க் என அலறியே வைரல் ஆக்கினார்கள்.

'இந்த 12 வருடங்களில், ஒரு மல்யுத்த வீரனாக நான் பல விஷயங்களை இழந்தேன். முக்கியமாக, பல குழந்தைகளுக்கு நான் சூப்பர் ஹீரோவாக இருந்த அந்த நாட்களை இழந்தேன். சமீபத்தில், ரெஸ்லிங் வீடியோ கேமை விளம்பரப்படுத்த எனக்கு வாய்ப்பு கிடைத்தது. பல நாடுகளுக்குச் சென்று அங்குள்ள குழந்தைகளை சந்திக்கும்போதுதான் தெரிந்துகொண்டேன் இன்னும் வீடியோ கேம்கள் என்னை சூப்பர் ஸ்டாராகத்தான் வைத்திருக்கிறது என்று. இதுபோதும், இனி மல்யுத்தம் வேண்டாம் என விலகித்தான் இருந்தேன். ஆனால், பிராக் லெஸ்னர் (சக மல்யுத்த வீரர் ) என்னை சண்டைக்கு அழைத்தார், அப்போதுதான் புரிந்துகொண்டேன் நான் செய்து முடிக்க வேண்டிய காரியம் ஒன்று மிச்சம் உள்ளது' என மேடையில் ஏறிய கோட்பர்க் கூற அரங்கமே அதிர்ந்தது.

12 ஆண்டுகளுக்கு முன்னர், கோல்ட்பர்க் கடைசியாக சண்டையிட்டது இதே ப்ராக் லெஸ்னருடன் தான். அதில் கோல்ட்பர்க் வெற்றி பெற்றார், இறுதியாக அந்தப் போட்டிக்கு சிறப்பு நடுவராக செயல்பட்ட ஸ்டோன்கோல்டு போட்டியாளர்கள் கோல்ட்பர்க் மற்றும் ப்ராக் இருவரையும் தாக்கினார். அந்தப் போட்டியோடு தனது மல்யுத்த வாழ்க்கையிலிருந்து விலகிய கோல்ட்பர்க் மீண்டும் அதே ப்ராக் லெஸ்னருடன் அடுத்த மாதம் மோதவிருக்கிறார். இதில் ப்ராக் சாவடி வாங்குவது உறுதி. ஸ்டோன் கோல்டு மீண்டும் வந்தால் அவருக்கும் மரண அடிதான்!

- ப.சூரியராஜ்

அடுத்த கட்டுரைக்கு