Published:Updated:

சரித்திரம் படைத்தது பெங்களூரு எஃப்.சி!

சரித்திரம் படைத்தது பெங்களூரு எஃப்.சி!
சரித்திரம் படைத்தது பெங்களூரு எஃப்.சி!

    கிரிக்கெட்டுக்கு அடுத்த இடம் இந்தியாவில் கால்பந்துக்குதான். ஆசியாவின் டாப் கால்பந்து கிளப்கள் மோதும் AFC கோப்பைக் கால்பந்துத் தொடரின் இறுதிப் போட்டிக்குள் நுழைந்து இந்தியாவின் பெங்களூரு எஃப்.சி அணி சரித்திரம் படைத்துள்ளது. இத்தொடரில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியதன் மூலம், இதுவரை எந்த இந்திய அணியும் செய்திடாத சாதனையை நிகழ்த்தியுள்ளது பெங்களூரு எஃப்.சி அணி.

    ஐரோப்பாவின் முன்னணி கிளப்கள் மோதும் மிகப்பெரிய கால்பந்துத் தொடர் சாம்பியன்ஸ் லீக். ஒவ்வொரு நாட்டிலுமுள்ள டாப் கிளப்கள் மல்லுக்கட்டும் அந்தப் புகழ்பெற்ற தொடரைப் போல் ஆசியாவின் கால்பந்து கிளப்கள் மோதும் தொடர் தான் AFC கோப்பை. 12 ஆண்டுகளாக நடந்துவரும் இத்தொடரில் இந்திய அணிகள் பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்தியதில்லை. 2008-ல் டெம்போ அணியும், 2013-ம் ஆண்டு ஈஸ்ட் பெங்கால் அணியும் அரையிறுதிக்குத் தகுதி பெற்றதுவே இந்திய அணிகளின் சிறந்த செயல்பாடாக இருந்தது. இந்திய கிளப்களால் பெரிய அளவில் சாதிக்க முடியாது என்று கருதப்பட்ட நிலையில், பெங்களூரு அணி அதையெல்லாம் அடித்து நொறுக்கி, கோப்பையின் மீது இப்போது ஒரு கையை வைத்துள்ளது.

 பெங்களூரு எஃப்.சி – உண்மையைச் சொல்லப்போனால் ஐ.எஸ்.எல் அணிகளை விடவும் புரொஃபஷனலான அணி. இத்தனைக்கும் இவ்வணி தொடங்கப்பட்டது 2013-ல் தான். தொடங்கப்பட்ட 3 ஆண்டுகளில் பெங்களூருவில் கால்பந்தின் வளர்ச்சிக்காக அவர்கள் செய்தது ஏராளம். ஐரோப்பாவின் முன்னணி அணிகளைப் போல் அகாடெமி அமைத்து இளைஞர்களிடமும் சிறுவர்களிடமும் கால்பந்தைக் கொண்டு போய்ச் சேர்த்தனர். அணியை அமைத்துப் போட்டிகளில் பங்கேற்பதற்கு முன்பாகவே அற்புதமான ‘சிஸ்டெமை’ உருவாக்கினார்கள். ஆஷ்லி வெஸ்ட்வுட்டின் ரூபத்தில் சரியான பயிற்சியாளரை நியமித்து, இந்தியக் கேப்டன் சுனில் சேத்ரி உள்ளிட்ட முன்னணி வீரர்கள் பலரையும் ஒப்பந்தம் செய்தனர். விளைவு, தொடங்கப்பட்ட ஆண்டிலேயே ஐ-லீக் தொடரை வென்று அமர்க்களப்படுத்தினர். 2016-ல் மீண்டும் கோப்பையை வென்று தங்களின் பலத்தை நிரூபித்த பெங்களூரு அணி, புதிய பயிற்சியாளர் ஆல்பர்ட் ரோகாவின் தலைமையில் AFC கோப்பையில் நிகழ்த்தியிருக்கும் சாதனை அரிதிலும் அரிது.

    நடப்பு சாம்பியனான மலேசியாவின் ஜோஹர் தருல் தசிம் அணியின் அதே குரூப்பில் பெங்களூரு அணியும் இடம் பெற்றிருந்தது. அந்த அணியுடன் மோதிய 2 லீக் போட்டிகளிலும் தோற்ற பெங்களூரு அணி 3 வெற்றி 3 தோல்விகளுடன் 9 புள்ளிகள் பெற்று அடுத்த சுற்றுக்குப் போராடி முன்னேறியது. அதன்பிறகு நடைபெற்ற நாக்-அவுட் ஆட்டங்களில் 1 கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தது. அரையிறுதியில் மோதவிருப்பது இரண்டு முறை தோற்ற ஜோஹர் அணியோடு. நடப்பு சாம்பியனான ஜோஹர் அணி, இந்த சீசனின் லீக் தொடரில் 6 போட்டிகளிலும் வென்ற ஒரே அணி. அப்படிப்பட்ட பலம் வாய்ந்த அணியை வீழ்த்த முடியுமா என்ற கேள்வி அனைவருக்கும் இருந்தது.

    மலேசியாவில் நடந்த அரையிறுதியின் முதல் சுற்றில் போராடி 1-1 என டிரா செய்து அசத்தியது பெங்களூரு அணி. வழக்கமாய் 4 தடுப்பாட்டக்காரர்களோடு ஆடிவந்த அணியை 3 தடுப்பாட்டக்காரர்களோடு களமிறக்கினார் ரோகா. அதற்குப் பலனாய் லிங்டாஹ் அடித்த ‘அவே கோல்’ உதவியோடு டிரா செய்தது பெங்களூரு அணி. அரையிறுதியின் இரண்டாம் சுற்றுப் போட்டி பெங்களூருவில் நேற்றிரவு நடைபெற்றது. தொடக்கத்திலிருந்து ஆதிக்கம் செலுத்திய ஜோஹர் அணி 11-வது நிமிடத்திலேயே கோலடித்து முன்னிலை பெற்றது. அதன்பிறகு சுதாரித்துக்கொண்டு விளையாடிய பெங்களூரு அணியின் தாக்குதல் ஆட்டம் அனல் பறந்தது.
 
 குறிப்பாக கேப்டன் சுனில் சேத்ரி ஜோஹர் அணிக்குப் பெரும் தலைவலியாய் விளங்கினார். அதன்பலனாய் அவர் மூலமாகவே 40-வது நிமிடத்தில் பெங்களூரு அணி கோலடித்து ஆட்டத்தை சமனாக்கியது. இரண்டாம் பாதியில் இரு அணிகளும் சரிசமமாய் மோதிக்கொண்டாலும், பெங்களூரு அணியின் ஆதிக்கம் சற்று ஓங்கியே இருந்தது. கேப்டன் சுனில் சேத்ரி 67 நிமிடத்தில் மீண்டும் கோலடிக்க ரசிகர்கள் உற்சாகத்தில் மிதந்தனர். ஜோஹர் அணி ஒரு கோல் அடித்தாலே (அவே கோல் வாயிலாக) பைனலுக்கு முன்னேறிவிடும் என்பதால், பெங்களூரு அணி தடுப்பாட்டத்தில் ஈடுபடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர்களோ வேறு பிளானோடு விளையாடினார்கள். தடுப்பாட்டத்தில் இறங்கினால் எதிரணியின் ஆதிக்கம் சற்றுக் கூடலாம், அதனால் தங்களின் வேகத்தை அதிகப்படுத்தி, ஜோஹர் அணிக்கு கொஞ்சமும் இடம் தராமல் விளையாடினார்கள். 75-வது நிமிடத்தில் தடுப்பாட்ட வீரர் ஜுவனான் கோலடிக்க 3-1 என பெங்களூரு அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

வரும் நவம்பர் 5-ம் தேதி நடைபெறவுள்ள இறுதியாட்டத்தில் பெங்களூரு அணி, ஈராக்கைச் சேர்ந்த அல்-குவா அல்-ஜாஹியா அணியை எதிர்கொள்கிறது. இப்போட்டியை வென்றால் பெங்களூரு அணி மாபெரும் சரித்திரம் படைக்கலாம். பெங்களூரு அணியின் அம்ரிந்தர் சிங், கீகன் பெரீரா, ரினோ ஆன்டோ ஆகியோர் கோலில் அரணாய் விளங்குகின்றனர். அணியின் மிகப்பெரிய பலமே அவர்களின் முன்களம் தான். கேப்டன் சுனில் சேத்ரி, சி.கே.வினீத்,. லிங்டாஹ், லாலிம்புயா என அந்த அபார கூட்டணி அவர்களுக்கு மிகப்பெரிய பலம். இறுதிப்போட்டியில் அவர்கள் ஜொலித்தால் கோப்பை நிச்சயம்.

இந்தியாவில் கிரிக்கெட் தவிர்த்து கால்பந்து போன்ற விளையாட்டுகள் பிரபலமடையாது என்று நினைத்தவர்களுக்கெல்லாம் சவுக்கடியாய் விழுந்தது ஐ.எஸ்.எல் தொடர். அதையும் தாண்டி ஆசிய அளவில் இந்திய கால்பந்தை நிலைநாட்டியிருக்கிறது பெங்களூரு எஃப்.சி அணி. அவர்கள் வெற்றி பெற விராத் கோலி உள்ளிட்ட பல பிரபலங்களும் வாழ்த்தியுள்ளனர். என்ன வேடிக்கை? கோலியால் முடியாதவொன்றை பெங்களூரு ரசிகர்களுக்காக கால்பந்தாட்ட வீரர்கள் பெற்றுத் தந்திருக்கின்றனர். ஒரு கோப்பையை வெல்லப் போகின்றனர். இறுதிப்போட்டியில் வென்று இந்தியாவுக்கும் பெருமை சேர்க்கப் போகின்றனர். கால்பந்து -  டி.வியைத் தாண்டி நம் வீதிகளில் உருளும் நாள் வந்துவிட்டது. லெட்ஸ் ஃபுட்பால்!

        பிரதீப் கிருஷ்ணா -

அடுத்த கட்டுரைக்கு