Published:Updated:

கங்குலி - இந்திய‌ கிரிக்கெட்டின் கபாலி

கங்குலி - இந்திய‌ கிரிக்கெட்டின் கபாலி

கங்குலி - இந்திய‌ கிரிக்கெட்டின் கபாலி

கங்குலி - இந்திய‌ கிரிக்கெட்டின் கபாலி

கங்குலி - இந்திய‌ கிரிக்கெட்டின் கபாலி

Published:Updated:
கங்குலி - இந்திய‌ கிரிக்கெட்டின் கபாலி

‘தாதா’ – இந்திய கிரிக்கெட்டின் வரலாற்றில் அழிக்க முடியாத ஒரு பெயர். இந்திய கிரிக்கெட்டின் முகத்தை மாற்றிய பெயர். இந்திய கிரிக்கெட்டிற்கு முகவரி அளித்த பெயர். இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலத்தை வடிவமைக்கப்போகும் பெயர். சினிமா ரசிகனை ஆட்டுவிக்க பாட்ஷா, கபாலி என்று எத்தனையோ தாதாக்கள் இருக்கலாம், ஆனால் கிரிக்கெட் ரசிகன் உச்சிமுகரும் ஒரேயொரு தாதா – சவுரவ் கங்குலி. ‘பெங்கால் டைகர்’, ‘கொல்கத்தா பிரின்ஸ்’, ‘காட் ஆஃப் ஆஃப்சைடு’ என இவரைக் கொண்டாடிய ரசிகர்களெல்லாம் இன்னும் இவரது ரசிகர்கள் தான். இவரது ஓய்வுக்குப் பிறகு தோனியின்  பின்னாலோ, கோலியின் பின்னாலோ அவர்கள் செல்லவில்லை. தாதாவின் கிரிக்கெட் வர்ணனையை கேட்க‌, அவரது ஆளுமையை ஏன் அவரது பேட்டிகளைக் கூட இன்னுமும் ரசித்துக் கொண்டிருக்கின்றனர் கங்குலி வெறியர்கள். ஆல் ஸ்டார் கிரிக்கெட் போட்டியில் அடித்த சிக்ஸரை பார்த்த பலரது ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ் கடவுள் இருக்கிறார்.

    இந்திய கிரிக்கெட்டின் தலைசிறந்த கேப்டனான கங்குலி, கேப்டன் என்பதையும் தாண்டி, இந்திய அணியின் காட்ஃபாதராய் விளங்கியவர். ஓய்வுபெற்று 8 ஆண்டுகளாகியும், இந்தியாவில் கிரிக்கெட் மட்டைகள் சுழலும் இடங்களிலெல்லாம் ‘தாதா என்ற கோஷம் இன்னும் ஒலித்துக்கொண்டுதான் இருக்கிறது. இன்று 44வது பிறந்தநாள் கொண்டாடும் தாதாவை ஏன் ரசிகர்கள் இந்த அளவிற்கு நேசிக்கிறார்கள்.  தாதாவை இந்திய கிரிக்கெட் ரசிகனால் மிஸ் செய்ய முடியாது என்பதற்கு பல காரணங்கள் உள்ளது அவற்றில் சில இதோ...


அசத்தல் அறிமுகம்:


    கிரிக்கெட்டின் மெக்கா எனப்படும் லார்ட்ஸ் மைதானத்தில் தான் கங்குலியின் டெஸ்ட் பயணம் தொடங்கியது. பலம் வாய்ந்த இங்கிலாந்து பந்துவீச்சை எதிர்கொண்ட சவுரவ், அறிமுக போட்டியிலேயே 131 ரன்கள் குவித்து அசத்தினார். லார்ட்ஸ் மைதானத்தில் அறிமுக வீரர் ஒருவர் எடுத்த அதிகபட்ச ரன் இதுதான். அதுமட்டுமின்றி தனது இரண்டாவது இன்னிங்சிலும் சதமடித்து கிரிக்கெட் உலகிற்கு தனது வருகையை அறிவித்தார். அந்தத் தொடரிலேயே சச்சினுடன் இணைந்து 255 ரன்கள் எடுத்து அச்சமயத்தில் இந்தியாவின் சிறந்த வெளிநாட்டு பார்ட்னர்ஷிப்பை அமைத்தார் தாதா. உலக பந்துவீச்சாளர்கள் அனைவரையும் அசர வைக்கும் ஒரு காம்போவிற்கான அஸ்திவாரத்தை தனது முதல் தொடரிலேயே ஏற்படுத்தினார் கங்குலி.

களம் தாண்டிய பந்துகள்

    இன்று கெயிலோ, வார்னரோ 100 மீட்டருக்கு சிக்சர் அடித்தாலே வாய்பிளக்கும் நாம், ஷார்ஜாவில் கங்குலி அடித்த அடிகளைப் பார்த்திருந்தால்?! ஜிம்பாப்வே நிர்ணயித்த 197 ரன் டார்கெட்டை சச்சினும் கங்குலியுமே ரவுண்டு கட்டி அடித்தனர். அதிலும் கிரான்ட் பிளவர் வீசிய ஒரு ஓவரில் மூன்று முறை பந்துகளை கூறையின் மீது பறக்கவிட்டார். ஒவ்வொரு முறையும் பந்து ஸ்டாண்டுகளைத் தாண்டிப் பறந்த போது ரசிகர்கள் மிரண்டே போயினர். கெயில் போன்று பலம் கொடுக்காமல், வெறும் கிளாசிக்கல் ஷாட்களால் சிக்சர் அடிக்கும் கங்குலியின் ஸ்டைலைக் காணக் கண் கோடி வேண்டும். அதாவது பரவாயில்லை 2003 உலகக்கோப்பையில் கென்யாவுக்கு எதிராக இரண்டு முறை பாலை ஸ்டேடியத்துக்கு வெளியே அனுப்பி வைத்தார். பந்தை அவுட் ஆஃப் ஸ்டேடியம் அனுப்புவதிற்கு கங்குலியை விட்டால் சிறந்த ஆளில்லை.கங்குலி ஆடியது இன்று உள்ளது போல் பேட்ஸ்மேன் ஃப்ரெண்ட்லி பிட்ச்களில் அல்ல...பந்துகள் எகிறும் பவுன்ஸி பிட்ச்களில்...

அவுட்ஸ்டேண்டிங் ஆல் ரவுன்டர்


    கங்குலி ஃபார்மில் இருக்கும்போது உண்மையிலேயே அவர் பெங்கால் டைகர் தான். எதிரணியை கடித்துக் குதறிவிடுவார். அதற்கு மிகச்சிறந்த உதாரணம் 1997ல் நடந்த சஹாரா கோப்பை. பாகிஸ்தானுக்கு எதிரான அத்தொடரில் தொடர்ந்து 4 போட்டிகளில் ஆட்டநாயகன் விருது வாங்கி அசத்தினார் தாதா. பேட்டிங் மட்டுமின்றி பவுலிங்கிலும் அசத்திய தாதா அந்த 4 போட்டிகளில் மட்டும் 11 விக்கெட்டும் 205 ரன்களும் எடுத்து அல்ரவுண்டராக ஜொலித்து, அந்தத் தொடரைத் தனக்கான இரையாக்கினார். இதுநாள் வரையில் ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து 4 போட்டிகளில் ஆட்டநாயகன் விருது வென்ற ஒரே வீரர் கங்குலி தான்.

கேப்டன் அல்ல லீடர்   

கேப்டன் – ஒரு அணியை வழிநடத்துபவர். ஆனால் கங்குலியோ இந்திய அணியை வடிவமைத்தவர். சூதாட்டப் புகாரால் சின்னா பின்னமான அணியை ஒருங்கிணைத்து உலக அரங்கில் ஒரு கம்பீர நடை போட வைத்தார் தாதா. அதுவரை இந்தியாவிற்கு என்று இருந்த முகத்தை மாற்றினார். மற்ற அணிகளெல்லாம் பார்த்துச் சிரித்த இந்திய அணியை ஆங்க்ரி பேர்டு மோடுக்கு மாற்றினார் தாதா. அதில் தானே முன்மாதிரியாகவும் விளங்கினார். ஆஸ்திரேலியா போன்ற அணிகளுக்கு அதன் சொந்த மண்ணிலேயே சவால் விடுமளவு அணியை சிறப்பாக்கினார் தாதா. அதுமட்டுமின்றி இளம் வீரர்களை ஊக்குவித்து, அவர்களை நட்சத்திரங்களாக்கியவர் கங்குலி. சேவாக், யுவி, ஜாகிர், பாஜி என அந்தப்படை நீண்டு கொண்டே போகும். மிடில் ஆர்டரில் தவித்த சேவாக்கின் திறமையறிந்து, தனது ஓப்பனிங் ஸ்லாட்டையே அவருக்காக விட்டுக்கொடுத்தார் தாதா. அதுதான் தாதா. அணிக்காக எதையும் செய்யக் கூடியவர் அவர். எப்படிப்பட்ட அதிரடி முடிவுகளையும் எடுக்க அவர் தயங்கியதில்லை. வெற்றிகளை கூலாக அணுகும் தோனிக்கும், மைதானத்தில் ஆக்ரோஷம் காட்டும் கோலிக்கும் இன்ஸ்ப்ரேஷன் தாதா தான்.

ஆஸியை ஸ்விட்ச் ஆஃப் செய்தவர்:

    அன்றைய காலகட்டத்தில் கிரிக்கெட் என்பது ஆஸ்திரேலியாவின் கட்டுப்பாட்டில் இருந்தது என்று தான் சொல்ல வேண்டும். ஸ்லெட்ஜிங்கால் எதிரணியை மனதளவில் தாக்கி வந்த ஆஸி வீரர்களையும், அவர்கள் கேப்டன் ஸ்டீவ் வாக்கையுமே கலங்கடித்தவர் தாதா. 2001 ஆண்டு இந்தியாவில் நடந்த டெஸ்ட் தொடரில் ஆஸி அணியை வீழ்த்தி அவர்களது 16 போட்டி தொடர் வெற்றிக்கு முட்டுக்கட்டை போட்டது தாதா அண்ட் கோ. மேலும் அத்தொடரில் டாஸ் போடுவதற்கு லேட்டாக வந்து பிறரை எரிச்சலூட்டும் ஸ்டீவ் வாக்கையே எரிச்சலூட்டினார் தாதா. அப்போதுதான் வெற்றியாலும் தலைகனத்தாலும் பறந்து கொண்டிருந்த ஆஸி அணி தரை தொட்டது. 2004ம் ஆண்டு ஆஸியில் நடந்த டெஸ்ட் தொடரை முதல் முறையாக தாதாவின் தலைமையில் தான் டிரா செய்தது நம் அணி. அதுமட்டுமின்றி பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்டீவின் கடைசிப் போட்டியில் ஆஸியை வீழ்த்தி பேரதிர்ச்சி கொடுத்தது டீம் இந்தியா.


மெக்காவை மெரசலாக்கியவர்


    தாதா என்றாலே இங்கிலாந்து நாட்டவர்களுக்கு 2002 நாட்வெஸ்ட் கோப்பை தான் நினைவிற்கு வரும். கிரிக்கெட்டின் மெக்காவாகக் கருதப்படும் மிகவும் மரியாதைக்குரிய லார்ட்ஸ் மைதானத்தில் வெற்றி பெற்ற பிறகு தாதா சட்டையக் கழற்றி சுற்றிய காட்சி இன்னும் நம் கண் முன்னர் வந்து போகும். தாதாவின் வெறித்தனமான ரசிகனுக்கு அதுதான் மெய்சிலிர்க்கும் தருனம். பிளின்டாப் வான்கடே மைதானத்தில் செய்ததற்காகத் தான் இப்படிச் செய்ததாக தாதா விளக்கம் கூறியிருப்பார். அதற்கு இங்கிலாந்து லெஜெண்ட் பாய்காட், “ என்ன இருந்தாலும் லார்ட்ஸ் கிரிக்கெட்டின் மெக்கா. அங்கு இப்படி செய்யலாமா?” என்று கேட்டிருப்பார். அதற்கு “லார்ட்ஸ் உங்களுக்கு மெக்கா என்றால், வான்கடே தான் எங்களுக்கு மெக்கா” என்று கவுன்டர் சொன்னதெல்லாம் தாதாவின் எவர்கிரீன் ஸ்பெஷல்.

உலக நாயகன்!

எத்தனையோ வீரர்கள், பிற போட்டிகளில் சிறப்பாக ஆடிவிட்டு உலகக்கோப்பை போன்ற மிகமுக்கிய தொடர்களில் சொதப்புவார்கள். ஆனால் தாதாவோ வோர்ல்டு கப் என்ற பிரஷெரை ஃபீல் செய்ததே இல்லை. இதுவரை 21 உலகக்கோப்பை போட்டிகளில் விளையாடியுள்ள தாதா 1006 ரன்கள் குவித்துள்ளார். அவரது சராசரியோ 50க்கும் மேல். அதுமட்டுமின்றி 4 சதங்களும் அடித்துள்ள தாதா தான் ஒரு உலகக்கோப்பை போட்டியில் அதிக ரன் எடுத்த இந்தியர் (183), ஒரு உலகக் கோப்பைத் தொடரில் அதிக சதம் அடித்தவர் (3) என்ற சாதனைகளையெல்லாம் தன்வசப்படுத்தியுள்ளார். அதுமட்டுமின்றி தான் கேப்டனான போது தரவரிசையில் எட்டாவது இடத்திலிருந்த அணியை 2003 உலகக்கோப்பையின் இறுதிவரை அழைத்துச் சென்றவர்  இந்த கொல்கத்தா பிரின்ஸ்.

நெருப்புடா நெருங்குடா பார்ப்போம்

“இவர் டெஸ்ட் போட்டிகள் விளையாடவெல்லாம் லாயக்கற்றவர். கேப்டன் பதவியை வைத்து ஓட்டிக் கொண்டிருக்கிறார்” என்று பலரும் தாதாவின் டெஸ்ட் பேட்டிங்கை தூற்றினார்கள். சிங்கத்தின் பிடரியைப் பிடித்துவிட்டு சும்மா இருந்துவிட முடியுமா? எதுக்குமே கவுண்டர் கொடுத்து பழகிய தாதா இதற்கும் பதில் சொல்லக் காத்திருந்தார். அவரிடம் அடிபட பாகிஸ்தானும் அணியும் காத்திருக்க , அவர்களை வேட்டியாடியது வங்க‌ சிங்கம். யுவியோடு இணைந்து 300 ரன்கள் குவித்த தாதா, அந்த இன்னிங்சில் 239 ரன்கள் குவித்து, தன்னை சந்தேகித்தவர்களிடம் திரும்ப வந்துருக்கேன்னு போய் சொல்லு என்று  தன்னை நிரூபித்தார். அவ்வாண்டில் அதிக டெஸ்ட் ரன்கள் அடித்தவர்கள் வரிசையில் கங்குலி தான் இரண்டாம் இடத்தில். அவரது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையில், அவரது சராசரி 40க்குக் குறைந்ததில்லை என்று சொல்லும்போதே அவரது திறமை நமக்குத் தெரிய வேண்டும்.

கண்கள் கலங்கிய கடைசி தருணம்


    இந்திய அணியின் மிகச்சிறந்த கேப்டன், கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற வேண்டிய இக்கட்டான சூழ்நிலைக்கு ஆளாக்கப்பட்டார். 2008ம் ஆண்டு ஆஸி அணிக்கு எதிராக தனது கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடிய தாதாவிடம், ஒரு சில ஓவர்கள் கேப்டனாக இருக்கும்படி கூறினார் அப்போதைய தற்காலிக கேப்டன் தோனி. அதன்படி கேப்டனாக சில நிமிடங்கள் விளையாடிய கங்குலி வெற்றி கேப்டனாகவே கிரிக்கெட்டிலிருந்து விடைபெற்றார். ஒரு அணியை உருவாக்கி அழகாக்கிய அம்மாமனிதன் தனது கடைசி இன்னிங்சில் டக் அவுட் ஆனது தான் சோகம். ஆனால் கிரிக்கெட்டின் பிதாமகன் பிராட்மேன் கூட தனது கடைசி இன்னிங்சில் டக் தானே!

நோ கங்குலி நோ கிரிக்கெட்


    கொல்கத்தா – கங்குலியின் கோட்டை. மும்பையில் சச்சினுக்கு இருக்கும் ஆதரவை விட கங்குலிக்கு இங்கு இரண்டு மடங்கு ஆதரவு. 2011 ஐ.பி.எல் ஏலத்தில் கங்குலியை புறக்கணித்த கே.கே.ஆர் அணிக்கு கொல்கத்தா ரசிகர்கள் ஆதரவளிக்க மறுத்தனர். தங்களிம் சொந்த ஊர் அணியாக இருந்தாலும் பரவாயில்லை, தங்கள் நாயகனுக்கான மரியாதை கொடுக்கப்பட வேண்டும் என் நினைத்தார்கள். ‘NO DADA NO KKR’ என்ற கோஷத்தோடு தொடர்ச்சியாக கொல்கத்தா அணியின் போட்டிகளை புறக்கணிக்க, கங்குலியின் செல்வாக்கை உலகறிந்தது. ஒருமுறை ரவி சாஸ்திரி விளையாட்டாக கங்குலியிடம், “மைதானத்தின் ஒரு கேலரிக்கு உங்கள் பெயர் வைக்கப்படவில்லை என்று வருத்தம் இருக்கிறதா?” என்று கேட்க “அந்த மைதானமே என்னுடையது” என்று கொக்கரித்தவர் தாதா.அது உண்மைதான். கொல்கத்தா ஒருகாலத்தில் எப்படி சுபாஷின் கோட்டையாக விளங்கியதோ அப்படி இப்போது இவரின் கோட்டையாக விளங்குகிறது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் கழற்றிவிடப்பட்டார் கங்குலி மொத்த மைதானமும் தென்னாபிரிக்காவுக்கு ஆதரவளித்து இந்தியாவை 10 விக்கெட் வித்தியாசத்தில் மண்ணை கவ்வ வைத்தது. இவர்கள் தாதா ரசிகர்கள் அல்ல தாதா வெறியர்கள் என்பதற்கு இது சிறந்த உதாரணம். கிரிக்கெட்டின் கடவுள் என வர்ணிக்கப்படும் சச்சினுக்கு கூட இப்படி டை ஹார்டு ரசிகர்கள் இல்லை.

தாதா – இந்திய கிரிக்கெட்டின் கபாலி

    இந்தியா பாகிஸ்தான் டி20 உலகக்கோப்பை போட்டி மழையால் கிட்டத்தட்ட ரத்தாகும் நிலைக்குத் தள்ளப்பட, மைதானத்தற்குள் களம்புகுந்த பெங்கால் கிரிக்கெட் சங்கத் தலைவர் கங்குலி, துரிதமான நடவடிக்கைகள் மூலம், மைதானத்தை உடனடியாக சீரமைத்தார். அவரது செயல்பாட்டை வேறு எந்த ஒரு நபரும் இதுவரை செய்ததில்லை. கிரிக்கெட்டே கங்குலியை ஒதுக்க நினைத்தாலும், தாதாவிடமிருந்து கிரிக்கெட்டை ஒதுக்கிவிட முடியாது. அதனால் தான் இப்பொழுதும் ஐ.பி,எல் குழுவிலும், பி.சி.சி.ஐ ஆட்சி மன்றக் குழுவிலும் தன்னை இணைத்துக்கொண்டு இந்திய கிரிக்கெட்டின் முன்னேற்றத்திற்காக உழைத்து வருகிறார்.

தைரியத்தின் மறுபெயர்

    புலியைப் பற்றிக் கூறும்போது அதன் வரியைப் பற்றிக் கூறாமல் விட்டால் எப்படி? தாதா – தைரியத்தின் மறுபெயர். எதற்காகவும் எப்பொழுதும் அஞ்சாதவர். உடனுக்குடன் எதையும் எதிர்க்கும் மனதைரியம் கொண்டவர். அதனால் தான் சூதாட்டப் புகாரில் சிக்கிய ஒரு அணியை அவரால் மீட்டெடுக்க முடிந்தது. முன்னாள் பயிற்சியாளர் சேப்பலுடன் ஏற்பட்ட தகராறாகட்டும், லார்ட்ஸ் நிகழ்வாகட்டும்  அங்கு தாதாவின் சீற்றம் குறைந்ததில்லை. தாதாவின் சொற்கலெல்லாம் அவரது ஆஃப் சைடு கவர் டிரைவ் போலத்தான் அவ்வளவு நேர்த்தியானவை. அதற்கு எடுத்துக்காட்டாக போன வாரம் நடந்த இந்தியப் பயிற்சியாளர் தேர்வு சம்பவம். கங்குலி நேர்கானலில் பங்குபெறவில்லை என்று ரவி சாஸ்திரி குற்றம் சாட்ட, கூலாக பாங்காக்கில் விடுமுறை கழித்தவர் என்று ரவியை ஆஃப் செய்துவிட்டார்.இன்றைக்கு அவரது ஆளுமைகளை ரசித்தாலும், மனதில் ஏதோ ஒரு மூலையில் மீண்டும் கங்குலி மட்டையோடு மைதானத்தில் நுழைந்து பந்தை மைதானத்துக்கு வெளியே விரட்ட மாட்டாரா என்ற ஆசை இருக்கத்தான் செய்கிறது. 11 வீரர்களையும் ஆஃப் சைடில் நிற்க வைத்து ஒரு பந்தை வீசிப்பாருங்கள். ஆஃப் சைடில் ப்ந்து பவுண்டரிக்கு செல்லும்.  ஒருசமயம் தாதா கூறிய வார்த்தை “ எனது சுயசரிதை வெளிவந்தால் பலருடனும் பல பிரச்சனை எழும். பெரிய பூகம்பங்கள் வெடிக்கும். அதற்காக காத்திருக்கிறேன்” என்று கூறினார். நீங்கள் மட்டுமல்ல தாதா நாங்களும் தான்! ஹேப்பி பர்த்டே டு தி காட்ஃபாதர் ஆஃப் இந்தியன் கிரிக்கெட்!

    மு.பிரதீப் கிருஷ்ணா