Published:Updated:

ஒரு கையில் உலக சாதனை! -சரத் கெய்க்வாட்

ஒரு கையில் உலக சாதனை! -சரத் கெய்க்வாட்
ஒரு கையில் உலக சாதனை! -சரத் கெய்க்வாட்

ஒரு கையில் உலக சாதனை! -சரத் கெய்க்வாட்

ஒரு கையில் உலக சாதனை! -சரத் கெய்க்வாட்

முழு உடலும் நன்றாக இருப்பவர்களே 'என்னால் இதெல்லாம் முடியாது' எனப் புலம்பிக்கொண்டிருக்க, இல்லாத கையை நினைத்துப் புலம்பாமல், இருக்கும் ஒரு கையால் என்னவெல்லாம் செய்ய முடியும் என யோசித்து, சாதித்திருக்கிறார் சரத்.

பிறக்கும்போதே ஒரு கை வளர்ச்சி இல்லாமல் பிறந்தவர் சரத் கெய்க்வாட். உடல் குறையை மற்றவர்கள் ஓயாமல் சுட்டிக்காட்டினாலும், அதைக்கேட்டு மனம் துவளாமல், உலக அளவில் சாதனைகளை நிகழ்த்திக்கொண்டே இருக்கிறார். சமீபத்தில், வட கொரியாவில் நடைபெற்ற ‘ஆசிய பாரா விளையாட்டுப் போட்டி’யில் கலந்து கொண்டு ஆறு பதக்கங்களை வென்றார். ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பி.டி.உஷா ஐந்து பதக்கங்களை வென்றிருந்தார், அந்த சாதனையையும் உடைத்திருக்கிறார் 23 வயதான சரத் கெய்க்வாட். 2016-ல் நடக்கவிருக்கும் ‘ரியோ பாராலிம்பிக்ஸ் போட்டி’யில் கலந்து கொள்வதற்காகத் தீவிரப் பயிற்சியில் இருக்கும் சரத்துக்கு, வாழ்த்துக்களைச் சொல்லி பேசினோம்...

“எனக்குப் பூர்வீகம் பெங்களூரு. அப்பா ஒரு கம்பெனியில் சூப்பர்வைசர். அம்மா குடும்பத் தலைவி. ஒரே அக்கா. பிறக்கும்போதே இடது கை சின்னதா இருந்தது. என் வயசுப் பசங்களுக்குக் கிடைச்சதெல்லாம் எனக்கும் கிடைச்சாலும், ரெண்டு கைகளும் உள்ள மத்த பிள்ளைங்களைப் பார்த்து, எனக்கு மட்டும் ஏன் இப்படின்னு நினைச்சு ஏங்கி இருக்கேன்.

டிரெஸ் போடுவது முதல், என்னுடைய பல வேலைகளை நானே செய்துகொள்ள முடியாமல் ஆரம்பத்தில் சிரமப்பட்டிருக்கிறேன். அப்புறம், என்னோட வேலைகளை நானே கொஞ்சம் கொஞ்சமாகச் செய்யக் கத்துக்கிட்டேன். என்னால மத்த பசங்க மாதிரி விளையாட முடியாது. ஆனா, எனக்கு எல்லா விளையாட்டுகளையும் விளையாடப் பிடிக்கும். கிரிக்கெட் வீரர் ஆகணுங்கறதுதான் என் கனவாக இருந்துச்சு. ஆனால், நீச்சல் வீரர் ஆவேன்னு நான் கனவுலகூட நினைக்கலை.

ஒரு கையில் உலக சாதனை! -சரத் கெய்க்வாட்

நாலாவது வகுப்புப் படிச்சுட்டு இருந்தப்போ, என் ஸ்கூல்ல எல்லாருமே கண்டிப்பாக நீச்சல் பயிற்சிக்கு வரனும்னு சொல்லிட்டாங்க. ஒரு கையை வெச்சுகிட்டு குளிக்கவே கஷ்டப்பட்ட நான், நீச்சல் கத்துக்க ரொம்பவே திணறிப்போனேன். ரெண்டு கைகளும்தான் துடுப்பு மாதிரி, தண்ணியைப் பின்னாடி தள்ளிட்டு, நம்மை முன்னோக்கித் தள்ளும். ரெண்டு கைகளும் சேர்ந்துத் தரவேண்டிய விசையை, என்னோட ஒரு கையால தந்தாகணும். சரியான வேகத்துல போகலைன்னா, ஒண்ணு தண்ணிக்குள்ள மூழ்கிடுவேன். இல்லைன்னா, எங்கயாவது போய் முட்டிப்பேன். இப்படி, ஒரு கைக்கே முழு அழுத்தத்தையும் தந்துகொண்டிருந்தால், அதன் எலும்புகள் சீக்கிரமாகவே தேய்மானம் அடைந்துவிடும். இந்த மாதிரி நேரங்களில் தசைகளை உறுதிப்படுத்தும் பிசியோதெரப்பிதான் என் தசைகளைத் தளர்வடையாமல் பார்த்துக்கும். இப்படி, நிறைய வலிகளை நான் அனுபவிச்சாலும், நீச்சல் எனக்கு உடலளவில் மட்டுமல்ல மனதளவிலும் ஏதோ ஒரு மாற்றத்தை ஏற்படுத்தற மாதிரி உணர்ந்தேன். அந்த மாற்றம்தான், என்னைப் போட்டிகளில் பங்கு எடுக்க வைத்தது.

ஸ்கூல் அளவில் போட்டிகளில் கலந்துக்க ஆரம்பிச்சு, மாநில, தேசிய அளவுன்னு முன்னேறி, இன்றைக்கு ஆறு பதக்கங்கள் வாங்கற நம்பிக்கையை, நீச்சல்தான் எனக்குக் கொடுத்திருக்கு'' அடக்கமாக, தன் சாதனையைத் தலையில் ஏற்றிக்கொள்ளாமல் சொல்கிறார் சரத்.

ஒரு கையில் உலக சாதனை! -சரத் கெய்க்வாட்

பத்து வருடங்களாக சரத்துக்கு நீச்சல் கற்றுகொடுத்துக் கொண்டிருக்கும் கிறிஸ்டோபர், “சரத், இங்க சேர்றதுக்கு முன்னாடி வரைக்கும், எந்த மாற்றுத்திறனாளிகளுக்குமே நான் பயிற்சி கொடுத்ததே இல்லை. 'எனக்கு நீச்சல் கத்துக்கொடுங்க'னு சரத் வந்து என்னிடம் நின்னப்போ, இது முடியுமான்னுதான் தோணுச்சு. ஆனால், அவருடைய ஆர்வமும் உழைப்பும் எனக்கு நம்பிக்கையை கொடுத்தது. ஒரு கையால் தண்ணிக்குள்ள தன் உடலைச் சமநிலைப்படுத்த, எவ்வளவு கஷ்டப்பட்டாலும், தண்ணிக்குள்ள இருந்து வெளியே வரும்போது, அவர்கிட்ட இருந்து வர்ற, அந்தச் சிரிப்புல அவ்வளவு நம்பிக்கை இருக்கும். அந்த நம்பிக்கைதான் சாதாரணமாக இருந்த அவரை சாதனையாளரா மாத்தியிருக்கு” தன் மாணவனைப் பற்றி பெருமையாகச் சொல்கிறார்.

குவித்த மெடல்கள்!

உலக அளவில் 39. தேசிய அளவில் 59. 12 வயதிலேயே, தேசிய அளவிலான நீச்சல் போட்டியில் 4 தங்கப் பதக்கங்களை வென்றார். அதே வருடத்தில், சர்வதேச அளவிலான போட்டிகளிலும் ஐந்து பதக்கங்களை வென்றுள்ளார். ஆசிய அளவில் கடந்த மூன்று ஆண்டுகளாக, 50 மீட்டர் பிரெஸ்ட் ஸ்ட்ரோக் மற்றும் 50 மீட்டர் பட்டர்ஃபிளை பிரிவில், சரத்தின் சாதனையை இதுவரை யாரும் முறியடிக்கவில்லை. 2012-ல் லண்டனில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான, ‘ஆசிய நீச்சல் போட்டி’யில் இந்தியாவிலிருந்து கலந்துகொண்ட முதல் வீரர் இவர்தான். உலக அளவில் நடைபெற்ற ஐ.டி.எம் (IDM) போன்ற பல நீச்சல் போட்டிகளில், நமது தேசியக் கொடியைப் பிடித்து, இந்தியாவின் பெருமையை உலகுக்குச் சொன்னவர். மாற்றுத்திறனாளி நீச்சல் வீரர்களுக்கான பட்டியலில், உலக அளவில் எப்போதும் முதல் பத்து ரேங்கிங்கில் வருபவர் சரத்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு கையில் உலக சாதனை! -சரத் கெய்க்வாட்

மாற்றுத்திறனாளிகளுக்கு முறையான பயிற்சி!

மாற்றுத்திறனாளிகளுக்கான நீச்சல் பயிற்சிகள் குறித்து, சென்னையைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கான பிசியோ தெரப்பிஸ்ட் ரஞ்சித் குமாரிடம் பேசினோம்...

''இவர்களுக்கான பிசியோதெரப்பியைப் பொறுத்தவரை, இடுப்புக்கு மேலே மற்றும் இடுப்புக்கு கீழே என, இரண்டு வகையான பிசியோதெரப்பிகள் கொடுக்கப்படும். சரத் கெய்க்வாட் போன்றவர்களுக்கு, இடுப்புக்கு மேலே (தோள்பட்டைகளை வலுவடையச் செய்ய) பயிற்சி அளிக்கப்படும். போலியோவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஹைட்ரோ தெரப்பி போன்ற இடுப்புக்கு கீழ் உள்ள பகுதிகளுக்கானப் பயிற்சி அளிக்கப்படும். இவர்களுக்கும் மற்றவர்களைப் போன்று, புஷ் அப் பயிற்சிகளும் உண்டு. பொதுவானப் பயிற்சியாகத் தசைகள் உறுதிப்படுத்தும் பயிற்சி கொடுக்கப்படும். பொதுவாக, நீருக்குள் சென்றவுடன் எடை குறைந்துவிடும். இந்தச் சூழ்நிலையில், முறையான பயிற்சி இல்லாவிட்டால், உடலைச் சமநிலைப்படுத்த முடியாமல், நீருக்குள் சென்ற உடன், மாற்றுத்திறனாளிகள் மூழ்கிவிடுவர். எனவே, முறையான பயிற்சி எடுக்க வேண்டியது அவசியம். சரியான பயிற்சி மற்றும் பிசியோதெரப்பியோடு, நீச்சல் கற்றுக் கொண்டால், மாற்றுத்திறனாளிகளின் உடலுக்கும் மனதுக்கும் நீச்சல்தான் அருமருந்து!” என்கிறார்.

இல்லாததை நினைத்து ஏங்காமல் இருப்பதை வைத்து, சாதித்துக்கொண்டிருக்கும் சரத்துக்கு தொடர்ந்து, வெற்றிகள் குவிய வாழ்த்துக்கள்!

- க.தனலட்சுமி

அடுத்த கட்டுரைக்கு