Published:Updated:

சச்சின் சாதனையை விட அணி வெற்றி பெரிது: கபில்

Vikatan Correspondent

மும்பை, அக்.1,2011

சச்சின் டெண்டுல்கரின் சாதனையை விட இந்திய அணியின் வெற்றிக்கே முக்கியத்துவம் தரப்பட வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் கூறினார்.

இதுகுறித்து அவர் அளித்த பேட்டி ஒன்றில், "எதிர்வரும் தொடரில் இந்திய அணி எப்படி வெற்றி பெற போகிறது என்பது பற்றி ஊடங்கள் பேசுவதில்லை. ஆனால் இதைவிட சச்சின் டெண்டுல்கரின் 99 சர்வதேச சதங்கள் பற்றியும், அவர் எப்போது 100-வது சதத்தை அடிப்பார் என்பது பற்றியும் தான் மிகவும் ஆர்வமாக அலசி ஆராய்ந்து பேசிக் கொண்டு இருக்கிறீர்கள்.

தனிநபரின் சாதனைகளை பாராட்டக்கூடாது என்று நான் சொல்லவில்லை. ஆனால் முதலில் நாட்டுக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

சச்சின் டெண்டுல்கர் 99 சதங்கள் அடித்திருக்கிறார் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் அவர் அடித்த சதங்களில் எத்தனை போட்டிகள் வெற்றியில் முடிந்திருக்கிறது என்பது எத்தனை பேருக்கு தெரியும்?

டெண்டுல்கர் அடித்த சதங்களில் இந்தியா 60 ஆட்டங்களில் வெற்றி கண்டிருக்கிறது. இது பற்றிய தகவல்களையும் யாராவது அளித்தால் மகிழ்ச்சி அடைவேன்.

சாதனைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் இந்த மனநிலையை நாம் மாற்றியாக வேண்டும். போட்டியில் நாம் தோற்று விட்டால், அதன் பிறகு சாதனைகள், புள்ளி விவரங்களால் என்ன பயன்?" என்று கேள்வி எழுப்பினார் கபில்.