Published:Updated:

ரசிகர்கள் மனத்தில் இருந்து விடைபெறாத ராகுல் டிராவிட்!

ரசிகர்கள் மனத்தில் இருந்து விடைபெறாத ராகுல் டிராவிட்!
ரசிகர்கள் மனத்தில் இருந்து விடைபெறாத ராகுல் டிராவிட்!

- கபிலவஸ்து

டெஸ்ட் போட்டிகளில் தனக்கென நிரந்திர இடத்தை தக்கவைத்துள்ள ராகுல் டிராவிட், இளம் வீரர்கள் ஒவ்வொருக்கும் நடமாடும் கிரிக்கெட் யுனிவர்ஸிட்டியாக விளங்குபவர்.

இந்தியாவின் பெருஞ்சுவர் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் டிராவிட், இன்றுடன் (வெள்ளிக்கிழமை) சர்வதேச ஒருநாள் போட்டியிலிருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்திருக்கிறார்.

ரசிகர்கள் மனத்தில் இருந்து விடைபெறாத ராகுல் டிராவிட்!

கடந்த 1996-ல் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் காலடி வைத்த ராகுல் டிராவிட் இன்று தனது 344-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் விளையாடவுள்ளார் என்பதை நினைக்கையில், இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் பலரது நெஞ்சில் ஏதோ ஓர் இடத்தில் முள் தைப்பதாக உணர்கிறார்கள்.

இதுவரை 343 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள இவர், 12 சதங்களும் 82 அரைசதங்களும் உட்பட 10,820 ரன்கள் குவித்துள்ளார். இதன்மூலம் ஒருநாள் அரங்கில் அதிக ரன்கள் எடுத்துள்ள வீரர்கள் வரிசையில் ஏழாவது இடத்தை வகிக்கிறார்.

பொதுவாக ஒருநாள் போட்டிக்கு இவர் பொருத்தமானவர் இல்லை என்ற கருத்து உண்டு. ஆனால் டிராவிட் தான் நியூசிலாந்து அணிக்கு எதிராக 22 பந்துகளில் அரை சதம் அடித்தார் என்பதை நாம் மறந்துவிட முடியுமா?

அந்த அரை சதத்தை காண தவறியவர்களுக்காக இதோ இணைப்பு: Rahul Dravid 50{22}

பந்துவீச்சாளர்களின் தவறான பந்துகளை அடித்து நொறுக்குவதுதான் டிராவிட்டின் தனித்துவம். இதுவரை ஐந்து கேப்டன்களுக்கு கீழ் விளையாடியுள்ளார். அசாருதீன், ஜடேஜா, சச்சின், கங்குலி, டோனி ஆகியோர் தான் அவர்கள்.  ##~~##

டிராவிட்டும் இந்திய அணிக்காக 79 போட்டிகளில் தலைமை வகித்துள்ளார். கிரேக் சாப்பலின் முறையற்ற பயிற்சியால் மேற்கு இந்திய தீவில் நடைபெற்ற உலகக் கோப்பையில் முதல் சுற்றிலேயே வெளியேறியது. இதற்கு டிராவிட் பலிகடா ஆக்கப்பட்டார். ஆனால், அதற்காக சற்றும் சலைக்காத டிராவிட் தனது ஆட்டத்தின் வேகத்தை அதிகப்படுத்தி சாதித்தும் காட்டினார்.

ஐ.பி.எல். தொடர் அறிமுக ஆனதிலிருந்து அவரது ஆட்டத்தில் இன்று புது வேகமும் கூடியுள்ளது.

பல முன்னணி வீரர்கள் 'ஓய்வு தேவை.. ஓய்வு தேவை' என்று புலம்பி வரும் நிலையில், எந்த நாளும், எந்த நேரமும் களமிறங்க தயங்காதவர் டிராவிட். இதற்கு இங்கிலாந்து சுற்றுப்பயணம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

டிராவிட் இதுவரை 73 போட்டிகளில் விக்கெட் கீப்பராக செயல்பட்டுள்ளார். இதில் 71 கேட்சுகளும், 13 ஸ்டெம்பிங் உட்பட 84 விக்கெட் வீழ்ச்சிக்கு காரணமாகவும் விளங்கியுள்ளார்.

கங்குலி தலைமையில் கூடுதலாக பந்துவீச்சாளார் தேவை என்பதால் டிராவிட் தற்காலிகமாக கீப்பிங் செய்ய முன்வந்தார். அதுவே பல வருடங்கள் நிலைக்க காரணம், டிராவிட்டின் சிறந்த ஆட்ட முறைதான்.

டிராவிட் இந்திய அணியின் சிறந்த பேட்ஸ்மேனாக மட்டுமல்லாமல், ஃசிறந்த பீல்டராகவும் சாதித்ததுள்ளார். இதுவரை இவர் ஒருநாள் போட்டிகளில் 196 கேட்ச்கள் பிடித்துள்ளார். இதில் விக்கெட் கீப்பராக 71, பீல்டராக 125 கேட்ச்சுகள் பிடித்துள்ளார்.

பேட்டிங், ஃபீல்டிங்கில் அசத்திய டிராவிட், பவுலிங்கிலும் சாதித்துள்ளார் என்பது உங்களுக்கு தெரியுமா? சுழலில் அசத்திய இவர், நான்கு விக்கெட் வீழ்த்தியுள்ளார். 1999-ல், ஜெய்ப்பூரில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் தனது முதலாவது சர்வதேச விக்கெட்டை பதிவு செய்தார். அதன்பின், தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக (2000), மூன்று விக்கெட் கைப்பற்றினார். இதில் கொச்சியில் நடந்த போட்டியில் ஒன்பது ஓவர் வீசிய 43 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்களை வீழ்த்தினார்.

கடந்த 1999-ல், நியூசிலாந்துக்கு எதிராக ஐதராபாத்தில் நடந்த போட்டியில் டிராவிட் (153)-சச்சின் (186) சேர்ந்து, இரண்டாவது விக்கெட்டுக்கு 331 ரன்கள் சேர்த்தனர். இதன்மூலம் ஒருநாள் அரங்கில், எந்த ஒரு விக்கெட்டுக்கும் அதிக ரன்கள் சேர்த்த ஜோடி வரிசையில் சச்சின்-டிராவிட் ஜோடி முன்னிலை வகிக்கிறது.

இதேபோல, கடந்த 1999-ல், இலங்கைக்கு எதிராக டான்டனில் நடந்த உலக கோப்பை லீக் போட்டியில், முன்னாள் கேப்டன் கங்குலியுடன் (183) சேர்ந்து, 2வது விக்கெட்டுக்கு 318 ரன்கள் சேர்த்தார் டிராவிட் (145).

ஒருநாள் போட்டிகளில் டிராவிட் இதுவரை 12 சதம் அடித்துள்ளார். கடந்த 1997ல் சென்னையில் நடந்த போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக தனது முதல் சதத்தை பதிவு செய்தார். கடைசியாக கடந்த 2006ல், வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக கிங்ஸ்டனில் நடந்த போட்டியில் சதம் அடித்தார். கடந்த 1999ல், நியூசிலாந்துக்கு எதிராக ஐதராபாத்தில் நடந்த போட்டியில் 153 ரன்கள் எடுத்த டிராவிட், தனது அதிகபட்ச ஸ்கோரை பெற்றார்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த டிராவிட் இங்கிலாந்து தொடருடன் ஒரு நாள் போட்டியிலிருந்து விலகுவதாக அறிவிதிருப்பது நமக்கெல்லாம் சிறிது ஏமாற்றமே!

முன்னணி வீரர்கள் விடைபெறும்போதெல்லாம் கேப்டன் டோனி சிறப்பான முறையில்தான் விடைகொடுத்துள்ளார்.

ஆனால் டிராவிட்டின் ஓய்வு பெரும் நெருக்கடியில் முடிகிறது. கடைசி ஒரு நாள் போட்டியில் இந்திய அணி ஆறுதல் வெற்றி பெற்று அவருக்கு விடை கொடுக்குமா? அல்லது தனது ஓய்வு முடிவை டிராவிட் மறுபரிசீலனை செய்வாரா? இதுவே இப்போதைய ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

ஒருவேளை ஒருநாள் போட்டியில் இருந்து இன்று டிராவிட் விடைபெற்றாலும், கிரிக்கெட் ரசிகர்கள் மனத்தில் இருந்து அவர் ஒருபோதும் விடைபெறப்போவதில்லை!