Published:Updated:

7வது ஐபிஎல் கிரிக்கெட் இன்று தொடக்கம்: மும்பை- கொல்கத்தா மோதல்

7வது ஐபிஎல் கிரிக்கெட் இன்று தொடக்கம்: மும்பை- கொல்கத்தா மோதல்
7வது ஐபிஎல் கிரிக்கெட் இன்று தொடக்கம்: மும்பை- கொல்கத்தா மோதல்
7வது ஐபிஎல் கிரிக்கெட் இன்று தொடக்கம்: மும்பை- கொல்கத்தா மோதல்

அபுதாபி: ஐ.பி.எல் ஏழாவது சீசனின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான மும்பை இண்டியன்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து விளையாடுகிறது.

அபுதாபியில் இந்திய நேரப்படி இன்றிரவு 8 மணிக்கு போட்டி தொடங்குகிறது. இரு அணிகளிலும் சம பலத்துடன் வீரர்கள் இடம்பெற்றிருப்பதால் இன்றைய ஆட்டம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008ஆம் ஆண்டு முதல், ரசிகர்களின் அமோக ஆதரவுடன் நடந்து வருகிறது. நாடாளுமன்ற தேர்தல் காரணமாக இந்த ஆண்டு ஐ.பி.எல். போட்டியை முழுமையாக இந்தியாவில் நடத்த முடியவில்லை. இதையடுத்து முதல் 20 ஆட்டங்களை ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாய், அபுதாபி, ஷார்ஜா ஆகிய இடங்களிலும், எஞ்சிய ஆட்டங்களை மே 2–ந்தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரை இந்திய நகரங்களிலும் நடத்த முடிவு செய்யப்பட்டது.

இதன்படி 7வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா அபுதாபியில் இன்று தொடங்குகிறது. இந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், பெங்களூர் ராயல் சேலஞ்சர், ஹைதராபாத் சன் ரைசர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஆகிய 8 அணிகள் கலந்து கொள்கின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே–ஆப் என்ற அடுத்த சுற்றுக்குள் அடியெடுத்து வைக்கும்.

இன்றைய தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ரோகித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்சும், 2012ஆம் ஆண்டு சாம்பியன் கவுதம் கம்பீர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்சும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இவ்விரு அணிகளும் இதுவரை 12 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில் 10ல் மும்பையும், 2ல் கொல்கத்தாவும் வெற்றி பெற்றுள்ளன. இருப்பினும் தற்போது இவ்விரு அணிகளும் சரிசம பலத்துடன் மல்லுகட்டுவதால் ஆட்டத்தில் பரபரப்புக்கு குறைவிருக்காது.

கொல்கத்தா: கவுதம் கம்பீர் (கேப்டன்), ராபின் உத்தப்பா, காலிஸ், மனிஷ் பாண்டே அல்லது மன்விந்தர் பிஸ்லா, யூசுப் பதான், கிறிஸ் லின் அல்லது ஷகிப் அல் ஹசன், பியுஷ் சாவ்லா, வினய்குமார், சுனில் நரின், மோர்னே மோர்கல் அல்லது கம்மின்ஸ், உமேஷ் யாதவ்.

மும்பை: மைக் ஹஸ்சி, ஆதித்ய தாரே, ரோகித் ஷர்மா (கேப்டன்), அம்பத்தி ராயுடு, சிதம்பரம் கவுதம் அல்லது ஜலஜ் சக்சேனா, பொல்லார்ட், கோரி ஆண்டர்சன், ஹர்பஜன்சிங், ஜாகீர்கான், மலிங்கா, பிரக்யான் ஓஜா.

கடந்த ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சூதாட்ட கறை படிந்ததால், உச்ச நீதிமன்றம் உத்தரவுப்படி இந்த ஆண்டு போட்டியை நடத்தும் பொறுப்பு முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. எந்த பிரச்னையும் இன்றி போட்டியை நடத்துவதே அடுத்த ஒன்றரை மாதங்களுக்கு அவர் முன் நிற்கும் கடுமையான சவாலாகும். அன்னியர்கள் யாரும் நெருங்க முடியாதபடி இந்த முறை வீரர்களுக்கு கடுமையாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.