Published:Updated:

கூட்டு முயற்சிக்கு வெற்றி: கேப்டன் கம்பீர் பெருமிதம்

Vikatan Correspondent

சென்னை, டிச.11, 2010

நியூசிலாந்துக்கு எதிரான 5 ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலும் இந்திய வீரர்களின் கூட்டு முயற்சியால் தான் வென்று தொடரை கைப்பற்றினோம் என அணியின் கேப்டன் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார். ##~~##

இந்தியாவுக்கு நியூசிலாந்து அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் மற்றும் 5 ஒருநாள் போட்டி களில் விளையாடின. இதில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்றது.

அதனைத் தொடர்ந்து 5 ஒருநாள் போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டிகளில் நட்சத்திர வீரர்களான இந்திய அணியின் கேப்டன் டோனி, சச்சின் டெண்டுல்கர், வீரேந்திர சேவாக் மற்றும் ஹர்பஜன்சிங் போன்ற வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது.

இந்திய அணியின் கேப்டனாக இளம் வீரர் கவுதம் கம்பீர்  நியமிக்கப்பட்டார். இவர் தலைமையில் இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணி 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடின. இதில் இந்திய அணி 5-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

இது குறித்து இந்திய அணி கேப்டன் கவுதம் கம்பீர் கூறுகையில், "இந்திய அணியில் மூத்த வீரர்கள் யாரும் இல்லாத நிலையில் இளம் வீரர்கள் மட்டுமே அணியில் இடம் பிடித்திருந்தனர். இதனால் உற்சாகம் அடைந்த அணியினர் தங்களது பங்களிப்பை மிகப்பெரிய அளவில் வெளிப்படுத்தினர்.

பேட்டிங் மற்றும் பவுலிங் இரண்டிலும் சிறப்பாக செயல்பட்டனர். மொத்தத்தில் அணியின் கூட்டு முயற்சியின் காரணமாக நியூசிலாந்துக்கு எதிரான 5 ஒருநாள் போட்டிகளில் வெற்றி பெற்றோம்," என்றார்.

நியூசிலாந்து அணியின் கேப்டன் டேனியல் வெட்டோரி கூறுகையில், "எங்கள் அணியின் மோசமான ஆட்டமே தோல்விக்கு காரணம். சில நேரங்களில் இந்திய அணி தங்களுக்கு பாடம் புகட்டியது. இருப்பினும் இன்னும்  இரண்டு மூன்று மாதங்களில் வரஇருக்கும் உலக கோப்பை போட்டியில் நம்பிக்கையுடன் பங்கேற்போம்.

தற்போது பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் நியூசிலாந்து அணி மேலும் சில போட்டி களில் பங்கேற்க உள்ளதால் அணி வீரர்கள் தங்கள் முழுத்திறமையை வெளிப்படுத்துவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது," என்றார் விட்டோரி.