Published:Updated:

இன்று 2வது போட்டி: ஆஸ்திரேலியாவை பழி தீர்க்குமா இந்தியா?

இன்று 2வது போட்டி: ஆஸ்திரேலியாவை பழி தீர்க்குமா இந்தியா?
இன்று 2வது போட்டி: ஆஸ்திரேலியாவை பழி தீர்க்குமா இந்தியா?
இன்று 2வது போட்டி: ஆஸ்திரேலியாவை பழி தீர்க்குமா இந்தியா?

ஜெய்ப்பூர்: ஜெய்ப்பூரில் இன்று இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் 2வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நடக்கிறது. முதல் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று பழி தீர்க்குமா என்ற எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது.

புனேயில் நடந்த முதலாவது ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலியா 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில், 2வது ஒரு நாள் போட்டி ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் இன்று மதியம் 1.30 மணிக்கு நடக்கிறது. முதலாவது ஆட்டத்தில் பந்து வீச்சு, பேட்டிங் இரண்டிலும் இந்திய அணி சோடை போனது.

20 ஓவர் போட்டியிலும் சரி, முதலாவது ஆட்டத்திலும் சரி வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மா பந்து வீச்சு தான் கவலைக்குரிய அம்சமாக உள்ளது. என்றாலும் அனுபவம் வாய்ந்த அவருக்கு இன்னொரு வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிகிறது.

வலுவான பேட்டிங் வரிசையை கொண்டுள்ள இந்திய அணி, இந்த முறை முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுக்கும் என்று ரசிகர்கள் ஆவல் கொண்டுள்ளனர். யுவராஜ்சிங் 31 ரன்கள் எடுத்தால் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஆயிரம் ரன்களை கடந்த 2வது இந்தியர் என்ற சிறப்பை பெறுவார். இதே போல் விக்கெட் கீப்பர் டோனி ஒரு விக்கெட்டை அவுட் ஆக்கினால், ஒரு நாள் போட்டியில் அதிகம் பேரை ஆட்டம் இழக்கச் செய்த விக்கெட் கீப்பர்களின் வரிசையில் பாகிஸ்தானின் மொயின்கானை (287) பின்னுக்கு தள்ளிவிட்டு 4வது இடத்தை பிடிப்பார்.

முதலாவது ஆட்டத்தில் பெற்ற வெற்றியால் ஆஸ்திரேலியா புத்துணர்ச்சி அடைந்துள்ளது. தொடக்க ஆட்டக்காரர் ஆரோன் பிஞ்ச் அபாரமாக விளையாடி வருகிறார். எனவே ஆஸ்திரேலிய அணியை கட்டுப்படுத்த அவரை ஆரம்பத்திலேயே முடக்க வேண்டியது அவசியம்.

வாட்சன், கிளைன் மேக்ஸ்வெல், கேப்டன் பெய்லி, ஆரோன் பிஞ்ச் உள்ளிட்டோர் ஆஸ்திரேலியாவின் பேட்டிங்குக்கு பலம் சேர்க்கிறார்கள். பந்து வீச்சில் ஜேம்ஸ் பவுல்க்னெர், மெக்கே, மிட்செல் ஜான்சன் ஆகியோர் முதலாவது ஆட்டத்தில் மிரட்டினர்.

ஜெய்ப்பூர் மைதானத்தில் இதுவரை 18 ஆட்டங்கள் நடந்துள்ளன. இதில் முதலில் பேட் செய்ய அணி 7 முறையும், 2வது பேட் செய்த அணி 11 முறையும் வெற்றி பெற்றுள்ளன. இந்திய அணி இங்கு விளையாடியுள்ள 11 ஆட்டத்தில் 7ல் வெற்றியும், 4ல் தோல்வியையும் சந்தித்துள்ளது. ஆஸ்திரேலிய அணி இங்கு 3 ஆட்டத்தில் விளையாடி ஒன்றில் வெற்றியும், 2ல் தோல்வியும் கண்டுள்ளது.

##~~##
இந்த மைதானத்தில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் ஒரே முறை (1986-ம் ஆண்டு) நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறது. இங்கு தான் 2005ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிராக டோனி 183 ரன்கள் குவித்து மிரள வைத்தது குறிப்பிடத்தக்கது.
இந்திய வீரர்கள்:  டோனி (கேப்டன்), ரோகித் ஷர்மா, ஷிகர் தவான், விராட் கோலி, சுரேஷ் ரெய்னா, யுவராஜ்சிங், ரவீந்திர ஜடேஜா, அஸ்வின், இஷாந்த் ஷர்மா, வினய்குமார், புவனேஸ்வர்குமார்.
ஆஸ்திரேலியா வீரர்கள்: பெய்லி (கேப்டன்) ஆரோன் பிஞ்சி, பிலிப் யூக்ஸ், வாட்சன், ஜார்ஜ், ஆடம் வோக்ஸ், கிளைன் மேக்ஸ்வெல், பிராட் ஹேடின், பவுல்க்னெர், மிட்செல் ஜான்சன், கிளைன்ட் மெக்கே, சேவியர் டோஹர்த்தி.