Published:Updated:

`15 வயதில் கேன்சர்; 18 வயதில் அறிமுகப் போட்டியிலேயே சதம்!' - சாதித்த உத்தரகாண்ட் இளம் வீரர்

கமல் சிங்
கமல் சிங்

கேன்சர் பாதிப்பிலிருந்து மீண்ட உத்தரகாண்ட் மாநில கிரிக்கெட் வீரர் கமல் சிங், ரஞ்சிக் கோப்பைத் தொடரில் தனது அறிமுகப் போட்டியிலேயே சதமடித்து அசத்தினார்.

மகாராஷ்டிரா மற்றும் உத்தரகாண்ட் அணிகள் இடையிலான ரஞ்சிக் கோப்பை போட்டி, மகாராஷ்டிரா மாநிலம் பாராமதியில் நடந்துவருகிறது. இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் உத்தரகாண்ட் அணியின் அறிமுக வீரரான கமல் சிங், சதமடித்து அசத்தினார். 18 வயதான கமல் கன்யால் சிங், கேன்சர் பாதிப்பிலிருந்து மீண்டுவந்து சாதித்திருக்கிறார்.

புகழ்பெற்ற கோடை வாசஸ்தலமான நைனிடால் அருகே உள்ள ஹல்த்வானி பகுதியில் பிறந்த கமல் சிங், சிறுவயது முதலே கிரிக்கெட் மீது தீராத ஆர்வம் கொண்டிருந்திருக்கிறார். லோதா கமிட்டி பரிந்துரைகளை ஏற்றுக்கொண்ட பின்னரே, உத்தரகாண்ட் கிரிக்கெட் சங்கத்தை பிசிசிஐ முழுநேர உறுப்பினராக அங்கீகரித்தது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே உத்தரகாண்ட் ரஞ்சிக் கோப்பை போட்டிகளில் பங்கெடுக்கும் வாய்ப்பைப் பெற்றது.

கமல் சிங்
கமல் சிங்

அதற்கு முன்னர், உத்தரப்பிரதேச மாநில கிரிக்கெட் அணிக்காக இம்மாநில வீரர்கள் விளையாடி வந்திருக்கின்றனர். ஆனால், பல்வேறு காரணங்களைக் கூறி, உ.பி கிரிக்கெட் சங்கம், உத்தரகாண்ட் வீரர்களை நிராகரிப்பதையே வாடிக்கையாகக் கொண்டிருந்தது என்ற குற்றச்சாட்டும் எழாமல் இல்லை. இந்த நிலையில், மூன்றாண்டுகளுக்கு முன்னர் தனது 15 வயதில் லுக்கீமியா எனப்படும் ரத்தப்புற்றுநோயால் கமல் சிங், பாதிக்கப்பட்டிருக்கிறார்.

இதுகுறித்து இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகத்திடம் பேசியிருக்கும் கமல்சிங், ``எனக்கு 15 வயதாக இருக்கும்போது, லுக்கீமியாவால் பாதிக்கப்பட்டேன். மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக தந்தையுடன் சென்றிருந்தபோது, அது உறுதிசெய்யப்பட்டது. ஆனால் மருத்துவர்கள், தந்தையிடம் என்ன சொன்னார்கள் என்று தெரியவில்லை. அடிக்கடி எனக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. லுக்கீமியா உறுதிசெய்யப்பட்ட பின்னர், ஓராண்டுக்கு என்னால் எதையும் செய்ய முடியவில்லை.

நொய்டா மருத்துவமனையில் 6 மாதங்கள் தொடர் சிகிச்சை எடுத்துக்கொண்டேன். இளம் வயது என்பதால், அதிலிருந்து மீள வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக மருத்துவர்கள் நம்பிக்கை கொடுத்தனர். எல்லா சூழல்களிலும் எனது குடும்பத்தினர், எனக்கு ஆதரவாக நின்றனர். என்னை ஊக்கப்படுத்திக்கொண்டே இருந்தனர். என்னைப் புலி என்றே வீட்டில் இருப்பவர்கள் அழைத்தார்கள். அதோடு, இதிலிருந்து என்னால் நிச்சயம் மீண்டுவிட முடியும் என நம்பிக்கையூட்டினார்கள். 6 மாத சிகிச்சைக்குப் பின்னர், மேலும் 6 மாதங்கள் ஓய்வு எடுத்து, நோய் தாக்கத்திலிருந்து முழுமையாக மீண்டேன். அதன்பின்னர் முதலில் நான் செய்த வேலை, கிரிக்கெட் மைதானத்துக்குத் திரும்பியதே'' என்று கூறி நெகிழ்ந்திருக்கிறார்.

`90-க்கு 3 விக்கெட்... அப்புறம் வந்தான் பாரு ஒருத்தன்... யுவராஜ் சிங்..!' - யுவி பிறந்தநாள் பகிர்வு

இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கைப்போல், கேன்சர் பாதிப்பிலிருந்து மீண்டு வந்த கமல் கன்யால் சிங், தனது முதல் ரஞ்சிக் கோப்பை போட்டியில் சதமடித்து திறமையை நிரூபித்திருக்கிறார். 19 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில், சிறப்பான செயல்பாடு காரணமாக ரஞ்சிக் கோப்பை அணிக்கு அவர் தேர்வாகியிருக்கிறார். ஒரு இரட்டைச் சதம், இரண்டு சதங்கள், மூன்று அரை சதங்கள் உள்பட 9 போட்டிகளில் அவர் அடித்த ரன்கள் 800.

6 மாத சிகிச்சைக்குப் பின்னர் வீட்டிலிருந்து மேலும் 6 மாதங்கள் ஓய்வு எடுத்து, நோய் தாக்கத்திலிருந்து முழுமையாக மீண்டேன்.
கமல் சிங், உத்தரகாண்ட் கிரிக்கெட் வீரர்

மகாராஷ்டிராவுக்கு எதிரான போட்டியில், கமல் சிங் உதவியுடன் உத்தரகாண்ட் அணி, முதல் இன்னிங்ஸில் 44 ரன்கள் முன்னிலை பெற்றது. முதல் இன்னிங்ஸில் மகாராஷ்டிரா 207 ரன்கள் எடுத்த நிலையில், உத்தரகாண்ட் அணி, 251 ரன்கள் சேர்த்தது. கமல் சிங், 160 பந்துகளில் 17 பவுண்டரிகள் உதவியுடன் 101 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இதையடுத்து, இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய மகாராஷ்டிரா, 313 ரன்கள் குவித்து, உத்தரகாண்ட் அணிக்கு 270 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. போட்டியின் கடைசி நாளான இன்று, உணவு இடைவேளையின்போது உத்தரகாண்ட் அணி, 5 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் சேர்த்திருக்கிறது. முதல் இன்னிங்ஸில் சதமடித்த கமல் சிங், இரண்டாவது இன்னிங்ஸில் 57 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அடுத்த கட்டுரைக்கு