Published:Updated:

ஜிம்பாப்வேக்கு எதிரான 5 போட்டிகளிலும் வெற்றி வரலாறு படைத்தது இந்தியா

ஜிம்பாப்வேக்கு எதிரான 5 போட்டிகளிலும் வெற்றி வரலாறு படைத்தது இந்தியா
ஜிம்பாப்வேக்கு எதிரான 5 போட்டிகளிலும் வெற்றி வரலாறு படைத்தது இந்தியா
ஜிம்பாப்வேக்கு எதிரான 5 போட்டிகளிலும் வெற்றி வரலாறு படைத்தது இந்தியா

புலவாயோ: ஜிம்பாப்வேக்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை 5–0 என்ற கணக்கில் புதிய வரலாறு படைத்தது.

இந்தியா – ஜிம்பாப்வே கிரிக்கெட் அணிகள் இடையிலான 5வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி புலவாயோ நகரில் உள்ள குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் இந்திய நேரப்படி நேற்று பகல் இரவு ஆட்டங்களாக நடந்தது.

டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி பந்து வீச்சை தேர்ந்தெடுத்தார். இதன்படி முதலில் பேட்டிங்கை தொடங்கிய ஜிம்பாப்வே பேட்ஸ்மேன்கள், இந்திய வேகப்பந்து வீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் வழக்கம் போல் திணறினர்.

மிடில் ஓவர்களில், அமித் மிஸ்ரா வீசிய சுழல் வலையில் கடைசி 6 பேட்ஸ்மேன்களும் ஒட்டுமொத்தமாக வீழ்ந்தனர். 39.5 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த ஜிம்பாப்வே 163 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

அதிகபட்சமாக சீன் வில்லியம்ஸ் 51 ரன்களும், மசகட்சா 32 ரன்களும் எடுத்தனர். இந்திய தரப்பில் அமித் மிஸ்ரா 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஒரு நாள் போட்டியில் 5 விக்கெட்டுகளுக்கு மேல் அவர் எடுப்பது இதுவே முதல் முறையாகும்.

அடுத்து 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களம் இறங்கிய இந்திய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க ஆட்டக்காரர் புஜாரா (0) ஜார்விசின் முதல் ஓவரிலேயே கிளீன் போல்டு ஆனார்.

இதைத் தொடர்ந்து ஷிகர் தவானும், ரஹானேவும் அணியை சரிவில் இருந்து மீட்டனர். அதிரடி காட்டிய தவான் 32 ரன்களில் ஆடிக் கொண்டிருந்த போது, கேட்ச் கண்டத்தில் இருந்து தப்பினார். இதே போல் ரஹானேவுக்கு 7 ரன்னில் நின்ற போது அதிர்ஷ்டம் கிடைத்தது. பீல்டர் தன்னை நோக்கி எறிந்த பந்தை ஜிம்பாப்வே விக்கெட் கீப்பர் பிரன்டன் டெய்லர் அதை சேகரிப்பதற்கு முன்பாகவே ஸ்டம்பை தகர்த்ததால், ரஹானே ரன் அவுட் வாய்ப்பில் இருந்து தப்பித்தார்.

##~~##
தவான் தனது பங்குக்கு 41 ரன்கள் விளாசிய நிலையில் கேட்ச் ஆனார். 3வது அரைசதத்தை எட்டிய ரஹானே 50 ரன்களில் வெளியேறினார். இதன் பின்னர் ரவீந்திர ஜடேஜாவும், தினேஷ் கார்த்திக்கும் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றனர். இந்திய அணி 34 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 167 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஜடேஜா 48 ரன்களுடன் களத்தில் இருந்தார்.
ஏற்கனவே முதல் 4 ஆட்டங்களிலும் வெற்றி பெற்ற இந்திய அணி, கடைசி ஆட்டத்திலும் வென்றதன் மூலம், இந்த ஒரு நாள் தொடரை 5–0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் வெளிநாட்டு மண்ணில் 5 போட்டி கொண்ட ஒரு நாள் தொடரை இந்திய அணி முழுமையாக வென்று வரலாறு படைத்தது முதல் முறையாகும். அமித் மிஸ்ரா ஆட்டநாயகன் விருதை பெற்றார்.