Published:Updated:

நான் கண்ட கேப்டன்களில் தோனியே சிறந்தவர்: சச்சின்

ஏப்.4,2011

நான் கண்ட கேப்டன்களில் தோனியே சிறந்தவர்: சச்சின்

தனது 21 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கையில், தாம் இடம்பெற்ற அணியை வழிநடத்தியவர்களில், மகேந்திர சிங் தோனியே சிறந்த கேப்டன் என்று இந்திய நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் கருத்து தெரிவித்துள்ளார். ##~~##

மும்பையில் சனிக்கிழமை நடந்த இலங்கைக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்று இந்தியா கோப்பையைக் கைப்பற்றியதும், தனது கனவு மெய்ப்பட்டது என்றார் சச்சின் டெண்டுல்கர்.

இந்நிலையில் அவர் இன்று அளித்துள்ள பேட்டி ஒன்றில், தாம் இதுவரை விளையாடிய கிரிக்கெட் ஆட்டங்களில் தலைமேற்றவர்களில் தோனியே சிறந்த கேப்டன் என்று கூறியுள்ளார்.

துல்லியமான பார்வையும், எப்போதும் உஷார் நிலையும் கொண்ட தோனி, சூழலைப் புரிந்துகொண்டு, யோசனைகளை பகிர்ந்துகொள்ளும் பண்பு மிக்கவர் என்றும், பவுலர்கள் - பேட்ஸ்மேன்கள் - சீனியர்கள் என எவ்வித பாகுபாடுமின்றி கருத்துகளை கேட்பவர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எந்தச் சூழலிலும் தனது இறுக்கத்தை வெளிக்காட்டாமல், அமைதியாக தோன்றுவது தோனியின் மற்றுமொரு சிறப்பு என்று கூறியுள்ள சச்சின், அவரிடம் உள்ள நற்பண்புகள் தான், அவரை சிறந்த கேப்டனாக உருவாக்கியது என்று தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து கேரி கிஸ்டன் விலகுவது குறித்து கவலை தெரிவித்த சச்சின், அர்ப்பணிப்புடன் இந்திய அணிக்காக உழைத்த கேரி, தனது பணியை தொடர வேண்டும் என்பது தனது தனிப்பட்ட விருப்பம் என்றார்.

எனினும், குடும்பப் பொறுப்புகளால் கேரி கிஸ்டனுக்கு உள்ள நிர்பந்தங்களையும் தன்னால் புரிந்துகொள்ள முடிகிறது என்றார் சச்சின்.