Published:Updated:

பரிசு-பாராட்டு மழையில் இந்திய கிரிக்கெட் அணி!

புதுடெல்லி, ஏப்.4,2011

உலக கோப்பையை வென்று வரலாற்று சாதனை படைத்த இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு பரிசுகள் குவிகின்றன. ##~~##

மத்திய, மாநில அரசுகள் போட்டி போட்டு கொண்டு தோனி தலைமையிலான வீரர்களுக்கு பரிசுகளை அறிவித்து வருகின்றன.

* உலக கோப்பையை இந்திய அணி வென்றவுடன், இந்திய கிரிக்கெட் வாரியம் பரிசுத் தொகையை அறிவித்தது. அணி வீரர்களுக்கு தலா ரூ.1 கோடியும், பயிற்சியாளர் உள்ளிட்ட அணியின் உதவியாளர்களுக்கு ரூ.50 லட்சமும், தேர்வாளர்களுக்கு ரூ.25 லட்சமும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

* கோப்பயை வென்றால், இந்திய அணி வீரர்கள் அனைவருக்கும் புதிய ரக கார் பரிசாக வழங்கப்படும் என்று ஹூண்டாய் கார் நிறுவனம் முன்கூட்டியே அறிவித்தது.

* உலக கோப்பையை வென்ற இந்திய அணியை கெளரவிக்கும் விதமாக பெங்களூர் வளர்ச்சி குழுமம் சார்பில், வீரர்கள் அனைவருக்கும் 4 ஆயிரம் சதுர அடி பரப்பில் தலா ஒரு வீட்டு மனை வழங்கப்படும் என்றும், அனைத்து வீரர்களையும் பெங்களூருக்கு அனைத்து பாராட்டு விழா நடத்தப்படும் என்றும் கர்நாடக மாநில முதல்வர் எடியூரப்பா அறிவித்துள்ளார்.

* பெங்களூரில் உள்ள ஒரு சாலைக்கு கேப்டன் மகேந்திர சிங் தோனியின் பெயர் சூட்டப்படும் என்று பெங்களூர் மேயர் எஸ்.கே.நடராஜ் கூறி உள்ளார்.

* டெல்லி மாநில முதல்வர் ஷீலா தீட்சித், இந்திய அணியின் கேப்டன் தோனிக்கு ரூ.2 கோடியும், அணியில் இடம் பிடித்த டெல்லியை சேர்ந்த வீரர்களான சேவாக், கவுதம் கம்பீர், விராட் கோஹ்லி, நெஹரா ஆகியோருக்கு தலா ரூ.1 கோடியும் ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

* இந்திய அணி கேப்டன் தோனி மற்றும் நட்சத்திர ஆட்டக்காரர் டெண்டுல்கர் ஆகியோருக்கு மலை வாசஸ்தலமான உத்தரகாண்ட் மாநிலம் முசோரியில் வீட்டு மனை அல்லது வீடு வழங்கப்படும் என்று அந்த மாநில முதல்வர் நிஷாங் அறிவித்து இருக்கிறார். உத்தரகாண்டில் கட்டப்படும் ஸ்டேடியத்துக்கு தோனி பெயர் சூட்டப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

* தனது சொந்த மாநிலமான ஜார்கண்ட்டில் கிரிக்கெட் அகாடமி அமைக்க வேண்டும் என்பது தோனியின் நீண்டகால கனவு. அதனை நிறைவேற்றும் வகையில், தோனி கிரிக்கெட் அகாடமி தொடங்க நிலம் வழங்கப்படும் என்று ஜார்கண்ட் துணை முதல்வர் சுதேஷ் மகதோ அறிவித்தார்.

தோனியுடன் கலந்து ஆலோசித்து எந்த இடத்தில் எவ்வளவு நிலம் வழங்குவது என்பது பற்றி தீர்மானிக்கப்படும் என்றும் அவர் கூறினார். ஜார்கண்ட் அரசின் சார்பில் டோனிக்கு பாராட்டு விழா நடத்தப்படும் என்றும் அப்போது அவர் தெரிவித்தார்.

* உலக கோப்பையை வென்ற கேப்டன் தோனியை கவுரவிக்கும் வகையில், அவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்படும் என்று ஜார்கண்ட் மாநில மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் பைஜ்நாத் ராம் கூறினார்.

* மராட்டிய மாநிலத்தை சேர்ந்த டெண்டுல்கர், ஜாகீர்கான் ஆகியோருக்கு தலா ரூ.1 கோடி பரிசாக வழங்கப்படும் என்று அந்த மாநில முதல்வர் பிரிதிவிராஜ் சவான் அறிவித்துள்ளார்.

* இந்திய கிரிக்கெட் அணியின் ஷேவாக், வேகப்பந்து வீச்சாளர் நெஹரா ஆகியோருக்கு கவுரவம் அளிக்கப்படும் என்று அரியானா மாநில முதல்வர் பூபிந்தர்சிங் ஹூடா தெரிவித்து இருக்கிறார்.

* உலக கோப்பை போட்டியில் தொடர்நாயகன் விருது பெற்ற யுவராஜ்சிங்குக்கு ஜெர்மனியை சேர்ந்த சொகுசு கார் கம்பெனியின் தயாரிப்பான 'ஆடி' ரக நவீன கார் வழங்கப்படும் என்றும், காருக்கான சாவியை இந்திய அணி முன்னாள் கேப்டன் ரவிசாஸ்திரி, யுவராஜ்சிங்கிடம் வழங்குவார் என்றும் அந்த நிறுவனத்தின் விற்பனை பிரிவு தலைவர் மும்பையில் தெரிவித்தார்.

* பஞ்சாபை சேர்ந்த யுவராஜ்சிங், சுழற்பந்து பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங் ஆகியோருக்கு தலா ரூ.1 கோடி ஊக்கத் தொகை வழங்கப்படும் என்று பஞ்சாப் மாநில துணை முதல்வர் சுக்பிர்சிங் பாதல் அறிவித்து உள்ளார். அரசு சார்பில் விழா நடத்தி இந்திய அணி வீரர்கள் கவுரவிக்கப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.

* குஜராத் அரசின் சார்பில் விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் உயர்ந்த விருதான 'ஏகலைவா' விருது அந்த மாநிலத்தை சேர்ந்த யூசுப் பதான், முனாப் பட்டேல் ஆகியோருக்கு வழங்கப்படும் என்று அந்த மாநில அரசு அறிவித்து உள்ளது. இந்த விருது ரூ.1 லட்சமும், பாராட்டு பத்திரமும் கொண்டது ஆகும்.

* உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த சுரேஷ் ரெய்னா, பியுஷ் சாவ்லா ஆகியோருக்கு கன்சிராம் சர்வதேச விளையாட்டு விருது வழங்கப்படும் என்று அந்த மாநில முதல்வர் மாயாவதி அறிவித்து உள்ளார். விருது பெறும் அவர்களுக்கு ரொக்கப்பரிசும் கிடைக்கும்.

* ஷேவாக், நெஹரா ஆகியோருக்கு சிறந்த விளையாட்டு வீரருக்கான விருதுகள் வழங்கப்படும் என்று அரியானா மாநில அரசு அறிவித்து உள்ளது.

* உலக கோப்பையை வென்ற இந்திய அணி வீரர்களுக்கு ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி, ரயில் பயணத்தில் சலுகை அறிவித்து உள்ளார். வீரர்கள் துணை ஒருவருடன் தங்கள் வாழ்நாள் முழுவதும் முதல் வகுப்பு குளிர்சாதன பெட்டியில் கட்டணம் எதுவுமின்றி எங்கு வேண்டுமானாலும், எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் பயணம் செய்யலாம் என்று அவர் அறிவித்து இருக்கிறார்.