Published:Updated:

கோலி, பட்லர், வார்னர்... உலகக் கோப்பையில் கலக்கப்போகும் 10 பேட்ஸ்மேன்கள்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
கோலி, பட்லர், வார்னர்... உலகக் கோப்பையில் கலக்கப்போகும் 10 பேட்ஸ்மேன்கள்
கோலி, பட்லர், வார்னர்... உலகக் கோப்பையில் கலக்கப்போகும் 10 பேட்ஸ்மேன்கள்

ஐசிசி போட்டிகளுக்கென்றே அளவெடுத்துச் செய்யப்பட்டவர் தவான். மற்ற நேரங்களில் சொதப்பலான ஆட்டங்களை ஆடக்கூடியவராக இருந்தாலும், ஐசிசி போட்டிகள் என்றால் இந்த `சின்ராசை கையில் பிடிக்க முடியாது’. மேலும், இங்கிலாந்து பிட்சை நன்கு அறிந்தவர்.

நாளை தொடங்கவிருக்கும் ஐசிசி உலகக் கோப்பை தொடரில் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கவிருக்கும் தலைசிறந்த பத்து பேட்ஸ்மேன்கள் இதோ...

கோலி, பட்லர், வார்னர்... உலகக் கோப்பையில் கலக்கப்போகும் 10 பேட்ஸ்மேன்கள்

கோலி (இந்தியா) : 

இந்தத் தலைமுறையின் மிகச் சிறந்த பேட்ஸ்மேன். ஒப்பீடுகளில் கூட இவருக்கு இணையானவர் யாருமில்லை. கடந்த ஐந்தாண்டுகளில் இவரின் கன்சிஸ்டன்சி மெச்சத்தக்கது. சச்சின், கங்குலி, அசாரூதின் ஆகியோரின் கலவையாக இருக்கிறது கோலியின் பேட்டிங் ஸ்டைல். இந்திய அணியும் வேறு கோலியை அதிகம் நம்பியிருக்கிறது. 25 ஓவர்களுக்கு மேல் கோலி களத்தில் நின்றுவிட்டால் அணியின் வெற்றி உறுதி. சாதாரண போட்டிகளிலேயே மெர்சல் காட்டும் அவர், ஐசிசி போட்டிகளில் சும்மா இருக்க மாட்டார். நிச்சயம் இந்தியாவை வேற லெவலுக்கு எடுத்துச் செல்வார். ஆனால், நாக் அவுட் சுற்றுகளில் கோலி அவசரப்பட்டு அவுட்டாகி அணியை இக்கட்டான நிலைக்குத் தள்ளக்கூடாது. 2017 சாம்பியன்ஸ் டிராபி ஃபைனலிலும், 2015 உலகக் கோப்பை அரையிறுதியிலும் கோலி செய்த முக்கிய தவறுகள் இவை. இதை மட்டும் திருத்திக்கொண்டு இந்தியாவை வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்லும் பட்சத்தில், பேட்ஸ்மேன் கோலி அதற்கு மேல் நிரூபிக்க வேண்டியது எதுவுமில்லை. 

கோலி, பட்லர், வார்னர்... உலகக் கோப்பையில் கலக்கப்போகும் 10 பேட்ஸ்மேன்கள்

ஷிகர் தவான் (இந்தியா) :

ஐசிசி போட்டிகளுக்கென்றே அளவெடுத்துச் செய்யப்பட்டவர் தவான். மற்ற நேரங்களில் சொதப்பலான ஆட்டங்களை ஆடக்கூடியவராக இருந்தாலும், ஐசிசி போட்டிகள் என்றால் இந்த `சின்ராசை கையில் பிடிக்க முடியாது’. மேலும், இங்கிலாந்து பிட்சை நன்கு அறிந்தவர். ரோகித் ஷர்மா உடன் ஓப்பனிங் இறங்கும் அவர் 10 ஓவர்களுக்கு மேல் நிலைத்தால் போதும் ஸ்கோர் எகிறுவது உறுதி. 2015 உலகக் கோப்பையில் இந்தியாவின் அதிகபட்ச ரன் ஸ்கோரர், 2013 மற்றும் 2017 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியின் தொடர் நாயகன் என தவானின் ஐசிசி ஹிஸ்டரி ஏகப்பட்ட சாதனைப் பக்கங்களைக் கொண்டது. தவான் இந்த உலகக் கோப்பையில் கோலிக்கே டஃப் கொடுக்கவும் வாய்ப்புள்ளது.

கோலி, பட்லர், வார்னர்... உலகக் கோப்பையில் கலக்கப்போகும் 10 பேட்ஸ்மேன்கள்

டு ப்ளெஸ்ஸி (தென்னாப்பிரிக்கா) : 

டி வில்லியர்ஸ் இல்லாத குறையை போக்கிக் கொண்டிருப்பவர். ஹஷிம் ஆம்லா போன்ற சீனியர் ப்ளேயர்கள் முன்பு போல் அல்லாமல் மோசமாக ஆடிக் கொண்டிருக்க, அணியினர் அத்தனை பேருக்கும் சேர்த்து வைத்தாற் போல் டுப்ளெஸ்ஸி ஒற்றை ஆளாகப் போராடிக் கொண்டிருக்கிறார். 2017 இறுதியிலிருந்து நிலையான ஆட்டம். 2017–ல் இருந்து தற்போது வரை அவர் 1,745 ரன்கள் எடுத்துள்ளார். இந்த மூன்று ஆண்டுகளில் அவரின் சராசரி 62.00க்கும் மேல். அணியின் கேப்டன் என்பதால் கூடுதல் பொறுப்பு, கூடுதல் அதிரடி. இந்த உலகக் கோப்பையின் ஒவ்வொரு போட்டியிலும் அவர் 'கேப்டன்ஸ் நாக்' ஆடுவார் என எதிர்பார்க்கலாம். கேப்டனாகப் பொறுப்பேற்ற பின் ஆடப் போகும் முதல் பெரிய தொடர் என்பதால் இதை வெல்வதற்கு நிச்சயம் அவர் மெனக்கெடுவார்.

கோலி, பட்லர், வார்னர்... உலகக் கோப்பையில் கலக்கப்போகும் 10 பேட்ஸ்மேன்கள்

கிறிஸ் கெயில் (வெஸ்ட் இண்டீஸ்) : 

ஒரு சகாப்தத்தின் சிறந்த பேட்ஸ்மேன். ப்ரையன் லாராவிற்குப் பின் கிரிக்கெட் ரசிகர்களை கரீபியன் தேசத்தை நோக்கித் திரும்பிப் பார்க்க வைப்பவர். வயது நாற்பதை நெருங்கிக் கொண்டிருக்கிறது. ஆனாலும் அதிரடிக்குப் பஞ்சமில்லை. சில நேரங்களில் டெஸ்ட் இன்னிங்ஸ் ஆடுவார். பல நேரங்களில் டி20 இன்னிங்ஸ் ஆடுவார். ஆனால், ஒருநாள் போட்டிகளில் ஒருநாள் இன்னிங்ஸ் ஆடியது ரொம்பக் குறைவே. கடந்த 2017, 2018ம் ஆண்டுகளில் 35–க்கும் குறைவான சராசரி. ஆனால், 2019 தொடக்கத்தில் இழந்த ஃபார்மை மீட்டெடுத்தார். ஐந்து போட்டிகளில் 106.00 ரன்கள் சராசரி. இதைவிட உலகக் கோப்பைக்கு வேறு எப்படித் தயாராக வேண்டும்?

இங்கிலாந்து ஆடுகளங்களோ பேட்டிங்குக்குச் சாதகமானவை. அத்தகைய சூழலில் கெயில் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். கடந்த உலகக் கோப்பையில் 215 ரன்களை அடித்தவர் இந்த முறையும் அப்படியொரு இன்னிங்ஸ் ஆட வாய்ப்புள்ளது. இதுதான் அவரது கடைசி உலகக் கோப்பை என்பதால், வானவேடிக்கை நிகழ்த்தி விருந்தளிப்பார் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. 

கோலி, பட்லர், வார்னர்... உலகக் கோப்பையில் கலக்கப்போகும் 10 பேட்ஸ்மேன்கள்

கேன் வில்லியம்சன் (நியூசிலாந்து): 

இந்தத் தலைமுறையின் முக்கிய பேட்ஸ்மேன்களுள் ஒருவர் வில்லியம்சன். டீசன்ட்டாக, ஸ்டைலிஷாக ஆடக் கூடியவர். இவரின் பெரும் பலம் என்பது அவரின் பேட்டிங் யுக்திதான். பல பேட்ஸ்மேன்களின் ஆட்டம் சட்டென்று வேகமெடுக்கும் சமயங்களில் எதிரணியினரால் எளிதில் கணிக்க முடியும். ஆனால், வில்லியம்சனின் ஆட்டம் என்பது நேர்மாறானது. அவர் எப்போது வேகமாக ரன் சேர்ப்பார், எப்போது பொறுமையாக ரன் சேர்க்கிறார் என்பது அவருக்கு மட்டுமே தெரியும். ஆனால், கேப்டன் என்ற நெருக்கடி இல்லாமல் நிதானமாக ஆடி ரன்சேர்ப்பார். 2016–ல் இருந்து மூன்று வருடங்களாக சீரான ஆட்டத்தையே வெளிப்படுத்தி வருகிறார். இவரின் சராசரி 45.00 ரன்களுக்கும் மேல். இவரது ஃபார்மில் எந்தக் கேள்வியும் எழவில்லை. நியூசிலாந்தின் பேட்டிங் அரணாக இருக்கிறார். கேப்டன்ஷிப்போடு சேர்த்து டெக்னிக்கலான பேட்டிங்கும் கைகொடுக்கும் பட்சத்தில், கடந்த முறை தவறிய உலகக் கோப்பை இந்த முறை வசப்படும்.

கோலி, பட்லர், வார்னர்... உலகக் கோப்பையில் கலக்கப்போகும் 10 பேட்ஸ்மேன்கள்

ஜாஸ் பட்லர் (இங்கிலாந்து) : 

இடம், சூழலுக்கேற்ப தன்னை மாற்றிக்கொண்டு, வெற்றி பெற்று தருவதில் கில்லாடி இவர். ஒரு பேட்ஸ்மேனிற்கு மிகப் பெரிய பலம் அவரின் பேட்டிங் ஆர்டர். ஒன் டவுனில் இறங்கி வெளுத்துக் கட்டும் கோலியை ஓப்பனராக இறங்கி ஆடச் சொன்னால் சற்றே தடுமாறுவார். ஆனால், பட்லர் அப்படியில்லை. பேர்ஸ்டோவோடு ஓப்பனராக இறங்க வேண்டுமா? ஆடுவார். ஆறாவது விக்கெட்டுக்கு இறங்கி மேட்ச்சை முடித்துக் கொடுக்க வேண்டுமா? அதையும் செய்வார். பொசிஷன் மட்டுமல்ல ஆட்டத்தின் சூழலுக்கேற்ப ஆடுவதில் அவருக்கு இணை அவரே. 10 ஓவர்களில் 150 ரன்களைக் கூட அசால்ட்டாக சேஸ் செய்வார். 

இங்கிலாந்து பிட்ச்களின் தன்மையை முற்றிலும் அறிந்தவர் என்பதால், அத்தனை போட்டிகளிலும் ரன் வேட்டையை எதிர்பார்க்கலாம். இந்த ஆண்டில் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான போட்டியில் எடுத்த 150 ரன்கள் போதும் அவரின் ஃபார்மை பற்றிச் சொல்ல. இந்த உலகக் கோப்பை தொடரில் அதிக பலத்தில் இருக்கும் இங்கிலாந்து அணிக்கு, ஜாஸ் பட்லர் துருப்புச் சீட்டாக விளங்குவார்.

கோலி, பட்லர், வார்னர்... உலகக் கோப்பையில் கலக்கப்போகும் 10 பேட்ஸ்மேன்கள்

ஜோ ரூட் (இங்கிலாந்து) : 

பேர்ஸ்டோ, பட்லர், ஸ்டோக்ஸ் என அதிரடி பேட்ஸ்மேன்கள் நிறைந்து காணப்படும் இங்கிலாந்து அணியில் ரூட் ஒரு நிதான ஆட்டக்காரர். எவ்வளவு பெரிய இலக்காக இருந்தாலும் சரி மறுமுனையில் ரூட் இருந்தால் போதும் என்கிற அளவுக்கு அணியின் பேட்ஸ்மேன்களுக்கே ரூட்டின் மீது அதீத நம்பிக்கை. மற்றவர்களைப் போல் அடித்து ஆடி விரைவில் அவுட்டாகக் கூடியவர் அல்ல ரூட். நிதானித்து ஆடும் கெட்டிக்காரர். அதேநேரம், மற்றொரு பேட்ஸ்மேன் அடித்து ஆடத் தொடங்கினால் அவரின் அதிரடிக்கு வழிவிட்டு பொறுமை காப்பார்.

மற்ற வீரர்களைப் போல் ஸ்ட்ரைக் ரேட் 120, 130 என்றிருக்காது 90.00 ஸ்ட்ரைக் ரேட்டை வைத்துக் கொண்டு பெரிய இன்னிங்ஸ் ஆடுவார். பொறுமை பெருமைதரும் என்பதுதான் அவரின் வெற்றிச் சூத்திரம். கடந்த ஆண்டு லிமிட்டெட் ஓவர் போட்டிகளுக்கு ரூட் சரிப்பட்டு வர மாட்டார் என நிர்வாகம் கேள்வி எழுப்பியபோது, இந்தியாவுக்கு எதிராக, இரண்டு சதம் அடித்து நிரூபித்தார். ரூட்டைப் பொறுத்தவரை தொடரின் முதலிரண்டு போட்டிகளைப் பொறுத்துத்தான் அவரின் செயல்பாடுகள் அமையும். முதல் போட்டியே அவருக்குச் சாதகமாகும் பட்சத்தில் இங்கிலாந்தை வெற்றிப் பாதையை நோக்கி அழைத்துச் செல்வது நிச்சயம்.

கோலி, பட்லர், வார்னர்... உலகக் கோப்பையில் கலக்கப்போகும் 10 பேட்ஸ்மேன்கள்

பாபர் ஆசம் (பாகிஸ்தான்) : 

முன்பு பாகிஸ்தானின் நம்பிக்கை உமர் குல், அக்தர், வகாப் ரியாஸ் என பவுலிங் லைன் அப்பில் இருந்தது. இப்போது அந்த நம்பிக்கை பேட்டிங் பக்கம் தாவி இருக்கிறது. அந்த பேட்டிங் லைன் அப்பின் ஒற்றை நம்பிக்கையாய் விளங்குபவர் பாபர் ஆசம். புதிதாக வந்திருக்கும் ஃபகர் ஜமான் ஒரு போட்டியில் அடித்தால், மற்ற மூன்று போட்டியில் ஏமாற்றிவிடுகிறார். ஆனால், அசாம் அப்படி அல்ல. ஒவ்வொரு போட்டியிலும் பாகிஸ்தானுக்குக் கை கொடுக்கிறார். இந்தத் தொடரிலும் பாபர் தன் பொறுப்பை உணர்ந்து ஆட வேண்டும். 
ஃபார்மில் இருப்பதும், இங்கிலாந்து பிட்ச்கள் நன்கு பரிச்சயம் என்பதும் அவருக்கு பலம். 2016–ல் தொடங்கி இன்றுவரை அவரின் காலண்டர்கள் சதமில்லாமல் இருந்ததில்லை‌. இவர் கொடுக்கும் தொடக்கம்தான் ஒவ்வொரு‌ போட்டியிலும் பாகிஸ்தானின் தலைவிதியை நிர்ணயிக்கும். 

கோலி, பட்லர், வார்னர்... உலகக் கோப்பையில் கலக்கப்போகும் 10 பேட்ஸ்மேன்கள்

ஷாய் ஹோப் (வெஸ்ட் இண்டீஸ்) : 

இந்தியாவிற்கு எப்படி கோலி முக்கியமோ அதைக் காட்டிலும் வெஸ்ட் இண்டீஸிற்கு முக்கியமானவர் ஷாய் ஹோப். வெஸ்ட் இண்டீஸைப் பொறுத்தவரை காட்டடி பேட்ஸ்மேன்கள் அதிகம். நேர்த்தியான ஆட்டக்காரர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். இந்தக் குறையைப் போக்கி அணியைக் காக்கும் ஆபத்பாந்தவனாக இருக்கிறார் ஹோப். ஓப்பனர்கள் கெயில், கேம்ப்பெல் சீக்கிரம் அவுட்டானால் அணியைக் கரை சேர்க்க வேண்டிய மொத்தப் பொறுப்பும் ஹோப் கையில்தான் இருக்கிறது. 

2016 முதல் இன்றுவரை நிலையான ஃபார்மை வைத்துள்ளார் ஹோப். கடந்த ஆண்டு இந்தியாவுக்கு எதிராக, 123 ரன்கள் அடித்து ஆட்டத்தை டை செய்த இன்னிங்ஸ்தான், அவரது பெஸ்ட் இன்னிங்ஸ். அதேபோல், சிறப்பாக ஆடி எதிரணிக்கு பிரஷர் கொடுத்தால் வெஸ்ட் இண்டீஸ் நினைத்ததை‌விட பல போட்டிகளை வெல்லும். மொத்தத்தில் இந்த ஷாய் ஹோப்தான் உலகக் கோப்பையில் வெஸ்ட் இண்டீஸின் ஒரே 'ஹோப்'.

கோலி, பட்லர், வார்னர்... உலகக் கோப்பையில் கலக்கப்போகும் 10 பேட்ஸ்மேன்கள்

டேவிட் வார்னர் (ஆஸ்திரேலியா) : 

ஏலியன் லெவல் கம் பேக் கொடுத்திருக்கிறார் டேவிட் வார்னர். ஓராண்டுக்கு முன்புவரை ஆஸ்திரேலியாவின் மிகச் சிறந்த ஓப்பனர். ஒரு வருடத் தடை என்றதும் அவரின் கிரிக்கெட் வாழ்க்கைக்குப் பலர் முடிவுரை எழுதினர். தடை முடிந்ததும், ஐபிஎல் தொடரில் கலக்கி, அட்டகாச கம்பேக் கொடுத்திருக்கிறார். ஃபார்ம் அவுட்டின் அர்த்தம் தெரியாதவர் வார்னர். இந்த கம்பேக்கின் மூலமாக தன் ஃபார்மை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்திக் கொண்டார். இதே ஆக்ரோஷ ஆட்டம் உலகக் கோப்பையிலும் வெளிப்படும் பட்சத்தில் மற்ற அணிகளுக்கு வார்னர் கொடுப்பது ஒரு பெரிய வார்னிங்.

Vikatan
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு