கிரிக்கெட், விளையாட்டாக இருக்கவேண்டியது. ஆனால், இல்லை. அதுவும் அடிமையாக, இந்த விளையாட்டைக் கற்று, இன்று ரகசிய சக்கரவர்த்தியாக அதை ஆண்டுகொண்டிருக்கும் இந்தியாவில், நிச்சயம் அது விளையாட்டு மட்டுமில்லை. சிலருக்குப் பொழுதுபோக்கு, சிலருக்கு அரசியல். சிலருக்கு மதம், சிலருக்குத் தவம். இந்தக் களத்தில் கிடைக்கும் வெற்றியும் தோல்வியும், பலகோடி மக்களின் அடுத்த தினத்தைத் தீர்மானிக்கிறது. பல லட்சம் இளைஞர்களின் எதிர்காலத்தில் மாற்றம் விளைவிக்கிறது. கொண்டாட்டம், பொழுதுபோக்கு என்ற அனைத்தையும் தாண்டி, கிரிக்கெட்டில் வெற்றி பிரதானப்படுகிறது.
இன்னும் இரண்டு மாத காலத்தில், மொத்த தேசமும் ஒற்றைக் களத்தின்முன் வெற்றியை எதிர்பார்த்து அமர்ந்துவிடும். இந்தியா உலகக் கோப்பையை ஏந்த வேண்டும் என்பதுதான் அனைவரின் கனவாகவும் இருக்கும். லார்ட்ஸ் பால்கனியில் கபில்தேவ் புருடன்ஷியல் கோப்பை ஏந்தி நின்ற புகைப்படத்தைப்போல், அதே மைதானத்தில் கோலியின் கையில் உலகக் கோப்பை இருக்கும் படத்தைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் இருக்கிறது. இது நிறைவேற நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. ஆனால், அந்த வெற்றியின் சுவையை முழுதாய் உணர்ந்திட முடியுமா? இரண்டு மாதங்கள் முன்புவரை இந்தக் கேள்வி எல்லோருக்கும் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியிருந்தது.

வெற்றியின் மதிப்பு, அது யாருக்கு எதிராகக் கிடைக்கிறது என்பதில்தான். பலவீனமான ஒருவனை வீழ்த்தி, அவனது அழுகுரலுக்கு இடையே எழும் கொண்டாட்டங்கள், வெற்றிபெற்றவனின் செவிகளையே எட்டுவதில்லை. ஆனால், மாபெரும் அரியணையில் வீற்றிருக்கும் பெரும்பலம்கொண்ட எதிரியை வீழ்த்தி, வீழ்ந்துகொண்டிருக்கும் அவன் கர்வத்தின் முன்னே, வெற்றிபெற்றவன் விடும் அந்தப் பெருமூச்சு காற்றில் கலந்து, உலகெங்கும் அவன் பெயரை எழுதிச்செல்லும். வெற்றிக் களிப்பில் கைகள் நீட்டி, திமிர் வழியும் கண்களில் வான்பார்த்து, அவன் விடும் அந்த அறைகூவல், இருபெரும் மேகங்கள் ஒன்றுகூடி எழுப்பும் மாபெரும் இடி முழக்கத்துக்கும் சவால்விடும். பலம்வாய்ந்த எதிரிக்கு எதிரான வெற்றி கொடுக்கும் போதைக்கு ஈடு இணை எதுவும் இல்லை!
இங்கிலாந்தில் பெறும் இந்தியாவின் வெற்றி, இப்படி ஈடு இணையில்லாத ஒன்றாக இருக்க வேண்டும். இது ஒன்றும் ஆசிய கோப்பை இல்லை, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், ஹாங் காங் போன்ற அணிகளை வீழ்த்தி சந்தோஷப்பட. உலகக் கோப்பை. அந்த வெற்றி கேள்விகளுக்கு அப்பாற்பட்டு, சந்தேகங்களுக்கு அப்பாற்பட்டு இருக்க வேண்டும். அதிலும் முக்கியமாக, அதிர்ஷ்டத்துக்கு அப்பாற்பட்டு இருக்க வேண்டும். 1983-ல், கிளைவ் லாயிட் அணியை இருமுறை வீழ்த்தி கோப்பையைப் பெற்றதால்தான், இந்தியாவின் வெற்றி எல்லோராலும் மதிக்கப்பட்டது. அப்படியொரு வெற்றிதான் கோலி அண்டு கோவுக்கும் தேவை. குறைந்தபட்சம் லீக் சுற்றிலாவது நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி கோப்பையை வென்றால்தான், அந்த வெற்றி அர்த்தமுள்ளதாக இருக்கும்.

இரண்டு மாதம் முன்புவரை இதுதான் பெரும் உறுத்தலாக இருந்தது. பலமான எதிரியை வீழ்த்தினால்தானே, அந்த வெற்றியில் களிப்படையமுடியும். அடையாளத்தைத் தொலைத்து, தலைவன் இல்லாமல் தடுமாறும் அணியை வீழ்த்துவதில் எப்படி திருப்திப்பட முடியும்? மகத்தான போர் வீரர்கள், நிராயுதபாணியாய் இருக்கும் எவருடனும் சண்டையிடவே விரும்ப மாட்டார்கள். தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான், இந்தியா என ஒவ்வொரு அணியுடன் ஒவ்வொரு ஃபார்மேட்டிலும், உள்ளூர்-வெளியூர் என ஒவ்வோர் இடத்திலும் தோற்றுக்கொண்டிருந்த ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி, உலகக் கோப்பையை வெல்வது அப்படியான சுவையற்ற வெற்றியாகத்தான் இருந்திருக்கும்.
இத்தனை ஆண்டுகாலம் ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்லவில்லை என்பதால், இந்த ஆண்டு பெற்ற வெற்றி மகிழ்ச்சியளித்தது. அதற்கு ஒரே காரணம், அது ஆஸ்திரேலியாவில் நடந்தது என்பதுதான். இந்த உலகக் கோப்பை ஆஸ்திரேலியாவில் நடக்கவில்லை. அதைவிட, இது டெஸ்ட் போட்டி இல்லை. ஒருநாள் ஆட்டம். இங்கு ஊரும், களமும் பெரிய வித்தியாசம் ஏற்படுத்திவிடாது. அப்படியிருக்கையில் அந்தப் புதிய அணியை வீழ்த்தியிருந்தால், அது அவ்வளவு பெரிய விஷயமாக இருந்திருக்காது. பலமான ஆஸ்திரேலியாவை, பழைய ஆஸ்திரேலியாவை வீழ்த்துவதுதான் விஷயம்.

ஆஸ்திரேலியர்களை எந்தக் காரணத்துக்காக வேண்டுமானாலும் எல்லோரும் வெறுக்கலாம். ஆனால், அவர்கள் இல்லாத கிரிக்கெட்டை யாராலும் முழுமையாகக் கொண்டாடிட முடியாது. இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் போன்ற அணிகளும் கத்துக்குட்டிகளாக மாறிக்கொண்டிருக்கும் இந்தச் சூழ்நிலையில், 'ஒரு'சில அணிகள் கிரிக்கெட்டின் மொத்த கட்டுப்பாட்டையும் கையில் எடுத்துள்ள நிலையில், கம்பேக் என்ற வார்த்தையின் அர்த்தமாய், எந்த அணிக்கும் பலமான போட்டியாய், உலகக் கோப்பையின் ஆஸ்தான அணியாய், ஒவ்வொருவரும் வெற்றிபெறத் துடிக்கும் அணியாய் இருப்பது ஆஸ்திரேலியா மட்டும்தான். அவர்கள், முழு பலத்தோடு இல்லாவிட்டால், இந்த உலகக் கோப்பையே உயிரற்றுப்போய்விடும்.
"இந்த ஆஸ்திரேலிய அணி அரையிறுதிக்குக்கூட தகுதிபெறாது" என்று சிலவாரங்களுக்கு முன் எல்லோரும் சொன்னபோது, உலகக் கோப்பையின் மிகப்பெரிய அனுபவம் தவறிவிடுமோ என்ற பயம் எல்லோருக்கும் இருந்தது. ஆனால், இந்த ஒருசில மாதங்களில் நிகழ்ந்த மாற்றம், அந்த பயத்தைப் போக்கியிருக்கிறது. இந்தியாவில் தொடர்ந்து மூன்று ஒருநாள் போட்டிகளில் வென்று தொடரைக் கைப்பற்றியபோது துளிர்விட்ட நம்பிக்கை, பாகிஸ்தானை வைட் வாஷ் செய்தபோது முழுமையடைந்துவிட்டது.

இரண்டு மாதங்களுக்கு முன், 'அணியை விட்டு நீக்கப்பட வேண்டும்' என்று சொல்லப்பட்ட ஆரோன் ஃபின்ச், இப்போது தர வரிசையில் டாப் - 10 இடத்துக்குள் நுழைந்துவிட்டார். உஸ்மான் கவாஜா, குட்டி வார்னராக மாறிவிட்டார். ஹேண்ட்ஸ்கோம்ப் - சுழலைச் சிறப்பாக எதிர்கொள்ளும் உலகின் டாப் வீரர்களுள் ஒருவராகிவிட்டார். கிளென் மேக்ஸ்வெல் - மீண்டும் மேக்ஸ்வெல் ஆகிவிட்டார். இவர்கள் போக ஆஷ்டன் டர்னர், அலெக்ஸ் கேரி, மார்கஸ் ஸ்டோய்னிஸ் என மிரட்டலாக மாறியிருக்கிறது பேட்டிங் ஆர்டர். வேகப்பந்துவீச்சு, ஸ்டார்க் இல்லாவிட்டாலும்... யார் இல்லாவிட்டாலும் மிரட்டுவோம் என்கிறது. 'ஒருநாள் போட்டிக்கெல்லாம் தேற மாட்டார்' என்று சொல்லப்பட்ட நாதன் லயான்கூட அற்புதமாகப் பந்து வீசுகிறார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் இவர்கள் ஃபார்முக்குத் திரும்ப, ஃபார்மே இழக்காததுபோல் ஐபிஎல் தொடரில் வேற லெவல் ஆட்டம் காட்டினார், டேவிட் வார்னர். வந்தவுடன் ஆரஞ்ச் கேப்! இவர் ஓராண்டு காலம் பெரிய போட்டிகளில் விளையாடவில்லை என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள். அப்படியொரு தாண்டவம் ஆடினார். ஸ்மித், ராயல்ஸ் அணியின் கேப்டனாக்கப்பட்டதும் தன் கைவரிசையைக் காட்டினார். இப்போது, பயிற்சிப் போட்டிகளில் தொடர்ந்து 3 அரை சதங்கள், இங்கிலாந்து ரசிகர்களின் கொக்கரிப்பைச் சமாளித்து, அட்டகாசமாக ஒரு சதம் என வார்னரை மிஞ்சுகிறார் ஸ்மித். ஒவ்வொரு ஆஸ்திரேலிய வீரருமே, ஆஸ்திரேலிய வீரர்களுக்கான குணத்தைப் பெற்றுவிட்டார்கள். ஆம், ஆஸ்திரேலியா இஸ் பேக்!

இந்த ஆஸ்திரேலியாவை வீழ்த்துவதுதான் சவால். அந்தச் சவாலை வெல்வதுதான் மகத்தான வெற்றி. இந்த கம்பேக், ஆஸ்திரேலியர்களின் ஈகோவை மீட்டெடுக்கும். களையிழந்த அந்த வீரர்களின் முகத்தில், ஆஸ்திரேலியர்களுக்கே உரித்தான திமிரை ஒட்டவைக்கும். அதைக் கிழிக்கும்போதுதான், இந்தியாவின் பலமும் அந்த வெற்றியின் மதிப்பும் நமக்கு முழுமையாகக் கிடைக்கும். இந்த கம்பேக், 'இந்த ஆஸ்திரேலிய அணி, ஒரு *** வெல்லாது' என்று சொன்ன முன்னாள் வீரர்களை, 'ஆஸ்திரேலியா உலகக் கோப்பையைத் தக்கவைக்கும்' என்று ஆரூடம் சொல்லவைக்கும். அதைப் பொய்யாக்குவதுதான் அந்த வெற்றி தரும் சந்தோஷம்.
எந்த அணிக்குமே ஆஸ்திரேலியாவை வீழ்த்தி கோப்பையை வெல்வதுதான் மிகப்பெரிய வெற்றி. சாம்பியனே ஆனாலும் ஆஸ்திரேலியாவை ஒருமுறையாவது வென்றால்தான், அந்த வெற்றி முழுமையடையும். அப்படியான வெற்றியைத்தான் எந்த அணியும் எதிர்பார்க்கும். இந்தியாவுக்கும் அப்படியொரு வெற்றி கிடைக்க வேண்டும் என்பதுதான் என் ஆசை. வேட்டையாடுவதற்கு வேங்கை காத்திருக்கும்போது, எதிரில் மதம்கொண்ட யானை இருந்தால்தானே அந்தக் காட்டுக்கு மரியாதை!