இங்கிலாந்தில் நடந்த 1999 உலகக் கோப்பையின் சில சுவாரஸ்ய நினைவுகள் இங்கே...
சச்சின்... சச்சின்..! சச்சின்... சச்சின்..!
கிரிக்கெட் பார்த்தவர்களையெல்லாம் அடிமையாக்கி வைத்திருந்த சச்சின், கிரிக்கெட் பார்க்காதவர்களைக்கூட கவர்ந்தது இந்த உலகக் கோப்பையின்போதுதான்! முதல் போட்டியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராகத் தோற்றது இந்தியா. இரண்டாவது ஆட்டம் ஜிம்பாப்வேக்கு எதிராக. ஆட்டத்துக்கு முந்தைய நாள், தன் தந்தையின் மரணச் செய்தியைக் கேட்கிறார் சச்சின். உடனடியாக இந்தியா திரும்புகிறார். அவர் இல்லாத இந்திய அணி, ஜிம்பாப்வே அணியிடம் வீழ்கிறது.
அடுத்த மூன்று போட்டிகளில் ஒன்றில் தோற்றாலும் வெளியேறவேண்டிய நிலை. அடுத்த போட்டி கென்யாவோடு. கத்துக்குட்டி என நினைத்துவிட முடியாது. ஏனெனில், இந்தியா அதற்கு முன் ஜிம்பாப்வேவிடம் தோற்றிருக்கிறது. முந்தைய உலகக் கோப்பையில், கென்யா அணி வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தியிருக்கிறது. எனவே, எதுவும் நடக்கலாம். இந்திய அணி இவ்வளவு இக்கட்டான சூழலில் இருக்க, போட்டிக்கு முந்தைய இரவு இங்கிலாந்து திரும்புகிறார் சச்சின்.
அடுத்த நாள் போட்டியில் பங்கேற்கிறார். 4-வது வீரராகக் களமிறங்கி, தன் டிரேட் மார்க் ஆட்டத்தைக் காட்டுகிறார். அனைவரும் வியப்பில் இருக்கும்போதே சதமடிக்கிறார். அப்போது, அண்ணாந்து வானத்தைப் பார்த்து, தன் தந்தைக்கு அதை அவர் சமர்ப்பித்தபோது, மொத்த அரங்கமும் எழுந்து நின்று அவருக்கு மரியாதை செலுத்தியது. அந்த அரங்கம் மட்டுமல்ல, மொத்த இந்தியாவுமே அந்த மனிதன் மீது காதலில் விழுந்தது! சச்சின் என்ற கிரிக்கெட் வீரன், இந்தியாவின் சொத்தாக மாறிய தருணம் அதுவாகத்தான் இருக்கும்!
உலகக் கோப்பையின் மிகச் சிறந்த மேட்ச்!
1999 உலகக் கோப்பை என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது இந்தப் போட்டியாகத்தான் இருக்கும். அப்படியொரு போட்டியை, அப்படியொரு முடிவை யாருமே எதிர்பார்த்திருக்கமாட்டார்கள். உலகக் கோப்பையின் அரையிறுதி 'டை' ஆனது. தென்னாப்பிரிக்காவின் உலகக் கோப்பைக் கனவுக்கு அது முட்டுக்கட்டை போட்டது.

எட்பாஸ்டன் நகரில் நடந்த அரையிறுதியில், முதலில் பேட்டிங் செய்து 213 ரன்கள் எடுத்தது ஆஸ்திரேலியா. சேஸிங்கை நன்றாகவே தொடங்கிய தென்னாப்பிரிக்க அணி, மிடில் ஓவர்களில் வார்னே வீசிய அற்புத ஸ்பெல்லில் ஆட்டம் கண்டது. ஒருகட்டத்தில், தென்னாப்பிரிக்கா அவ்வளவுதான் என்று எல்லோரும் நினைக்க, வெறியாட்டம் ஆடினார் லான்ஸ் குளூஸ்னர். ஃபினிஷர் என்ற வார்த்தைக்கு அடையாளம் கொடுத்துக்கொண்டிருந்தார். இவர் ஒருபக்கம் ஆட்டம் காட்டினாலும், மற்ற வீரர்கள் நடையைக்கட்டிக்கொண்டிருந்தனர்.
என்ன ஆனாலும் பரவாயில்லை என்று ஒற்றை ஆளாக வெளுத்துக்கட்டினார் குளூஸ்னர். 8 பந்துகளுக்கு 16 ரன்கள் தேவை என்றிருக்கையில், நான்கே பந்துகளில் 15 ரன்கள் அடித்து அசத்தினார். 4 பந்துகளுக்கு ஒரு ரன். அப்போதெல்லாம் பௌல் அவுட், சூப்பர் ஓவர் விதிகள் இல்லை. போட்டி டை ஆனால், புள்ளிகள் பகிர்ந்து கொடுக்கப்படும். நாக் அவுட் போட்டி என்றால், அந்த அணிகளின் அதற்கு முந்தைய ரெக்கார்டு கணக்கில் கொள்ளப்படும். அதன்படி பார்த்தால், ஆட்டம் டையானால் அது ஆஸ்திரேலியாவுக்கே சாதகமாக அமையும். ஏனெனில், சூப்பர் 6 சுற்றில் ஆஸ்திரேலியாவிடம் தோற்றிருந்தது தென்னாப்பிரிக்கா. அதனால், தென்னாப்பிரிக்காவுக்கு வெற்றி அவசியப்பட்டது.
கடைசி ஓவரின் நான்காவது பந்தை வீசினார் டேமியன் பிளெமிங். டாட் பால். சொல்லப்போனால், நூலிழையில் ரன் அவுட் வாய்ப்பில் இருந்து தப்பினார் ஆலன் டொனால்டு. அடுத்த பந்தை, பேட்டில் தொட்டதும் ஓடத்தொடங்கினார் குளூஸ்னர். ஆனால், பந்து பௌலரைக் கடந்து கொஞ்ச தூரம்தான் போனது. மிட் ஆஃப் ஃபீல்டர் பந்தைப் பிடிக்கப் போனதால், அதை வேடிக்கை பார்த்துக்கொண்டு அப்படியே நின்றிருந்தார் டொனால்டு. மிட் ஆஃபில் நின்ற மார்க் வாஹ், பந்தைப் பிடித்து வீச, அதைப் பிடித்தார் பிட்ச்சின் நடுவே இருந்த பிளெமிங். அப்போது குளூஸ்னர், பௌலிங் கிரீஸைத் தாண்டியிருந்தார். ஆனால், அப்போதுதான் அங்கிருந்து டேக் ஆஃப் ஆனார் டொனால்டு. பந்தை கில்கிறிஸ்டிடம் பிளெமிங் கொடுக்க, அதை அவர் அடிக்க, தென்னாப்பிரிக்காவின் உலகக் கோப்பை வாய்ப்பு இப்படிக் குழப்பத்தால் காலியானது.
கிப்ஸ் விட்ட கேட்சும் கோப்பையும் - பட்டர்ஃப்ளை எஃபெக்ட்!
பொதுவாக, `கேட்சஸ் வின் மேட்சஸ்' என்று சொல்வார்கள். ஒருசில கேட்ச்களைத் தவறவிடுவது, வெற்றியைத் தவறவிடுவது போன்றது. அந்த வகையில், தென்னாப்பிரிக்கா உலகக் கோப்பையிலிருந்து வெளியேறவும், அதன் கனவுகள் நொறுங்கவும் கிப்ஸ் கூட ஒரு காரணம் என்று சொல்லலாம்!

சூப்பர் 6 சுற்றில் தோற்றதனால்தான், அரையிறுதி டை ஆகியும் தென்னாப்பிரிக்கா வெளியேறியது. சூப்பர் 6 போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியிருந்தால் அவர்கள்தான் ஃபைனலுக்குள் நுழைந்திருப்பார்கள். இத்தனைக்கும் அந்தப் போட்டியில் தென்னாப்பிரிக்காதான் வெற்றி பெறும் நிலையில் இருந்தது. கிப்ஸ் - ஒரு கேட்ச்சைக் கோட்டைவிட்டு, மேட்ச்சைக் கோட்டைவிட்டார்.
272 ரன்களை சேஸ் செய்த ஆஸி அணி, 30 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்திருந்தது. 49/3 என இருந்த அணியை, பான்டிங்கோடு சேர்ந்து மீட்டுக்கொண்டிருந்தார் கேப்டன் ஸ்டீவ் வாஹ். 31-வது ஓவரின் முதல் பந்தை, லான்ஸ் குளூஸ்னர் வீச, அதை லெக் சைடு ஃப்ளிக் செய்தார் ஸ்டீவ். ஷார்ட் மிட் விக்கெட்டில் நின்றிருந்த கிப்ஸ் கையிலேயே பந்து விழுந்தது. பந்தைப் பிடித்ததும் அதீத உற்சாகத்தில், அதே வேகத்தில் அதைத் தூக்கியெறிய முயன்றார் கிப்ஸ். ஆனால், கைக்குள் நுழைந்த வேகத்திலேயே, கையிலிருந்து உருண்டோடியது பந்து. கேட்ச் மிஸ்! வாஹ் தப்பித்தார். அந்தப் போட்டியில், ஆட்டமிழக்காமல் 110 பந்துகளில் 120 ரன்கள் எடுத்து அணியை வெற்றிபெற வைத்தவர் அவர்தான்.
கிப்ஸ் அந்தக் கேட்சைப் பிடித்திருந்தால் அவர் வெளியேறிருப்பார். ஆட்டம் தென்னாப்பிரிக்காவுக்குச் சாதகமாக அமைந்திருக்கும். இந்தப் போட்டியின் வெற்றி, அரையிறுதி முடிவுக்குப் பின் அவர்களுக்குச் சாதகமாக மாறியிருக்கும். ஒருவேளை தென்னாப்பிரிக்கா, தங்களின் முதல் உலகக் கோப்பையை வென்றிருக்கலாம். இல்லை, பாகிஸ்தான் கூட இரண்டாவது முறையாக சாம்பியன் ஆகியிருக்கலாம். ஆனால், அதையெல்லாம் மாற்றியது அந்த கேட்ச். ஆஸ்திரேலியாவின் சகாப்தம் தொடங்கியது!
சர்ச்சையோ சர்ச்சை..!
இப்போது இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் பயன்படுத்தப்படும் ட்யூக் பந்து அறிமுகம் செய்யப்பட்டது இந்த உலகக் கோப்பையில்தான். களத்தில் இந்தப் பந்து ரொம்பவே ஸ்விங் ஆக, அப்போது பெரும் சர்ச்சைகளைக் கிளப்பியது. அதுமட்டுமல்லாமல், ஆஸ்திரேலியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய ஆட்டத்தில் பல சந்தேகங்கள் எழுந்தன.
110 ரன்களை சேஸ் செய்த ஆஸ்திரேலிய அணி, வழக்கத்துக்கும் மாறாக மிகவும் மெதுவாக ஆடியது. கில்கிறிஸ்ட் அவுட்டான பிறகு, 56 பந்துகளில் 19 ரன்களே எடுத்தது அந்த அணி. பான்டிங் அவுட்டான பின், அதைவிட மோசம். அடுத்த 127 பந்துகளில் 49 ரன்கள் எடுத்தனர். 111 ரன்கள் அடிக்க, 40.4 ஓவர்கள் எடுத்துக்கொண்டது ஆஸ்திரேலியா. இந்தப் போட்டியில் குறைந்த ரன் ரேட்டுடன் ஆஸ்திரேலிய வென்றால், ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ் இரண்டு அணிகளும் அடுத்த சுற்றுக்குச் தகுதிபெறும்; நியூசிலாந்து வெளியேறும். அந்தத் திட்டத்தோடுதான் ஆஸ்திரேலியா அப்படி விளையாடியது என்று பரவலாகப் பேசப்பட்டது. அதேபோல், முதல் 4 லீக் போட்டிகளிலும் அசத்தல் வெற்றி பெற்ற பாகிஸ்தான், கடைசி லீக் போட்டியில் ஜிம்பாப்வேயிடம் தோற்றது. அப்போதும் சூதாட்டம் பற்றிய கேள்விகள் அதிகமாக எழுந்தன.