வழக்கமாக உலகக் கோப்பை என்றாலே, சிலபல அதிர்ச்சிகரமான முடிவுகள் இருக்கும். ஜிம்பாப்வே, கென்யா, வங்கதேசம் போன்ற அணிகள், பல முன்னணி அணிகளுக்குப் பேரடி கொடுக்கும். இந்த உலகக் கோப்பையில் அஷோசியேட் அணிகள் பெரிதாக இல்லை. வங்கதேசத்தை இனியும் கத்துக்குட்டி என்று சொல்லிவிட முடியாது. இருக்கும் அணிகளில், கத்துக்குட்டி என்று சொல்லப்படக்கூடிய ஒரே அணி ஆப்கானிஸ்தான் மட்டும்தான்.
கேப்டன் : குல்பாதீன் நைப்
பயிற்சியாளர் : ஃபில் சிம்மன்ஸ்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
ஐ.சி.சி ஒருநாள் ரேங்கிங் : 10
உலகக் கோப்பையில் இதுவரை : 2015 - லீக் சுற்று

ஆம், இவர்கள் கத்துக்குட்டிதான். ஆனால், எதிர்பாராத நேரத்தில் எந்த அணிக்கும் கண்கட்டி வித்தை காட்டிவிடும் வல்லமை படைத்த அணி. மற்ற அணிகளைப்போல் 300, 350 ரன்களுக்கெல்லாம் இவர்கள் ஆசைப்படுவதேயில்லை. முதலில் பேட்டிங் செய்து, 250 ரன்கள் எடுத்துவிட்டு, எதிரணியை பௌலிங்கால் திணறடிப்பதுதான் இவர்கள் ஃபார்முலா. முகமது நபி, ரஷீத் கான், முஜீப் உர் ரஹ்மான் சுழல் கூட்டணி அவர்களின் மிகப்பெரிய ஆயுதமாக இருக்கிறது. பவர் ப்ளே, மிடில் ஓவர், டெத் என அனைத்து சூழ்நிலைகளிலும் சுழலே அவர்களுக்குக் கைகொடுத்துக்கொண்டிருக்கிறது.
இங்கிலாந்து ஆடுகளங்களில் சுழல் எந்த அளவுக்கு எடுபடும் என்று தெரியவில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளாக, ஒருநாள் போட்டிகளில் சுழற்பந்துவீச்சாளர்கள் பெரிய தாக்கம் ஏற்படுத்தவில்லை. அதனால், ஆப்கானிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர்கள் அதிகம் உழைக்க வேண்டியிருக்கும். முதல் பவர் ப்ளேவில் தவ்லத் ஜத்ரான், அஃப்தாப் ஆலம் ஆகியோர் ரன் கட்டுப்படுத்த வேண்டும். கேப்டன் குல்பாதீன் நைப், பந்துவீச்சிலும் மிகப்பெரிய பொறுப்பை சுமக்க வேண்டியிருக்கும்.

பந்துவீச்சு பலமாக இருந்தாலும், பேட்டிங் மிகப்பெரிய பிரச்னையாக இருக்கிறது. முகமது செஷாத், ஹஷ்ரதுல்லா சசாய், ரஹ்மத் ஷா மூவருமே திறமையானவர்கள். ஆனால், சீராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தத் தவறுகின்றனர். அவர்களுள் ஒருவர் நிலைத்து நின்று ஆடினால்தான் மிடில் ஆர்டர் கைகொடுக்கிறது. இல்லையேல், அவர்களும் பெட்டி படுக்கையைக் கட்டிவிடுகின்றனர். கிட்டத்தட்ட இந்திய மிடில் ஆர்டர் போலத்தான். அப்படிப்பட்ட பேட்டிங் லைன் அப்பில், முகமது செஷாத்தின் ஆட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். எப்போதும் அதிரடியாகவே ஆடக்கூடிய அவர், குறைந்தபட்சம் 15 ஓவர்களாவது தாக்குப்பிடிக்கவும் வேண்டும். அப்படி அவர் நின்றால், அந்த அணி நல்ல ஸ்கோரை எடுக்க முடியும்.
உலகக் கோப்பைக்கு சில மாதங்கள் முன்பாக கேப்டனை மாற்றியது ஏதேனும் சிக்கலை ஏற்படுத்தலாம். உலகக் கோப்பை போன்ற மிகப்பெரிய தொடரில் அஸ்கர் ஆப்கானின் அனுபவம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்திருக்கும். இந்த மாற்றம் எப்படியான தாக்கத்தை ஏற்படுத்தும் தெரியவில்லை. ஆனால், வீரர்களுக்குள் இது எந்த வகையான பிரச்னைகளையும் ஏற்படுத்தியிருக்காது என்று நம்பலாம். முகமது நபி, அஸ்கர் ஆப்கன் ஆகியோரின் அனுபவத்தை நைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். ஆசியக் கோப்பையில் இந்தியாவுக்கே தண்ணி காட்டியவர்கள், நிச்சயம் இந்தத் தொடரில் சில சபாஷ் வெற்றிகளைப் பதிவு செய்வார்கள்.

கவனிக்க வேண்டியவர்கள்
அஸ்கர் ஆப்கன்
இது கொஞ்சம் விசித்திரமான தேர்வாகவே இருக்கலாம். அதிரடி ஓப்பனர் முகமது செஷாத், இளம் ரஹ்மத் ஷா போன்றவர்களைத்தான் பெரும்பாலானவர்கள் எதிர்பார்ப்பார்கள். ஆனால், இம்முறை அஸ்கர் ஆப்கன் நிரூபிப்பதற்கு நிறையவே இருக்கிறது. உலகக் கோப்பைக்கு இரண்டு மாதங்கள் முன்னால், கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார் அவர். அவரது அனுபவத்துக்கு மரியாதை கொடுத்திருக்க வேண்டும் என்று சக வீரர்களே கொதித்தெழுந்தபோதும், இவர் அமைதியாகவே இருந்தார். தன் திறமையை, அனுபவத்தை, ஆதங்கத்தை இவர் களத்தில் நிச்சயம் காட்டக்கூடும். அதிரடியான டாப் ஆர்டரும் லோயர் மிடில் ஆர்டரும் இருந்தாலும், இவரது நிதானம் அந்த அணிக்கு அவசியம் தேவை. அயர்லாந்து அணிக்கெதிரான தொடரில், தொடர்ந்து 3 அரைசதங்கள் அடித்த அவர், இந்த உலகக் கோப்பையில் தன் முக்கியத்துவத்தை நிரூபிக்க நிச்சயம் போராடுவார்.
ரஷீத் கான்
இங்கிலாந்து ஆடுகளங்கள் சுழலுக்கு சாதகமாக இல்லாமல் போகட்டும், ஆனால், ரஷீத் கான் பந்துவீசுவதைப் பார்ப்பது நிச்சயம் அற்புதமான அனுபவம்தான். ஒரு 20 வயது வீரனைப் பார்த்து உலகின் முன்னணி வீரர்கள் மிரள்வதைப் பார்ப்பதே அலாதி இன்பம். அதுவும் உலகக் கோப்பை என்ற மிகப்பெரிய அரங்கில், இந்த இளம் வீரன், தன் கத்துக்குட்டி அணியை எங்கே அழைத்துச் செல்கிறான் என்பதைக் கூர்ந்து கவனித்தே ஆக வேண்டும். வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, வங்கதேசம் போன்ற அணிகளை ஆப்கானிஸ்தான் வீழ்த்துவதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கிறது. ரஷீத்தின் செயல்பாடுதான் புள்ளிப் பட்டியலில் அந்த அணி எங்கே இருக்கப்போகிறது என்பதை முடிவு செய்யப்போகிறது.

ஆப்கானிஸ்தானின் அட்டவணை
தேதி | நேரம் | போட்டி | மைதானம் |
ஜூன் 1 | மாலை 6 மணி | ஆப்கானிஸ்தான் vs ஆஸ்திரேலியா | கவுன்டி மைதானம், பிரிஸ்டோல் |
ஜூன் 4 | மாலை 3 மணி | ஆப்கானிஸ்தான் vs இலங்கை | சோஃபியா கார்டன்ஸ், கார்டிஃப் |
ஜூன் 8 | மாலை 6 மணி | ஆப்கானிஸ்தான் vs நியூசிலாந்து | தி கூப்பர் அசோசியேட்ஸ் கவுன்டி மைத்சானம், டான்டன் |
ஜூன் 15 | மாலை 6 மணி | தென்னாப்பிரிக்கா - ஆப்கானிஸ்தான் | சோஃபியா கார்டன்ஸ், காார்டிஃப் |
ஜூன் 18 | மாலை 3 மணி | இங்கிலாந்து - ஆப்கானிஸ்தான் | ஓல்டு டிராஃபோர்ட், மான்செஸ்டர் |
ஜூன் 22 | மாலை 3 மணி | இந்தியா - ஆப்கானிஸ்தான் | ரோஸ் பௌல், சௌதாம்ப்டன் |
ஜூன் 24 | மாலை 3 மணி | வங்கதேசம் - ஆப்கானிஸ்தான் | ரோஸ் பௌல், சௌதாம்ப்டன் |
ஜூன் 29 | மாலை 3 மணி | பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் | ஹெடிங்லி, லீட்ஸ் |
ஜூலை 4 | மாலை 3 மணி | ஆப்கானிஸ்தான் - வெஸ்ட் இண்டீஸ் | ஹெடிங்லி, லீட்ஸ் |