Published:Updated:

கபில் டெவில்... இந்திய கிரிக்கெட்டை மாற்றிய அந்த ஒரு இன்னிங்ஸ்! #WorldCupMemories

கபில் டெவில்... இந்திய கிரிக்கெட்டை மாற்றிய அந்த ஒரு இன்னிங்ஸ்! #WorldCupMemories

`அன்று ரசிகர்களில் ஒருவர் வீடியோ கேமராவுடன் வந்து கபில்தேவ் இன்னிங்ஸை மட்டும் ஷூட் செய்திருந்தால்… வேண்டாம்… கபில் தேவின் அந்த இன்னிங்ஸைப் பற்றி இவ்வளவு கதைகள் கிடைத்திருக்காது... கதைகள் கதைகள் மட்டுமே அல்ல.’

Published:Updated:

கபில் டெவில்... இந்திய கிரிக்கெட்டை மாற்றிய அந்த ஒரு இன்னிங்ஸ்! #WorldCupMemories

`அன்று ரசிகர்களில் ஒருவர் வீடியோ கேமராவுடன் வந்து கபில்தேவ் இன்னிங்ஸை மட்டும் ஷூட் செய்திருந்தால்… வேண்டாம்… கபில் தேவின் அந்த இன்னிங்ஸைப் பற்றி இவ்வளவு கதைகள் கிடைத்திருக்காது... கதைகள் கதைகள் மட்டுமே அல்ல.’

கபில் டெவில்... இந்திய கிரிக்கெட்டை மாற்றிய அந்த ஒரு இன்னிங்ஸ்! #WorldCupMemories

``கதை, சொல்லும்போது பெருகக்கூடியது; நினைக்கும்போது திரளக்கூடியது; மறக்க எண்ணும்போது நம்மைக் கண்டு சிரிக்கக்கூடியது. வடிவமற்ற ஒன்றின் அதீத ஆற்றலைக் கதைகளிடம்தான் மனிதன் உணர்கிறான். உரத்துச் சொல்லப்படுவதைவிட, காதோடு காதாகப் பேசும் கதைக்கு வயது அதிகம். அது காட்டுச்செடிபோல ஒருபோதும் நிலம்விட்டு அகலாது.’’

-  வேள்பாரி நாவலில் சு.வெங்கடேசன்.

`அன்னிக்கி ஏஜென்ஸி வீடியோகிராபர்கள் ஸ்ட்ரைக். அதனால நீ எப்படித் தேடுனாலும் அது கிடைக்காது’  - 1983 உலகக் கோப்பையில் ஜிம்பாப்வேக்கு எதிராக கபில் தேவ் 175 ரன்கள் அடித்த வீடியோவை இணையத்தில் தேடிக்கொண்டிருந்தபோது அண்ணன் சொன்ன கதை இது.

`நாங்கள் கிரிக்கெட்டில் ரன்கள் அடிப்பதைப் போல நீங்கள் கோல்கள் அடிக்கிறீர்கள்’ என்று ஹாக்கி லெஜண்ட் தயான்சந்த்தை டான் பிராட்மேன் பாராட்டியதாகக் கேள்விப்பட்டிருக்கிறோம். தயான்சந்த் எப்படி கோல் அடிப்பார், கபில்தேவ் அன்று எப்படி 175 அடித்தார்… இரண்டுக்கும் வீடியோக்கள் இல்லை. நேரில் பார்த்தவர்களைத் தவிர வேறு யாருக்கும் அதன் உன்னதம் தெரியாது. ஆனாலும், காணாத ஒன்றின் காட்சியைக் கதைகளின் வழியே தொடர் ஓட்டத்தில் பேட்டனைக் கடத்துவது போல கடத்திக் கொண்டிருக்கிறோம். சொல்ல வந்த விஷயம் கதை அல்ல, நிஜம்; இந்திய கிரிக்கெட்டைப் புரட்டிப் போட்ட சரித்திரம்!

கபில் டெவில்... இந்திய கிரிக்கெட்டை மாற்றிய அந்த ஒரு இன்னிங்ஸ்! #WorldCupMemories

``அன்று அவர் அப்படி ஒரு இன்னிங்ஸ் ஆடியிருக்காவிட்டால், மற்றுமொரு லோ ஸ்கோரிங் கேமாக இருந்திருக்கும். இந்திய கிரிக்கெட்டின் வரலாறு வேறு மாதிரி இருந்திருக்கும்’’ என்றார் இ.எஸ்.பி.என் ஸ்போர்ட்ஸ் நிருபர் ஷர்தா உக்ரா. எப்படி, 2011 உலகக் கோப்பை என்றதும், கோப்பை ஏந்திய தருணங்களை மட்டுமே நினைத்துப் பார்க்கிறோமோ, அதேபோலத்தான், 1983 உலகக் கோப்பையிலும் ஃபைனல் மட்டும்தான் பெரிதாகப் பேசப்படுகிறது. 1983-ல் ஜிம்பாப்வேக்கு எதிராக கபில் ஆடியதும், 2011-ல் காலிறுதியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக யுவி ஆடியதும், இந்தியா உலகக் கோப்பையை வென்றதற்கான மிகமிக முக்கிய தருணங்கள். 

இந்திய கிரிக்கெட் இன்று முத்துக்குளித்துக் கொண்டிருப்பதற்குக் காரணம், அன்று கபில்தேவ் மூச்சைப் பிடித்துக்கொண்டு போட்ட முங்கு நீச்சல் என்பதை மறுப்பதற்கில்லை. 1975, 1979 ஆகிய இரு உலகக் கோப்பை தொடர்களிலும் இந்தியா ஒரேயொரு வெற்றியை மட்டுமே பெற்றது. அந்த வெற்றி கிழக்கு ஆப்பிரிக்க அணிக்கு எதிராகக் கிடைத்தது. அன்று டெஸ்ட் அந்தஸ்தில் இல்லாத இலங்கையிடம் கூட இந்தியா பரிதாபமாக தோற்றது. ஒருநாள் போட்டிகளை துச்சமாக எண்ணிய டெஸ்ட் ஜாம்பவான்களின் நினைப்புக்குக் கிடைத்த பரிசு இது. இனியும் இவர்களை நம்பினால் வேலைக்காகாது என, 1983 உலகக் கோப்பை தொடங்குவதற்கு நான்கு மாதங்களுக்கு முன், கவாஸ்கரை கேப்டன் பதவியிலிருந்து நீக்கிவிட்டு, 24 வயது இளைஞன் கபிலை, தேர்வுக் குழு கேப்டனாக நியமித்தது.

கபில் டெவில்... இந்திய கிரிக்கெட்டை மாற்றிய அந்த ஒரு இன்னிங்ஸ்! #WorldCupMemories

1983 உலகக் கோப்பை அணியில் இருந்த யாரைக் கேட்டாலும் சொல்வார்கள், கபில் தேவ் மட்டும்தான் ஆரம்பத்திலிருந்தே `நம்மால் உலகக் கோப்பை வெல்ல முடியும்’ எனத் திடமாக நம்பினார் என்று. கபிலின் அதீத நம்பிக்கைக்குக் காரணம் உலகக் கோப்பைக்கு முன்னதாக நடந்த தொடரில் வெஸ்ட் இண்டீஸை இந்தியா வீழ்த்தியிருக்கிறது. 1983 உலகக் கோப்பை லீக் சுற்றிலும் வெஸ்ட் இண்டீஸை இந்தியா வீழ்த்தியிருக்கிறது. ஆனாலும், உலகக் கோப்பை போட்டிகளை கவர் செய்ய இங்கிலாந்து சென்ற இந்திய நிருபர்களே, இந்திய அணியைக் குறைத்து மதிப்பிட்டிருந்தனர். 

`வெஸ்ட் இண்டீஸ் எப்படியும் இந்தியாவைத் தோற்கடித்து விடும். அதைப் பார்ப்பதில் என்ன இருக்கிறது... அதற்கு பதிலாக மார்ட்டின் குரோவ் (நியூஸிலாந்து வீரர்) ஆட்டத்தைப் பார்க்கலாம்’ என்ற நினைப்பில், மான்செஸ்டர் ஓல்ட் டிராஃபோர்டில் நடந்த இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் போட்டிக்குப் பதிலாக, அதேநாளில் (ஜூன் 9) லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்த இங்கிலாந்து – நியூஸிலாந்து மோதிய போட்டியைப் பார்க்கச் சென்றிருந்தோம். மார்ட்டின் குரோவ் எங்களை ஏமாற்றவில்லை. 97 ரன்கள் அடித்தார். ஆனால், இந்தியா 34 ரன்கள் வித்தியாசத்தில் மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்தியது. அதன்பின், இந்தியா விளையாடிய போட்டிகளை மிஸ் செய்யாமல் பார்த்தோம்’ என்றார் அயாஸ் மேனன்.

ஜிம்பாப்வே முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியிருந்ததால், இந்தியா – ஜிம்பாப்வே மேட்ச் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. சிறந்த பெளலிங் அட்டாக்கைப் பெற்றிருந்த ஜிம்பாப்வே, எடுத்த எடுப்பிலேயே வேலையைக் காட்டியது. முதலில் பேட் செய்த இந்தியா 9 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்தது. டிஃபன்ஸிவ் ஷாட்டுக்கு முயன்ற கவாஸ்கர் முதல் ஓவரிலேயே அவுட். ஆரம்பத்திலிருந்தே அடித்து ஆட நினைக்கும் ஸ்ரீகாந்த், கெவின் கரன் பந்தில் புல் ஷாட் அடிக்க முயன்று டாப் எட்ஜாக, அதை மிட் ஆனிலிருந்து பின்புறமாகவே 30 மீட்டர் தூரம் ஓடி கேட்ச் பிடித்தார் இயான் புட்சர்ட். மொகிந்தர் அமர்நாத் இன்சைட் எட்ஜ், சந்தீப் பாட்டில், யாஷ்பால் ஷர்மா இருவரும் அவுட் சைட் எட்ஜாகி, விக்கெட் கீப்பர் ஹவுடனிடம் கேட்ச் கொடுத்தனர்.

`அந்தப் போட்டியை டிரெஸ்ஸிங் ரூமில், குண்டப்பா விஸ்வநாதன் அருகே அமர்ந்து பார்த்துக்கொண்டிருந்தேன். இந்திய அணி நிலை குலைந்துகொண்டிருந்தது. ஆனாலும், கபில், `கவலை வேண்டாம்... இன்னும் மேட்ச் முடியவில்லை’ என நம்பிக்கை வார்த்தை சொன்னார். அந்தச் சூழலில் அவர் மட்டும்தான் அதீத நம்பிக்கையுடன் இருந்தார்’’ என, 1983 உலகக் கோப்பை நினைவுகளைப் பற்றிய கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார் அயாஸ் மேனன். 

கபில் தேவ் களமிறங்கிய சில நிமிடங்களில் அடுத்த விக்கெட். முந்தைய போட்டியில் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக 89 ரன்கள் எடுத்திருந்த யாஷ் பால் ஷர்மா, இந்த முறை 9 ரன்களில் அவுட். அப்போது இந்திய அணியின் ஸ்கோர் 17/5. ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் கவாஸ்கர், ஸ்ரீகாந்த் டக் அவுட். அமர்நாத் (5), சந்தீப் பாட்டீல் (1), யாஷ்பால் ஷர்மா (9) என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் யாரும் சிங்கிள் டிஜிட்டை தாண்டவில்லை. ஆனாலும், டெயிலெண்டர்களுடன் பார்ட்னர்ஷிப் அமைத்து போராடினார் கபில். 

கபில் டெவில்... இந்திய கிரிக்கெட்டை மாற்றிய அந்த ஒரு இன்னிங்ஸ்! #WorldCupMemories

யுவராஜ் இன்னிங்ஸை கபில் இன்னிங்ஸுடன் ஒப்பிட்டதற்கு காரணம் இருக்கிறது. இருவரும் முக்கியமான தருணத்தில், தங்கள் பொறுப்புணர்ந்து, தங்கள் இயல்பிலிருந்து விலகி தங்கள் மறுபக்கத்தைக் காட்டினார்கள். அன்று யுவராஜ் அடித்தது 57 ரன்கள்தான். ஆனால், 187-5 என்ற இக்கட்டான தருணத்தில், இனி ஒரு விக்கெட் போனாலும் `சோலி முடிஞ்சுச்சு’ என்ற சூழலில் சுரேஷ் ரெய்னாவுடன் பார்டனர்ஷிப் அமைத்தார். ஒரு சிக்ஸர் கூட அடிக்கவில்லை யுவி. இது அவர் இயல்பும் இல்லை. 

`ஒரு மோசமான ஷாட் என்னைக் களத்திலிருந்து மட்டுமல்ல, இந்தியாவை உலகக் கோப்பையில் இருந்தும் வெளியேற்றி விடும் என்பதை தீர்க்கமாக உணர்ந்திருந்தேன். தப்பித் தவறி கூட, ஒரு ஃபால்ஸ் ஷாட் (false shot) ஆடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன்’ எனப் போட்டி முடிந்தபின் சொன்னார் யுவி. போலவே, கபில்தேவும் அன்று அப்படித்தான். `கபில் அக்ரசீவ் வீரர். அடித்து ஆடக் கூடியவர். ஆனால், அன்று அவர் அப்படியில்லை. நிதானமாக இருந்தார். அடித்து ஆடுவதை விட ஒன்று, இரண்டு என ரன்கள் சேர்த்து விக்கெட்டை இழக்கக் கூடாது என்பதிலேயே கவனமாக இருந்தார்’’ என்று சொன்னார், அன்று கபில் தேவ் உடன் பார்ட்னர்ஷிப் அமைத்த ரோஜர் பின்னி.

ரோஜர் பின்னி எடுத்த எடுப்பிலேயே அடித்து ஆட முயன்றபோது எதிர்முனையில் இருந்த கபில் `இன்னும் 50 ஓவர் இருக்கு. தூக்கி அடிக்காதே, சிங்கிள் தட்டு போதும்’ என்று அடக்கி வாசிக்க வைத்திருக்கிறார். ஆனாலும், ரோஜர் பின்னியால் 48 பந்துகளுக்கு மேல் தாக்குப்பிடிக்கமுடியவில்லை. ரவி சாஸ்திரி 1 ரன்னுடன் நடையைக் கட்ட 78-7 என மீண்டும் இந்தியாவுக்கு ஒரு நெருக்கடி. 

நெருக்கடியான தருணங்களில் டெய்லெண்டர்களை Non striker முனையில் வைத்து, ஒரு பேட்ஸ்மேன் அடிக்கும் சதம் காலத்துக்கும் பேசப்படும். எத்தனை சதங்கள் அடித்திருந்தாலும், ஆண்டர்சனிடம் விக்கெட்டை இழக்கவே கூடாது என தீர்க்கமாக நின்று, எட்ஜ்பேஸ்டன் டெஸ்ட்டில் டெய்லெண்டர்களை வைத்து கோலி அடித்த அந்த சதம் என்றென்றும் போற்றப்படும். கபில் அன்று மதன் லால், சையத் கிர்மானியை துணைக்கு வைத்து அப்படி ஒரு சதம் அடித்தார். ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் சதம் அடித்த முதல் இந்தியர் என்ற பெருமையும் பெற்றார். அந்தச் சாதனை 14 ஆண்டுகள் நீடித்தது.

`போட்டி நடந்த Tunbridge Wells மைதானத்தின் ஒருபுறம் பவுண்டரி லைன் மூன்று ரன்களை அநாயசமாக ஓடி எடுக்கும் அளவு நீளமாகவும், அதே ஷாட்டில் மற்றொருபுறம் இரண்டு ரன்களை ஓடி எடுப்பது சாத்தியமில்லாத வகையிலும் இருந்தது. ஷார்ட் பவுண்டரி இருக்கும் பகுதிகளில் கபில் பவுண்டரிகள் அடித்தார். போதிய அனுபவம் இல்லாததால், ஜிம்பாப்வே கேப்டன் டங்கன் ஃபிளெட்சர் எடுத்த சில முடிவுகளும் கபிலுக்குச் சாதகமாக அமைந்து விட்டது. அடுத்தடுத்து விக்கெட் விழுந்தபோதிலும் தொடர்ந்து வேகப்பந்து வீச்சாளர்களைப் பந்துவீசச் சொன்னதால், அவர்கள் சோர்வடைந்து கடைசி நேரத்தில் அதிக ரன்களை விட்டுக் கொடுத்துவிட்டனர். இயன் புட்சர்ட் உடன் இணைந்து ஃபிளெட்சர் பந்துவீசியதும் தவறான முடிவு. அந்த உலகக் கோப்பையில் இந்தப் போட்டியில் மட்டும்தான் ஃபிளெட்சர் மோசமாக பந்துவீசினார்’ என, மேட்ச் ரிப்போர்ட்டில் குறிப்பிட்டுள்ளார் ஜான் வார்ட்.

`கபில் 90 -100 ரன்களில் இருந்தபோது கிரான் பேட்டர்சனுக்கு ஒரு கேட்ச் பிடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதுவும் கடினமான வாய்ப்பு. மற்றபடி எல்லாமே கணித்து, கட்டமைக்கப்பட்ட பக்கவான இன்னிங்ஸ். ராவ்சன், கரன், புட்சர்ட் ஆகியோரின் கடைசிக் கட்ட ஓவர்களை பிரித்து மேய்ந்தார் கபில். 181 நிமிடங்கள் களத்தில் நின்று, 138 பந்துகளில், 16 பவுண்டரிகள், 6 சிக்ஸர்கள் உட்பட 175 ரன்கள் அடித்தார். ஆறு சிக்ஸர்களுமே லாங் பவுண்டரி லைனில் அடிக்கப்பட்டவை. அந்தளவு மிஸ்டைமிங் இல்லாத பர்ஃபெக்ட் ஷாட்கள்’ என்கிறார் ஜான் வார்ட்.

கபில் தேவ் 175, கிர்மானி 24 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருக்க, இந்தியா 266/8 ரன்கள் எடுத்தது. டீசன்டான ஸ்கோர். இந்தியாவின் இன்னிங்ஸ் முடிந்து கபில், கிர்மானி இருவரும் பெவிலியன் திரும்பியபோது, கவாஸ்கர் பவுண்டரி எல்லையில் கையில் தண்ணீர்க் கோப்பையுடன் நின்று கபிலை தட்டிக் கொடுத்திருக்கிறார். அப்போது கபில் – கவாஸ்கர் இடையே பனிப்போர் உச்சத்தில் இருந்த நேரம். அதனால்தான் இதை நல்ல விஷயம் எனப் பாராட்டியிருக்கிறார், ஜிம்பாப்வே அணியில் இடம்பெற்றிருந்த வெள்ளையர் அல்லாத முதல் கிரிக்கெட்டரான அலி ஷா.

கபில் டெவில்... இந்திய கிரிக்கெட்டை மாற்றிய அந்த ஒரு இன்னிங்ஸ்! #WorldCupMemories

181 நிமிடங்கள் களத்தில் இருந்த களைப்பு ஏதுமின்றி, இந்தியா பெளலிங் செய்தபோது 11 ஓவர்களில் ஒரு மெய்டன் உட்பட 32 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட் எடுத்தார் கபில். A leader should lead from front என்பதற்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்தார். கபில் இன்னிங்ஸ் உளவியல் ரீதியாக மற்ற வீரர்களுக்கும் புத்துணர்ச்சி அளித்தது. மதன் லால் 3, ரோஜர் பின்னி 2 என பெளலிங் டிபார்ட்மென்ட் கலக்க, இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. ஆனால், அடுத்தடுத்த போட்டிகளில் ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸிடம் இந்தியா தோல்வியடைந்தது. கடைசிச் சுற்றில் மீண்டும் ஜிம்பாப்வே, ஆஸ்திரேலியாவை தோற்கடித்து, அரையிறுதிக்கு முன்னேறியது. ஒருவேளை ஜிம்பாப்வேக்கு எதிரான போட்டியிலேயே தோல்வியடைந்திருந்தால், அரையிறுதியை நினைத்துப் பார்த்திருக்க முடியாது. 17/5 என்ற சூழலில் கபில் பாய்ச்சிய அந்த நம்பிக்கை அந்த நாளுக்கானது மட்டுமல்ல, இந்திய அணிக்கானது மட்டும் அல்ல. காலத்துக்குமானது. எல்லா அணிகளுக்குமானது.

ஷர்தா சொல்வதைப் போல, ஒருவேளை அன்று கபில்தேவ் அப்படியொரு இன்னிங்ஸ் ஆடாமல் இருந்திருந்தால்... ஒருவேளை அன்று கேமராமேன்கள் ஸ்ட்ரைக் செய்யாமல் இருந்திருந்தால்… ஜான் வார்ட் சொல்வதைப் போல ஒருவேளை அன்று ரசிகர்களில் ஒருவர் வீடியோ கேமராவுடன் வந்து கபில்தேவ் இன்னிங்ஸை மட்டும் ஷூட் செய்திருந்தால்… வேண்டாம்… மறைத்து வைத்திருக்கும் வரைதான் சுவாரஸ்யம். அவரவர் கற்பனைக்கு ஏற்ப, கபில் தேவின் அந்த இன்னிங்ஸை யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் கட்டமைக்கட்டும். கதைகள் சொல்லட்டும்..!

முந்தைய பாகங்கள்