Published:Updated:

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்: வெற்றியுடன் கணக்கை தொடங்கியது இந்தியா

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்: வெற்றியுடன் கணக்கை தொடங்கியது இந்தியா
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்: வெற்றியுடன் கணக்கை தொடங்கியது இந்தியா
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்: வெற்றியுடன் கணக்கை தொடங்கியது இந்தியா

கார்டிப்: இங்கிலாந்தில் கார்டிப் மைதானத்தில் நேற்றிவு நடந்த  சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியில், தவானின் அதிரடி சதத்தால் தென் ஆப்பிரிக்கா அணியை 26 ரன் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தி வெற்றியுடன் கணக்கை தொடங்கியுள்ளது.

டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்க கேப்டன் டிவில்லியர்ஸ் முதலில் இந்தியாவை பேட் செய்ய பணித்தார். இதையடுத்து, ஷிகர் தவானும், ரோகித் ஷர்மாவும் களம் இறங்கினர். மோர்னே மோர்கல், சோட்சோப், கிளைன்வெல்த் போன்ற தென் ஆப்பிரிக்காவின் ஆக்ரோஷமான பந்துவீச்சை சமாளித்து விளையாடினர்.

அணிக்கு நல்ல தொடக்கத்தை தந்த ஜோடி 127 ரன் எடுத்த போது பிரிந்தது. 65 ரன் எடுத்திருந்திருந்தபோது ரோகித்ஷர்மா ஆட்டம் இழந்தார். இதைடுத்து களம் இறங்கிய கோலி ரன்வேட்டையில் ஈடுபட்டார். மறுமுனையில் ஷிகர் தவான் 80 பந்துகளில் சதம் விளாசினார். தனது 6வது ஒரு நாள் போட்டியில் ஆடும் 27 வயதான தவானுக்கு இது முதலாவது சதமாகும்.

சதம் அடித்த கையோடு தவான் வெளியேறி இருக்க வேண்டியது. அவர் கொடுத்த எளிதான ஸ்டம்பிங் வாய்ப்பை விக்கெட் கீப்பர் டிவில்லியர்ஸ் தவற விட்டார். அணியின் ஸ்கோர் 210 ரன்களாக உயர்ந்த போது, விராட் கோலி 31 ரன்களில் வீழ்ந்தார். இதைத் தொடர்ந்து தவான் 114 ரன்னில் ஆட்டம் இழந்தார்.

பயிற்சி ஆட்டம் இரண்டிலும் சதம் அடித்து பிரமிக்க வைத்த தமிழகத்தை சேர்ந்த தினேஷ் கார்த்திக் 14 ரன் எடுத்த திருப்தியோடு வெளியேறினார். கேப்டன் டோனி தனது பங்குக்கு 27 ரன்கள் எடுத்தார். இறுதி கட்டத்தில் ரவீந்திர ஜடேஜாவின் அதிரடியால் ஸ்கோர் எகிறியது. நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 331 ரன்கள் குவித்தது. ரவீந்திர ஜடேஜா 29 பந்தில் 47 ரன்கள் குவித்து களத்தில் இருந்தார். இதில், 7 பவுண்டரி, ஒரு சிக்சர் அடங்கும்.

332 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய தென்ஆப்பிரிக்காவுக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க ஆட்டக்காரர் காலின் இங்ராம் 6 ரன்னில் புவனேஷ்வர்குமாரின் பந்தில் வெளியேறினார். உமேஷ் யாதவின் பந்து வீச்சில் தொடர்ந்து 3 பவுண்டரிகளை விரட்டிய மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் அம்லா அதே ஓவரில் விக்கெட் கீப்பர் டோனியிடம் கேட்ச் ஆனார்.

31 ரன்னுக்குள் 2 விக்கெட்டுகளை இழந்த தென்ஆப்பிரிக்க அணியை கேப்டன் டிவில்லியர்சும், ராபின் பீட்டர்சனும் சரிவில் இருந்து மீட்டனர். இந்த ஜோடியை பிரிக்க இந்திய பவுலர்கள் படாதபாடு பட்டனர். கிடைக்கும் வாய்ப்பில் பவுண்டரியும், மற்றபடி ஒன்று, இரண்டு ரன்கள் வீதம் எடுத்து இந்த ஜோடி சூப்பராக ஆடியது. இவர்கள் ஆடிய விதம், இந்திய வீரர்களுக்கு லேசான பீதியை ஏற்படுத்தியது.

நல்லவேளையாக, இந்த ஜோடி ரன் அவுட்டில் பிரிந்தது. ஸ்கோர் 155 ரன்களை எட்டிய போது ராபின் பீட்டர்சன் (68) ரன் அவுட் செய்யப்பட்டார். இது தான் ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது. அடுத்து வந்த டுமினி (14) ஜடேஜாவின் பந்தில் வீழ்ந்தார். அச்சுறுத்திக் கொண்டிருந்த கேப்டன் டிவில்லியர்சும் (70) அடுத்த ஓவரில் வெளியேறினார். இதனால் தென்ஆப்பிரிக்கா மறுபடியும் சரிவுக்குள்ளானது.

##~~##
பின்னர் வந்த டேவிட் மில்லர் பந்தை சந்திக்காமலேயே ரன் அவுட் ஆனார். சிறிது நேரத்தில் பிளிஸ்சிஸ்சும் 30 ரன்னில் வெளியேற, ரையான் மெக்லரன் மட்டும் இறுதி கட்டத்தில் இந்திய பவுலர்களை கடுமையாக சோதித்தார். கடைசி விக்கெட்டுக்கு காயத்துடன் இறங்கிய மோர்னே மோர்கல் துணையுடன் அவர் அதிரடி காட்டினார். ஆனால் அவரது போராட்டம் 300 ரன்களை கடக்க மட்டுமே உதவியது. கடைசி பந்தில் மோர்கல் கிளீன் போல்டு ஆனார்.
50 ஓவர் முடிவில் தென்ஆப்பிரிக்க அணி 305 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. இதனால் இந்திய அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மெக்லரன் 71 ரன்களுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார். சாம்பியன்ஸ் கோப்பையை வெற்றியுடன் தொடங்கி உள்ள இந்திய அணி அடுத்த ஆட்டத்தில் வரும் 11ஆம் தேதி மேற்கிந்திய தீவுகள் அணியை சந்திக்கிறது.