நடப்பு சாம்பியனாக சொந்த மண்ணில் களமிறங்கிய இந்திய அணியை இங்கிலாந்து வீரர்கள் ஸ்வீப் செய்தே வேளியேற்றினார்கள். இருந்தாலும், இந்தியாவில் கிரிக்கெட் மதமாய் உருவெடுப்பதற்கு இந்த உலகக் கோப்பை மிகப்பெரிய காரணமாக அமைந்தது. இந்தியாவில் நடந்த ஒவ்வொரு போட்டியையும், ஆயிரக்கணக்கான மக்கள் கண்டுகளித்தனர். இந்தியா ஆடாத போட்டிகளுக்குக்கூட மிகப்பெரிய வரவேற்பு இருந்தது. இந்தத் தொடரின் ஒருசில சுவாரஸ்ய சம்பவங்கள் இங்கே!
மாற்றங்களின் தொடக்கம்!
1987 தொடர்தான், உலகக் கோப்பை வரலாற்றில் பல மாற்றங்களுக்கு வித்திட்டது. முதல் மூன்று உலகக் கோப்பைகளும் இங்கிலாந்திலேயே நடக்க, ராணியின் நிழலிருந்து வெளியேறி துணைக்கண்டத்துக்குள் கால் பதித்தது உலகக் கோப்பை. இந்தியாவும், பாகிஸ்தானும் இணைந்து நடத்திய இந்திய உலகக் கோப்பையில்தான், ஓவர்கள் எண்ணிக்கை அறுபதிலிருந்து ஐம்பதாகக் குறைக்கப்பட்டது. போக, அதுவரை புரொடென்ஷியல் உலகக் கோப்பை என்று அழைக்கப்பட்ட அந்தத் தொடர், ரிலையன்ஸ் உலகக் கோப்பை ஆனது. அதுமட்டுமல்லாமல், உலகக் கோப்பைகளில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆதிக்கம் குறையத் தொடங்கியதும் இந்தத் தொடரிலிருந்துதான். முதல் முறையாக, இறுதிப் போட்டிக்கு நுழையாமல்... ஏன், அரையிறுதிக்கே தகுதி பெறாமல் வெளியேறியது வெஸ்ட் இண்டீஸ்.

ஜென்டில்மேன்களாய் நடந்துகொண்டு தோல்வியடைந்தவர்கள்
ஜென்டில்மேன் 1 : கபில் தேவ்
இந்த உலகக் கோப்பையின் முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவுடன் மோதியது நடப்பு சாம்பியன் இந்திய அணி. முதலில் ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்தது. அந்த அணியின் பேட்ஸ்மேன் டீன் ஜோன்ஸ் அடித்த ஒரு பந்து, பௌண்டரி எல்லை அருகே விழுந்தது. அப்போது டி.வி நடுவர் இல்லாததால், அது சிக்ஸரா, பவுண்டரியா எனப் பெரிய குழப்பம் ஏற்பட்டது. அங்கே ஃபீல்டிங் செய்த ரவி சாஸ்திரியிடம் ஆலோசித்து நான்கு ரன்களை வழங்கினார் நடுவர். ஆனால், பேட்ஸ்மேன் டீன் ஜோன்ஸ் அதில் திருப்தியடையவில்லை. அம்பயரிடம் அது சிக்ஸர் என முறையிட்டார். இன்னிங்ஸ் முடிந்ததும் அதைப் பற்றிப் பேசிக்கொள்ளலாம் என முடிவெடுத்து ஆட்டத்தைத் தொடர்ந்தனர்.
அதன்பின், இன்னிங்ஸ் பிரேக்கில் ஆஸ்திரேலிய அணியின் மேனஜர் அம்பயரிடம் முறையிட, இந்திய கேப்டன் கபில் தேவிடம் ஆலோசிக்கப்பட்டது. பெரிய மனதுடன் அதை சிக்ஸராக மாற்றிக்கொள்ளச் சம்மதித்தார் கபில். 268 என்ற ஆஸ்திரேலியாவின் ஸ்கோர் 270 என மாறுகிறது. அடுத்து களமிறங்கிய இந்திய அணி அடித்த ஸ்கோர் 269! ஆம், ஒரு ரன் வித்யாசத்தில் தோல்வியடைந்தது இந்தியா. கபில் தேவ் தாராளமாக வழங்கிய அந்த இரண்டு ரன்கள்தான் போட்டியின் முடிவை மாற்றின!
ஜென்டில்மேன் 2 : கோர்ட்னி வால்ஷ்
கபில் தேவின் தாராள மனதால் இந்தியாவுக்குப் பெரிதாக எந்த இழப்பும் ஏற்பட்டுவிடவில்லை. அந்தப் போட்டியில் தோற்றிருந்தாலும், மற்ற லீக் போட்டிகளில் வென்றதால், குரூப்பில் முதலிடம் பெற்றே அரையிறுதிக்கு முன்னேறியது இந்திய அணி. ஆனால், வெஸ்ட் இண்டீஸ் வீரர் கோர்ட்னி வால்ஷ் செய்த ஒரு விஷயம், அந்த அணியையே அரையிறுதியிலிருந்து வெளியேற்றியது.
பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய லீக் போட்டியில், முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 216 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய பாகிஸ்தான், சீராக விக்கெட்டுகளை இழந்தும், ஓரிரு நல்ல பார்ட்னர்ஷிப்கள் அமைத்தும் இலக்கை நெருங்கிக்கொண்டிருந்தது. கடைசி ஓவரில், 14 ரன்கள் தேவை. கையில் இருப்பது ஒரே விக்கெட். களத்தில் அப்துல் காதிர், சலீம் ஜாஃபர் என இரண்டு பௌலர்கள். பந்து கோர்ட்னி வால்ஷ் கையில். வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றுவிடும் என்று எதிர்பார்த்திருக்க, காதிர் - ஜாஃபர் ஜோடி அந்த நினைப்பை உடைத்தெறிந்தது.
முதல் 5 பந்துகளில் 12 ரன்கள் எடுத்துவிட, ஒரு பந்தில் இரண்டு ரன்கள் தேவை என்ற நிலை. அப்போதுதான் அந்தச் சம்பவம் நடந்தது. கோர்ட்னி வால்ஷ் பந்துவீச ஓடிவர, நான் ஸ்ட்ரைக்கர் எண்டில் இருந்த ஜாஃபர் ஓடத்தொடங்கினார். வால்ஷ் பந்துவீசுவதற்கு முன்பே, சிலபல அடிகள் அவர் நகர்ந்துவிட்டார். ஸ்டம்புக்கு அருகில் வந்த வால்ஷ், உடனடியாக நின்று கை கட்டி வேடிக்கை பார்க்க, ஜாஃபர் அப்போதுதான் சுதாரித்து கிரீசுக்குள் வந்தார். அடுத்த பந்தில் பாகிஸ்தான் பௌண்டரி அடித்து வெற்றியும் பெற்றது.
வால்ஷ், ஸ்டம்பைத் தகர்த்து மன்கடிங் செய்திருந்தால் ஆட்டம் முடிந்திருக்கும். வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றிருக்கும். ஆனால், அவர் அதைச் செய்யவில்லை. அதனால், அந்தப் போட்டியில் மட்டும் வெஸ்ட் இண்டீஸ் தோற்கவில்லை. முதல் முறையாக குரூப் சுற்றோடு வெளியேறவும் செய்தது. பாகிஸ்தானுக்கு எதிரான அப்போட்டியில் வென்றிருந்தால், அந்த அணி அரையிறுதிக்குச் சென்றிருக்கும். ஏனெனில், குரூப் பிரிவில் பாகிஸ்தான் 20 புள்ளிகளும், வெஸ்ட் இண்டீஸ் 12 புள்ளிகளும் பெற்றிருந்தன. அப்போது ஒரு வெற்றிக்கு 4 புள்ளிகள். வெஸ்ட் இண்டீஸ் வென்றிருந்தால், இங்கிலாந்துடன், அந்த இரு அணிகளும் 16 புள்ளிகளுடன் சம நிலையில் இருந்திருக்கும். ரன் ரேட் அடிப்படையில் வெஸ்ட் இண்டீஸ் (5.16), பாகிஸ்தானை (5.01) பின்னுக்குத்தள்ளி அரையிறுதிக்கு முன்னேறியிருக்கும். ஆனால், எதுவும் நடைபெறவில்லை!
இந்தியர் கைப்பற்றிய முதல் ஹாட்ரிக்
உலகக் கோப்பை கிரிக்கெட் வரலாற்றில், முதல் ஹாட்ரிக்கைப் பதிவு செய்தவர் என்ற சாதனையை இந்த உலகக் கோப்பையில் செய்தார், இந்திய வீரர் சேத்தன் ஷர்மா. நியூசிலாந்துடனான கடைசி லீக் போட்டியில் அவர் அந்தச் சாதனையைச் செய்தார். 182 ரன்களுக்கு 5 விக்கெட் எடுத்திருந்த நிலையில், பேட்ஸ்மேன் கென் ரூதர்ஃபோர்ட் ஷர்மாவின் இன்ஸ்விங்கில், மிடில் ஸ்டம்பைப் பறிகொடுத்தார். அடுத்த பந்தில் இயான் ஸ்மித்தும் அதேபோல் போல்டானார். இவர் பறிகொடுத்தது ஆஃப் ஸ்டம்பை. அடுத்து இவென் சாட்ஃபீல்டு களம்புகுந்தார். சேத்தன் ஷர்மா பெரிதாக எதையும் மாற்றவில்லை. அதேபோல் பந்துவீசினார். இம்முறை லெக் ஸ்டம்ப் சிதற, ஹாட்ரிக் சாதனை படைத்த முதல் வீரர் என்ற சாதனை படைத்தார் சேத்தன் ஷர்மா!