Published:Updated:

கிரிக்கெட் சூதாட்டத்தில் ரூ.1 கோடியை இழந்த குந்த்ரா: நடிகை ஷில்பாவும் சிக்குகிறார்

கிரிக்கெட் சூதாட்டத்தில் ரூ.1 கோடியை இழந்த குந்த்ரா: நடிகை ஷில்பாவும் சிக்குகிறார்
கிரிக்கெட் சூதாட்டத்தில் ரூ.1 கோடியை இழந்த குந்த்ரா: நடிகை ஷில்பாவும் சிக்குகிறார்
கிரிக்கெட் சூதாட்டத்தில் ரூ.1 கோடியை இழந்த குந்த்ரா: நடிகை ஷில்பாவும் சிக்குகிறார்

புதுடெல்லி: கிரிக்கெட் சூதாட்டத்தில் நடிகை ஷில்பா ஷெட்டியும் ஈடுபட்டுள்ளதால் அவர் எந்த நேரத்திலும் விசாரணைக்கு அழைக்கப்படலாம் என்று தெரிவித்துள்ள காவல்துறையினர்,  சூதாட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி உரிமையாளர் ராஜ் குந்த்ரா ரூ.1 கோடி வரை இழந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வீரர்கள் ஸ்ரீசாந்த், அங்கீத் சவான், அஜித் சாண்டிலா ஆகிய மூவரும் ‘ஸ்பாட் பிக்சிங்’ சூதாட்டத்தில் சிக்கி, கைதான விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.

இந்த சூதாட்ட வழக்கில் ராஜஸ்தான் அணியின் வீரர்களில் ஒருவரான சித்தார்த் திரிவேதி, அரசு தரப்பு சாட்சியாக சேர்க்கப்பட்டு இருக்கிறார். அவரிடம் டெல்லி போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர், ‘‘ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உரிமையாளர்களில் ஒருவரும், நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவருமான ராஜ் குந்த்ராவின் வர்த்தக கூட்டாளி உமேஷ் கோயங்கா, அணியின் அமைப்பு, விளையாட உள்ள களங்களின் நிலவரம் பற்றி கேட்டு அறிவார்’’ என வாக்குமூலம் அளித்தார்.

இதைத்தொடர்ந்து இந்த வழக்கில் ராஜ் குந்த்ராவிடமும், உமேஷ் கோயங்காவிடமும் விசாரிக்க டெல்லி போலீசார் முடிவு செய்தனர். அதன்படி அவர்கள் இருவரிடமும் போலீசார் தொடர்ந்து 12 மணி நேரம் விசாரணை நடத்தினர். அப்போது, கிரிக்கெட் போட்டியில் சூதாடியதை ராஜ் குந்த்ரா ஒப்புக்கொண்டு உள்ளார். இதையடுத்து அவர் விரைவில் கைது செய்யப்படலாம் என்று தெரிகிறது.

இந்த நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான நடிகை ஷில்பா ஷெட்டியும் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. உமேஷ் கோயங்காவிடம் நடத்திய விசாரணையின் போது, ராஜ் குந்த்ராவும் அவரது மனைவி ஷில்பா ஷெட்டியும் சூதாட்டத்தில் ஈடுபட்டனர் என்று அவர் கூறியதாக நேற்று டெல்லி போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. இதனால், சூதாட்டம் தொடர்பாக ஷில்பா ஷெட்டியிடமும் போலீசார் விசாரணை நடத்தக்கூடும் என தகவல் வெளியாகி உள்ளது.

ராஜ் குந்த்ராவின் வர்த்தக கூட்டாளியும், சூதாட்ட தரகருமான உமேஷ் கோயங்கா பற்றி சில புதிய தகவல்கள் வெளியாகி இருப்பதாக டெல்லி சிறப்பு போலீஸ் கமிஷனர் எஸ்.என்.ஸ்ரீவஸ்தவா தெரிவித்தார்.

அவர் கூறுகையில், 36 வயதாக உமேஷ் கோயங்கா சிக்கிம் மாநிலத்தை சேர்ந்தவர். கடந்த 1984ஆம் ஆண்டில் அங்கிருந்து டெல்லி வந்த அவர் ராஜ் குந்த்ரா வசித்த பகுதியில் குடியேறினார். அப்போது ராஜ் குந்த்ராவுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து இருவரும் நண்பர்கள் ஆனார்கள். பின்னர் உருக்கு நிறுவனம் ஒன்றின் உரிமையாளரான உமேஷ் கோயங்கா, அதன்பிறகு ராஜ் குந்த்ராவுடன் லண்டன் சென்றார்.

பின்னர் ராஜ் குந்த்ரா ஐ.பி.எல். கிரிக்கெட் அணியை வாங்கி அதன் உரிமையாளரானதும், 2008ஆம் ஆண்டில் உமேஷ் கோயங்கா இந்தியாவுக்கு வந்தார். அதன்பிறகு, கிரிக்கெட் போட்டிகளை பார்க்க செல்வது போல் விளையாட்டு மைதானங்களுக்கு சென்று அவர் நோட்டமிட தொடங்கினார். 6 ஆண்டுகளாக அவர் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டு உள்ளார். 3 ஆண்டுகள் ராஜ் குந்த்ராவுக்காக சூதாடியதாகவும் ஒப்புக் கொண்டு உள்ளார். சூதாட்டத்தில் ராஜ் குந்த்ரா ரூ.1 கோடி வரை இழந்து இருப்பதாக விசாரணையின் போது தெரிவித்து உள்ளார்.

##~~##
ஒரு போட்டியில் ஷில்பா ஷெட்டியும் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக தெரியவந்து உள்ளது. ஆனால் அது எந்த போட்டி என்பதை விசாரணையின் போது அவர்களால் (ராஜ் குந்த்ரா, உமேஷ் கோயங்கா) நினைவுபடுத்தி சொல்ல முடியவில்லை. எனவே விசாரணைக்காக ஷில்பா ஷெட்டி அழைக்கப்படவும் செய்யலாம், அல்லது அழைக்கப்படாமலும் இருக்கலாம். இப்போது ஸ்பாட் பிக்சிங் தொடர்பான விசாரணையில்தான் போலீசார் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார்கள்.
டெல்லி போலீசாரின் விசாரணை நடவடிக்கைக்கு முன்னதாக ராஜ் குந்த்ரா ‘டுவிட்டர்’ சமூக வலைத்தளத்தில் தகவல் வெளியிட்டு உள்ளார். அதில், நம்ப முடியாத தகவல்களை அடிப்படையாகக் கொண்டு ஊடகங்கள் செய்திகளை வெளியிடுவதாக கூறி உள்ளார். இதேபோன்று நடிகை ஷில்பா ஷெட்டியும் ஊடகங்களை தாக்கி ‘டுவிட்டரில்’ எழுதி உள்ளார். அதில் அவர், ‘‘தவறான எண்ணத்தோடு, தகவல்களை திரட்டி வெளியிடுவதால் எங்கள் குடும்பத்துக்கு மிகுந்த வேதனை ஏற்படுகிறது. உண்மையான பொறுப்பான அதிகாரிகளிடம் பேசுங்கள்’’ என கூறி உள்ளார்.