இன்னும் சரியாக இரண்டு வாரங்களில் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்கப்போகிறது. மொத்த உலகமும் எதிர்பார்த்திருக்கும் இந்தத் தொடர், பலருக்கும் பல நினைவுகளைக் கொடுக்கும். ``இப்படித்தான் `83 உலகக் கோப்பைல கபில் அடிச்சாரு", ``இதே தப்பத்தான் `99-ல தென் ஆப்பிரிக்கா பண்ணுச்சுனு" பழைய நினைவுகளையெல்லாம் பலரும் தூசி தட்டத் தொடங்குவார்கள். இப்போது நாமும் அதைத்தான் செய்யப்போகிறோம். ஒவ்வோர் உலகக் கோப்பைத் தொடரையும், அதில் நடந்த சுவாரஸ்யமான சம்பவங்களையும் தினமும் ஒவ்வொன்றாக அசைபோடப்போகிறோம். இன்று, 1979 தொடரின் சில சுவாரஸ்யங்கள்...
ஷாட் ஆஃப் தி டோர்னமென்ட்!
இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இறுதிப் போட்டியில் மோதின. லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த அந்தப் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் முதலில் பேட்டிங் செய்தது. இங்கிலாந்து பந்துவீச்சை வெளுத்து வாங்கிக்கொண்டிருந்தார் அதிரடி மன்னன் சர் விவியன் ரிச்சர்ட்ஸ். விக்கெட்டுகள் ஒருபக்கம் வீழ்ந்துகொண்டிருந்தாலும், அவர் சதத்தைத் தாண்டி ஆடிக்கொண்டிருந்தார்.

கடைசி ஓவரை வீசினார் இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் மைக் ஹெண்ட்ரிக். முதல் 5 பந்துகளையும் ரிச்சர்ட்ஸ்தான் சந்தித்திருந்தார். கடைசிப் பந்தையும் அவரே சந்திக்கவிருந்தார். அப்போதெல்லாம், இன்று இருப்பதுபோல் பவர்பிளே, ஃபீல்டிங் விதிமுறைகளெல்லாம் இல்லை. 9 ஃபீல்டர்களையும் எங்கு வேண்டுமானாலும் நிறுத்திக்கொள்ளலாம். அதனால், அந்தக் கடைசிப் பந்தின்போது, அனைத்து ஃபீல்டர்களையும் பௌண்டரி எல்லையில் நிற்கவைத்தார் இங்கிலாந்து கேப்டன் மைக் பிரயர்லி.
கடைசிப் பந்தை வீச வந்தார் ஹெண்ட்ரிக். 9 ஃபீல்டர்களும் எல்லையில்... கண்டிப்பாக பேட்ஸ்மேனால் பௌண்டரி அடிக்க முடியாது என்று நினைத்தார்கள் மைதானத்தில் இருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள். ஆனால், களத்தில் நிற்பது ரிச்சர்ட்ஸ் ஆயிற்றே! பந்து ஃபுல் டாஸாக வர, ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே நகர்ந்து வந்து ஸ்கொயர் லெக் திசையில் சிக்சர் விளாசினார் ரிச்சர்ட்ஸ். மொத்த மைதானமும் அதிர்ந்துபோனது. ``பெவிலியன் திரும்பும்போது, அந்த ஷாட் என்னுடைய கண்டுபிடிப்பு என்று நினைத்துக்கொண்டேன்" என்று பின்னர் பெருமையாகக் கூறினார் ரிச்சர்ட்ஸ். அந்த ஷாட் நிச்சயம் அந்த உலகக் கோப்பையின் மறக்க முடியாத மொமென்ட்!
11 ரன்களுக்கு 8 விக்கெட்!
இறுதிப் போட்டியில் ரிச்சர்ட்ஸ் அடித்த 138 ரன்களின் உதவியோடு, 286 ரன்கள் குவித்தது வெஸ்ட் இண்டீஸ். இங்கிலாந்து அணியும் அற்புதமாகவே இன்னிங்ஸைத் தொடங்கியது. முதல் விக்கெட்டுக்கு கேப்டன் பிரயர்லி, ஜெஃப் பாய்காட் ஜோடி 129 ரன்கள் எடுத்தது. இருவரும் அரைசதம் அடித்தனர். அவர்கள் அவுட் ஆனதும், கிரகாம் கூச் கொஞ்சம் தாக்குப்பிடித்து விளையாடினார். ஆனால், எல்லாமே சீக்கிரம் மாறத் தொடங்கியது.
2 விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் எடுத்திருந்தது இங்கிலாந்து. அதன்பிறகுதான் நடந்தது அந்தக் கொடூர சொதப்பல். ஜோயல் கார்னரின் வேகத்தைச் சமாளிக்க முடியாமல், அடுத்த 11 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளையும் இழந்து, 194 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. கார்னர் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். 5 இங்கிலாந்து வீரர்கள் ட்க் அவுட் ஆகி வெளியேறினர். வெஸ்ட் இண்டீஸ் இரண்டாவது முறையாகக் கோப்பையை வென்றது.

300 ரன்களே இல்லை
இந்தத் தொடரில் 14 போட்டிகள் விளையாடப்பட்டாலும், ஒவ்வொரு போட்டியும் 60 ஓவர் ஆட்டமாக இருந்தாலும், எந்த அணியுமே 300 என்ற ஸ்கோரை எட்டவில்லை. இரண்டாவது அரையிறுதியில் பாகிஸ்தானுக்கு எதிராக வெஸ்ட் இண்டீஸ் அடித்த 293 ரன்கள்தான் இந்த உலகக் கோப்பையின் அதிகபட்ச ஸ்கோர். உலகக் கோப்பை வரலாற்றிலேயே இதுதான் `லோ ஸ்கோரிங்' உலகக் கோப்பையாகப் பார்க்கப்படுகிறது.
இந்தத் தொடரின் ஏழாவது போட்டியில்தான், முதல் முறையாக ஒரு அணி 200 ரன்களையே கடந்தது. அதுமட்டுமல்ல, ஒரு போட்டியில் கனடா அணி 45 ரன்களுக்குச் சுருண்டு மோசமான வரலாற்றையும் படைத்தது. இந்த உலகக் கோப்பையில், முதல் இன்னிங்ஸ் சராசரி வெறும் 195.86 ரன்கள்தான்!

கத்துக்குட்டியிடம் வீழ்ந்த முதல் அணி இந்தியா!
வழக்கமாக உலகக் கோப்பை தொடர்களில் சில அதிர்ச்சிகரமான முடிவுகள் கிடைக்கும். வங்கதேசம், கென்யா போன்ற கத்துக்குட்டி அணிகள் எதிர்பாராத வகையில் முன்னணி அணிகளை வீழ்த்தும். வங்கதேசத்திடம் தோற்று வெளியேறிய வரலாறெல்லாம் இந்தியா, இங்கிலாந்து போன்ற அணிகளுக்கே இருக்கிறது. சொல்லப்போனால், கத்துக்குட்டி அணியிடம் தோற்கும் டிரெண்டைத் தொடங்கி வைத்ததே இந்தியாதான்.
இந்தத் தொடரில் ஐ.சி.சி-யின் 6 உறுப்பினர் நாடுகளும் கலந்துகொண்டன. இலங்கை அணி அப்போது முழு உறுப்பினர் இல்லை. டெஸ்ட் போட்டியில் விளையாடும் அந்தஸ்தும் அந்த அணிக்குக் கொடுக்கப்படவில்லை. அப்படிப்பட்ட அணிக்கு எதிராகத் தோல்வியடைந்தது இந்திய அணி. முதலில் பேட்டிங் செய்த இலங்கை 238 ரன்கள் எடுத்தது. அதோடு சனிக்கிழமை ஆட்டம் முடிவுக்கு வர, ஒரு நாள் ஓய்வில் இருந்து வந்தும் ஆட்டத்தை இழந்தது இந்திய (191) அணி!
ஒண்டே மேட்ச்தான்... ஆனால், இரண்டு நாள் நடந்தது..!
ஒருநாள் போட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்டதன் காரணமே, போட்டிகள் சீக்கிரம் முடிவை எட்ட வேண்டும் என்பதுதான். ஒருநாளில் முடிவதால்தான், அதை `ஒண்டே இண்டர்நேஷனல்' என்றும் அழைத்தார்கள். ஆனால், 1979 உலகக் கோப்பையின் பல போட்டிகள் இரண்டு நாள்கள் நடந்தன! அந்த ஆண்டு உலகக் கோப்பை நடந்த சமயம், பல இடங்களில் போதுமான வெளிச்சம் இல்லை. அதனால் போட்டிகள் சீக்கிரமே தொடங்கின. வெளிச்சம் முற்றிலுமாகக் குறைந்தபோது, ஆட்டம் நிறுத்தப்பட்டு, அடுத்த நாள் தொடர்ந்தன.
மொத்தம் 3 போட்டிகள், இப்படி இரண்டாம் நாள் தொடர்ந்து நடந்தது. அதிலும் குறிப்பாக இந்தியா, இலங்கை அணிகள் மோதிய ஆட்டம் 3 நாள்கள் நடந்தது. முதல் நாள் ஆட்டம் சனிக்கிழமை தொடங்கி, இலங்கை பேட்டிங் முடிந்ததும் நிறுத்தப்பட்டது. பொதுவாக அப்போதெல்லாம் ஞாயிற்றுக்கிழமைகள் ஓய்வு நாள்களாகவே இருக்கும். அதனால், அன்று போட்டி நடக்காமல் இந்திய அணியின் இன்னிங்ஸ் திங்கள்கிழமை தொடங்கியது.

இந்த உலகக் கோப்பையில் இந்தியா
இந்திய அணியைப் பொறுத்தவரை, இதுதான் மிகமோசமான உலகக் கோப்பை. விளையாடிய 3 போட்டியிலும் தோற்று வெளியேறியது. இன்றுவரை, ஒரு உலகக் கோப்பையில் ஒரு போட்டியில்கூட வெற்றி பெறாத டெஸ்ட் விளையாடும் அணி, அந்த இந்திய அணிதான். இதற்குக் காரணம் அணியின் சொதப்பல் பேட்டிங். ஒரு போட்டியில்கூட இந்திய அணியால் 200 ரன்களைக் கடக்க முடியவில்லை. குண்டப்பா விஸ்வநாத் (106 ரன்கள்) மட்டுமே, இந்தத் தொடரில் 100 ரன்களைக் கடந்த ஒரே இந்திய பேட்ஸ்மேன்.