Published:Updated:

கத்துக்குட்டிகளிடம் தப்பிப் பிழைக்குமா இலங்கை? உலகக் கோப்பை அணிகள் ஒரு பார்வை #CWC2019

கத்துக்குட்டிகளிடம் தப்பிப் பிழைக்குமா இலங்கை? உலகக் கோப்பை அணிகள் ஒரு பார்வை #CWC2019
கத்துக்குட்டிகளிடம் தப்பிப் பிழைக்குமா இலங்கை? உலகக் கோப்பை அணிகள் ஒரு பார்வை #CWC2019

கத்துக்குட்டிகளிடம் தப்பிப் பிழைக்குமா இலங்கை? உலகக் கோப்பை அணிகள் ஒரு பார்வை #CWC2019

இங்கிலாந்து மிகப்பெரிய திருவிழாவுக்குத் தயாராகிவிட்டது. மே 30-ம் தேதி கிரிக்கெட் உலகக்கோப்பை தொடங்கப்போகிறது. வழக்கமாக நிறைய அசோசியேட் அணிகள் இருக்கும். ஆனால், இம்முறை அப்படியெல்லாம் இல்லை. வெறும் பத்தே அணிகள்தான். இரண்டு, மூன்று குரூப்களெல்லாம் இல்லாமல், ஒவ்வோர் அணியும், எல்லா அணிகளுடனும் மோதப்போகின்றன. நேரடியாக அரையிறுதிதான் என்பதால், ஒவ்வொரு லீக் போட்டியுமே முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். 10 அணிகளுள், கோப்பை வெல்லத் தகுதியான அணி எது? அரையிறுதிக்குப் போகும் பலத்துடன் இருக்கும் அணிகள் எவை? எந்த அணிகள் படுமோசமாக ஆடும்? ஆச்சர்யமளிக்கப்போகும் அணிகள் எவை? அதைத்தான் தினமும் அலசப்போகிறோம். ஒவ்வொரு அணியாக, அவர்களின் பலம், பலவீனம் பற்றிப் பார்ப்போம். இன்று இலங்கை.

கத்துக்குட்டிகளிடம் தப்பிப் பிழைக்குமா இலங்கை? உலகக் கோப்பை அணிகள் ஒரு பார்வை #CWC2019

கேப்டன் : டிமுத் கருணரத்னே

பயிற்சியாளர் : சந்திகா ஹதுரசிங்கே

ஐ.சி.சி ஒருநாள் ரேங்கிங் : 9

உலகக் கோப்பையில் இதுவரை :

உலகக் கோப்பை பெர்ஃபாமன்ஸ்
1975 குரூப் சுற்று
1979 குரூப் சுற்று
1983 குரூப் சுற்று
1987 குரூப் சுற்று
1992 குரூப் சுற்று
1996 சாம்பியன்
1999 குரூப் சுற்று
2003 அரையிறுதி
2007 ரன்னர் அப்
2011 ரன்னர் அப்
2015 காலிறுதி

வங்கதேசம், ஆப்கானிஸ்தான் அணிகளெல்லாம் முன்னேற்றம் அடைந்துகொண்டிருப்பதால், `கத்துக்குட்டி' இடத்தை நிரப்ப, பாதாளம் நோக்கிப் பயணித்துக்கொண்டிருக்கிறது இலங்கை. இந்தத் தொடரில் ஆடும் 15 இலங்கை வீரர்களின் பெயர்களை உங்களால் நினைவுகூர முடிந்தால், நிச்சயம் ஐ.ஏ.எஸ் தேர்வுக்கு நீங்கள் முயற்சி செய்யலாம். அப்படி ஓர் அணியைத் தேர்வு செய்திருக்கிறார்கள். சந்திமல், டிக்வெல்லா, தரங்கா, அகிலா தனஞ்செயா என முன்னணி வீரர்களையெல்லாம் கழட்டிவிட்டு அல்லு கிளப்பியிருக்கிறது அந்த அணி நிர்வாகம். 

இதெல்லாம் ஒரு புறமிருக்க, 4 ஆண்டுகளாகச் சர்வதேச அளவில் லிமிடட் ஓவர் போட்டிகளில் பங்கேற்காத ஒருவரை அணியின் கேப்டனாக நியமித்திருக்கிறார்கள். கடைசியாக 2015 உலகக் கோப்பையின்போது ஒருநாள் கிரிக்கெட் விளையாடிய கருணரத்னேதான், இப்போது அணியின் கேப்டன். இத்தனைக்கும், ஒருநாள் போட்டிகளில் அவரது சராசரி வெறும் 15.83! ஏற்கெனவே சரிவில் சென்றுகொண்டிருக்கும் அணிக்கு இப்படியொரு முடிவு ஏனென்று தெரியவில்லை. மாத்யூஸ், திசாரா பெரேரா போன்ற வீரர்களைப் பரிசீலித்திருக்கலாம்.    

கத்துக்குட்டிகளிடம் தப்பிப் பிழைக்குமா இலங்கை? உலகக் கோப்பை அணிகள் ஒரு பார்வை #CWC2019

அணியின் `கீ' பேட்ஸ்மேன் என்று கேட்டால், மற்ற அணிகளிலெல்லாம், நான்கைந்து பேட்ஸ்மேன்களை அலசி ஒருவரைத் தேர்வு செய்யவேண்டியிருந்தது. இலங்கை அறிவித்த அணியில், மாத்யூஸை மட்டுமே பேட்ஸ்மேன் என்று அடையாளம் காண முடிந்ததால், அவரே அன்னபோஸ்ட்டில் இந்த மரியாதைக்குரிய இடத்தைப் பிடிக்கிறார்! 

சரி, கொஞ்சம் சீரியசாகப் பேசுவோம். இப்போது இருக்கும் அணியில் அவரையும் திசாரா பெரேராவையும் தவிர்த்து, சீராக பேட்டிங் செய்யக்கூடியவர் என்று எவரும் இல்லை என்பதாலும், பெரேராவின் அதிரடியையும் எல்லாப் போட்டிகளிலும் நம்ப முடியாது என்பதாலும் மொத்தப் பொறுப்பையும் மாத்யூஸ் சுமக்கவேண்டும். நியூசிலாந்து டெஸ்ட் போட்டியில் சதமடித்து தண்டால் எடுத்தவர், இங்கிலாந்திலும் அப்படிச் சில இன்னிங்ஸ் ஆடினால் மட்டுமே இலங்கையின் கிரிக்கெட் வரலாற்றைக் காப்பாற்ற முடியும். 

கத்துக்குட்டிகளிடம் தப்பிப் பிழைக்குமா இலங்கை? உலகக் கோப்பை அணிகள் ஒரு பார்வை #CWC2019

லஹிரு திரிமன்னே, இலங்கை உள்ளூர்ப் போட்டியில் சிறப்பாக ஆடியிருக்கிறார். ஆனால், அவரும் இரண்டு ஆண்டுகளாக சர்வதேசப் போட்டிகளில் விளையாடவில்லை. அவரது கம்பேக் சிறப்பாக இருந்தால், அணிக்குப் பலம் சேர்க்கும். குசல் மெண்டிஸ் ஏதேனும் ஓரிரு போட்டிகளில், மேட்ச் வின்னிங் இன்னிங்ஸ் ஆடலாம். ஆனால், அதையும் உறுதியாகச் சொல்லிவிடமுடியாது. 

இந்த இலங்கை அணியில் மலிங்காவின் நிலையை நினைத்தால், `ஊருக்குள்ள டபுள் பைக்ல ஸ்டேண்டிங்ல வந்தவன்டா' டெம்ப்ளேட்தான் ஞாபகம் வருகிறது. தொடர்ந்து இரண்டு ஃபைனல், 1 காலிறுதி என உலகக் கோப்பையில் அசத்திய இலங்கை அணியில் ஆடியவர், இப்போது கத்துக்குட்டியாக பரிணாமம் அடைந்துகொண்டிருக்கும் அணிக்கு ஆடிக்கொண்டிருக்கிறார். இருந்தாலும், அவரது ஐ.பி.எல் செயல்பாடு, இன்னும் மேட்ச் வின்னிங் பர்ஃபாமன்ஸ்களைக் கொடுக்க முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது. யார்க்கர், ஸ்லோ பால் போன்ற அவரது வேரியேஷன்கள் நிச்சயம் கைகொடுக்கும். இலங்கை அணியின் கொஞ்சநஞ்ச கௌரவத்தைக் காப்பாற்றவேண்டியிருப்பதால், மலிங்காவின் யார்க்கர்கள், இங்கிலாந்தில் கொஞ்சம் உக்கிரமாக இருக்கலாம். 

கத்துக்குட்டிகளிடம் தப்பிப் பிழைக்குமா இலங்கை? உலகக் கோப்பை அணிகள் ஒரு பார்வை #CWC2019

தலைகீழாக உருண்டாலும், இலங்கை அணியால் அரையிறுதிக்குள் நுழைய முடியாது. இது அவர்களுக்கும் தெரியும். இருந்தாலும், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் அணிகளுக்குக் கீழே முடிக்கக் கூடாது என்பதற்காகக் கடுமையாகப் போராடுவார்கள். போராடுவார்கள் என்று எதிர்பார்க்கலாம். ஆனால், அதைச் செய்வார்களா என்பது அவர்களுக்கே வெளிச்சம்! 

இலங்கையின் அட்டவணை

தேதி நேரம் போட்டி மைதானம்
ஜூன் 1 மாலை 3 மணி நியூசிலாந்து vs இலங்கை     சோஃபியா கார்டன்ஸ், கார்டிஃப்
ஜூன் 4       மாலை 3 மணி ஆப்கானிஸ்தான் vs இலங்கை சோஃபியா கார்டன்ஸ், கார்டிஃப்
ஜூன் 7 மாலை 3 மணி பாகிஸ்தான் vs இலங்கை  கவுன்டி மைதானம், பிரிஸ்டோல்
ஜூன் 11 மாலை 3 மணி வங்கதேசம் vs இலங்கை கவுன்டி மைதானம், பிரிஸ்டோல்
ஜூன் 15 மாலை 3 மணி இலங்கை vs ஆஸ்திரேலியா கென்னிங்டன் ஓவல், லண்டன்
ஜூன் 21 மாலை 3 மணி இங்கிலாந்து - இலங்கை ஹெடிங்லி, லீட்ஸ்
ஜூன் 28 மாலை 3 மணி இலங்கை - தென்னாப்பிரிக்கா ரிவர்சைட் மைதானம், செஸ்டர் லீ ஸ்ட்ரீட்
ஜூலை 1 மாலை 3 மணி இலங்கை - வெஸ்ட் இண்டீஸ் ரிவர்சைட் மைதானம், செஸ்டர் லீ ஸ்ட்ரீட்
ஜூலை 6 மாலை 3 மணி இலங்கை - இந்தியா ஹெடிங்லி, லீட்ஸ்
Vikatan
அடுத்த கட்டுரைக்கு