`எல்லாம் ஒரே இரவில் மாறிவிடாது. எனக்கு 21 வயதுதான் ஆகிறது. இதையெல்லாம் எப்படி கடந்து செல்வது என நீங்கள் தெரிந்துவைத்திருப்பது மிகவும் முக்கியம்” என்று உலகக் கோப்பை அணியில் தேர்வு செய்யப்படாதது குறித்து பேசுகிறார் ரிஷப் பன்ட்

இந்திய வீரர் ரிஷப் பன்ட், உலகக் கோப்பை போட்டியில் தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்ப்பு நிலவியது. காரணம் 21 வயதேயான ரிஷப் பன்ட் சிறப்பான ஆட்டங்களை வெளிப்படுத்தியதுதான். அனுபவ வீரர் என்ற அடிப்படையில் தினேஷ் கார்த்திக்கு அந்த இடம் வழங்கப்பட்டது. `ரிஷப் பன்ட்டுக்கு வாய்ப்பு வழங்கியிருக்கலாம்’ என்ற குரல்கள் ஒலிக்கத்தொடங்கின. இந்த நிலையில் உலகக் கோப்பைக்கான அணியில் இடம்பெறாதது குறித்து அவர் முதல்முறையாக தனது மௌனத்தைக் கலைத்துள்ளார். பன்ட் பேசுகையில், ``நீங்கள் உங்கள் குழந்தைப் பருவத்தில் எதைக் கற்றுக்கொள்கிறீர்களோ அது உங்களுக்குப் பெரும் அளவில் கைகொடுக்கும்.

ஆட்டத்துக்காக நான் பெரும்பாலான இடங்களுக்குப் பயணம் மேற்கொண்டு பல்வேறு மக்களைச் சந்தித்துள்ளேன். இவைதான் என்னை மனதளவில் உறுதிபெற உதவியது. நீங்கள் அணியில் தேர்வு செய்யப்படாதது பின்னடைவுதான். இது எனக்கு பழக்கப்பட்டதுதான். நீங்கள் அதை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று கற்றுக்கொள்ள வேண்டும். எல்லாமுமே உங்களுக்கு சாதகமா இருக்கும் என்று சொல்ல முடியாது. உங்களுக்குச் சாதகமாக வாழ்க்கை அமையவில்லை என்றால், நீங்கள் உங்களை இன்னும் பாசிட்டிவாக்கிக்கொள்ள வேண்டும்.
எப்படி இதை நீங்கள் கடந்து செல்கிறீர்கள் என்பதுதான் முக்கியம். என் மீதான விமர்சனைத்தை நேர்மையாக எடுத்துக்கொள்வேன். போட்டிகளை வெற்றிகரமாக முடிக்க வேண்டும் என்பது முக்கியமான ஒன்று. தொடர்ச்சியான போட்டிகளிலிருந்து நான் இதைக் கற்றுக்கொள்வேன். அனுபவத்திலிருந்தும், தவறுகளிலிருந்தும்தான் நீங்கள் கற்றுக்கொள்ள முடியும். ஒரே இரவில் எல்லாம் மாறிவிடாது. எனக்கு வயது இப்போதுதான் 21 ஆகிறது. 30 வயது மனிதரைப்போல யோசிக்க முடியாது. காலம் தேவைப்படுகிறது. அந்தக் காலத்தின் மூலம் என் மனம் இன்னும் உறுதியாகும். பக்குவம் பெறும்” என்றார். டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார் பன்ட். அந்த அணி ப்ளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்துள்ளது. பன்டின் இந்தப் பேச்சைப் பலரும் வரவேற்றுள்ளனர்.