Published:Updated:

`நான் திடீர் மும்பை ரசிகர்... நான் திடீர் கொல்கத்தா guy' - ரசிகர்களை முகாம் மாறவைத்த கடைசி லீக் போட்டி!

`நான் திடீர் மும்பை ரசிகர்... நான் திடீர் கொல்கத்தா guy' - ரசிகர்களை முகாம் மாறவைத்த கடைசி லீக் போட்டி!
News
`நான் திடீர் மும்பை ரசிகர்... நான் திடீர் கொல்கத்தா guy' - ரசிகர்களை முகாம் மாறவைத்த கடைசி லீக் போட்டி!

`யாரும் பயப்படாதீங்க கய்ஸ். அதான் நான் இருக்கேன்ல' என ஆறுதல் சொன்னார் உத்தப்பா. `நீ இருக்குறதுதான்யா பயமே' என பதிலுக்குக் கத்தினார்கள் ரசிகர்கள். 

கடைசி லீக் நாள்வரை எட்டு இடங்களும் உறுதியாகாமல் வெறியேற்றிய ஒரே ஐ.பி.எல் தொடர் இதுவாகத்தான் இருக்கும். நாளின் முதல் ஆட்டத்தில் ஒரு வழியாகக் கடைசி மூன்று இடங்கள் உறுதியானது. கடைசி ஆட்டமான மும்பை vs கொல்கத்தாதான் ப்ளே ஆஃப்பிற்குள் நுழையும் கடைசி அணியைத் தீர்மானிக்கும் என்பதால் திடீர் ரசிகர்களின் எண்ணிக்கை இந்தத் தடவை கொஞ்சம் அதிகம்தான். மும்பை ஜெயித்தால்தான் சன்ரைஸர்ஸ் உள்ளே வரமுடியுமென்பதால் ப்ளூ ஜெர்சியைப் போட்டுக்கொண்டு குறுக்கும் மறுக்குமாக ஓடிக்கொண்டிருந்தார்கள் ஹைதராபாத் ரசிகர்கள். மறுபக்கம் கொல்கத்தா ஜெயித்தால் முதல் இரண்டு இடங்களில் நம் டீம் நிற்கும் என `கொர்போ லொர்போ ஜீத்போ' என காளகேயர்கள் போலப் பேசித் திரிந்தார்கள் டெல்லி ரசிகர்கள். இத்தனை களேபரங்களுக்கும் மத்தியில்தான் நடந்தது கடைசி லீக் போட்டி.

டாஸ் ஜெயித்த மும்பை வாக்கு மாறாத தவசி விஜயகாந்த் போல மீண்டும் ஃபீல்டிங்கையே தேர்ந்தெடுத்தது. சுப்மன் ஓபனராக கலக்குகிறார் என்பதால் அவரே லின்னோடு இந்த முறையும் களமிறக்கப்பட்டார். மெக்லெனஹன்னின் முதல் ஓவரில் வெறும் மூன்று ரன்கள்தான். அடுத்த ஓவர் வீசிய க்ருணாலோ அதற்கும் குறைவாக 2 ரன்களே விட்டுக்கொடுத்தார். இரு அணிகளும் கடைசியாக சந்தித்தபோது பந்து கிழிய கிழிய அடித்தார்கள் பேட்ஸ்மேன்கள். அப்படி ஒரு தொடக்கத்தை எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே!

3-வது ஓவரின் கடைசி பாலில் சிக்ஸ் அடித்து தொடங்கிவைத்தார் லின். அதற்கடுத்த மலிங்கா ஓவரில் ஒரு சிக்ஸ், ஒரு பவுண்டரி. பும்ரா ஓவரிலும் 9 ரன்கள். பவர்ப்ளேயின் கடைசி ஓவரை சஹார் வீச அதில் 12 ரன்கள். ஸ்கோர் 49/0. `செம்ம... பார்க்கத்தானே போற இந்தக் காளியோட ஆட்டத்தை' என முஷ்டி முறுக்கினார்கள் கொல்கத்தா ரசிகர்கள். `சரி நீங்க பாருங்க, எனக்கு டான்ஸ் பிடிக்காது' என அடுத்த ஓவரின் முதல் பாலில் நடையைக் கட்டினார் கில். அவ்வளவுதான். அதன்பின் கொல்கத்தாவின் சியர்லீடர்ஸ் ஆடக்கூட வாய்ப்பு கிடைக்கவில்லை.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
`நான் திடீர் மும்பை ரசிகர்... நான் திடீர் கொல்கத்தா guy' - ரசிகர்களை முகாம் மாறவைத்த கடைசி லீக் போட்டி!

கில்லை பேக் செய்த ஹர்திக் அடுத்த ஓவரில் லின்னையும் அனுப்பினார். இப்போது க்ரீஸில் இருப்பது கடைசியாக மூன்று போட்டிகளுக்கு முன் அடித்த தினேஷ் கார்த்திக்கும் கடைசியாக நான்கு சீசன்களுக்கு முன் அடித்த உத்தப்பாவும். ஜெட்டில் சென்றுகொண்டிருந்த ரன்ரேட் அப்படியே பாராசூட் கட்டிக் குதித்து, பாதியில் நிற்கும் எட்டுவழிச்சாலையில் தவழ ஆரம்பித்தது. உச்சக்கட்டமாக 11-வது ஓவரை மெய்டன் ஆக்கினார்கள். ஸ்கோர் 61/2. 

ஒரு வழியாகத் தனது 22-வது பதில் சிக்ஸ் அடித்தார் உத்தப்பா. கொல்கத்தாவிற்கு ஆறு ஓவர்கள் கழித்து வரும் பவுண்டரி இது! அந்த ஓவரிலேயே தொட்டுக்கொடுத்து அவுட்டானார் தினேஷ் கார்த்திக். ரஸல் உள்ளே வந்தார். 'சிங்கம் களமிறங்கிடுச்சே' எனத் தொண்டை கமற உற்சாகமானார்கள் கொல்கத்தா ரசிகர்கள். `எது சிங்கமா...? அப்போ உசுரக் காப்பாத்திக்க ஓடுங்கய்யா!' என முதல் பாலிலேயே கேட்ச் கொடுத்துவிட்டு எஸ்கேப்பானார் ரஸல். முக்காடு போட்டுக்கொண்டார்கள் ரசிகர்கள்.

`நான் திடீர் மும்பை ரசிகர்... நான் திடீர் கொல்கத்தா guy' - ரசிகர்களை முகாம் மாறவைத்த கடைசி லீக் போட்டி!

ஒருபக்கம் உத்தப்பா பந்தை விட்டுவிட்டு க்ரீஸில் பள்ளம் தோண்டிக்கொண்டிருப்பதைப் பார்த்த நிதிஷ் ரானா பொறுப்பைக் கையிலெடுத்துக்கொண்டார். சட்டென இரு சிக்ஸ்கள். சிக்கிய பாலில் சிங்கிள்கள். அதன்பின் இன்னொரு சிக்ஸ் என 13 பந்துகளில் 26 ரன்கள் எடுத்து அவுட்டானார் ரானா. `யாரும் பயப்படாதீங்க கய்ஸ். அதான் நான் இருக்கேன்ல' என ஆறுதல் சொன்னார் உத்தப்பா. `நீ இருக்குறதுதான்யா பயமே' என பதிலுக்குக் கத்தினார்கள் ரசிகர்கள். 

ஆனாலும் அசரவில்லையே உத்தப்பா. முடிந்தவரை பந்துகளை சாப்பிட்டு ஜீரணமாக விளம்பர பிரேக்கில் தண்ணீர்குடித்தபடி இருந்தார். கடைசியாக பும்ராவுக்கே போரடிக்க, இறுதி ஓவரில் அவரை அவுட்டாக்கினார். 47 பந்துகளில் 40 ரன்கள். அயர்லாந்து பேட்ஸ்மேன்கள்கூட அடித்து ஆடத் தொடங்கிவிட்ட காலத்தில் வாட் இஸ் திஸ் சாரே? 20 ஓவர்கள் முடிவில் 133 ரன்கள் என்ற இமாலய இலக்கை (அவர்கள் பேட் செய்த வேகத்திற்கு) எட்டியது கொல்கத்தா. மொத்த 120 பந்துகளில் 60 பந்துகள் டாட் பால்கள். அதுவும் `பந்து மட்டும் போடுங்க, நானே சிக்ஸுக்கு அனுப்பிவைக்கிறேன்' என பிட்ச்சே கெஞ்சும் வான்கடேவில்...! சத்திய சோதனை!

குட்டி ஸ்கோர். டிபெண்ட் செய்ய அனுபவம் வாய்ந்த சாவ்லா, குல்தீப் போன்ற பவுலர்களும் அணியில் இல்லை. எனவே கிட்டத்தட்ட முதல் இன்னிங்ஸ் முடிவிலேயே ரிசல்ட் முடிவாகிவிட்ட மேட்ச்தான். முதல் ஓவரிலேயே 9 ரன்கள். அதற்கடுத்த இரண்டு ஓவர்கள் ரன் வராவிட்டாலும் சேர்த்து வைத்து ரஸல் வீசிய நான்காவது ஓவரில் 21 ரன்கள் எடுத்தார்கள் மும்பை பேட்ஸ்மேன்கள். பவர்ப்ளே முடிவில் 46 ரன்கள். அடுத்த ஓவரின் முதல் பந்திலேயே அவுட்டானார் டி காக்.

`நான் திடீர் மும்பை ரசிகர்... நான் திடீர் கொல்கத்தா guy' - ரசிகர்களை முகாம் மாறவைத்த கடைசி லீக் போட்டி!

தேவையான ரன்ரேட் ஆறு என்றாலும் ஏழுக்குக் குறையாமல் பார்த்துக்கொண்டார்கள் ரோகித்தும் சூர்யகுமார் யாதவும்! பத்து ஓவர்கள் முடிவில் 76 ரன்கள். 14-வது ஓவரில் ஸ்கோர் நூறைக் கடந்தது. அந்த ஓவர் முடிவில் 108 ரன்கள். இலக்கை அடைய மேலும் 13 பந்துகளை எடுத்துக்கொண்டார்கள் மும்பை பேட்ஸ்மேன்கள். இப்படி எழுதியதைவிட ஈஸியாகவே முடிந்தது இரண்டாவது இன்னிங்ஸ். எந்த இடத்திலும் மும்பையை நெருக்கடிக்குள் தள்ளவில்லை கொல்கத்தா பவுலர்கள். 

புள்ளிப்பட்டியலில் முதலிடத்தைப் பிடித்து சென்னையில் சென்னையைச் சந்திக்கவுள்ளது மும்பை. டெல்லியும் ஹைதராபாத்தும் இன்னும் ஒரு முறை மோதவிருக்கின்றன. மற்ற அணிகளுக்கும் பெரிதாக ஏமாற்றமில்லை. புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்திலிருக்கும் பெங்களூருவுக்கும் ப்ளே ஆஃப்பிற்குள் நுழைந்த ஹைதராபாத்திற்குமான வித்தியாசம் ஒரே ஒரு புள்ளிதான். சியர்ஸ்!