Published:Updated:

ஜெயிச்சது டெல்லிதான்... ஆனா, கவனிக்க வெச்சது ரியான் பராக்! #DCvsRR

ஜெயிச்சது டெல்லிதான்... ஆனா, கவனிக்க வெச்சது ரியான் பராக்! #DCvsRR
ஜெயிச்சது டெல்லிதான்... ஆனா, கவனிக்க வெச்சது ரியான் பராக்! #DCvsRR

டெல்லி கேப்பிடல்ஸை பொறுத்தவரை, கோப்பைக் கனவை துரத்தி ஓடிக்கொண்டிருக்கிறது. குவாலிஃபையரில் பங்கேற்குமா இல்லையா என்பது சென்னை, மும்பை அணிகளின் கடைசிப் போட்டிக்குப் பின் தெரிந்துவிடும். காத்திருப்போம்!

டப்பு ஐபிஎல் சீஸனில் ‘ஹோம் கிரவுண்டு லக் இல்ல’ என முத்திரை குத்தப்பட்ட டெல்லி கேப்பிடல்ஸ், ஃபெரோஸ் ஷா கோட்லா  மைதானத்தில் நடந்த கடைசி போட்டியை வென்று ரசிகர்களை ஆசுவாசப்படுத்தியுள்ளது. கடைசி போட்டி வரை ப்ளே ஆஃப் கனவை நிஜமாக்கப் போராடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு, 17-வயது ரியான் பராகின் அரை சதம் மட்டுமே நேற்றைய போட்டியின் ஒரே ஆறுதல். #DCvsRR

ரன் ரேட் குறைந்திருந்த டெல்லி கேப்பிடல்ஸுக்கு குவாலிஃபையரில் விளையாட வெற்றி தேவைப்பட்டது. ராஜஸ்தான் ராயல்ஸுக்கு ப்ளே ஆஃப் எண்ட்ரிக்கான கடைசி வாய்ப்பு நேற்றைய போட்டி. உலகக்கோப்பைக்கு ஆயுத்தமாக ஸ்டீவன் ஸ்மித் ஆஸ்திரேலியா பறந்ததால், ஐந்து போட்டிகளுக்கு பிறகு மீண்டும் கேப்டனாக பொறுப்பேற்ற அஜின்கியா ரஹானே டாஸ் ஜெயித்து பேட்டிங்கை தேர்வு செய்தார். “நானே ஓராயிரம் முறை சேஸிங் தேர்வு செஞ்சுட்டன். இப்ப சேஸிங் தானே தேடி வருது. ஜமாய்ச்சிடுலாம்” என அப்பவே ஸ்ரேயாஸ் ஐயர் குஷியானார்.

ஜெயிச்சது டெல்லிதான்... ஆனா, கவனிக்க வெச்சது ரியான் பராக்! #DCvsRR

ராஜஸ்தானுக்கு ஓப்பனிங் வீரர்களாக களமிறங்கினர் ரஹானேவும், லிவிங்ஸ்டன்னும். “நான் கேப்டனா இல்லைனா ரன் வரும். கேப்டனா இருந்தா ரன் வராது” என ரஹானே சபதம் எடுத்திருக்கிறாரோ என்னமோ, கடைசி ஒன்றிரண்டு போட்டிகளில் குறைந்தது 30+ ஸ்கோர் செய்திருந்த அவர், இந்த போட்டியில் 2 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினார். “போன மேட்சுலையும் என்ன ஆட விட்டுருந்தா சென்னையை நசுக்கிருக்கலாம். தோத்துட்டு வந்துடீங்களே மக்கா” என்று கேட்டபடி ஓய்வுக்குப் பின் அணிக்குத் திரும்பிய இஷாந்த் ஷர்மா, ராஜஸ்தானின் ஓப்பனிங்கை காலி செய்தார். மொத்த பாரமும் சஞ்சு சாம்சனின் தலைமேல்!

லாம்ரார், சாம்சன் இணை செட்டாகி இன்னிங்ஸ் பில்ட் செய்வதற்குள், அக்சர் படேல் வீசிய ஐந்தாவது ஓவரின்போது இருவருக்கிடையில் ஒரே குழப்பம். ஸ்ட்ரைக்கிங் எண்டில் இருந்த சாம்சன் 1 ரன் எடுக்கப் பாதி தூரம் ஓடி வர, `ரன்னே வேண்டாம் வாராதே’ என லாம்ரார் தொண்டை கிழிய கத்த, ப்ரித்வி ஷா ஸ்டம்ப்ஸை நோக்கி அடிக்க போதிய நேரம் இருந்தது. டைரக்ட் ஹிட். கடுப்பில் வெளியேறினார் சாம்சன். “நான் ரன் அவுட்டான கொடுமைக்கு, நீயாவது நின்னு அடிக்கனும்” என்று லாம்ராரிடம் சொல்லிவிட்டு சாம்சன் டிரெஸிங் ரூம் போவதற்குள் பின்னாடியே கேட்ச் கொடுத்து நடையைக் கட்டினார் லாம்ரார். இஷாந்த் ஷர்மாவுக்கு மூன்றாவது விக்கெட்.

ஜெயிச்சது டெல்லிதான்... ஆனா, கவனிக்க வெச்சது ரியான் பராக்! #DCvsRR

பவர் ப்ளே முடியும்போது 30/4 என்ற பரிதாப நிலையில் இருந்தது ராஜஸ்தான் ராயல்ஸ். இப்பதான் குட்டிப்புலி எண்ட்ரி. ரயான் பராக் பேட்டிங் இறங்கினார். அடுத்த ஐந்து ஓவர்களுக்கு சிங்கிள்ஸ் தட்டிய பராக் - ஸ்ரேயாஸ் கோபால் இணை, அமித் மிஸ்ரா வீசிய 12-வது ஓவரில் பிரிந்தது. முதல் பந்து டாட் பால். இரண்டாவது பந்தில் ஸ்ரேயாஸ் கோபால் க்ளீன் பவுல்டு, மூன்றாவது பந்தில் ஸ்டூவார்ட் பின்னி கேட்ச். பின்னி வந்ததும் தெரியவில்லை, போனதும் தெரியவில்லை (என்னிக்கி தெரிஞ்சுருக்கு!?). ஹாட்ரிக் வாய்ப்பில் நான்காவது பந்தை வீசினார் மிஸ்ரா. ஸ்ட்ரைக் செய்த கெளதம் பந்தைத் தூக்கி அடிக்க, கேட்சுக்கான அத்தனை சாத்தியங்கள் இருந்தும் சரியாக மிஸ் செய்தார் டிரென்ட் போல்ட். மிஸ்ரா தலைமேல் கை வைத்து பொலம்பிவிட்டு சில மணித்துளிகளில் நார்மலானார். இந்த போட்டியில் ஹாட்ரிக் எடுத்திருந்தால், ஐபிஎல் தொடரில் அது மிஸ்ராவின் நான்காவது ஹாட்ரிக்காக இருந்திருக்கும்!

ஜெயிச்சது டெல்லிதான்... ஆனா, கவனிக்க வெச்சது ரியான் பராக்! #DCvsRR

ராயல்ஸ் மொத்தமும் தட்டுத்தடுமாறியபோதும், நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் ரியான் பராக். அதிரடி ஷாட் இல்லை, சிக்சர்கள் இல்லை. ஆனாலும், கிடைக்கும் வாய்ப்பில் ஓவருக்கு ஒரு பவுண்டரி விளாசிய பராக், ஐபிஎல் தொடரில் அரை சதம் கடந்த இளம் வீரர் என்ற சாதனைக்கு சொந்தமானார். ராயல்ஸ் ரசிகர்கள் மட்டுமல்லாது, டெல்லி கேப்பிடல்ஸ் ரசிகர்களும், கிரிக்கெட் ஆர்வலர்களும் பராகின் அரை சதத்தை பாராட்டினர். 20-வது ஓவர் முடிவில் அணியின் ஸ்கோர் 115/9. பராகின் அரை சதம்தான் ராயல்ஸின் பாதி ஸ்கோர். இந்தப் போட்டியில், ராஜஸ்தானுக்குக் கிடைத்த ஒரே ஆறுதல் ரியான் பராக்.

ப்ளே ஆஃப் சென்றாகிவிட்டது. ஷா, தவான், ஸ்ரேயாஸ் ஐயர், பன்ட் என பலமான பேட்டிங் லைன் - அப். எப்படியும் 10 ஓவரில் போட்டி முடிந்துவிடும் என டெல்லி ரசிகர்கள் குஷியாகியபோது அங்கேதான் ட்விஸ்டு. சோதி என்றொரு வீரர், இந்த சீஸனில் விளையாடும் இரண்டாவது போட்டி இது. சேஸிங்கில் ஷா, தவான் காட்டிய வேகத்துக்கு முட்டுக்கட்டையை 3-வது ஓவரிலேயே போட்டார். முதலில் தவான், அடுத்தது ஷா. டெல்லியின் ஓப்பனிங் காலி. ஒரே ஓவரில் இரண்டு விக்கெட்டுகள் எடுத்துவிட்டு ராஜஸ்தானுக்கு நம்பிக்கை கொடுத்தார் இந்த நியூசிலாந்து வீரர். அந்த நம்பிக்கை நீண்ட நேரம் நீடிக்கவில்லை.

ஜெயிச்சது டெல்லிதான்... ஆனா, கவனிக்க வெச்சது ரியான் பராக்! #DCvsRR

ஸ்ரேயாஸ் ஐயர் - பண்ட் இணை அதே சோதி வீசிய 6-வது ஓவரில் ரன் சேர்க்க தொடங்கினர். இரண்டு சிக்சர்கள், ஒரு பவுண்டரி என ஒரே ஓவரில் 17 ரன்கள். பராக் வீசிய அடுத்த ஓவரில், மிட் விக்கெட்டில் அடுத்தடுத்து இரண்டு சிக்சர்கள். `பன்ட் இருக்கார்’ என நம்பிய டெல்லி கேப்பிடல்ஸ் ரசிகர்களின் நம்பிக்கை உண்மையானது. 8-வது ஓவரில் ஸ்ரேயாஸ் ஐயர் வெளியேறினாலும் பன்ட் கடைசி வரை களத்தில் நின்றார். சேஸிங் தொடக்கம் முதலே, வெற்றிக்குத் தேவையான ரன்களைவிட பந்துகள் அதிகமிருந்ததால், கிடைக்கும் வாய்ப்பில் ஷா, தவான், ஸ்ரேயாஸ், பண்ட அடித்த பவுண்டரி, சிக்சர்கள் 115 போன்ற சுமாரான இலக்கை எளிதில் நெருங்கிட உதவியது. வின்னிங் ஷாட் சிக்சர் அடித்த பன்ட், 38 பந்துகளில் அரை சதம் கடந்தார். 16.1 ஓவரில் வெற்றியைத் தொட்டது டெல்லி கேப்பிடல்ஸ்.

வெற்றி, தோல்வியென இந்த சீஸன் முழுவதும் ராஜஸ்தான் ராயல்ஸுக்கு ஒரு ரோலர் கோஸ்டர் ரைடாக அமைந்தது. இருந்தாலும், கடைசி போட்டி வரை ப்ளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பைத் தக்கவைத்துக்கொண்டது ஆறுதல். டெல்லி கேப்பிடல்ஸை பொறுத்தவரை, கோப்பைக் கனவை துரத்தி ஓடிக்கொண்டிருக்கிறது. குவாலிஃபையரில் பங்கேற்குமா இல்லையா என்பது சென்னை, மும்பை அணிகளின் கடைசிப் போட்டிக்குப் பின் தெரிந்துவிடும். காத்திருப்போம்!

Vikatan
அடுத்த கட்டுரைக்கு