Published:Updated:

"என்ன ஏதோ வெள்ளையா உருண்டு வருது"- MIvSRH மேட்ச் ரிப்போர்ட்

"என்ன ஏதோ வெள்ளையா உருண்டு வருது"- MIvSRH மேட்ச் ரிப்போர்ட்

இதயம் பலவீனமானவர்கள் நெஞ்சைப் பிடித்தார்கள். சி.எஸ்.கே ரசிகர்களோ "ரசத்தை ஊத்து அதுல பூனை இருக்கா பார்ப்போம்" என அசால்டாய் அமர்ந்திருந்தார்கள்.

Published:Updated:

"என்ன ஏதோ வெள்ளையா உருண்டு வருது"- MIvSRH மேட்ச் ரிப்போர்ட்

இதயம் பலவீனமானவர்கள் நெஞ்சைப் பிடித்தார்கள். சி.எஸ்.கே ரசிகர்களோ "ரசத்தை ஊத்து அதுல பூனை இருக்கா பார்ப்போம்" என அசால்டாய் அமர்ந்திருந்தார்கள்.

"என்ன ஏதோ வெள்ளையா உருண்டு வருது"- MIvSRH மேட்ச் ரிப்போர்ட்

ப்ளே ஆஃப் பயணத்துக்கு வெயிட்டிங் லிஸ்டில் இருந்த டிக்கெட்டை கன்ஃபார்ம் செய்யும் முனைப்பில் பெட்டி, படுக்கையோடு காத்திருந்தது மும்பை இந்தியன்ஸ். "குறுக்கே இந்த கௌசிக் வந்தா..." எனக் கையில் கர்சீஃபோடு வந்தது சன்ரைஸர்ஸ் அணி! 

வார்னர் இல்லாத சோகத்தில் சன்ரைஸர்ஸும் சன்ரைஸர்ஸ் அணியில் பியூஸ் சாவ்லா இல்லாத சோகத்தில் ஹர்திக் பாண்டியாவும் டக்கவுட்டில் அமர்ந்திருந்தனர். சன்ரைஸர்ஸ் அணியில் வார்னருக்குப் பதிலாக மார்டின் கப்டிலும் சந்தீப் ஷர்மாவுக்குப் பதிலாகப் பாசில் தம்பியும் சேர்க்கப்பட்டனர். தம்பி உடையான் படைக்கு அஞ்சான்!

"என்ன ஏதோ வெள்ளையா உருண்டு வருது"- MIvSRH மேட்ச் ரிப்போர்ட்

"நல்லாத்தானே போய்கிட்டு இருக்கு. அப்படியே போகட்டும்" என லெவன்ஸில் எந்த மாற்றமும் இல்லாமல் களமிறங்கியது மும்பை. டாஸ் வென்ற ரோகித் சர்மா, பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார். "சிங்கத்துக்கு 200 போடுற மூடு வந்துடுச்சு" என ஆரவாரமானார்கள் மும்பை மக்கள். ரோகித்தும் `மீசை வைத்த குழந்தை' குயின்டன் டி காக்கும் இன்னிங்ஸை ஓப்பன் செய்தனர். புவனேஷ்வர் குமார், ஆட்டத்தின் முதல் ஓவரை வீசினார்.

முதல் ஓவரின் இரண்டாவது பந்தை, தேர்ட் மேன் பக்கமாகத் திருப்பிவிட்டார் ரோகித். தேர்ட் மேன் திசையில் நின்றுகொண்டிருந்த தம்பி, "என்ன ஏதோ நம்மளைப் பார்த்து வெள்ளையா உருண்டு வருது. ஓ பந்தா..." எனச் சுதாரிப்பதற்குள் கைக்கும் கவட்டைக்கும் இடையே புகுந்து பவுண்டரிக்குள் போய் விழுந்தது பந்து. கடைசி பந்தையும் கவர் திசையில் விளாச, மின்னல் வேகத்தில் இன்னொரு பவுண்டரி கிடைத்தது ரோகித்துக்கு. "இந்த மேட்சில் 200 ரன்கள் மலர்ந்தே தீரும்" எனக் குஷியானார்கள் ஹிட்மேன் ரசிகர்கள். ஆட்டத்தின் இரண்டாவது ஓவரை வீசினார் கலீல் அகமது.

முதல் பந்தில் ஒரு சிங்கிளைத் தட்டிவிட்டு "தல நீ ஆடு தல" என ரோகித்திடம்  ஸ்டிரைக்கை கொடுத்தார் குயின்டன் டி காக். ரோகித்தும் கவர், பேக்வார்டு பாயின்ட் மற்றும் மிட் ஆன் திசைகளில் மூன்று பவுண்டரிகளை 'ச்சூ' என விரட்டிவிட்டார். நபி வீசிய அடுத்த ஓவரில், வெறும் நான்கு ரன்கள் மட்டுமே கிடைத்தன. "இன்னைக்கு ஒற்றைப்படை ராசியில்ல, இரட்டைப்படை ட்ரை பண்ணுவோம்" என நான்காவது ஓவரை வீச வந்தார் புவி. பலனும் கிடைத்தது, புவிக்கு அல்ல பல்தான்களுக்கு! தொடர்ந்து இரண்டு பவுண்டரிகளைத் தெறிக்கவிட்டு பால்வடியும் முகத்தோடு பாவமாய் பார்த்தார் டி காக். 

"என்ன ஏதோ வெள்ளையா உருண்டு வருது"- MIvSRH மேட்ச் ரிப்போர்ட்

ஐந்தாவது ஓவரை வீச ரஷீத்கான் வந்தார். ஒரே ஒரு ரன் மட்டுமே கொடுத்தார். பொறுப்பாக ஓவரை முடித்தார். "பாருங்கடா என் தளபதிய" எனப் பெருமைப்பட்டார் கேன். அடுத்த ஒவரை வீச வந்தார் கலீல். இந்தமுறை அரவுண்ட் தி ஸ்டெம்ப்ஸ் வழியாக கலீல் வீசிய பந்தை, பேக்ஃபூட்டில் சென்று புல் ஆட முயன்றார் ரோகித். பந்தோ கபாலத்துக்கு மேல் செங்குத்தாகப் பறந்துபோய் மிட் ஆனில் நின்றுகொண்டிருந்த நபியின் கையில் விழுந்தது. 200 அடிக்க வேண்டிய ரோகித் சர்மா, 24 ரன்களோடு நடையைக் கட்டினார். "ஒருநாள் 200 மலர்ந்தே தீரும்" என கண்களைத் துடைத்தனர் ஹிட்மேன் ரசிகர்கள். அடுத்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவ், சந்தித்த முதல் பந்தையே டீப் பேக்வார்டு ஸ்கொயர் பவுண்டரிக்கு ஸ்டிக்கர் ஒட்டி பார்சல் பண்ணினார். அதே ஓவரில், எக்ஸ்ட்ரா கவர் பவுண்டரிக்கு இன்னொரு பார்சலையும் அனுப்பிவிட்டார். பவர் ப்ளேயின் முடிவில் 44/1 என மெதுவாக மலையேறிக்கொண்டிருந்தது மும்பை அணி

"இப்போ படிதான் ஏறிகிட்டு இருக்கு. பாண்டியா இறங்கிவந்ததும்தான் மலையேறும். வெயிட் கரோ" என நம்பிக்கையாய் இருந்தார்கள் மும்பை வாலாக்கள். நபி வீசிய ஏழாவது ஓவரில் ஐந்து சிங்கிள்கள், ஒரு பவுண்டரி கிடைத்தது. அடுத்த ஓவரை வீச "தம்பி வா பந்துவீச வா" எனப் பாசில் தம்பியை அழைத்தார் கேப்டன் கேன். முதல் மூன்று பந்துகளைக் கட்டுக்கோப்பாய் வீசிய தம்பி, நான்காவது பந்தில் நான்கு ரன்களைக் கொடுத்துவிட்டுப்போனார். நபி வீசிய அடுத்த ஓவரில், 83 மீட்டருக்கு மினி ஹெலிகாப்டர் ஒன்றைப் பறக்கவிட்டார் சூர்யகுமார் யாதவ். மீண்டும் தம்பி வந்தார், ஏழு ரன்கள் மட்டும் கொடுத்தார். "எங்கய்யா இருந்த இவ்ளோ நாளா" என நெகிழ்ந்தனர் ஹைதராபாத், கொல்கத்தா, பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் ரசிகர்கள். ரசீத் வீசிய அடுத்த ஓவரில் வெறும் ஐந்து ரன்கள்! விசிலடித்துக் கொண்டிருந்த வாய்கள், கொட்டாவி விட ஆரம்பித்தன...

"என்ன ஏதோ வெள்ளையா உருண்டு வருது"- MIvSRH மேட்ச் ரிப்போர்ட்

ஆட்டத்தின் 12-வது ஓவரின் முதல் பந்து, கலீல் விசீய லென்த் பந்தை, புல் ஷாட் ஆடி  டீப்-ஸ்கொயர் லெக் திசையில் சிக்ஸரை விளாசினார் குயின்டன் டி காக். செம ஸ்டைலிஷ்! அதே ஓவரில் "அப்போ நாங்கனாப்ல யாரு" என சூர்யகுமாரின் விக்கெட்டைக் கழட்டினார் கலீல். டீப் கவர் திசையில் கேட்ச் கொடுத்துவிட்டு, கூரியர் கம்பெனியை மூடினார் சூர்யகுமார். மும்பை தடுமாறத் தொடங்கியது! சன்ரைஸர்ஸ் தாறுமாறாய் ஆடத் தொடங்கியது! அடுத்ததாக ஹைதராபாத் அணியை குஷிப்படுத்த களமிறங்கினார் லீவிஸ். அழகாய் ஆறு பந்துகளைச் சாப்பிட்டுவிட்டு, ஒரு ரன் பில்லைக் கொடுத்துவிட்டுக் கிளம்பினார். லீவிஸின் இந்த கேமியோவை பார்த்து மும்பை அணியினருக்கே சிரிப்பு வந்திருக்கும்.

"வந்துட்டான், வந்துட்டான், வந்துட்டான்..." என ராக்கி பாய் மாஸோடு கிரவுண்டுக்குள் வந்தார் ஹர்திக். போன மேட்ச்சில் ஹர்திக் அடித்த சிக்ஸருக்கும் பவுண்டரிக்கும் எழுந்து, எழுந்துபோய் டான்ஸ் ஆடியதில் சியர்லீடர்களே நேற்றைய மேட்சில் மெடிக்கல் லீவில் இருந்திருப்பார்கள். காரணம், முந்தைய மேட்சில் ஹர்திக் அடித்தது அடி அல்ல, இடி! 14-வது ஓவரை வீசவந்தார் பாசில் தம்பி, ஸ்ட்ரைக்கர் எண்டில் நின்றுகொண்டிருந்தார் க்ருணாலின் தம்பி.  முதல் பந்து டாட், இரண்டாவது பந்து 'ஸொய்ங்...'னு ஒரு சிக்ஸர். தம்பியை அடித்து,  டி காக்கிடம் ஆட்டோ ஏற்றி அனுப்பி வைத்தார் ஹர்திக். தன் பங்குக்கு டி காக்கும் ஒரு பவுண்டரியை ஊமைக்குத்தாய் குத்திவிட்டு மறுபடியும் ஹர்திக்கிடம் அனுப்பிவைக்க, எக்ஸ்ட்ரா கவரில் ஒரு பவுண்டரியை `படார்' என விளாசிவிட்டு 'சின்னதம்பி' பிரபு போல் சிரித்தார் ஹர்திக்.

"என்ன ஏதோ வெள்ளையா உருண்டு வருது"- MIvSRH மேட்ச் ரிப்போர்ட்

"ரன்லாம் தர்றதுக்கில்ல" என ஒற்றைக்காலில் நின்றுகொண்டிருந்த ரஷீத், மீண்டும் ஒற்றை இலக்க ரன் மட்டுமே கொடுத்து ஓவரை முடித்தார். 16 வது ஓவரை வீசவந்தார் புவி. பாண்டியனின் ராஜ்ஜியத்தை தவிடுபொடியாக்க, ஆல்ரெடி ப்ளூகலர் ஸ்கெட்சில் ப்ளூப்ரின்ட் போட்டு எடுத்துவந்திருந்த புவி, அதை அச்சுபிசகாமல் செயல்படுத்தினார். ஆவுட் சைட் ஆஃப் பக்கமாக ஒரு ஷார்ட் லென்த் பந்து, பாண்டியாவை பேக் அப் செய்து பெவிலியனுக்கு அனுப்பிவிட்டார்.  அவ்ளோ அடித்தும் தாங்கிய தம்பி, மீண்டும் பந்துவீச வந்தார்.

ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸரை வெஞ்சன கிண்ணத்தில் போட்டு ஆறுதல் பரிசாக கொடுத்து அனுப்பினார் டி காக். `பொறுப்பான’ ரஷீத் வீசிய அடுத்த ஓவரில், பொல்லார்டு ஒரு சிக்ஸரும் டி காக் ஒரு பவுண்டரியும் விளாசினர். மிக முக்கியமான 19-வது ஓவரில், வெறும் 4 ரன்கள் மட்டும் கொடுத்து அதிரவைத்தார் புவி. கலீல் வீசிய கடைசி ஓவரின் முதல் பந்திலேயே பொல்லார்ட் அவுட். "எப்படியிருந்தா என்னடா, எல்லோரும் சுகப்பிரசவமாதானேடா பிறந்து கிடந்தோம்" என்பதைப் போல அவுட்டான மும்பை பேட்ஸ்மேன்கள் எல்லோரும் கேட்ச் கொடுத்துத்தான் அவுட் ஆகியிருந்தனர்! ஓவரின் ஐந்தாவது பந்தில் க்ருணால் ஒரு சிக்ஸரைத் தூக்க, 162-5 என இன்னிங்ஸை முடித்துக்கொண்டது மும்பை.

"நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவுமே தப்பில்ல. நீங்க ஜெயிக்கணும்" என ஹைதராபாத் ரசிகர்களிடம் வேண்டிக்கொண்டிருந்தார்கள் கொல்கத்தா, பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் ரசிகர்கள். சாஹாவும் கப்டிலும் ஓப்பன் செய்ய, முதல் ஓவரை வீசவந்தார் ஸ்ரன். முதல் பந்திலேயே பவுண்டரி ஒன்றை விளாசி, ஹைதராபாத் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார் சாஹா. மலிங்கா வீசிய அடுத்த ஓவரில், தேர்ட் மேன் திசையில் ஒரு பவுண்டரியைத் தட்டிவிட்டார் கப்டில்! மூன்றாவது ஓவரை வீசவந்தார் ஸ்ரன். அவரின் வருகைக்கு ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருந்த சாஹா, இரண்டு பவுண்டரிகளை விளாசினார். அதே ஓவரில் லாங் ஆஃப் திசையில் அற்புதமான ஒரு சிக்ஸர் அடித்தார் கப்டில். "பும்ராஸ்த்திரத்தை இறக்கிட வேண்டியதுதான்" என முடிவெடுத்தார் ரோகித். பும்ரா வீசிய நான்காவது ஓவரில், ஆசைதீர இரண்டு பவுண்டரிகளை அடித்துவிட்டு, கடைசிப் பந்தில் லீவிஸிடம் கேட்ச் கொடுத்துவிட்டு நடையைக் கட்டினார் சாஹா. ஆம், லீவிஸ் இந்த மேட்சில் இருக்கிறார். 

"என்ன ஏதோ வெள்ளையா உருண்டு வருது"- MIvSRH மேட்ச் ரிப்போர்ட்

`முரட்டு ஃபார்ம்' மனீஷ் பாண்டே களமிறங்கினார். மலிங்கா வீசிய 5வது ஓவரில் இரண்டு பவுண்டரி, தேர்ட் மேன் திசையில் ஒரு சிக்ஸரை பறக்கவிட்டு, முரட்டு ஃபார்முக்கு விளக்கவுரை எழுதிக்கொண்டிருந்தார் மனீஷ். "ஆஹா எல்லாம் நல்லபடியா போய்கிட்டு இருக்கு" என நான்கு மாநிலத்து ரசிகர்களும் ஆரவாரமாக, புஸ்வானம் கொளுத்திவிட்டு வெளியேறினார் கப்டில். பும்ரா பந்தில் எல்.பி.டபிள்யு! "வார்னர் மட்டும் இருந்திருந்தா" என செல்முருகன் ஸ்டைலில் புலம்பத் தொடங்கினர் ஹைதராபாத் ரசிகர்கள். ராகுல் சாஹர் வீசிய 7-வது ஓவரில் ஒரேயொரு பவுண்டரி கிடைத்தது மனீஷுக்கு. க்ருணால் வீசிய 8-வது ஓவரின் முதல் பந்திலேயே வில்லியம்சன் அவுட்! ஹைதராபாத் ரசிகர்கள் இடிந்துப்போனார்கள். 10-வது ஓவரின் முடிவில் 80/3 என்ற நிலையில் நின்றுகொண்டிருந்தது சன்ரைஸர்ஸ் அணி!

"அதான் வேர்ல்டு கப்ல செலெக்ட் ஆகியாச்சு. எதுக்கு உசுரக்கொடுத்து ஆடி, எனர்ஜிய வேஸ்ட் பண்ணனும்" என்ற மைண்ட் செட்டில் இருக்கிறார்போலும் விஜய் ஷங்கர். 17 பந்துகளை உருட்டு உருட்டென உருட்டி, 12 ரன்கள் மட்டுமே எடுத்து அமைதியாக பெவிலியனுக்கு திரும்பினார். அடுத்ததாக வந்த அபிஷேக் சர்மாவும் ஹர்திக் பாண்டியா பந்தில் அவுட். பார்ட்னர்ஷிப் போட வருபவர்களை எல்லாம் "ஜருகண்டி ஜருகண்டி" என பெவிலியன் பக்கமாய் அனுப்பிவிட, தனியாய் காற்றில் கம்பு சுற்றிக்கொண்டிருந்தார் மனிஷ் பாண்டே. பாவம்! அப்போதுதான் வந்தார் நபி. இருவரும் சேர்ந்து ஓவருக்கு இரண்டு பவுண்டரிகளை மட்டும் கணக்குப்போட்டு வெளுக்க, 6 பந்துகளுக்கு 17 ரன்கள் என்ற நிலைக்கு வந்தடைந்து ஹைதராபாத்.

"என்ன ஏதோ வெள்ளையா உருண்டு வருது"- MIvSRH மேட்ச் ரிப்போர்ட்

கடைசி ஓவரை வீசவந்தார் ஹர்திக். முதல் இரண்டு பந்துகளில் சிங்கிள், மூன்றாவது பந்தை லாங் ஆன் திசையில் சிக்ஸருக்கு விளாசினார் நபி. அடுத்த பந்தே அவரும் அவுட்! "இதயம் பலவீனமானவர்கள் நெஞ்சைப் பிடித்தார்கள். சி.எஸ்.கே ரசிகர்களோ "ரசத்தை ஊத்து அதுல பூனை இருக்கா பார்ப்போம்" என அசால்டாய் அமர்ந்திருந்தார்கள். கடைசி 2 பந்துகள், வெற்றிக்கு 9 ரன் தேவை. டபுள்ஸ் ஒன்றைத் தட்டிவிட்டு, கடைசிப் பந்தில் சிக்ஸரையும் அடித்து "அடுத்து யாரு... வாங்கடா" என வான்கடே மைதானத்தை அலறவிட்டார் மனீஷ் பாண்டே. ஐபிஎல்லில் சூப்பர் ஓவர் என ஒன்றிருக்கிறது என ஞாபகப்படுத்திய மனீஷுக்கு நன்றி!

சூப்பர் ஓவரை வீசத் தயாரானார் பும்ரா. மனீஷ் பாண்டே மற்றும் நபி களமிறங்கினர். முதல் பந்திலேயே இரண்டு ரன்கள் ஓடுகிறேன் என ரன் அவுட்டானார் மனீஷ். ச்சை! அடுத்ததாக கப்டில் களமிறங்கினார். அவர் ஒரு சிங்கிளைத் தட்ட, அடுத்த பந்தை டீப் ஸ்கொயர் லெக் திசையில் சிக்ஸருக்கு பறக்கவிட்டார் நபி! சூப்பர் ஓவரில் 8 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது சன்ரைஸர்ஸ். மும்பை அணிக்காக ஹர்திக்கும் பொல்லார்டும் களமிறங்கினார். அதிலேயே ரிசல்ட் தெரிந்துவிட்டது! ரஷீத்கான் வீசிய முதல் பந்தை, லாங் ஆஃப் திசையில் சிக்ஸருக்கு விரட்டினார் ஹர்திக். அடுத்த பந்தில் ஒரு சிங்கிள், அதற்கடுத்த பந்தில் ஒரு டபுள்ஸ். மேட்ச் ஓவர்! டிக்கெட்டை கன்ஃபார்ம் செய்தனர் மும்பை இந்தியன்ஸ். 'பூம் பூம்' பும்ராவுக்கு மேன் ஆஃப் தி மேட்ச் விருது வழங்கப்பட்டது!

சூப்பர் ஓவரின் ஸ்கோர் கார்டு டிசைனையோ கலரையோ தயவு செய்து மாற்றவும். ஸ்கோர், வோட்டர் மெஷினில் இருந்த `நாம் தமிழர் கட்சி' சின்னம் போல் மங்கலாய் தெரிகிறது!