Published:Updated:

``அக்ரெஸிவா இருப்பதில் என்ன தவறு? - சௌரவ் கங்குலி #VikatanExclusive

கேப்டன்சி, ஒரு அணியை உருவாக்குவதிலிருந்து தொடங்குகிறது என்று நான் நினைக்கிறேன். ஒரு நல்ல அணியை உருவாக்கவேண்டும். அதன்பின் அதை வெற்றி பெறும் அணியாக உருமாற்றவேண்டும்.

``அக்ரெஸிவா இருப்பதில் என்ன தவறு? - சௌரவ் கங்குலி #VikatanExclusive
``அக்ரெஸிவா இருப்பதில் என்ன தவறு? - சௌரவ் கங்குலி #VikatanExclusive

``அக்ரெஸிவா இருப்பதில் என்ன தவறு?", வீரர்கள் ஆக்ரோஷமாக இருப்பது தவறாகப் பார்க்கப்படுவதைப் பற்றிக் கேட்கையில், கேள்வியை முடிக்கும் முன்பே இந்தப் பதிலைக் கொடுத்தார் சௌரவ் கங்குலி. எதிரணி வீரர்களுக்கு உடனுக்குடன் பதிலளித்துப் பழகியவர், இன்னும் அப்படியே இருக்கிறார். Advanced Hair Studio விளம்பரத் தூதரான அவர், சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் மோஹித் ஷர்மாவும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தார். இங்கிலாந்தில் நடக்கும் உலகக் கோப்பை தொடர், அதில் பங்கேற்கும் அணிகளின் வாய்ப்பு, இந்திய அணியின் வாய்ப்பு, டெல்லி கேபிடல்ஸ் அணியின் ஆலோசகர் பதவி, அந்த அணியின் இளம் வீரர்கள் எனப் பல விஷயங்களைப் பற்றியும் பேசினார் கங்குலி. நிகழ்ச்சி முடிந்ததும் கிளம்ப ஆயத்தமானவரை, மடக்கிப் பிடித்து சில நிமிடங்கள் பேசினேன். அந்தக் குட்டி பேட்டியிலிருந்து...

``சென்னை என்றதும் உங்கள் நினைவுக்கு வரும் விஷயம் என்ன?"

``சென்னையில் நிறைய மறக்க முடியாத ஆட்டங்கள் ஆடியிருக்கிறேன். குறிப்பாக, 2001-ம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கெதிராகப் பெற்ற வெற்றியை மறக்கவே முடியாது. அந்த டெஸ்ட் போட்டியில் வென்று அந்தத் தொடரையே வென்றோம். மறக்க முடியாத டெஸ்ட் தொடர். சென்னை அந்த மிகச்சிறந்த நினைவைக் கொடுத்தது. கிரிக்கெட்டைத் தாண்டியும் மிகவும் நெருக்கமான இடம். அற்புதமான நகரம் அது. அதுமட்டுமல்லாமல், எல்லோருக்கும் பிடிப்பதுபோல் எனக்கும் சென்னையின் தோசை மிகவும் பிடிக்கும்".

``அக்ரெஸிவா இருப்பதில் என்ன தவறு? - சௌரவ் கங்குலி #VikatanExclusive

``நீங்கள் கேப்டனாக இருந்த 2003 உலகக் கோப்பை அணியில், பார்த்திவ், டிராவிட், கைஃப் தவிர்த்து மற்ற 12 பேருமே பந்துவீசக்கூடியவர்கள். பார்ட் டைம் பௌலர்கள் அந்தத் தொடரில் மிகப்பெரிய பங்காற்றினர். ஆனால், இந்த உலகக் கோப்பைக்குச் செல்லும் இந்திய அணியில் மொத்தமே 8 பௌலிங் ஆப்ஷன்கள்தான் இருக்கின்றன. பார்ட் டைம் பௌலர்கள் மிகவும் குறைவு. இது உலகக் கோப்பையில் ஏதேனும் தாக்கம் ஏற்படுத்தக்கூடுமா?"

``இல்லை. இந்திய அணி மிகவும் பலமான அணியாக இருக்கிறது. உலகக் கோப்பை வெல்வதற்கான அனைத்துத் தகுதிகளும் கொண்டிருக்கிறது. பௌலிங் யூனிட் மிகவும் பலமாக இருக்கிறது. அதனால், பார்ட் டைம் பௌலர்களின் தேவை பெரிய அளவில் இருக்காது. திறமையான வீரர்கள், கிளாஸ் வீரர்கள் நிறைந்திருக்கிறார்கள். கண்டிப்பாக உலகக் கோப்பை வெல்வதற்கு அனைத்துச் சாத்தியங்களும் இருக்கிறது".

``கேப்டன் கோலி, பேட்ஸ்மேன் கோலி - உங்கள் பார்வையில்..."

``பேட்ஸ்மேன் கோலியைப் பற்றிச் சொல்வதற்கு புதிதாக எதுவும் இல்லை. உலகத் தரம் வாய்ந்த வீரர். இப்போது அவர்தான் உலகின் சிறந்த பேட்ஸ்மேன். கேப்டனாகவும் அவரது ரெக்கார்டுகள் சிறப்பாகவே இருக்கிறது. ஐ.பி.எல் முடிவுகளை வைத்து அவரை மதிப்பிடக் கூடாது. அது மிகவும் தவறானது. இந்திய அணியின் கேப்டனாக மிகச் சிறந்த வெற்றிகளைப் பெற்றுத்தந்துள்ளார். வெளிநாட்டு ஆடுகளங்களில் அற்புதமாக அணியை வழிநடத்தியுள்ளார். அதைவைத்துத்தான் அவரை மதிப்பிடவேண்டும்".

``அக்ரெஸிவா இருப்பதில் என்ன தவறு? - சௌரவ் கங்குலி #VikatanExclusive

``கேப்டன்சி என்பதைப் பலரும் பலவிதமாகவே அணுகுகிறார்கள். சிலர் எண்களை வைத்து கேப்டன்களை மதிப்பிடுகிறார்கள். சிலர் ஒருசில முடிவுகளை வைத்து மதிப்பிடுகிறார்கள். உங்களைப் பொறுத்தவரை கேப்டன்சி என்பது என்ன?"

``கேப்டன்சி, ஒரு அணியை உருவாக்குவதிலிருந்து தொடங்குகிறது என்று நான் நினைக்கிறேன். ஒரு நல்ல அணியை உருவாக்கவேண்டும். அதன்பின் அதை வெற்றி பெறும் அணியாக உருமாற்றவேண்டும். ஒரு கட்டத்தில், அந்தப் பதவியிலிருந்தோ, விளையாட்டிலிருந்தோ விலகும்போது, அந்த அணிக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாத வகையில் அந்த அணியைக் கட்டமைக்கவேண்டும். அதுதான் ஒரு நல்ல கேப்டன் செய்யவேண்டியது என்று நான் நினைக்கிறேன்".

``ஒரு கேப்டனாக, உங்களால் மறக்க முடியாத விஷயமாக, நீங்கள் எப்போதும் நினைத்துப் பெருமைகொள்ளும் விஷயமாக எதைச் சொல்வீர்கள்?"

``உள்ளூரில் மட்டுமல்லாமல், வெளிநாடுகளில் மிகச் சிறப்பாக விளையாடினோம். ஒவ்வொரு அணிக்கும் சவால் கொடுத்தோம். வெற்றி பெற்றோம். அதுவே நான் எப்போதும் பெருமையாகக் கருதுவது".

``இப்போதெல்லாம் வீரர்கள் களத்தில் கொஞ்சம் ஆக்ரோஷம் காட்டினாலும் கடுமையாக விமர்சிக்கப்படுகிறார்களே. அக்ரெஸிவாக இருப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?"

``அக்ரெஸிவாக இருப்பதில் என்ன தவறு? நிச்சயமாக அது தவறே இல்லை. களத்தில் ஆக்ரோஷம் காட்டியாகவேண்டும். வெற்றிக்காக விளையாடும்போது அங்கு போராடியாகவேண்டும். வெற்றியும், தோல்வியும் அதைப் பொறுத்ததுதான். உணர்வுகளைக் கொட்டாமல் எப்படிப் போராடுவது!"

``அக்ரெஸிவா இருப்பதில் என்ன தவறு? - சௌரவ் கங்குலி #VikatanExclusive

``2004-ம் ஆண்டு கராச்சி ஓட்டலிலிருந்து தப்பித்து, வெளியே சுற்றியதாக உங்கள் புத்தகத்தில் எழுதியிருந்தீர்கள். சமீபத்தில்கூட துர்கா பூஜை கூட்டத்தில் மாறுவேடத்தில் கலந்துகொண்டீர்கள். சமீபத்தில் இப்படி ஏதேனும் செய்தீர்களா?"

``இல்லவே இல்லை. (பலமாகச் சிரிக்கிறார்) வயதாகிறதல்லவா. இனியெல்லாம் அப்படிச் செய்ய முடியுமா தெரியவில்லை".

மேலும், பத்திரிகையாளர் சந்திப்பில் பேசியபோது, ``இந்த உலகக் கோப்பையில் `டார்க் ஹார்சஸ்' வெஸ்ட் இண்டீஸ் இறுதிப் போட்டிக்கு வரை நுழையக்கூடும்" என்று கூறினார். அதேபோல் ஐ.பி.எல் பர்ஃபாமன்ஸை வைத்து எந்த வீரரையும் மதிப்பிடக் கூடாது என்றும் கூறினார். இந்த ஐ.பி.எல் தொடரில் குல்தீப் யாதவ் சொதப்புவதை முன்வைத்து, `அது உலகக் கோப்பையில் பிரதிபலிக்குமா' என்று கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் அப்படிப் பதிலளித்தார். 

``கொல்கத்தா ஆடுகளம் முன்பைப்போல் இல்லை. அதை உலகின் சிறந்த ஆடுகளங்களில் ஒன்று என்றும் சொல்லமாட்டேன். முழுக்க முழுக்க பேட்ஸ்மேன்களுக்குச் சாதகமான ஆடுகளமாக இருக்கிறது. அந்த ஆடுகளத்தில் ஸ்பின்னர்களால் எதுவுமே செய்ய முடியாது. அதனால்தான் குல்தீப்பால் சிறப்பாகச் செயல்பட முடியவில்லை" என்று கூறினார்.