Published:Updated:

30 நிமிடங்கள் முன்னதாகவே தொடங்கும் ஐபிஎல் ப்ளே ஆஃப் போட்டிகள்! #IPL2019

30 நிமிடங்கள் முன்னதாகவே தொடங்கும் ஐபிஎல் ப்ளே ஆஃப் போட்டிகள்!  #IPL2019
30 நிமிடங்கள் முன்னதாகவே தொடங்கும் ஐபிஎல் ப்ளே ஆஃப் போட்டிகள்! #IPL2019

2019 ஐபிஎல் தொடர் ப்ளே ஆஃப் கட்டத்தை நெருங்குகிறது. ஒவ்வோர் அணிக்கும் இன்னும் 2,3 லீக் போட்டிகளே உள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் தலா 16 புள்ளிகள் பெற்று ஏற்கெனவே ப்ளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றுவிட்டன. மீதமிருக்கும் இரண்டு இடங்களுக்கு, மற்ற அணிகள் கடுமையாக போட்டி போடுகின்றன. இந்நிலையில், மே 7-ம் தேதி தொடங்கும் ப்ளே ஆஃப் போட்டிகளுக்கான நேரத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. #IPL2019

நடப்பு ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் 7.30 மணிக்கு டாஸ் போடப்பட்டு, 8 மணிக்கு போட்டி தொடங்கப்படுகிறது. ப்ளே ஆஃப் சுற்று போட்டிகளை தற்போது இருக்கும் நேரத்தைவிட அரை மணி நேரம் முன்னரே தொடங்க இருப்பதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. அதாவது, 7 மணிக்கு டாஸ் போடப்பட்டு 7.30 மணிக்கு போட்டி தொடங்க இருக்கின்றன. 

புள்ளிப் பட்டியலில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் மோதும் `குவாலிஃபையர் 1' போட்டி, சென்னைச் சேப்பாக்கம் மைதானத்தில் மே 7-ம் தேதி நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து வரும் `எலிமினேட்டர்', `குவாலிஃபையர் 2' போட்டிகள் விசாகப்பட்டினம் YSR கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகின்றன. மே 12-ம் தேதி நடக்க இருக்கும் இறுதிப் போட்டி ஹைதராபாத் ராஜீவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் நடக்க உள்ளது. 

இந்தியாவில், `ஆண்கள் கிரிக்கெட்டுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் பெண்கள் கிரிக்கெட்டுக்கு வழங்கப்படுவதில்லை' என்ற குற்றச்சாட்டு பல காலமாக இருந்துவருகிறது. இந்நிலையில்தான், கடந்த ஆண்டு பெண்களுக்கான ஒரு டி20 போட்டி நடத்தப்பட்டது. ட்ரெயல்பிளேசர்ஸ், சூப்பர்நோவாஸுடன் மூன்றாவது அணியாக வெலோசிட்டி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தப் போட்டிகளில், இந்திய வீராங்கனைகள் மட்டுமன்றி சில வெளிநாட்டு கிரிக்கெட் வீராங்கனைகளும் கலந்து கொள்கின்றனர். பங்கேற்கும் வீராங்கனைகள் குறித்த முழு விவரங்கள் இன்னும் வெளியாகாத நிலையில், பெண்களுக்கான டி20 போட்டிகளும் 7.30 மணிக்குத் தொடங்கும் என பிசிசிஐ அறிவித்துள்ளது.