Published:Updated:

டேர்டெவில்ஸாக உருமாறி ப்ளே ஆஃப்பிற்குள் நுழைந்த டெல்லி! #DCvsRCB

டேர்டெவில்ஸாக உருமாறி ப்ளே ஆஃப்பிற்குள் நுழைந்த டெல்லி!  #DCvsRCB
News
டேர்டெவில்ஸாக உருமாறி ப்ளே ஆஃப்பிற்குள் நுழைந்த டெல்லி! #DCvsRCB

டேர்டெவில்ஸாக உருமாறி ப்ளே ஆஃப்பிற்குள் நுழைந்த டெல்லி! #DCvsRCB

2019 ஐபிஎல், ப்ளே ஆஃப் கட்டத்தை நெருங்குகிறது. இனி மீதமிருக்கும் 2, 3 லீக் போட்டிகளும் ஒவ்வோர் அணிக்கும் முக்கியமானது. போட்டா போட்டியான இந்த நேரத்தில், ``ஒருத்தரால ஜெயிக்கிற அணியில்லை. ஒவ்வொருத்தராலும் ஜெயிக்கிற அணி" என்று சொல்லி ப்ளே ஆஃபுக்கு என்ட்ரி கொடுத்துள்ளது டெல்லி கேப்பிடல்ஸ்!  சொந்த மண்ணில் பெங்களூருவை வீழ்த்திய கேப்பிடல்ஸ், 6 ஆண்டுக்கால தவத்தை முடித்துக் கொண்டது. #DCvsRCB

இந்த ஐ.பி.எல் சீசனில், ஃபெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்ற முதல் 4 லீக் போட்டிகளில் மூன்றில் தோல்வியைத் தழுவிய டெல்லி அணிக்கு, `ஹோம் கிரவுண்டு லக் இல்ல' என்பதாகத்தான் இருந்தது. மற்ற எல்லா அணிகளுக்குமே ஹோம் கிரவுண்ட் சாதகமாக அமைய, ஐபிஎல்லின் இரண்டாம் பாதியிலாவது ஃபெரோஸ் ஷா கோட்லா கருணை காட்டுமா என்ற எதிர்பார்ப்போடு விளையாடிய டெல்லி அணிக்கு, அடுத்தடுத்து கிடைத்த இரண்டு வெற்றிகளால் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்துக்கு முன்னேறியுள்ளது.  

பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற டெல்லி, பேட்டிங் செய்யக் களமிறங்கியது. ஓபனிங் பேட்ஸ்மேன் ப்ரித்வி ஷா 18 ரன்களுக்கு வெளியேற, தவான் - ஸ்ரேயாஸ் இணை ரன் குவிப்பில் ஈடுபட்டது. சரியான நேரத்தில் ஃபார்முக்கு வந்திருக்கும் தவான், இந்த ஐபிஎல் சீசனில் ஐந்தாவது அரை சதத்தை நிறைவு செய்தார். நிதானமான ரன் குவிப்பில் ஈடுபட்டிருந்த இந்தக் கூட்டணியை உடைத்தது சாஹலின் சுழற்பந்துவீச்சு. தவானைத் தொடர்ந்து பன்ட், ஸ்ரேயாஸ் ஐயர் என அடுத்தடுத்து இரண்டு பேட்ஸ்மேன்கள் பெங்களூரு ஸ்பின்னுக்கு பெவிலியன் திரும்பியதால், டெல்லியின் ஆட்டத்தில் வேகம் குறைந்தது. 16-வது ஓவரில், 141/5 என்றிருந்த டெல்லிக்கு சில பல பௌன்டரிகளையும், சிக்சர்களையும் தெறிக்கவிட்டு ஆச்சர்யம் கொடுத்தனர் ரூதர்ஃபோர்டு, அக்சர் படேல் கூட்டணி. 20 ஓவர் முடிவில் அணியின் ஸ்கோர் 187/5

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

சேஸிங் களமிறங்கிய பெங்களூருவுக்கு, பார்த்திவ் படேல் - கோலி ஓபனிங் இறங்கினர். இந்த ஐபிஎல் சீசனின் பவர்ப்ளே ஓவர்களில் 147.7 ஸ்ட்ரைக் ரேட் சராசரி கொண்ட பார்த்திவ், நேற்றும் பட்டாசாய் வெடித்தார். 7 பவுண்டரிகள், 1 சிக்சர் என வெறும் 20 பந்துகளில் 39 ரன்கள் கடந்திருந்த பார்த்திவின் பட்டாசை புஸ்வாணமாக்கினார் ரபாடா. பந்து ரபாடா வீசியதுதான். ஆனால், கேட்ச் பிடித்தது அக்சர் படேல் என்பதைச் சொல்லியே ஆகவேண்டும். அற்புதம்! இந்த விக்கேட்டை ரபாடேவே எதிர்பார்த்திருக்க மாட்டார் போல! பார்த்திவ் பெவிலியன் திரும்பும்போது அக்சர் படேலைப் பார்த்து அவர் சிரித்த சிரிப்பே இந்த அற்புதமான கேட்சுக்கு சாட்சி.

பேட்டிங் பார்ட்னர்ஷிப்பை பார்த்திருப்போம், நேற்றைய போட்டியில் பெளலிங் பார்ட்னர்ஷிப் போட்டு பெங்களூருவின் டாப் ஆர்டரை காலி செய்தனர் ரூதர்ஃபோர்டும், அக்சர் படேலும். 7-வது ஓவரில் அக்சரின் பந்தில் கோலி கேட்ச் கொடுக்க ரூதர்ஃபோர்டும், 11-வது ஓவரில் ரூதர்ஃபோர்டு பந்தில் டி வில்லியர்ஸ் கேட்ச் கொடுக்க அக்சர் படேலும் பவுண்டரி லைனில் கச்சிதமாகப் கேட்ச் பிடித்தனர். இந்த இரண்டு கேட்சுகள் ஆட்டத்தின் போக்கை டெல்லியின் பக்கம் திருப்பியது. அதுவரை சிறப்பாக விளையாடிக்கொண்டிருந்த சிவம் தூபே, மிஸ்ரா பந்தில் வெளியேற ஆர்.சி.பியின் சேஸிங் கடினமானது. 36 பந்துகளில் 73 ரன்கள் தேவை என்ற நிலையில் களமிறங்கிய ஸ்டாய்னிஸ், தனி ஆளாய்த் தாக்குப்பிடித்து 32 ரன்கள் சேர்த்தார். ஆனால், ஒரு புறம் விக்கெட்டுகள் சரிய, மறுபுறம் ஓவர்கள் முடிய, 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது டெல்லி கேப்பிடல்ஸ். 2019 ஐபிஎல் சீசனில், ப்ளே ஆஃபுக்கு தகுதி பெறும் இரண்டாவது அணியாகவும், புள்ளிப்பட்டியலில் மீண்டும் முதல் இடத்துக்கும் என்ட்ரி கொடுத்துள்ளது டெல்லி கேப்பிடல்ஸ்.

11 ஆண்டுகளாக டேர்டெவில்ஸ் பெயரில் விளையாடி வந்த டெல்லி அணி, இந்த சீசனில் பெயர் மாற்றம் செய்தது. 2012-ம் ஆண்டுக்குப் பிறகு ஒரு முறைகூட ப்ளே ஆஃபுக்கு என்ட்ரியாகாத டெல்லி, மூன்று சீசனில் `Table bottom'! 2019 ஐபிஎல்லில் ஒவ்வொரு முறை டெல்லி வெற்றியை ருசிக்கும்போதும் dugout-ல் இருக்கும் இருவரின் ஆரவாரத்துக்கு அளவே இருக்காது. நேற்றைய போட்டியில் அது இரட்டிப்பு. வின்னிங் மொமென்ட்ஸை கொண்டாடிய பான்டிங் - கங்குலி, டெல்லி கேப்பிடல்ஸின் முன்னேற்றத்துக்கு ஸ்கெட்ச் போட்டவர்களில் முக்கியமானவர்கள். ``புள்ளிப்பட்டியலில் எந்த இடம் என்பது முக்கியமல்ல; ஒவ்வொரு போட்டியையும் அதிலிருக்கும் சவால்களையும் உடைத்து வெற்றி பெறுவது குறித்துத்தான் எங்களுடைய கவனம் இருக்கும். எளிதாக வெற்றியைப் பதிவு செய்ய முடியாத சென்னையில் எங்களுக்கான அடுத்த போட்டி. ப்ளே ஆஃப்பிற்கு தகுதி பெற்ற உற்சாகத்தோடு அடுத்து நடக்க இருக்கும் இரண்டு லீக் போட்டிகளிலும் சிறப்பாக விளையாட வேண்டும்" என்றார் டெல்லி கேப்பிடல்ஸ் பயிற்சியாளர் ரிக்கி பான்டிங்.

 ``என்ன இருந்தாலும் ஹோம் கிரவுண்ட் ஹோம் கிரவுண்ட்தான்யா. சரியான நேரத்துல சரியான போட்டியில கைகொடுத்திருக்கு" என்ற உற்சாகத்தில் சென்னைக்குக் கிளம்பும் டெல்லி கேப்பிடல்ஸின் அடுத்த போட்டி சேப்பாக்கத்தில். டேபிள் டாப்பர்ஸ் மோதிக்கொள்ளும் இந்தப் போட்டியில் விறுவிறுப்புக்குப் பஞ்சமிருக்காது!