Published:Updated:

`குமாரு... கோடை இடி குமாரு' - மும்பையை வாரிச் சுருட்டிய ரஸல் புயல்! #KKRvMI

`குமாரு... கோடை இடி குமாரு' - மும்பையை வாரிச் சுருட்டிய ரஸல் புயல்!  #KKRvMI
`குமாரு... கோடை இடி குமாரு' - மும்பையை வாரிச் சுருட்டிய ரஸல் புயல்! #KKRvMI

ரன்ரேட் கொல்கத்தா காளி கோயில் வாசலில் படுத்து உருளத் தொடங்கியது. முக்கி முக்கி அடித்தும் ரன்கள் வரவேயில்லை. போதாக்குறைக்கு ரோஹித்தும் வெளியேறினார்.

ஐபிஎல் வரலாற்றில் இந்தளவுக்கு ஒன்சைடாக எந்த இரு அணிகளுக்குள்ளான மோதலும் இருந்ததில்லை என்ற அறிமுகத்தோடுதான் தொடங்கியது கொல்கத்தா vs மும்பைக்கு இடையிலான போட்டி. உண்மைதான். இதுவரை இரு அணிகளும் மோதிய 20 ஆட்டங்களில் 15 ஆட்டங்களில் மும்பையே வெற்றி பெற்றிருக்கிறது. இந்த வெற்றி சதவிகிதம் மற்ற எந்த அணிகளுக்கும் அமையாதது. அதே வரலாறு தொடர்ந்தால் ஈடன் கார்டனிலேயே அடுத்த சீஸன் வரை செட்டில் ஆகிவிடுவது மட்டுமே கொல்கத்தா முன்பிருந்த ஒரே வழி. அப்படி ஆகிவிடக் கூடாது என்பதற்காகவே வெறிகொண்டு களமிறங்கினார்கள் நேற்று.

வென்றால் நூறாவது வெற்றி, தோற்றால் தொடர்ந்து ஏழு போட்டிகளில் தோல்வி என்ற மோசமான சாதனை என்ற நிலையில் களமிறங்கிய நைட்ரைடர்ஸ் அணியில் ஹேரி கெர்னியும் சந்தீப் வாரியரும் இடம்பெற்றிருந்தார்கள். மும்பை அணியில் பரீந்தர் ஸ்ரண் இடம்பெற்றார். டாஸ் வென்ற மும்பை வழக்கம்போல பௌலிங்கைத் தேர்வு செய்தது. ஓப்பனராக ஏற்கெனவே ஒரு மேட்ச்சில் கலக்கியதால் லின்னோடு களமிறங்கினார் சுப்மன் கில். 

போட்டியின் முதல் பந்திலிருந்தே தூள் பறந்தது. பவுண்டரி. அடுத்த பாலும் பவுண்டரி, நான்காவது பால் சிக்ஸ்! முதல் ஓவரில் வந்த 14 ரன்கள் சொல்லியது இது ஹை ஸ்கோரிங் மேட்ச்சாக இருக்குமென்பதை! அடுத்த இரண்டு ஓவர்கள் லின் புண்ணியத்தில் தப்பித்தது மும்பை. நான்காவது ஓவரிலிருந்து அவரும் கியர் மாற்ற, ரன்ரேட் எகிறியது. பவர்ப்ளே முடிவில் 50 ரன்கள். அதற்கடுத்து ரன்ரேட்டை பத்துக்கு நெருக்கமாக எடுத்துச் சென்றார்கள் லின்னும் கில்லும். அடுத்த 3 ஓவர்களில் மட்டும் 39 ரன்கள். 

ராகுல் சஹார் ஓவரில் இன்னொரு சிக்ஸுக்கு ஆசைப்பட்டு விக்கெட்டை விட்டார் லின். அவரின் ஸ்கோர் 54 ரன்கள். ஆச்சர்யத்திலும் ஆச்சர்யமாக ரஸலை ஒன்டவுனில் இறக்கினார் தினேஷ் கார்த்திக்! இதற்குத்தானே ஆசைப்பட்டது ஈடன் கார்டன்! ஆனாலும் ரஸலை முந்திக்கொண்டு அடி வெளுத்தார் கில். 12 ஓவர்கள் முடிவில் 119 ரன்கள். ரன்ரேட் அதே பத்து! கைவசமிருந்த எல்லா பௌலர்களையும் ரொட்டேட் செய்தும் வேலைக்கு ஆகாததால் ஹர்திக்கை கொண்டுவந்தார் ரோஹித். அவரும் தன்னால் முடிந்தளவுக்கு ஸ்கோரை கட்டுப்படுத்தினார்.  

ஆனால், மறுமுனையில் சஹாரின் ஒரு ஓவரில் 20 ரன்கள், மலிங்காவின் ஓவரில் 14 ரன்கள் என விட்டதற்கும் சேர்த்து கொண்டாடினார்கள் கில்லும் ரஸலும். கடைசியில் திரும்பவும் ஹர்திக் வந்துதான் ஜோடியை பிரிக்க வேண்டியதாக இருந்தது. கில் தூக்கியடித்து பந்து நிலாவில் மோதி தரைக்கு வரக் கப்பென்று லபக்கினார் லூயிஸ். அதன் பின் வந்த கார்த்திக்கும் தன்பங்குக்கு பும்ராவை வெளுத்தார்.

17 ஓவர்கள் 177 ரன்கள்! அதன்பின் தொடங்கியது ரஸலின் கோடை இடி அடி! ஹர்திக்கின் ஓவரில் மூன்று சிக்ஸ்கள். அதற்கடுத்த பும்ராவின் ஓவரில் 15 ரன்கள். ஸ்கோரும் 200-ஐத் தாண்டியது. இந்த சீஸனில் கொல்கத்தா 200-ஐத் தாண்டுவது இது நான்காவது முறை. கடைசி ஓவரில் மலிங்கா வெர்சஸ் ரஸல். 'மலிங்கான்னா பயப்படணுமாக்கும்?' என ஈவு இரக்கமே இல்லாமல் அவரையும் அடித்துத் துவைத்தார் ரஸல். கடைசி ஓவரிலும் 20 ரன்கள். கடைசி மூன்று ஓவர்களில் 55 ரன்கள் வர 232 ரன்கள் குவித்தது கொல்கத்தா. இந்த சீஸனின் ஹைஸ்கோர் இதுதான்!

இவ்வளவு பெரிய டார்கெட்டை சேஸ் செய்வது இமாலய வேலை. ஆனால், அதற்காக சுணங்கினாலும் ரன்ரேட் பயங்கரமாக அடிவாங்கும். எனவே, கொல்கத்தாவைப்போல முதல் பந்திலிருந்தே அடித்தாக வேண்டும்! முயற்சி செய்தார்கள் டி காக்கும் ரோஹித்தும். முதல் ஓவரில் மட்டும் 9 ரன்கள். அடுத்த ஓவரில் அதையே செய்ய ஆசைப்பட்டு நரைன் கையில் அவுட்டானார் டி காக். அதன்பின் ரன்ரேட் கொல்கத்தா காளி கோயில் வாசலில் படுத்து உருளத் தொடங்கியது. முக்கி முக்கி அடித்தும் ரன்கள் வரவேயில்லை. போதாக்குறைக்கு ரோஹித்தும் வெளியேறினார்.

பேட்டிங்கில் வதைத்தது போதாதென பௌலிங்கிலும் பாடாய்ப் படுத்தினார் ரஸல். போட்ட முதல் பந்திலேயே லூயிஸ் அவுட். அவரின் அடுத்த ஓவரில் சூர்யகுமார் யாதவும் கடைசி ஃப்ளைட்டை பிடிக்கக் கிளம்பினார். ஸ்கோர் 9 ஓவர்கள் முடிவில் 60/4. அப்போதே மேட்ச் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. அதன்பின் நடந்தது ரன்ரேட்டைக் காப்பாற்றிக்கொள்வதற்கான போராட்டம்தான். ஹர்திக் தலைமையில் நடந்த போராட்டம். சிக்ஸ், பவுண்டரி என ஒரு பந்தைக்கூட வீணடிக்காமல் அடிக்க ஆரம்பித்தார் பாண்ட்யா.

கடந்த மேட்ச்சில் ஸ்பின்னர்கள்தான் ரன்ரேட்டைக் கட்டுப்படுத்தினார்கள். இந்த மேட்ச்சில் அவர்கள்தான் வாரி வழங்கினார்கள். நரைன் பொல்லார்ட் விக்கெட்டை எடுத்தாலும் ஹர்திக்கை நிறுத்தவே முடியவில்லை. பேய்த்தனமாக ஆடினார் ஹர்திக். ரஸல்தான் இங்கும் வர வேண்டியதாக இருந்தது. அவர் வீசிய 15வது ஓவரில் வெறும் 7 ரன்கள் மட்டும்தான். சாவ்லா அடுத்த ஓவர் வீச, அதில் 20 ரன்கள். மூன்று ஓவர்கள் வீசி 49 ரன்களை தன் சொத்துபோல எடுத்துக் கொடுத்திருந்தார் சாவ்லா. நரைன் 4 ஓவர்களில் 44 ரன்கள் கொடுத்திருந்தார். கடைசியாகக் கெர்னி புண்ணியத்தில் ருத்ரதாண்டவாமடிய ஹர்திக்கை வெளியேற்றினார்கள். 34 பந்துகளில் 91 ரன்கள். முந்நூறுக்குக் கொஞ்சம் கம்மியான ஸ்ட்ரைக் ரேட். நிம்மதி வந்தது கொல்கத்தா முகாமில்.

அதன்பின் நடந்தது சம்பிரதாய ஆட்டம்தான். இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் 197 ரன்கள் மட்டுமே எடுத்தது மும்பை. இந்த வெற்றியின் மூலம் ப்ளே ஆஃப் வாய்ப்பைத் தக்க வைத்துள்ளது கொல்கத்தா. ஆனாலும், பிற அணிகள் ஆடும் போட்டிகளும் அதன் ப்ளே ஆஃப் வாய்ப்பைத் தீர்மானிக்கும் என்பதுதான் சோகம். ஒருவழியாக ஐபிஎல்=லின் எண்டு கேம் இப்படியாகத் தொடங்கியிருக்கிறது.  

பிரேக்கிங், ஸ்போர்ட்ஸ் நியூஸ், வைரல் டிரெண்ட், சினிமா எக்ஸ்க்ளூசிவ் செய்திகளை உடனுக்குடன் உங்கள் டெலிகிராம் ஆப்பில் பெற இணைந்திடுங்கள்...!  https://t.me/vikatanConnect 

அடுத்த கட்டுரைக்கு