Published:Updated:

``தோனி இருக்கும்போது நான் ஒரு ஃபர்ஸ்ட் எய்ட் பாக்ஸ்தான்!”- தினேஷ் கார்த்திக் ஓப்பன்டாக்

``தோனி இருக்கும்போது நான் ஒரு ஃபர்ஸ்ட் எய்ட் பாக்ஸ்தான்!”- தினேஷ் கார்த்திக் ஓப்பன்டாக்
``தோனி இருக்கும்போது நான் ஒரு ஃபர்ஸ்ட் எய்ட் பாக்ஸ்தான்!”- தினேஷ் கார்த்திக் ஓப்பன்டாக்

கிரிக்கெட் மற்றும் தேர்தல் என இரண்டு திருவிழாக்கள் ஒரே நேரத்தில் இந்தியாவில் பெரும் கொண்டாட்டத்தை நடத்தி வருகிறது. ஒருபுறம் மக்களவைத் தேர்தல், சட்டசபை தேர்தல்கள், சட்டசபை இடைத்தேர்தல்கள் என அரசியல் களம் சூடாக இருக்கிறது. மறுபுறம் ஐ.பி.எல் கிரிக்கெட் மற்றும் உலகக்கோப்பை அணித் தேர்வு, தினேஷ் கார்த்திக், பன்ட் என கிரிக்கெட்டும் பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தி வருகிறது. 

சமீபத்தில் உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட, தொடங்கியது விவாதம். சிலர் பன்ட் எனச் சொல்ல சிலர் தினேஷ் கார்த்திக் என்றனர். பலரது சாய்ஸ் தினேஷ் கார்த்திக்காகத்தான் இருந்தது. தினேஷுக்கு அனுபவமும் ஜாஸ்தி, தேவைக்கு ஏற்றமாதிரி தனது ஆட்டத்தை மாற்றும் திறன் கொண்டவீரர் என்ற அடிப்படையில் இரண்டாவது விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் தேர்வுக்கு பலர் பச்சைக் கொடி காட்டினர்.

கடந்த திங்கள் கிழமை கொல்கத்தா அணியின் சி.இ.ஓ வெங்கி வீட்டில் விருந்தில் இருந்த போது தினேஷ் கார்த்திக் மனைவியின் போன் அடித்தது. மறுபுறம் பேசிய அவரது தந்தை, கார்த்திக் உலகக்கோப்பை அணிக்கு 12 ஆண்டுகள் கழித்து தேர்வான விஷயத்தைச் கூறினார்.  உற்சாகமான தினேஷ் கார்த்திக், அது ஒரு சிறப்பான தருணம் எனக் கூறியுள்ளார். 

நேற்று கொல்கத்தா அணி தங்கியிருக்கும் ஹோட்டலில் சில பத்திரிகையாளர்களுடன் அவர் உரையாடியுள்ளார். அப்போது அவர், ``2019 -ம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் நான் இடம் பிடித்ததுக்கான எனது பயணம் தொடங்கியது இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர். 2017 -ம் ஆண்டியிலே என்னால் இதைச் செய்ய முடியும் என நம்பினேன்” என்றார். 

ஆஸ்திரேலிய அணி இந்தியா வந்த போது தினேஷ் கார்த்திக்குப் பதில் பன்ட் தேர்வு செய்யப்பட்டார். இதன் காரணமாக தினேஷ் கார்த்திக்கின் உலகக்கோப்பை கனவு முடிவுக்கு வந்ததாகப் பலர் கருதினர். ஆனால் அனைவருக்கும் ஆச்சர்யம் அளிக்கும் வகையில் அணிக்குத் தேர்வானார் தினேஷ் கார்த்திக். இது தொடர்பாகப் பேசிய அவர்,  ``தேர்வு குழுத் தலைவர் எம்.எஸ்.கே பிரசாத் என்னை அழைத்துத் தெளிவாக ஒரு விஷயத்தைச் சொன்னார். `நாங்கள் உங்களுக்கு மற்றும் பன்ட் ஆகியோருக்குச் சம வாய்ப்பு வழங்க  திட்டமிட்டுள்ளோம்’ என்றார். அதன்படி எனக்கு ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்போது வாய்ப்பு கிடைத்தது. உள்நாட்டுத் தொடரில் பன்ட் -க்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அவரது தெளிவான கருத்து எனக்குப் பிடித்திருந்தது” என்றார். 

மேலும் தினேஷ் கார்த்திக் அணிக்கு தேர்வானது குறித்து பேசிய எம்.எஸ்.கே பிரசாத், ``தோனிக்கு காயம் ஏற்பட்டால்தான் இரண்டாவது விக்கெட் கீப்பருக்கான வாய்ப்பு கிடைக்கும். அதனால் சிறந்த விக்கெட் கிப்பர் என்ற அடிப்படையிலும் தினேஷ் கார்த்திக்குக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது” என்றார். தோனி தொடர்பாகப் பேசிய தினேஷ் கார்த்திக், ``தோனியை வைத்து கணக்கிட்டால், நான் இந்திய அணியுடன் பயணிக்கும் ஒரு முதலுதவிப் பெட்டி போலத்தான். அவருக்குக் காயம் ஏற்பட்டால், அந்த நாளுக்கு பேன்டேஜாக நான் களத்துக்குச் செல்வேன். ஆனால் இது தோனிக்கு மாற்றாகப் பார்த்தால் மட்டுமே. மாறாக எனக்கு வாய்ப்பு வழங்கப்பட்டால் என்னால் 4 -வது இடத்தில் இறங்கியும் ஆட முடியும். அல்லது கடைசிக் கட்டத்தில் ஒரு ஃபினிஷராகவும் செயல்படமுடியும். நடப்பு ஐ.பி.எல் தொடர் முடிந்த பின்னர் பேட்டிங்கில் மட்டும் தனிக் கவனம் செலுத்த உள்ளேன்” என்றார். 

மேலும் பன்ட் தேர்வாகாதது குறித்து பேசிய தினேஷ் கார்த்திக், ``ஒருவருக்கு வாய்ப்பு கிட்டும்போது மற்றவர்களுக்கு வாய்ப்பு கிடைக்காதது இயல்புதான். இதுதான் இந்த ஆட்டத்தின் இயல்பும்கூட. ஆனால் நாங்கள் (தினேஷ் கார்த்திக் மற்றும் பன்ட்) இது தொடர்பாகப் பேசிக்கொள்வதில்லை. ஐ.பி.எல் போட்டிகளின்போதும் நாங்கள் சந்தித்துக்கொண்டாலும் இது தொடர்பாக என்றுமே பேசினது கிடையாது. அவர் தேர்வாகி இருந்தால் எனக்கு ஏமாற்றமாக இருந்திருக்கும். இப்போது நான் தேர்வானது அவருக்கு ஏமாற்றமாக இருக்கும். பன்ட் ஒரு ஸ்பெஷலான வீரர். அவர் இந்திய அணிக்காக நீண்டகாலம் விளையாடுவார் என்பதில் எனக்குச் சந்தேகமே இல்லை. நானும் தோனியும் இணைந்து விளையாடியிருக்கிறோம். அப்படி இருக்கும்போது நானும் பன்ட்டும் இணைந்து விளையாடும் காலம் வந்தால் மகிழ்ச்சியாக இணைந்து விளையாடுவோம்” என்றார். 

விஜய் ஷங்கர் தேர்வானது தொடர்பாகப் பேசிய அவர்,  ``குறைந்தபட்சம் ஒருவரிடமாவது தமிழில் பேச முடியும் என்பதில் மகிழ்ச்சி. அதேபோன்று தோசை இட்லி என இணைந்து சாப்பிட வசதியாக இருக்கும்” என்றார்.

News Credits: Times of India

தினேஷ் கார்த்திக், பன்ட், இருவரில் உங்களின் சாய்ஸ் யார் என்பதை நீங்களும் காரணத்துடன் கமென்ட் செய்யுங்கள்....